இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,

 

மக்களுக்காக போராடாதே அடிமையாக மக்களை இருக்க விடு என்கின்றான். இதை அவன் தன் அறிவு மூலம் நிலைநாட்ட முனைகின்றான். பொய், பித்தலாட்டம், மோசடி,  மூலம், மக்களின் வாழ்வு சார்ந்த எதார்த்தத்தை திரித்துக்காட்டி இதை நிறுவ முனைகின்றான்.

 

இதற்கு புலிகள் தான் உதவினர். தமிழ்மக்கள் அரசியல் அனாதைகளாகி நிற்கின்றனர். பொறுக்கிகளும், துரோகிகளும், சமூக விரோதிகளும், கைக்கூலிகளும் தமிழ்மக்கள் சார்பாக கொக்கரிக்கும் அவலநிலை.

 

தமிழரின் உரிமையின் பெயரால் புலிகள் ஆடிய பாசிசக் கூத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேரினவாதம் இன்று குழிதோண்டிப் புதைத்துள்ளது. அதன் மேல் மலர் செடியை நாட்டுகின்றது. ஆகாகா என்ன அழகு பார் என்கின்றனர், அரச எடுபிடிகள். ஊர் உலகத்துக்கு இதன் மேல் பூக்கள் பூக்கவுள்ளதாக, குடுகுடுப்பைக்காரன் போல் ஆரூடம் கூறுகின்றனர்.

 

எம் மக்கள் தம் சொந்த ஜனநாயக உரிமைகளை கோராது இருக்க என்ன செய்யவேண்டும். அதைக் கோராத வண்ணம், சமூகத்தை பல வழியில் சிதைக்கவேண்டும். அவர்கள் உணர்வுகளை நலமடிக்க வேண்டும். இதைத்தான் இந்த அரசு செய்தது.

 

அந்த மக்கள் மேல் குண்டுகளைப் போட்டனர். அவர்களை அகதியாக ஓட ஓட, குண்டை வீசி விரட்டினர். பின் பாதுகாப்பு சூனிய பிரதேசத்தை அறிவித்து, அங்கு மக்களை குவியப்பண்ணியவர்கள், அங்கு வைத்து மக்களை கொல்லத் தொடங்கினர். மக்களை நிர்ப்பந்திக்கும் உணவுத் தடை, மருத்துவத் தடை என்று, அனைத்துவிதமான தடைகளையும் போட்டது பேரினவாதம். இப்படித் தான் யுத்தத்தை மக்கள் மேல் நடத்தியது. இனி நீ உரிமையை கோருவாயா என்று கேட்டு தண்டித்தது. இன்று அரச எடுபிடிகள், மக்கள் உரிமையைக் கோரும் நிலையிலில்லை என்கின்றனர். எப்பேர்ப்பட்ட மனித விரோதிகள் இவர்கள்.

 

பேரினவாதம் மக்கள் மேல் நடத்திய யுத்தம் மூலம், புலிக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டை பல மடங்காக்கினர். புலிகளின் பாசிச முகத்ததை கீறிக் கோரமாக்கினர். புலி மக்களை வெறுத்து தானாக அழியும் வண்ணம் நிர்ப்பந்தித்தனர். புலி தன் பாசிசத்தை தலைகால் தெரியாத வண்ணம், மக்கள் மேல் உறுமியபடி பாய்;ந்து குதறியது.

 

தான் ஏற்படுத்திய இந்த தொடர் நெருக்கடியை பயன்படுத்தி, மக்கள் மேல் குண்டை அள்ளிப் போடத்தொடங்கியது. பிணத்தின் மேல் மக்கள் பிணமாகவே வீழ்ந்தனர். தம் பிணத்தை போட்டுவிட்டு தப்பியோட முடியாத வண்ணம் சுற்றிவளைத்த இராணுவம், இனி எங்கும் தப்பியோட வழியற்ற மக்களை வளைத்துப் பிடித்தனர். அவர்களை எல்லாம்; திறந்தவெளி சிறைகளில் நாலு கம்பிக்குள் தள்ளியுள்ளனர். புலிகளிடம் இருந்து 'மீட்பு" இப்படித்தான் அரங்கேறியுள்ளது. மக்கள் இந்த திறந்தவெளி சிறைக்குள் வாழவிரும்பித்தான், புலியிடம் இருந்து தப்பி ஒடிவந்தாக கூறுகின்ற அருவருப்பான ஒரு பிரச்சாரப்போர். அரச நாய்கள் எல்லாம் இதை கவ்விக்கொண்டு குலைக்கிறார்கள்.

 

இப்படி குலைக்கின்ற நாய்கள் தான், இன்று மக்கள் உரிமையை கோரும் நிலையில் இன்று இல்லை என்கின்றனர். இப்படி குலைப்பது தான், இன்று எம்முன் எதிர்ப்புரட்சியாக எழுகின்றது.

 

இந்த நாய்கள் கண்டு கொள்ளாத ஐ.நா அறிக்கைப்படி, இந்தப் பேரினவாத அரசு கடந்த 100 நாளில் 6500 மக்களை கொன்றும், 14000 மக்களை காயப்படுத்தியுமுள்ளது. இன்று திறந்த வெளிச்சிறையில் அல்லலுறும் மக்கள் மத்தியில்தான், இந்த கொடுமையும் கொடூரமும் கூட நடந்தது. அதை அவர்கள் கண்ணால் பார்த்து கதறி அழுத மக்கள் இவர்கள்.

 

இந்த அரசின் கொலைக்கரங்களில் இருந்து தப்பிப் பிழைக்க, இந்த மக்கள் நடத்திய போராட்டமும், அரசுக்கு எதிராகத்தான் நடந்தது. அரசு போட்ட குண்டுகளுக்கு தப்பிப் பிழைக்கபட்ட பாட்டையும், போராடிய வாழ்வையும் கேலி செய்கின்றனர் அரச எடுபிடிகள்.   இதில் இருந்து உயிர் தப்பி வாழ்வதை புலிகள் தடுத்தபோதும், அதையும் மீறி போராடியவர்கள் தான் இந்த மக்கள். இந்த மக்கள் கொலைகார அரசுக்கு எதிராகப் போராடித்தான், இன்று உயிர் தப்பியுள்ளனர். அவர்களின் கொலைக்கு உதவிய, புலிக்கு எதிராகவும் கூட அவர்கள் போராடியவர்கள். இப்படி அந்த மக்களைக் கொலைக்களத்தில் நிறுத்தி, பல வகையில் வதைத்து சிதைத்தனர். இன்று அவர்கள் கூறுகின்றனர் அந்த மக்கள் தம் உரிமைக்காக போராட மாட்டார்கள் என்று. இப்படி இன்று பல அரச கைக்கூலிகள் புனைபெயரில் தான், மக்களின் முகத்தில் காறி உமிழ்கின்றனர். இதற்கு துணைபோகும் தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையங்கள். கருத்து என்ற பெயரால், மக்களின் பிணத்தை வைத்து சொந்த அரசியல் வியாபாரம் செய்கின்றனர்.

 

இவர்கள் கூறுகின்றனர், மக்கள் இனி தம் உரிமைக்காக போராடமாட்டார்களாம். மாறாக  திறந்தவெளி சிறையில் அடக்கவொடுக்கமாக இருக்கவே விரும்புகின்றார்களாம். இப்படி பாசிச வக்கிரங்களை, மக்கள் மேல் இன்று அள்ளிக் கொட்டுகின்றனர்.

 

ஒரு இனத்தின் மேலான யுத்தம், புலியின் பெயரால் நடத்தப்பட்டது. கடந்த மூன்று வருடத்தில் குறைந்தது 18000 அப்பாவி மக்களை கொன்றுள்ள இந்த அரசு, 40000 மக்களை காயப்படுத்தியுள்ளது. ஐ.நா அறிக்கை கடந்த 100 நாளில் 20000 அப்பாவி மக்களை இந்த அரசு கொன்று அல்லது காயப்படுத்தியதை உறுதி செய்கின்றது. கடந்த மூன்று வருடத்தில் 60000 மக்களை கொன்று அல்லது காயப்படுத்திய அரசு, யாழ் தவிர்ந்த வடக்கு கிழக்கில் வாழும் மொத்த தமிழ் மக்களின் பெரும் பகுதியை தன் குண்டுக்கு இரையாக்கியுள்ளது. ஒரு இனவழிப்பாகவே இதை அரங்கேற்றியது. யாழ் குடா தவிர்ந்த அனைத்து பிரதேசத்தையும் குண்டுக்குள் தரைமட்டமாக்கி, முழு மக்களையும் அகதிகளாக்கினர். அவர்களின் வாழ்விடங்களை அழித்து, தொழில் மூலங்களை சிதைத்து நாசமாக்கியவர்கள் தான், இன்று தமிழ் மக்களை  திறந்தவெளி சிறையில் அடைத்து வைத்து வதைக்கின்றனர்.

 

இவர்கள்தான் கூறுகின்றனர், தமிழ்மக்கள் இன்று உரிமையைக் கோரும் நிலையில் இல்லையென்று. புலியை மிஞ்சிய நவீன பாசிட்டுகள் இவர்கள். முகத்தை நேரே காட்டமுடியாத  கொலைகாரர்கள். கொலைகார புலியைப் போல், புலியையே மிஞ்சிய நரமாமிச உண்ணிகள் தான் இவர்கள்.

 

பி.இரயாகரன்
25.04.2009