மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

 

எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பா.ஜ.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் முணுமுணுத்திருப்பார்களேயொழிய, அந்நிய முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் மன்மோகன் சிங்குக்கு வேறு தலைவலி எதுவும் ஏற்பட்டிருக்காது. எனினும், மன்மோகன் சிங் கும்பலோ அந்த வாசூப்பைக்கூட நாடாளுமன்றத்திற்குத் தராமல், அமைச்சரவையை மட்டும் கூட்டி முடிவெடுத்து இம்மாற்றத்தை அறிவித்து விட்டது.

 

மறுகாலனியாதிக்கச் சூழலில் நாடாளுமன்றத்திற்கு ""ரப்பர் ஸ்டாம்ப்'' என்ற மதிப்புமிக்க தகுதியைத் தருவதற்குக்கூட ஆளும் கும்பல் தயாராக இல்லை என்பதை மன்மோகன் சிங் மீண்டும் எடுத்துக் காட்டிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், 15ஆவது நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் சூடாக நடைபெறுவதைப் பார்த்து வாயால் சிரிக்க முடியாது.

 

1991 முதற்கொண்டு தனியார்மயம்தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும்கூட, தொழிற்துறையின் சில பிரிவுகளில் அந்நிய மூலதனம் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது; சில பிரிவுகளில் இவ்வளவு சதவீதத்திற்கு மேல் அந்நிய மூலதனம் போடக்கூடாது என வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடைகளைக் காட்டித்தான் இந்தியா சுயசார்பான தொழில் கொள்கையைப் பின்பற்றுவதாக ஆளும் கும்பல் வீராப்புக் காட்டி வந்தது. அந்நிய முதலீட்டுக் கொள்கை தொடர்பாக, தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றம் இந்த சுயசார்பு நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.

 

இந்திய முதலாளியும், அந்நிய முதலாளியும் இணைந்து நடத்தும் கூட்டு நிறுவனத்தில், (குறைந்தபட்சம்) 51 சதவீதப் பங்குகள் இந்திய முதலாளி வசம் இருந்து, அந்நிறுவனத்தை நிர்வகிக்கும் உரிமையும் இந்திய முதலாளியிடம் இருக்கும் பட்சத்தில், அந்நிறுவனம் இந்திய நிறுவனமாகக் கருதப்படும். தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றத்தின்படி, இந்த இந்திய நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டங்களுக்காக அந்நிய மூலதனத்தைப் பெற்றால், அம்மூலதனம் அந்நிய மூலதனமாகக் கருதப்படாமல் உள்நாட்டு மூலதனமாவே கருதப்படும். இந்த இந்திய நிறுவனம் சகோதர நிறுவனத்தைத் தொடங்குவதற்காக வெளிநாடுகளில் மூலதனத்தைத் திரட்டினால், அம்மூலதனமும் அந்நிய நேரடி மூலதனமாகக் கருதப்படாமல் உள்நாட்டு மூலதனமாகவே கருதப்படும். இந்த இந்திய நிறுவனம் வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக வெளிநாடுகளில் மூலதனத்தைத் திரட்டினாலும், அப்படி முதலீடு செய்யப்படும் மூலதனமும் அந்நிய நேரடி முதலீடாகக் கருதப்படாமல், உள்நாட்டு முதலீடாகவே கருதப்படும். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் இந்திய நிறுவனங்கள் கொண்டு வரும் மூலதனமும் அந்நிய நேரடி மூலதனமாகக் கருதப்படாமல் உள்நாட்டு மூலதனமாகக் கருதப்படும்.

 

நேற்று வரை அந்நிய மூலதனமாக வகைப்படுத்தப்பட்ட இந்த இனங்கள் இன்று சுதேசிய மூலதனமாக உருமாற்றம் அடைந்திருப்பதோடு, இந்த திடீர் சுதேசி மூலதனம் தொழில் துறையின் எந்தப் பிரிவிலும் எவ்விதத் தடையுமின்றி நுழையும் சலுகையையும் பெற்றுவிட்டது. தாராளமயம் நடைமுறைக்கு வந்து ஏறத்தாழ 1718 ஆண்டுகள் கழித்து, நரியைப் பரியாக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏன் வந்தது?

 

ஆண்டொன்றுக்கு 3,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளைக் ககவர்ந்திழுக்க வேண்டும் என்பது இந்திய அரசின் இலக்காம். ஆனால், பல்வேறு முயற்சிகள் எடுத்த பின்னும் 200708இல் கூட இந்த இலக்கை எட்ட முடியாமல் போனதாம். உலகப் பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, 200708இல் வந்த அளவிற்குக்கூட 200809 இல் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதல் போட முன்வராததால், வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இப்புதிய மாற்றத்தைச் செய்திருப்பதாக இந்திய அரசு கூறி வருகிறது.

 

இந்த நொண்டிச் சாக்கைக் கூறுவதன் மூலம் சில உண்மைகளை மூடி மறைத்துவிட முயலுகிறது, இந்திய அரசு. அந்நிய மூலதனம் நுழைவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த துறைகளில்கூட சட்ட விரோதமான வழிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்து, அந்த இந்திய நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களே ஆட்டிப் படைத்து வந்ததை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே ஒப்புக் கொள்கின்றனர். குறிப்பாக, வீட்டுமனைத் துறையிலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் அந்நிய மூலதனம் சட்ட விரோதமாக நுழைந்து இலாபம் ஈட்டியதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நியாயமாகப் பார்த்தால், இந்திய அரசு இந்த தில்லுமுல்லுகளுக்காக தரகு முதலாளிகளையும் அவர்களின் ஏகாதிபத்திய கூட்டாளிகளையும் தண்டித்துச் சிறையில் அடைத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, இந்தத் திருட்டுத்தனத்தைச் சட்டபூர்வமானதாக மாற்றி விட்டார், மன்மோகன் சிங்.

 

இதற்கும் மேலாக, இந்தியாவில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை உள்நாட்டு முதலீடாகக் கருத வேண்டும்; இதன் மூலம், சுதேசி மூலதனத்திற்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அந்நிய மூலதனத்திற்கும் வழங்க வேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் இந்தியாவை நிர்பந்தித்து வந்தது. அமெரிக்காவின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் விதமாக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார், மன்மோகன் சிங்.

 

இந்தியாவின் சில்லரை வணிகத் துறையில் எப்பொழுது கால் பதிக்கலாம் எனக் காத்திருக்கும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், ""ரிலையன்ஸ் ப்ரஷ்''ஷோடோ அல்லது பிர்லாவின் "மோர்'' நிறுவனத்தோடோ கூட்டணி கட்டிக் கொண்டு, இந்தியாவெங்கும் பிரம்மாண்டமான பலசரக்குக் கடைகளைத் திறந்து நடத்துவதற்கு இனி எந்தத் தடையும் இருக்காது. இது போல, அந்நிய மூலதனம் நுழைவதற்குத் தடையோ வரம்போ விதிக்கப்பட்டிருந்த வீட்டுமனை வியாபாரம், விவசாயம், விமானப் போக்குவரத்து முதலான துறைகள் மட்டுமின்றி, கேந்திர முக்கியத்துவம் வாசூந்த துறைகளாகக் கருதப்படும் தொலைத்தொடர்பு, ஆயுதத் தளவாட உற்பத்தி போன்றவற்றிலும் அந்நிய மூலதனம், இந்திய முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு நுழைந்து விடும்.

 

ஆனாலும், மன்மோகன் சிங் கும்பலோ சில்லரை வணிகம், வீட்டு மனைத் தொழில், விவசாயம், தொலைதொடர்பு, ஆயுதத் தளவாட உற்பத்தி முதலான துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளையோ, வரம்புகளையோ மயிரளவிற்குக்கூட நீக்கவில்லை என இன்னமும் கூறிக்கொண்டு திரிகிறது. மைய அரசு மேலே குறிப்பிட்ட துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்குப் போடப்பட்டுள்ள தடைகளையும் வரம்புகளையும் நீக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இந்தத் தடைகளை வெறும் காகிதப் பூச்சாண்டியாக மாற்றிவிட்டது என்பதே உண்மை.

 

"இந்திய முதலாளியும் அந்நிய முதலாளியும் கூட்டுச் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரம் இந்திய முதலாளியின் கையில் இருக்கும்வரை எதற்கும் கவலைப்படத் தேவையில்லை; இந்தக் கூட்டு நிறுவனங்களை அந்நிய முதலாளிகள் கைப்பற்றிக் கொள்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது'' என சுதேசி வேடம் போடுகிறார் மன்மோகன் சிங். ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள்கூட அரசின் வீராவேசத்தை நம்ப மறுக்கிறார்கள். இத்தகைய கூட்டு நிறுவனங்களில் ஜூனியர் பங்குதாரர்களாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் சட்டத்தின் கண் முன்னாலேயே இந்த இந்திய நிறுவனங்களின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தி வருவதாகவும், குறிப்பாக காப்பீடு துறையில் இதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும் என்றும் அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். அந்நிய மூலதனத்தை உள்நாட்டு மூலதனம் போலக் கருதுவதற்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செய ;யப்பட்டுள்ள மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியத் தொழில் துறையைக் கைப்பற்றும் போக்கை இன்னும் துரிதப்படுத்துவதாகவே அமையும்.

 

சீனா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகள், தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளின் தொழில் மற்றும் நிதித் துறைகளைக் கைப்பற்றிக் கொள்வதைத் தடுக்கும் பொருட்டு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், மன்மோகன் சிங்கோ அதற்கு எதிர் திசையில் இந்தியாவைப் பிடித்துத் தள்ளுகிறார். ஒரு அமெரிக்க அடிமை நாட்டின் பிரதமராக இருக்கும்பொழுது, இந்திய நாட்டு மக்கள் அவரிடமிருந்து இத்துரோகத்தைத் தவிர வேறெதைப் பெற முடியும்?

 

ரஹீம்