1

இன்று இலங்கையில் இரத்தப் பெருக்கெடுக்கும் அரசியலைக் கட்டுப்படுத்தும் சக்தி மக்களிடம் இல்லை. அதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை. மூன்று சகாப்தமாக இரத்தம் சிந்திப் பெற்ற யுத்தப் படிப்பினைகளை சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் எந்தப் பக்கத்திடமும் இல்லை. இன்னும் தணியாத இந்த யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயகத்தைப் பெற்று விடலாம், பெற்றே தீரவேண்டுமென்று வெளிநாட்டுத் தமிழர்கள் தீராத தாகத்துடனேயே இருக்கின்றனர்.

 

 இத் தாகத்திற்கு புலிகளை எப்படியாவது காத்துவிட வேண்டுமென்பது பலரது விருப்பு. புலிகளும் இவ் யுத்தத்துக்குள் தாம் தப்பிப்பிழைப்பதற்கு மக்களை வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசோ அதன் அந்தலை வரை முன்னேறுவதில் முனைப்புக்காட்டி வருகிறது. இந்தநிலையில் வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் என்ன செய்வதென்று தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. வன்னி மக்ககள் சாகவும் கூடாது, புலிகளும் அழியாது. போராட்டம் தொடர வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இந்த இரண்டு விசயங்களும் கடந்த ஒரு மாத்துக்கு மேலாக கணத்துக்குக் கணம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. முதலில் வன்னிமக்களின் நிலை முன்னுக்குத் தள்ளப்பட்டது. ஆயினும், அரசிடமிருந்து யுத்த நிறுத்தத்துக்கான எந்தவிதமான இளகும் தன்மையும் கிடைக்காததால், இதன் தெடர்ச்சியில் நிலைமை மிகவும் எக்கச்சக்கமாகி விட்டது.

 

இந் நிலைமை தொடர்பாக வெளிநாட்டுத் தமிழ் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, அடைப்பை உடைக்கக் காத்துக்கிடக்கிற வெள்ளம் போல, எந்தச் சிறு உடைப்பைக் கண்டாலும் அதனூடு பெருகத் தயாராக நின்றது. இந்நிலையில் முதலில் வன்னித் தமிழ் மக்கள் இராணுவத்தால் பாலியல் மானபங்கப் படுத்தப்படும் காட்சி கொண்ட ஒளிப்பதிவுடன் தென் இந்தியாவில் கொந்தளிக்கத் தொடங்கியது. இது முத்துக்குமாரின் தீக்குளிப்போடு உடைப்பெடுக்க, பல ஓட்டுக்கட்சிகளும் பல வாய்க்கால்களை வெட்டத் தொடங்கினர். இறுதியில் இது அவர்களின் தேர்தல் நலன்களுக்காக ஆங்காங்கே போய் பொசியத் தொடங்கியது.

 

புலம் பொயர் நாடுகளில் இக் கொந்தளிப்பாபானது, புலிகளின் ஆட்களினால் பக்குவமாக (புலிகளின் தடையைக் கணக்கில் கொண்டு) உடைக்கப்பட்டது. அந்தந்த நாடுகளில் வன்னிமக்களின் மரணங்களை கவன ஈர்பாக முன்னெடுத்தனர். பின்னர் ஜெனிவாவில் தீக்குளிப்பையும், மனுக்கொடுப்பையும் முன்னெடுத்தனர். உண்ணாவிரத்தையும் மனுக்கொடுப்பையும் செய்தனர். கூடவே சிங்கள மக்கள் அரசுக்கு ஆதரவாக செய்த போராட்டங்களுக்கு, எதிராக - ஏட்டிக்குப் போட்டியாக (வகுப்பு ரீதியாக) போராட்டத்தை நடத்தினர். இவர்கள் இதை ஒரு சர்வதேச சட்டபூர்வமான போராட்டமாக பார்த்தபோது, சர்வதேசங்கள்: புலிகள், மக்களை யுத்தப் பிரதேசத்திலிருந்து அகற்றவேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இவர்களின் போராட்டத்தின் மீது அவர்களின் பாராமுகப் போக்குக் காட்டவே, அது இவர்களைத் திகிலடைய வைத்தது.

 

இதனால், வன்னி மக்களின் மரணக் கோலத்தை வைத்து கவன ஈர்ப்பு, மனுக்கொடுப்பு, தீக்குளிப்பு, கொடும்பாவி எரிப்பு.. போன்ற போராட்டத்தின் - வலு- பற்றிய சந்தேகம் வலுக்கத் தொங்கியது. சர்வதேசத்தின் கோரிக்கையான, வன்னிமக்களை புலிகள் அகற்றி விட வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாத இவர்கள், வன்னியில் நெருங்கிவரும் புலிகளின் மீதான அபாயகரமான நிலைமைகளால் தூலம்பரமாக புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற போக்கை முன்தள்ளினர். ஒப்பந்தக் காலத்தில் நடத்திய பொங்கு தமிழுக்குப் பின்னர், முதன் முதலாக பெருந்திரளான மக்கள் புலிக்கொடியுடனும், பிரபாகரனின் படங்களுடனும் யுத்தநிறுத்தத்தைக் கோரி நடத்தினர். தமிழீழம் எமக்கு வேண்டும், புலிகளே எமது ஒரே இயக்கம், பிரபாகரனே எமது ஒரே தலைவர், என்று -தன்- உரிமைப் போராக இந்த உணர்ச்சி வெள்ளம் பாய்ந்து ஓடி வடிந்துள்ளது.

 

இந்த ஆற்று வெள்ளமானது நெல்லுக்குப் பாய்ந்ததா? அல்லது, தவறான இடத்திலே உடைக்கப்பட்டு அது பயனற்று வீணே ஓடிப்போய்விட்டதா என்பது இன்னும் புரியவில்லைப் பலருக்கு! இதிலே மூன்றாவது தரப்பு  தலையிட்டு தமது போராட்டம் (புலிகளைக் காப்பாற்றுவது) வெற்றிபெறும் என நம்பினாராயினும், இது உறுதி செய்யப்படாது போகவே என்ன செய்வதென்று தெரியாது அங்கலாக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுவது சரியா? அல்லது இப்படியே தொடர்ந்து அடிபட்டுச் சாவது மேலா? அவ்வாறு சாவது மட்டும் சரியானதா? என்ற  இன்றைய நிலைமைகளைச் சுற்றிப் பின்னப்பட்ட இக் கேள்விகள், இவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியாத விதத்தில் நன்றாகக் குழப்பி வருகிறது.


2


இன்றைய யுத்தத்தில் புலிகளின் தோல்வியானது, சிங்களவர்களிடம் தமிழர் தோற்று வருவதாக அடிப்படையில் பிரச்சாரப் படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை அரச இயத்திரத்திடம் புலிகள் தோற்று வருவதாகவோ, இலங்கையை ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தின் சீரழிவைச் சரிக்கட்டும், முலதனத்தின் பதிலடிதான் (முழு இலங்கைக்குமான) இந்த யுத்தம் என்றோ, இவர்களால் சொல்ல முடியவில்லை. இது எவ்வாறு தமிழ்த் தேசிய இனத்தை அழித்தொழிக்கிறது என்று அரசியல் ரீதியாவும் அம்பலப்படுத்த முடியவில்லை. வெறுமனே சிங்கள அரசு தமிழரைக் கொல்கிறது என்றும், அரசிடம் புலிகள் தோற்பது ஏதோ தமிழர்களின் மானம் போற விசயமாகவும் உசுப்பி விடப்படுகிறது. இந்த யுத்தம் தொடர்பாக இதுவரை வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களில், தமிழருக்கான போராட்டம் தமிழரால் தான் நடத்தப்பட வேண்டும், தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தமிழ்பேசும் மக்களினது தனிப் பெரும் பொறுப்பென்றும், தமிழர்களால் மட்டுமே இப்போராடத்தை நடாத்த முடியும் என்றும், தமிழர்கள் என்ற அடிப்படையில் தான் இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும், அடிப்படையில் பிரச்சாரப் படுத்தப்படுகிறது. இத்தகைய கருத்தே காலங்காலமாக மேலோங்கிய கருத்தாக முன்னெடுக்கப்பட்டு வருவதும், இது எந்த வர்கத்தினது என்பதும், கவனிக்கத்தக்கது.

 

மறுபுறத்தே அரசை ஆதரிப்போர், புலிகளை அழித்து, தமிழர் - சிங்களவர்கள் என்ற இனவாதத்தை மறந்து ஒற்றுமையாக இருக்க இவ்வரசு பாடுபடுவதாக கூறிவருகின்றனர். இந்த இனவாதம் இலங்கைக்கு மட்டுமே உரிய ஒரு விசித்திரமான ஒன்றாகப் பார்க்கின்றனர். இந்த இனவாதம் என்னும் பிசாசு தான், தமிழர்களின் அதிகாரத்தைப் பெறுவதற்கான பாதையிலுள்ள ஒரே ஒரு தடைக்கல் எனவும் ஓதிவருகின்றனர். இந்த இனவாதமானது ஒருசில அரசியல் தலைவர்களால், அவர்களின் தனிப்பட்ட குண நலன்களால் ஏற்படுத்தப்பட்டதாகக் காட்டவும் முற்படுகின்றனர். இது ஒரு செயற்கையான வடிவம் என்றும், இதை ஒரு சுத்தமான ஜனநாயகத்தால் துடைத்துவைக்க முடியுமென்றும் ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.

 

உலகிலுள்ள ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் இன்னும் கூட சிறுபான்மையோர் பிரச்சினை ஏதோ ஒரு வடிவத்தில் காணப்பட்டே வருகிறது. இனத்தாலும், மதத்தாலும், நிறத்தாலும், சிறுபான்மையோராக உள்ள மக்களும் கொடூரமாக நசுக்கப்படுட்டே வருகின்றனர். முதலாளித்துவ அமைப்பானது வீழ்ச்சியடைந்து வருவதன் பிரதிபலிப்பாகவே இது உள்ளது. முதலாளிதுவ வர்க்கம் தோன்றிய காலத்தில், அது சுதந்திரம், சமத்துவம், அகியவற்றின் பேராதரவாளனாக விளங்கியது. மானிய காலத்து நிலப் பிரபுக்களுக்கு எதிராக, இளமையும் இளந்தாரிப் பருவமுமாயிருந்த முதலாளி வர்க்கம் போராடியது. அப்பொழுது இக்கொள்கைகளை அது நிலப்பிரபுத்துவத்தை முற்றாக வீழ்த்துவதற்காகப் பிரகடனப்படுத்தியது. எந்த இனத்தைச் சார்ந்தவர் என்றால் என்ன எந்த மதக்கோட்பாட்டைப் பின்பற்றுபர் என்றால் என்ன, மக்கள் எல்லோரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்கள் என்பதை மனிதனின் வரலாற்றில் முதலாளி வர்க்கம் முதன் முதலில் சாதித்துக் காட்டியது. ஆனால் அரசியல் திட்டத்தில் அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட சமத்துவம், முதலாளித்துவம் முதிர்ச்சியை நோக்கி நகரும் போக்கில் வலு கெதியில் கருத்தற்றதாகி, வெறும் காகிதச்சட்டமானது.

 

இலங்கையிலும் உக்கிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நேரடியாகத் தோன்றியவைதான் இவ் இனவாதம். உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்வதும் அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்குவதும் முதலாளித்துவத்தின் சரித்திரப் பணியாகும். குறையும், விருத்தியுமற்ற இலங்கையில் இதைச் செய்வதற்கு தேசிய முதலாளித்துவ வர்க்கம் பலமாக இல்லை. அரசோ, ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ - புல்லுருவி - அரசாக இருப்பதால், இதனால் இதைச் செய்ய முடியாது. இவ்வாறான நிலைமையில் கல்வி, வேலை வாய்பின்மை, பொருளாதாரத் தேக்கம் போன்ற இன்னேரன்ன காரணங்களை மூடி மறைத்து விடவும், துரித கெதியில் சமூக மாற்றத்தை நடைந்தேற விடாமல் இடைமறித்து விடவும், இந்த  முதலாளித்துவ நெருக்கடி வேகத்தின் வேரோடிப் பிரச்சனைதான் இந்த இனவாதம்.

 

இலங்கையில் மக்களுக்கு எப்பொழுது வாக்குரிமை கிடைத்ததோ, அன்று தொடக்கம் ஆளும் வர்க்கத்தினர் சாதி, மத, இனவாத்தை ஆயுதமாக தமது கைகளில் எடுத்தகத் தொடங்கினர். மக்கள் இயக்கத்தில் இனவாதம் என்னும் கூரிய வாளை ஆழமாகப் பாய்ச்சினர். இனனூடே மத்தியதர வர்கத்தினரை தமது வாக்கு வாங்கியின் சேவைக்கும், தமது மக்கள் விரோத மயக்கும் அரசியலுக்கும், ஏற்ற சேவகர்களாக வென்றெடுத்தனர். தொழிலாள வர்க்கத்தையும், மத்தியதர வர்க்கத்தையும் ஆழப் பிரித்து வைப்பதே இம்முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். இன்றுவரை சிங்கள ஆளும்வர்க்கம் இதில் நிறைவான வெற்றியையே சாதித்து வந்துள்ளன.

 

மறுபுறம், சிறுபான்மை இனமான தமிழ் மக்களிடம், தமிழ் உயர்வர்கத்தினரால் பாச்சப்பட்ட இவ் வாளானது, அதேபோல இலாபத்தை இவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது. இருப்பினும் இது சிறுபான்மை இனமாக இருந்ததாலும், இதுவே இதன் பலவீனமாக இருந்ததாலும், இவ்வினவாத வாள், சிறுபான்மை இனத்தைப் பாதுகாக்கும் கேடயமாகவும் காட்டப்பட்டு வந்தது. இவ் இருதரப்பு மேல் வர்க்கத்தட்டு மக்களின் வர்க்க நலன்களுக்காக, ஏனைய வர்கப் பிரிவினர் தம்மை மறந்து, இதுவழியே தமது பிரச்சனைகள் தீர்ந்து விடுமென்றும், இந்த வழியே தம்மைப் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டும், தமது நிழல்களுடனேயே மல்யுத்தம் புரிந்து வருகின்றனர்.

 

நிலவும் சமூக அமைப்பின் பீடைகளுடன் நெருங்கிய காதல் கொண்டிருக்கும் காரணத்தால், வழமையான முதலாளித்துவ கூட்டணி அரசியல் வாதிகளால், தொடர்ந்து வந்த இனவாத அரச கொருர ஒடுக்கு முறையை நேருக்கு நேர் எதிர்க்கும் இப்பணிக்கு ஏற்றவர்களாக இருக்க முடியவில்லை. இதற்கு ஒரு புதுவகையான செயல்வீரர்கள் தேவையாக இருந்தது. கடந்த கால அரசின் இன ஒடுக்குமுறைச் சுமைகளின் பாரத்தினால் அழுந்திக்கிடக்கும் நிலையில் இருப்பவர்களாக இவர்கள் இருக்க முடியாது. மத்திய தர வர்க்கம் பொதுவாக ஊசலாடும் தன்மையும், இனவாதக் கூக்குரல்களுக்குச் செவிசாய்த்து, விரைந்து பணி செய்யும் பலவீனமும் கொண்டதால், இவ் வர்க்க மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும், தம் பின் கவர்ந்திழுக்கக் கூடியவர்களாகவும் அது அமைய வேண்டும். இவ் இனமுரண்பாட்டைக் கையிலெடுக்கும் முயற்சியில் சுலபமாக வெற்றி பெறுவதற்கு, புலிகள் குவிய தத்துவத்தினூடு முன்னேறி வளர்ந்தனர். (அரசின் ஆயுத அடக்குமுறையின் நேரடிப் பாதிப்பே, மக்களை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கும்)

 

தொடரும்...

சுதேகு
240309