"முடமாகக்

கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்

எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி(உண்மை)பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது."


பாசிச மகிந்தா குடும்பத்து வன்னி யுத்தத்துக்குப் பின்பான புலிகளது "தேசவிடுதலைப்போர்" அரசியலில், பிணங்களை எண்ணும் போராட்டமாகத் "தமிழீழத்துக்கான"போராட்டம் வந்து நிற்கிறது.இலங்கையை ஆளும் மகிந்தா குடும்பம் பாசிசம் என்றால் என்னவென வினாவும் ஆரம்ப "அரசியற்கல்வி கற்கும்" மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக உலகில் தன்னை முன்னிறுத்துக்கிறது.மகிந்தாவின் தம்பி "அன்னை"இந்திராகாந்தியின் மகன் சஞ்சாய் காந்தியை நினைவுப்படுத்துகிறார்.சுடரொழிப் பத்திரிகை ஆசிரியர் குறித்த கோத்தபாயவின் கருத்தும் ;அவரது உடல் மொழியும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.இவரது மனோபாவத்துக்கான உத்துதல் என்னவாக இருக்கும்?அந்நிய தேசங்களது ஊக்கமின்றிப் பேச முடிந்திருக்குமா?

இந்த இனவழிப்பு யுத்தத்தில் மண்ணுக்காகத் தமது உயிரைவிடுதல், மாண்டும்"உயிர் வாழ்வதாக"உருவகப்படுத்தப்பட்டு அதுவே மகத்தான"வீரமாகவும்"தியாகமாகவும்,வாழ்வின் உண்மையான அர்த்தமாகவும் கருத்துப் பரப்பப்பட்டு அதையே பண்பாட்டுத் தளத்தில் நிலையான பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது இன்றைய இலங்கையினது தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கங்கள்.இது, தகவமைத்து வைத்திருக்கும் இந்த "மாதிரி" மனிதர்கள் கிட்லரின் சேனைகள் போலவே தமது போராட்டத்தையும் பயங்கர வாதமாக-அரச பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால், தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது.

இன்றைய வன்னி யுத்தத்தில்,புலியிருப்புப் போருக்காக மக்களைப் பலிகொடுப்பதில் ஆர்வமாயுள்ள புலிகளிடம் இஃதெந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது-சாதரணமானவொருவர்-இனவாதிகள் கருத்தாடுகிற அதே பாங்கில் இந்தத் தமிழ் "மாதிரி மனிதர்களும்"தமது தலைமை குறித்து,போராட்டம் குறித்து,உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கதையாடுகிறார்கள்.ஊர்வலங்களில் தொடரும் புலிகளுக்கான மந்திரம் வன்னியில் கொலைகள் விழுவதைத் திறந்த மனத்துடன் வரவேற்கிறது.இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்-ஈழம் பிணங்கள் நிறையும் சவக்காலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.இது குறித்து வடக்குக் கிழக்கு மக்கள் வாளாது கிடக்கிறார்கள்.வன்னி அவர்களுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருப்பதாகப் படுகிறதோ இல்லையோ,மகிந்தாவின் காலடியைப் பற்றிக்கிடக்கத் தமிழ்த் தலைவர்கள் வழி செய்துள்ளார்கள்.

வன்னி யுத்தத்தைக் கண்டு,வடக்குக் கிழக்கு நிலை இப்படியிருக்கப் புலம்பெயர் மண்ணில் ஊர்வலங்களுக்கு நடுவில் தலைகாட்டும் தமிழ்த் தேசியமனதுக்குப் புலிகளது கோரிக்கைகளை உடைத்துப் பார்க்கக் காலவகாசம் இல்லை!இந்தச் சூழலில்,அதீதக் குறுந்தேசியக் கருத்தியல் ஆதிக்கம்-மனித மூளையைச் சலவை செய்தல் போன்றே தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.குறிப்பாகப் புலிகளது ஜீ-ரீ.வீயும்,தீபமும் இதையே செய்து முடிக்கிறது.மக்களிடம், இன்றைய போரினது கொடிய மரணவாழ்வுக்கு-தோல்விக்குப் புலிகளது அன்றைய கடந்தகாலத்துத் தவறே காரணமென்பதை எவருஞ் சொல்வதற்கோ-உரையாடவோ தயாரில்லை.இது,மேலும் தமிழ்பேசும் மக்களை அரசியற் குருடர்களாக்கிவிட்டுள்ளது.இதனால்,தமிழீழம் எனும் பொலிக் கோசத்தை அவர்கள் விடுவதற்குத் தயாரில்லாது புலிகளது குரலாக ஒலிக்கின்றார்கள்.இக் கோசத்தால் இலட்சம் மக்கள் அழிந்தும் இவர்களுக்குப் புத்தி வரவில்லை.இனவாதச் சிங்கள அரசிடமிருந்து தமிழீழத்தைப் பிரித்துவிடலாமெனச் சிந்திப்பதில் மீளவும் புலிகளது இருப்பு அவர்களுக்கு அவசியமாகிறது.ஆனால்,உண்மையானது மக்களது மரணத்தில் சுத்தமாக முகத்தில் ஓங்கி அடிக்கிறது!

 

 

புலிகளது இருப்புக்கான இக் கோசமானது சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே, அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.எனவே, தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களை-இயக்க அரசியலிலிருந்து பிரித்தெடுத்து நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்...
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டத்தில்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்."


வன்னியுத்த அழிவுக்குப் பின்பும்-புலிகளது தோல்விக்குப்பின்பும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனூடாக,நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் தேசிய அடையாளத்தை(சுயநிர்ணயவுரிமை) மீட்பதும் நம் ஜீவாதாரவுரிமையாகும்.

இலங்கையின் இரு யுத்த ஜந்திரங்களுக்குமிடையில் சிக்குப்பட்ட இலங்கை வாழ் சிங்கள-தமிழ் மக்கள் சமுதாயத்துள் மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.சிங்களப் பௌத்த பேரினவாதமோ முழுமொத்த சிங்களவர்களையும் சிங்களத் தேசத்தை மீட்கும் தேசபக்தர்களாகவும்,மகிந்தாவைப் புதிய துட்டக் கைமுனுவாகவும் சித்தரிக்கிறது!இதனால்,இரண்டு யுத்தப் பிரபுக்களதும் இருப்புக்குச் சரியான மனிதவலுக் கிடைக்கின்றது.இப்போது, இந்த மனிதவலுப் பல தளங்களில் இரு யுத்தக் கிரிமினல்களுக்கும்(மகிந்தா மற்றும் பிரபா) சாதகமான வேலையைத் திட்டமிட்டு நகர்த்தக்கூடியகவும்- ஆதரவாகவும் விரிந்திருக்கிறது.

மகிந்தாவின் தம்பி கோத்தபாயவின் கருத்தின்படி,நிலவுகின்ற அரச அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அரச அமைப்பைச்சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனால்,அனைத்தையும் கடந்து தேசமே முதலாவதும்-பிரதானமாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இத் தேசத்துக்காக அனைத்தையும் இழக்கத் தயாராகும்படி சிங்களச் சமுதாயத்திடம் மறைமுகமாகக் கோருவதில் கோத்தபாய மிகுந்த அமெரிக்கப் பாணி-புஷ்பாணி அரசியலைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.

வன்னியில் மக்கள்மீது வலிந்த தாக்குதல்களுக்காக "உந்துதல் கருத்தியல்" தளத்திலிருந்து "அனுதாப"உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத இடமுண்டு.நாளாந்தஞ் சாகும் மனிதர்களது உடல்களைக் காட்டியே புலிகள் தமது அரசியல்-போராட்டவாழ்வுக்கும்,தவறான தெரிவுக்கும் அனுதாபத்தைத் தேடுவதில் குறியாக இருக்கிறார்கள்.இதற்காக நாளும் பொழுதும் தமது கருத்தியல் பரப்புரைகளைக் கட்டவிழ்த்துவிட்டு,மக்களை அழிப்பதில் இலங்கைப் பாசிச அரசுக்கு உடந்தையாக இருக்கிறர்கள்.

தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"(ஆண்டபரம்பரைக் கனவு)அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது, மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மறுபாதி அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது, துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.

தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால், அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் வெகுஜனப் போராட்டங்களைச் செய்யமுடியாதபடி அதிகாரவர்க்கம் செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்.அந்த வகையில் மகிந்தாவின்-டக்ளஸ்சின்-கருணாவின் பாத்திரம் இதுள் மையங்கொள்கிறது.

இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பிரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.இத்தகைய புரிதலின்றி அடுத்த நகர்வு சாத்தியமற்றது.
நேற்றைய தவறே
இன்றைய இழப்புகளுக்கக் காரணமானது.
இன்றைய தவறுகள்
மேலும் நாளைய
அரசியல் வாழ்வைச் சிதைப்பதில்
எவருக்குப் பிரியமுண்டு?



ப.வி.ஸ்ரீரங்கன்
18.03.2009