தேர்தலைக் குறிவைத்து நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்புச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஏழைகூலித் தொழிலாளர்கள் வேலை தேடி பெருநகரங்களை நோக்கி நகர்கின்றனர். மொழி, மாநில எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்க்கை அவர்களைப் பெயர்த்து எறிகின்றது.

 

குறிப்பாக பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம் ஆந்திரா மாநிலங்களிலிருந்து சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்குக் கூலி வேலை செய்ய வருகிறார்கள். இதேபோல தமிழகத்தில் இருந்தும் புலம் பெயர்ந்து பெங்களூரு, மும்பை, கேரளம் போன்ற இடங்களுக்குப் போகிறார்கள். அமைப்பு சாராத தொழிலாளர்களாக வகைப்படுத்தப்படும் இவர்களுக்குக் கிடைக்கும் வேலையோ நிரந்தரம் இல்லாதது. 


இந்தியாவில் அமைப்புசாராத் தொழிலாளர்களாக கிட்டத்தட்ட 43.30 கோடி பேர் உள்ளனர். முக்கியத் தொழில்துறையான சுரங்கம், இரும்பு, மின் உற்பத்தி, துணி உற்பத்தி போன்றவை அமைப்பு சார்ந்த தொழில்கள் என்றாலும், அத்துறைகளிலும் ஒப்பந்த மற்றும் தினக்கூலிகளாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களும் அமைப்புசாராத தொழிலாளர்கள்தான்.


இரத்தம் சிந்திப் போராடி, சட்டப் பாதுகாப்புடன் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1980களுக்குப் பின் படிப்படியாகக் குறைந்து வருகிறது.  பணி நிரந்தரமான தொழிலாளர்களை நீக்கி விட்டு அவ்வேலைகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கம், பொதுத்துறை நிறுவனங்களிலும், மத்தியமாநில அரசுகளின் அரசுத்துறையிலும்  புகுத்தப்படுகிறது.

 

1980ஆம் ஆண்டு இருபது சதவீதத் தொழிலாளர்கள் சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்புடன் பணிபுரிந்தார்கள்.  ஆனால் 2009ஆம் ஆண்டில் வெறும் மூன்று சதவீதத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பு உள்ளது.


2005ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கை 45.97 கோடி. அதில் வாழ்வதற்கான ஊதியம், சட்ட மற்றும் சமூக பாதுகாப்புடன் உழைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 2.67 கோடிமட்டுமே.


பெரும் நிறுவனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், சுமைதூக்குபவர்கள், முடி திருத்துபவர்கள், செக்யூரிட்டி தொழிலாளர்கள், சமையல்காரர்கள், மருத்துவமனை, தனியார் கல்வி நிறுவனங்கள், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், எந்திர பணிமனைகள், கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், ஆடுமாடு வளர்ப்பவர்கள் என எண்ணற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளர்களுக்கு சமூகப்பாதுகாப்போ, பணி நிரந்தரமோ, சட்டரீதியான பாதுகாப்போ கிடையாது.


அமைப்பு சாராத தொழிலில் ஈடுபடுபவரின் வாழ்நிலை எவ்வாறு உள்ளது? கட்டுமானத் தொழிலை எடுத்துக் கொண்டால் அதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். கட்டுமான இடங்களில் தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்படும் இவர்களுக்குச் சுத்தமான குடிநீரோ, கழிப்பிட வசதியோ, இவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்போ கிடையாது. மருத்துவ வசதி கிடையாது.  தினமும் ரூ. 80 கொடுத்து 10 மணி  முதல் 16 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகின்றார்கள்.  இவர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை இல்லை. பணிசெய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லாததால், ஆடுமாடுகளைப் போல செத்து மடிகிறார்கள். தொழிலாளர் நலச் சட்டப்படி இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் உரிமைகளும் கிடையாது.

 

கல்லுடைக்கும் தொழிலாளர்களின் நிலைமையோ இன்னமும் கொடுமையானது. கற்குவாரிகள் அனைத்தும் மாஃபியாக்களின் பிடியிலுள்ளது. குவாரிகளில் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். எந்தப் பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் வெறும் கையில் சுத்தியலைப் பிடித்துக் கல்லுடைக்கிறார்கள். இவர்கள் ரத்தம்  சிந்தாத நாளே கிடையாது. பார்க்கின்சன், சிலிகோசிஸ் போன்ற நோய்களால் தாக்கப்பட்டு 45 அல்லது 50 வயதுகளில் ரத்தம் கக்குகிறார்கள். இவர்களுக்கும் தொழிலாளர் நலச் சட்டப்படி எந்தச் சலுகைகளும் உரிமைகளும் கிடையாது.

 

சட்டப்படியான எல்லா உரிமைகளையும் இவர்கள் பெற வேண்டுமானால் இவர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தொழிலாளர் நலச்சட்டம் இத்தொழிலாளர்களுக்குப் பொருந்தும். ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அமைப்பு சாராத் தொழிலாளர்களையும் பாதுகாக்க இந்திய நாடாளுமன்றம் இன்னமும் எந்த சட்டத்தையும் நிறைவேற்றவில்லை. எந்த விவாதமும் அங்கு நடைபெற்றதில்லை.

 

நமது நாட்டில் உலகமயமாக்கம் நடைமுறைக்கு வந்த பின்னர், சிவப்புக்கம்பளம் விரித்து இந்திய அரசு பன்னாட்டு  அந்நிய நிறுவனங்களை வரவழைத்தது. கொஞ்ச நஞ்ச உரிமைகளையாவது தொழிலாளர்களுக்கு வழங்கிய தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டன. உச்சநீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பு தந்தது.

 

உச்சநீதிமன்றம் 2001ஆம் ஆண்டு ""கோல் இந்தியா'' (நிலக்கரி நிறுவனம்) வழக்கையொட்டி வழங்கிய தீர்ப்பில் ""கான்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தர வேலையில் அமர்த்தலாம். நிரந்தர வேலை கேட்கும் உரிமை கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு இல்லை'' எனச் சொல்லி விட்டது. எனவே நீதிமன்றத்தின் மூலமும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உரிமைகளைப் பெறவோ பாதுகாக்கவோ முடியாது.

 

ஆறாண்டு கால பா.ஜ.க. கூட்டணி அரசு, தனது ஆட்சி முடியும் தருவாயில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. காங்கிரசு கூட்டணி அரசும் தனது பங்கிற்கு கடந்த டிசம்பர் 17ஆம் நாள் அமைப்பு சாரா தொழிலாளருக்கு சமூகப்பாதுகாப்பு வழங்கும் சட்டம் ஒன்றை விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றியுள்ளது. வரும் தேர்தலில் இதனைச்சொல்லி ஓட்டுப் பொறுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்தில், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான தேசிய கமிசன் ஏற்கெனவே பரிந்துரைத்தவை எவையுமே இடம் பெறவில்லை. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னர், தொழிலாளர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இச்சட்டம் போனபோது, சில திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன.   மத்திய அமைச்சரவைக்கு மூன்று முறை அப்பரிந்துரைகள் மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்ட பின்னர்தான் சட்டத்தில் அவை சேர்க்கப்பட்டன.

 

இச்சட்டப்படி 6 கோடி தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் உட்பட 10 சமூகநலத் திட்டங்களின் பலன்கள் கிட்டும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் தலைமையில் 34 பேர் கொண்ட தேசிய ஆலோசனை வாரியம் ஒன்று அமைக்கப்படும். இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், தேவையான தகவல்களை அளிக்கவும், தொழிலாளர்களைப் பதிவுசெய்து அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கவும் இந்தவாரியம் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு மாநில அரசும் இதே போன்ற வாரியம் ஒன்றைத் தங்கள் மாநிலங்களில் நிறுவி, மாற்று வழிமுறைகள் மூலம் தொழிலாளர்  நலத்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இச்சட்டம் கூறுகிறது.

 

இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டதால் 43 கோடி மக்களுக்கும் விடிவுகாலம் நெருங்கிவிட்டதாக யாரும் மனப்பால் குடிக்க முடியாது. ஏனென்றால், இச்சட்டமே எல்லோருக்கும் பளிச்சென்று தெரியுமாறு மாபெரும் ஓட்டைகளுடன்தான் உள்ளது. இச்சட்டம் சமூகப் பாதுகாப்பிற்கு எவ்விதக் குறைந்தபட்ச உரிமையையும், காலவரையறையையும் தரவில்லை. சமூகப் பாதுகாப்பும், திட்டநடைமுறைகளுடன் இணைக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நலத்திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பற்றி இச்சட்டம் மூச்சே காட்டவில்லை. இதற்கான நிதி ஆதாரங்களாக செஸ் வரி விதிப்பு, அரசின் நிதி நல்கை மற்றும் கடனுதவி மூலமும், தொழில் நிறுவனங்களும் தொழிலாளர்களும் மாதந்தோறும் தரும் சந்தாத் தொகை (சேமநல நிதி   பி.எஃப்.போல) மூலமும் திரட்டிக் கொள்ளுமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் சட்டத்தில் இது இடம் பெறவில்லை. மேலும் தொழிலாளர் நலத் திட்டங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு சட்டப்பூர்வ அதிகாரம் எதுவுமே இல்லை.

 

இந்தக் காகித சட்டத்தை வைத்துக் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலைமையில் கடுகளவேனும் மாற்றத்தை ஏற்படுத்தி விடமுடியாது. சட்டத்தையோ, நீதிமன்றத்தையோ நம்பிப்பயன் ஏதும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் தொழிலாளர்கள் என்ன செய்யலாம்? நமது உரிமைகளுக்காக பெரும் திரளாக அணிதிரள்வது, ஆலை உற்பத்தியை முடக்குவது, ஆலை வாயிலை முற்றுகையிடுவது, தெருவில் சண்டை போடுவது, அடித்தால் திருப்பி அடிப்பது, நிர்வாக அதிகாரிகள் மீது மலத்தைக் கரைத்துக் கொட்டுவது என்று போராட்டத்தை கூர்மைபடுத்துவதோடு, போராட்டக் களத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். அத்தகைய தீர்வு நிலைபெறுவதற்குத் தொழிலாளர்களை அரசியல்படுத்தி, அதிகாரத்தை பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.


 (வழக்குரைஞர் சி.பாலன், சென்னையில் ஜன. 25, 2009 அன்று, பு.ஜ.தொ.மு. நடத்திய முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ஆற்றிய உரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.)