ஆளரவமற்ற காடு; பகலிலும் கூட இருள் சூழ்ந்த சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்திலுள்ள அடர்ந்த காடு; பாறைகளில் தெறித்தோடும் நீரோடை, கிரீச்சிடும் பறவைகள், காற்றில் சருகுகள் எழுப்பும் சலசலப்பு; இவை தவிர வேறெந்த ஒலியுமற்ற அமைதியில் உறைந்த காடு. கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று பட்டப் பகலில் அக்காட்டில் அப்பாவி பழங்குடியினர் 18 பேர் சல்வாஜூடும் என்ற போலீசு குண்டர் படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டின் பேரொலியால் பறவைகள் வானில் பறந்து கிரீச்சிட, அக்காடே அதிர்ந்து குலுங்கியது.


மறுநாள், சட்டிஸ்கர் மாநில உள்துறை அமைச்சரான நான்கிராம் கன்வர், ""வெற்றி! வெற்றி!!'' என்று எக்காளமிட்டுக் கொண்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ""கொல்லப்பட் டவர்கள் அனைவரும் நக்சல்பாரி பயங்கரவாதிகள்.

 

நக்சல்பாரிகளைப் பூண்டோடு அழிக்கும் போர் தொடங்கி விட்டது. பல ஆண்டுகளாக அத்தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்குள் நாங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறோம். இன்னும் சில நாட்களில் எங்களது நிலங்களை நாங்கள் கைப்பற்றி விடுவோம்'' என்று கொக்கரித்தார் அவர்.


இது அப்பட்டமான பொய் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பழங்குடி மக்கள்; அவர்களிடம் தற்காப்புக்கான ஆயுதங்களோ, காட்டு வேலைக்கான ஆயுதங்களோ கூட கிடையாது; இது சல்வாஜுடும் குண்டர் படையின் பயங்கரவாத வெறியாட்டம் என்று கொந்தளித்தார்கள் பஸ்தார் பழங்குடியின மக்கள்.

 

இப்பிராந்தியத்தில் மக்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெற்றுள்ள நக்சல்பாரிகள், இப்பயங்கரவாதப் படுகொலைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் தட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்ததோடு, இப்பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தினர். மனித உரிமை அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.


ஆனாலும், போலீசாருடன் நடந்த ஆயுத மோதலில்தான் நக்சல்பாரி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; இராணுவச் சீருடையுடன் துப்பாக்கி ஏந்தி போரிட்ட அவர்கள், அப்பாவி பழங்குடியினரே அல்ல என்று உறுதியாகக் கூறியது,

 

சட்டீஸ்கர் மாநில அரசு. தண்டேவாடா மாவட்ட போலீசு தலைமைக் கண்காணிப்பாளரும் நக்சல் ஒழிப்புப் படையின் தலைவருமான ராகுல் சர்மா, ""ஒவ்வொரு முறையும் மோதலில் நக்சல்பாரி தீவிரவாதிகள் கொல்லப்படும் போதெல்லாம், இப்படித்தான் அவர்கள் போராட்டம் நடத்தி பொய்யைப் பரப்புகிறார்கள். மனித உரிமை அமைப்புகளும் சில பத்திரிகைகளும் இந்தப் பொய்யை ஊதிப் பெருக்குகின்றன. இது, நக்சல் தீவிரவாதிகளின் வழக்கமான பிரச்சார உத்தி. உண்மையில், நக்சல் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டுப் பகுதியில், சல்வாஜுடும் படையினருக்கும் ஆயுதமேந்திய நக்சல் படையினருக்குமிடையே நடந்த சண்டையில்தான் நக்சல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவி பழங்குடியினரே அல்ல. நாங்கள் இப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோதுதான் இந்த மோதல் நடந்தது. நக்சல்பாரிகளுக்கு எதிரான எங்கள் போர் ஓயாது. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இப்பிராந்தியத்திலிருந்து அவர்களை முற்றாக அழித்தொழிப்போம்!'' என்று சீறினார்.
 சல்வாஜுடும் என்பது அரசும் பெருமுதலாளிகளும் சேர்ந்து கட்டியமைத்துள்ள போலீசின் குண்டர் படை. நக்சல்பாரிகளோ நீண்ட காலமாக இப்பகுதியில் பழங்குடியினரின் வாழ்வுரிமைக்காகப் போராடி வரும் புரட்சிப் படை. கனிம வளமிக்க இப்பிராந்தியத்தை தரகுப் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்குத் தாரை வார்த்து, பழங்குடியினரை அவர்களது சொந்த மண்ணிலிருந்தே வெளியேற்றத் துடிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடி வருபவர்கள்தான் நக்சல்பாரிகள் என்பது யாவரும் அறிந்த உண்மை.


நக்சல்பாரிகள் மட்டுமின்றி, அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மனித உரிமை இயக்கத்தினரும் அம்மாநிலத்தில் சிறையிடப்பட்டு வதைக்கப்படுகின்றனர்.இப்பிராந்தியமோ, சல்வாஜுடும் குண்டர்படையின் தாக்குதலும் அதற்கெதிராக நக்சல்பாரிகளின் தாக்குதலுமாக அடிக்கடி ஆயுத மோதல்கள் நடக்கும் பகுதி. செய்தி சேகரிக்க இப்பகுதிக்குச் செல்வது, தமது உயிருக்கு ஆபத்தானது என்பதால் பத்திரிகையாளர்களும் இக்காட்டுப் பகுதிக்குள் செல்வதில்லை.


இந்நிலையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று அங்கு நடந்தது என்ன? மோதலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பழங்குடியினரா, அல்லது நக்சல்பாரி தீவிரவாதிகளா? போலீசும் அரசும் கூறுவது உண்மையா, அல்லது நக்சல்பாரிகளும் மனித உரிமை இயக்கத்தினரும் கூறுவது உண்மையா?


•••


 ""ஜனவரி 8ஆம் நாள், காலை 9 மணியளவில் ஏறத்தாழ 150200 பேர் கொண்ட இராணுவச் சீருடையணிந்த சல்வாஜுடும் குண்டர் படையினர், எங்களது தண்டேஸ்புரா கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்தியபடி வந்தனர். ஊருக்குள் நுழைந்தவுடனேயே எங்கள் வீடுகளைத் தாக்கி, பாத்திரங்கள்  தட்டு முட்டுச் சாமான்களைத் தூக்கி வெளியே வீசியெறிந்தனர். எங்களை அடித்து இழுத்து வந்து வரிசையாக நிற்க வைத்தனர். எங்களில் 2 பெண்கள் உட்பட 9 பேரை மட்டும் அவர்கள் தெரிவு செய்து, அவர்கள் கொண்டு வந்த மூட்டைகளைத் தூக்கி வருமாறு கோரினர். எங்கள் கிராமத்திலிருந்து ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவிலுள்ள போலீசு நிலையம் வரை இவற்றைச் சுமந்து வருமாறும், பின்னர் எங்களை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர். துப்பாக்கி முனையில் எங்களை இந்த வேலையைச் செய்யுமாறு கூறியதால், நாங்கள் 9 பேரும் அம்மூட்டைகளைச் சுமந்தபடி அவர்களுடன் நடக்கத் தொடங்கினோம்.


நண்பகலுக்கு முன்பாக, இக்காட்டுப் பகுதியிலுள்ள கொர்ரூஸ்குடா என்ற கிராமத்தை நாங்கள் வந்தடைந்தோம். இங்கு ஒரு பெண் உட்பட 9 பேரை சல்வாஜுடும் படையினர் இழுத்து வந்து, அவர்களது மூட்டைகளைச் சுமந்து வரச் செய்தனர். மாலை 3 மணியளவில் நாங்கள் சிங்கராம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். இங்கு சீதக்கா என்ற பெண் உள்ளிட்டு மேலும் 5 பேரைப் பிடித்து இழுத்து வந்து மூட்டைகளைச் சுமந்து வரச் செய்தனர்.


அங்கிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவிலுள்ள நீரோடை அருகே வந்ததும், சல்வாஜுடும் படையினர் எங்களை சிறிது நேரம் ஓய்வெடுக்குமாறு கூறினர். நாங்கள் மூட்டைகளை இறக்கி வைத்தோம். பின்னர் அவர்கள் மூட்டைகளைப் பிரித்து, அவற்றிலிருந்து இராணுவச் சீருடைகளையும் ஆயுதங்களையும் வெளியே எடுத்து, எங்களில் 78 பேரிடம் கொடுத்து அச்சீருடைகளை அணியச் சொன்னார்கள். ஒரு பழங்குடியின இளைஞனுக்குச் சீருடையை அணிவித்ததோடு, தோளில் குண்டுகளைக் கொண்ட வார்ப்படையை மாட்டி கையிலே துப்பாக்கியையும் கொடுத்தனர். பின்னர் எங்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். 15 ஆண்களைக் கொண்ட குழு ஒரு திசையிலும், 4 பெண்களைக் கொண்ட குழு மற்றொரு திசையிலும் செல்லுமாறு எங்களை வழி நடத்தினர். ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரைக் கொண்ட குழு நீரோடை அருகிலேயே இருக்குமாறு கூறினர்.


4 பெண்களைக் கொண்ட குழு சென்ற திசையிலிருந்து ""ஐயோ! அம்மா'' என்ற அலறல்; அதைத் தொடர்ந்து துப்பாக்கியின் சடசடவென குண்டு வெடிக்கும் பேரொலி. நாங்கள் அதிர்ச்சியில் விக்கித்து நின்றோம். எங்கள் குழுவை துப்பாக்கி முனையில் வழிநடத்திய சல்வாஜுடும் படையினர் அத்திசையை நோக்கி விரைந்தோடினர். இதுதான் சமயம் என்று நாங்கள் சுமந்து வந்த மூட்டைகளைப் போட்டுவிட்டு காட்டுக்குள் வேறு திசையில் தப்பியோடினோம்'' என்று கூறுகிறார் எம்லா ஹர்மா. இவர், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவாக நீரோடை அருகே இருந்தவர். அந்தக் கொடூரத்தைச் சொல்லும்போதே அவரது உடல் நடுங்குகிறது. ""அந்த நான்கு பெண்களும் சல்வாஜுடும் குண்டர் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்'' என்று விம்முகிறார் அவர். தனது சகோதரர் வேறு ஒரு குழுவாகப் பிரிக்கப்பட்டு கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சொல்லும்போது பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்கிறார் அவர்.


15 பேர் கொண்ட குழுவாகப் பிரிக்கப்பட்ட மற்றொருகுழுவை சல்வாஜுடும் குண்டர் படையினர், ஒரு மரத்தின் அருகே வரிசையாக நிற்க வைத்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். ""அவர்கள் எங்களை வரிசையாக நிற்க வைத்து, ஒவ்வொருவராகச் சுட்டுக் கொல்லத் தொடங்கியதும், கடைசியாக நின்ற நானும் மற்ற இருவரும் பீதியில் வெறிபிடித்தாற்போலத் தப்பியோடினோம்; எங்களைத் துரத்தியபடியே துப்பாக்கியால் சுட்டனர். அதில் என்னுடன் ஓடி வந்த இருவரும் குண்டடிபட்டு மாண்டனர். நான் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பினேன்'' என்கிறார், உயிர் தப்பிய தண்டேஸ்புரா கிராமத்தைச் சேர்ந்த மத்கம் தேவா.


 வழி தெரியாமல் காட்டில் அலைந்த இவர்கள், பின்னிரவில் தங்கள் கிராமத்துக்கு வந்து இப்பயங்கரவாதப் படுகொலையைத் தெரிவித்தனர். தகவலறிந்த நக்சல்பாரிகள், மறுநாள் ஆந்திராவிலிருந்து பத்திரிகையாளர்களை அழைத்து வந்து, படுகொலையின் கோரத்தையும் அரச பயங்கரவாத அட்டூழியத்தையும் உலகறியச் செசூதனர். அதைத் தொடர்ந்து சட்டிஸ்கரில் இயங்கி வரும் ""வனவாசி சேத்னா ஆசிரமம்'' எனும் தன்னார்வக் குழுவின் மனித உரிமை இயக்கச் செயல்வீரரான கோபா கன்ஜம் என்பவர், படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினரின் உறவினர்கள் 20 பேரை அழைத்துக் கொண்டு, காட்டு வழியே ஏறத்தாழ 70 கி.மீ. தூரம் நடந்து வந்து, பின்னர் பேருந்து மூலம் பிலாஸ்பூர் நகரை அடைந்து, அங்கு நீதிமன்றத்தில் விசாரணை கோரி மனு கொடுக்க வைத்துள்ளார்.


அதைத் தொடர்ந்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. எதிர்கட்சிகளான காங்கிரசும் வலது கம்யூனிஸ்டுகளும் இப்பயங்கரவாதப் படுகொலையைக் கண்டித்து சட்டமன்றத்தில் வெளிநடப்பு செசூதன. மனிஷ் கன்ஜம் என்ற வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பழங்குடியினரைத் திரட்டி மிகப் பெரிய கண்டன ஊர்வலத்தை நடத்தினார். இவையனைத்தையும் தொடர்ந்து ""தெகல்கா'' வார ஏட்டின் செய்தியாளர், சட்டிஸ்காரின் பஸ்தார் பிராந்திய காட்டுப் பகுதிக்குச் சென்று, உயிர் தப்பியவர்களிடமும் கொல்லப்பட்டோரின் உறவினர்களிடமும் விசாரித்து, ஆதாரங்களுடன் அரச பயங்கரவாதக் கொடுஞ்செயலை விரிவாக அம்பலப்படுத்தியுள்ளார்.


இத்தனைக்கும் நடுவிலும் சட்டிஸ்கர் மாநில அரசும் போலீசும் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த நக்சல்பாரி தீவிரவாதிகள்தாம் என்று கூசாமல் புளுகிக் கொண்டிருந்தன. தண்டேவாடா மாவட்ட போலீசு தலைமைக் கண்காணிப்பாளரான ராகுல் சர்மா, நக்சல்பாரி தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று கடைவிரித்து பரபரப்பாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார். ரோந்து சுற்றிக் கொண்டிருந்த இரு சல்வாஜுடும் படையணிகளுக்கிடையே ஆயுதமேந்திய நக்சல்பாரிகள் சிக்கிக் கொண்டதால், ஒரே நேரத்தில் அவர்கள் மோதலில் கொல்லப்பட்டதாகவும், அதிருஷ்டவசமாக சல்வாஜுடும் படையின் மூவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டதாகவும் சினிமா கதையை விளக்கிக் கொண்டிருந்தார்.


ஆனால், தண்டேவாடா மாவட்ட சல்வாஜுடும் குண்டர்படைத் தளபதிகளில் ஒருவரான கிச்சி நந்தா, நக்சல்பாரிகளுடன் மோதல் நடந்தபோது எங்கள் படையில் ஒருவருக்கு மட்டும் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது என்கிறார். போலீசு தலைமைக் கண்காணிப்பாளரான ராகுல் சர்மா, 30 போலீசாரோடு 54 சல்வாஜுடும் படையினர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார். ஆனால் கிச்சி நந்தாவோ 74 சல்வாஜுடும் படையினரும் 5 போலீசாரும் 4 பழங்குடியினரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார். முன்னுக்குப் பின் முரணான இவர்களின் உளறல்களே, இவர்களது கட்டுக்கதையை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. இதுதவிர, ஆந்திராவிலிருந்து படுகொலை நடந்த இடத்திற்கு வந்த பத்திரிகையாளர்கள், ""சுட்டுக் கொல்லப்பட்ட 4 பெண்களும் ஆடைகள் கிழித்து அம்மணமான நிலையில் பிணமாகக் கிடந்ததைப் பார்க்கும்போது, அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்பதை நிரூபித்துக் காட்டுகிறது'' என்று நாளேடுகளில் படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

சல்வாஜுடும் குண்டர் படையின் பயங்கரவாதப் படுகொலைகள் தொடர்ந்து அம்பலமாகியுள்ள நிலையில், வேறுவழியின்றி சட்டிஸ்கர் மாநில அரசு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, கொல்லப்பட்ட உறவினர்கள் விசாரணை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அம்மாநில உயர்நீதி மன்றம், படுகொலைக்குப் பிந்திய ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, தண்டேஸ்புரா கிராமத்தில் புதைக்கப்பட்ட 8 பழங்குடியினரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


நக்சல்பாரிகளைக் கொன்றொழிப்பது மட்டுமின்றி, அப்பாவி பழங்குடி மக்களை ஏன் இப்படி தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி சல்வாஜுடும் குண்டர்படையினர் கொன்றொழிக்க வேண்டும்? சட்டீஸ்கர் அரசு ஏன் இத்தகைய கொலைவெறியாட்டங்களை நியாயப்படுத்தி, சல்வாஜுடும் குண்டர்படையை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும்? மைய, மாநில அரசுகளிடமிருந்து கோடிகோடியாய் தின்று கொழுக்கும் சல்வாஜுடும் குண்டர்படை, தனது வீரதீர சாதனையாகக் கணக்கு காட்டுவதற்காக செய்யப்பட்ட கொலையாக மட்டும் இதனைக் கருத முடியாது.


இப்படித்தான் பல நூற்றுக்கணக்கான அப்பாவி பழங்குடியினர் "நக்சல் தீவிரவாதிகளுடனான மோதல்' என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் அவர்களின் கிராமங்களிலிருந்து அடித்து விரட்டபட்டு அரசின் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. கனிம வளமிக்க பஸ்தார் பிராந்தியத்தில் எஃகு ஆலை நிறுவிச் சூறையாடக் கிளம்பியுள்ள டாடா, மிட்டல், எஸ்ஸார் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கு விசுவாச சேவை செய்ய, பழங்குடியின மக்களை அவர்களின் மண்ணிலிருந்தே விரட்டியடிக்கும் நோக்கத்தோடுதான் சட்டிஸ்கர் அரசு சல்வாஜுடும் குண்டர்படையை ஏவி இத்தகைய பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகிறது.


பழங்குடியின மக்கள் காடுகளை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பதுதான் சட்டிஸ்கர் அரசின் எழுதப்படாத விதி. இதற்காகவே அரசும் போலீசும் பெருமுதலாளிகளும் இணைந்து பழங்குடியினர் சிலரை வைத்து உருவாக்கியுள்ள பயங்கரவாதப் படைதான் சல்வாஜுடும். நக்சல்பாரிகளை அழித்தொழிப்பது என்ற பெயரில் பழங்குடியினரைத் தாக்கி, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அவர்களைக் காடுகளிலிருந்து விரட்டியடிக்கும் இக்கொலைகாரப் படை, இன்னமும் வெளியேறாத பழங்குடி மக்களை அச்சுறுத்தி எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்தோடுதான் அடுத்தடுத்து இத்தகையப் படுகொலைகளை நடத்தி வருகின்றது. ஜனவரி 8ஆம் நாளன்று நடந்த இப்பயங்கரவாத படுகொலைகளைப் போலவே, பிஜாப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று 5 பழங்குடியினரை அவர்களது வீடுகளிலிருந்து அடித்து இழுத்துச் சென்று காட்டுப்பகுதியில் சுட்டுக் கொன்றுள்ளது, இக்கொலைகாரப் படை.

 

அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைப்படி நடாத்தப்படும் இப்பயங்கரவாத அட்டூழியங்களை நாட்டு மக்கள் வாய்மூடி அங்கீகரிக்க வேண்டும்; இல்லையேல் அவர்களும் நக்சல்பாரி தீவிரவாதிகள் என்கிறது சட்டீஸ்கர் அரசு. எனவேதான், சல்வாஜுடுமின் அட்டூழியங்களை எதிர்த்த குற்றத்திற்காக மனித உரிமைப் போராளியான மருத்துவர் பினாயக் சென் உள்ளிட்டு 40க்கும் மேற்பட்ட மனித உரிமை இயக்கத்தினரும் பத்திரிகையாளர்களும் சமூக சேவகர்களும் அம்மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


மறுகாலனியாக்கம் எனும் கொடிய போர் சட்டிஸ்கரில் தீவிரமடைந்து வருகிறது. மனிதாபிமானத்தாலோ நீதிமன்ற விசாரணை நாடகத்தாலோ இக்கொடிய போரை தடுத்து நிறுத்திட முடியாது. உள்நாட்டு  வெளிநாட்டுப் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்கான இப்பயங்கரவாதப் போரை, ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்குமான மக்கள் போரினால் மட்டுமே முறியடிக்க முடியும். அத்தகைய நீதியான விடுதலைப் போருக்கு அணிதிரள்வதே நாட்டு மக்களின் முன்னுள்ள முதன்மைக் கடமையாகியுள்ளது.


• குமார்