இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?

 

 

'ஜனநாயகத்துக்கு" திரும்பியதாக கூறுகின்றனரே, இவர்களால் மக்களுக்கு என்ன ஜனநாயகம் கிடைத்துவிட்டது. இவர்கள் 'ஜனநாயகத்துக்கு" திரும்ப முன், அப்படி 'ஜனநாயக" விரோதமாக என்னதான் செய்தனர்? அதையாவது சொல்லுங்கள். ஆயுதம் ஓப்படைக்க முன், ஆயுதத்தை ஓப்படைத்த பின், கருணா சுதந்திரக் கட்சியில் சேர முன், சேர்ந்த பின், இந்த 'ஜனநாயகத்தின்" அருமை பெருமைகளை எல்லாம் மக்களுக்கு சொல்லவேண்டியது தானே.  

 

எந்த கொள்கையும் கோட்பாடுமற்ற இரண்டு சுயநல பொறுக்கிகளின் 'ஜனநாயக"க் கதையிது. கைக் கூலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு, படுகொலைகளை ஏணியாகக் கொண்டு, அதிகாரத்தை தக்கவைத்த கதையிது. இந்த தனிமனித அதிகார வெறி, படுகொலைகளாகி தொடர்ந்தன, தொடர்கின்றது. இதன் இன்றைய அத்தியாயம் தான் ஆயுத ஓப்படைப்பு முதல் பேரினவாத சுதந்திரக் கட்சியில் இணைவது வரை, இவர்கள் அரங்கேறியுள்ள நாடகம். இந்த கூலிக் கும்பலின் நாடகத்தில், மக்களல்ல பார்வையாளர்கள். அரசுசார்பு 'ஜனநாயக" எடுபிடிகள் பார்வையாளராக இருந்து ரசிக்க, அரசு பிடில் வாசிக்கின்றது. இதுதான் 'ஜனநாயகம்" என்று எஜமானின் சங்கிலியில் கட்டுண்டுள்ள நாய்கள் எல்லாம், 'ஜனநாயகம்" வந்துவிட்டது என்று குரைக்கிறார்கள். 

 

இதற்குள் வாழ்த்துகள், அறிக்கைகள். ஆகா, ஓகோவென, புல்லரித்துப் போகும் அளவுக்கு, மக்கள் விரோதிகள் எல்லாம் 'ஜனநாயகத்துக்கு" கிடைத்த 'மாபெரும் வெற்றி" என்கின்றனர்.

 

கருணா – பிள்ளையான் அதிகாரப் போட்டியோ, ஆட்களைப் போடும் போட்டியாகியது. எப்படி போட்டுத்தள்ளுவது என்று மண்டை குடைந்து, கருணா கண்டுபிடித்த விவகாரம் தான் ஆயுதம் களைவது. இதை கண்டு சீறி எழுந்த பிள்ளையான், நீ எங்கள் தலைவனல்ல, நாங்கள் ஆயுதத்தைக் களையமட்டோம் என்றான். இப்படி பிள்ளையான் கூற, கருணா ஆயுதத்தை களைய வைத்த கூத்துத்தான் இன்று ஆயுதக் களைவாக அரங்கேறிய நாடகம்.

 

இந்த பிள்ளையான் ஒழிப்புப் போராட்டத்துக்கு தன் பாணியில் டக்கிளஸ் அடியெடுத்துக் கொடுக்க, கருணா பாராளுமன்ற உறுப்பினராகி மந்திரியுமாகி விட்டான்;. கருணாவுக்கு தெரிந்த ஓரே அரசியல் நக்குவதுதான். இதை வடிவாக நக்கினால், தன் அதிகாரத்தை தக்க வைக்கும் வகையில் நாலு எலும்பு கூட விழும் என்ற அனுபவம் இங்கு அவனுக்கு உதவியது. புலியில் கருணா தளபதியாக தலைவருக்கு விசுவாசமாகவும், அவரின் விருப்பப்படியும் ஈவிரக்கமற்ற கொலைகளை செய்வதன் மூலம் அதை அடைந்தான். அதையே தன் கைக் கூலித்தனம் மூலம், தமிழரைக் கொல்லும் கொலைகார அரசில் சேர்ந்து மந்திரியுமாகிவிட்டான். இதன் மூலம் அரசைக் கொண்டே, பிள்ளையானின் ஆயுதத்தைக் களைய வைத்த கதைதான் இந்த ஆயுதக் களைவு.

 

தமிழ்மக்களையும் புலியையும் கொல்ல அரசு வழங்கிய ஆயுதத்தை, தன் கூலிப்படையினரிடமிருந்து அரசு மீள பெற்ற நாடகம் தான் ஆயுதக் களைவு. அடித்து பறித்து வாங்குவதா அல்லது கவுரவமாக கொடுப்பதா என்ற நாடகத்தின் கூத்தைத்தான், பிள்ளையான் அரங்கேற்றினான்.

 

இனி பிள்ளையான் கோஸ்டியை வசதியாக போட்டுத்தள்ள, கருணா சுதந்திரக் கட்சியிலேயே இணைந்து விட்டார். கருணாவோ புலிப் பாசிட் இயக்கத்தின் தளபதி. பிரபாகரனுக்கே ஆப்பு வைத்தவன். அவன் புலிப் பாணியில் பிள்ளையானை ஒழித்துக் கட்ட, புலிகள் வைக்கும் அதே ஆயுதக் களைவை வைத்ததுடன், அரசு மூலமே அதை நடைமுறைப்படுத்தியுள்ளான். எந்த அரசு கருணாவுக்கு ஆப்பு வைத்து பிள்ளையானை உருவாக்கியதோ, அதே அரசு மூலம் கருணா பிள்ளையானுக்கு ஆப்புவைக்கின்றான்.

 

புலிகள் அரசு மூலம் மற்றைய கூலிக் குழுக்களின் ஆயுதத்தைக் களைந்த பின்தான், கொல்வது வழமை. அதே வழியை பிள்ளையானுக்கு எதிராக, கருணா அரசு மூலம் செய்துள்ளான் என்றால், பிள்ளையானை போட்டு முடிக்கும் வரை புலிக் கருணா காய் நகர்த்துவது தொடரும்.        

          

முதலில் கருணா ஆயுதக் களைவை வைத்த போது, இதே நோக்கில்தான் அவன் கோரினான். பிள்ளையான் நிராகரித்ததும், இன்று அவர்களாக ஆயுதத்தை ஒப்படைப்பதாக கூறுவது, கொலைகளை அரங்கேற்ற நடக்கும் நாடகம். இதற்கு அமைய கொலைகார அரசு, ஆயுதத்தை ஓப்படைக்க வைத்துள்ளது. கருணா இனி தன் திருவிழாவை தொடங்க வேண்டியது தான் இந்த 'ஜனநாயகத்தின்" அடுத்த காட்சி. இருந்து பாருங்கள்.  

 

பி.இரயாகரன்
11.03.2009