இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.

 

1987 இல் தமிழ் மக்களின் தலைவிதியை இந்தியாவை நம்பி ஓப்படைப்பதாக கூறிய புலிகள், ஒருபகுதி ஆயுதத்தை மட்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். பின்னால் இந்தியாவுக்கு எதிராகவே, புலிகள் ஒரு யுத்தத்தையே நடத்தினர். இந்தியாவின் சதிகளையும், ஆக்கிரமிப்பையும் கூட இதன் மூலம் முறியடிக்க முனைந்த புலிகள், அதற்கு ஈடாக  மேலும் பாசிசத்தை தம் தலைக்கேற்றினர். இதன் மூலம் மேலும் மக்களில் இருந்து அன்னியமாகினர். இது எம் வரலாறு.  

 

இப்படி அன்று செய்தது போல் அல்ல, இன்று மாறாக ஏகாதிபத்தியத்திடம் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்து விட்டு சரணடையும் வாய்ப்பு காணப்படுகின்றது. இம்முறை அப்படி நடந்தால், அது முற்று முழுதான சரணடைவாகத்தான் அமையும். அப்படி நடந்தால், மக்களின் பெயரில் நடக்கும் மாபெரும் துரோகம்.

 

இப்படி ஒன்றை புலிகள் அரங்கேற்றினால், இந்தியாவின் முன்னைய கதையைக் கூறியபடி, மீண்டும் போராடுவோம் என்று கூறி மக்களையும் தம் போராளிகளையும் ஏமாற்ற முனைவார்கள். கிடைத்ததை பிடித்துக் கொண்டு, மேலும் முன்னேறுவோம் என்று சொல்லும் துரோகத்தையே தமிழ்மக்களின் தீர்வாக வைப்பார்கள். டக்கிளஸ் கூறுவது போல்,  கோமணத்தைப் பெறுவோம், பின் வேட்டியை அடைவோம் என்று கூறி ஜனநாயக பாசிசத்தை தீர்வாக வைக்கின்றனர். இதேபோல் புலிகள் சொல்லும் காலம் வந்தால், அதை துரோகமல்ல என்று சொல்லி பிழைக்கவே புலிப் பினாமிகள் முனைவார்கள்.

 

போராட்டத்தை கைவிடுதல், ஆயுதத்தைக் களைதல், சுற்றிவளைப்பில் இருந்து தப்ப பேரங்கள் மூலம் தீர்வு, சரணடைதல் என்று எதுவானாலும், அவை எல்லாம் தமிழ்மக்களின் பெயரில் செய்கின்ற துரோகங்;கள் தான். கடந்த காலத்தில் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை மறுத்த புலிகள், அதை பாசிசமயமாக்கினர். அதையே பின் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர். இதேபோல் தமிழ் மக்களுக்கு எதிரான தம் சொந்த சுயநலத்துக்கான காட்டிக்கொடுப்பை, நியாயப்படுத்தும் பேரங்கள் இன்று திரைமறைவில் நடக்கின்றது.

 

அரசுடன் கூடி தமிழ்மக்களுக்கு எதிரான பேரங்களை செய்யும் துரோகிகள் எதைச் செய்கின்றனரோ, அதை நோக்கி புலிகளின் நகர்வுக்கான சமிக்ஞை வெளிப்படுகின்றது. இதை புலிகள் செய்தால், அதுவும் தமிழ்மக்களுக்கு செய்யும் ஒரு துரோகம் தான்.

 

பி.இரயாகரன்
26.02.2009