இருந்தாப் போல், ''தேடகம்'' ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது( -மாசி 20 -2009 ''தேசம் நெற்''- ). 1989ல் இருந்து இயங்கி வந்த ''தேடகம்''(நூலகம்), ''தேடல்''(சஞ்சிகை), சமூக சேவைகள், தேடல் பதிப்பகம், கலை இலக்கிய மன்றம்

 போன்ற உப பிரிவுகளைக் கொண்டு இயங்கி வந்த ''தமிழர் வகைத்துறை வள நிலையம்'' (கனடா), புலிகள் தீயிட்டதன் பின், பத்தோடு பதினொன்றாக யாழ் வீழ்ச்சியுடன் காணமற் போனது.

 

இன்று புலிகள் மீதான நெருக்கடி, இவர்களை மாம்பழத்துப் புளுவாக துடிக்க வைத்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல! புற்றீசலாக இவர்கள் இன்று வெளிட்டிருக்கும் அறிக்கை, இவர்களின் தொட்டில் கொள்கையின் தொடர்ச்சியே! ''தேடல்'' சஞ்சிகையில் வெளிவந்த கருத்துக்கள் இவர்களின் கருத்துமல்ல. "தேடலில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் எழுத்தாளர்களின் பொறுப்பு என்னும் சம்பிரதாயத்தை தாங்கி வருகிறது" என்ற பரவலான தமிழ் சஞ்சிகைகளின் ''நடு நிலைமை''க்கான தாரகை மந்திரத்தைத்தான் தேடலும் வரிந்து கொண்டிருந்தது. (அன்று புலிகளுக்கும், புலிகள் மீதான கடும் விமர்சனத்துக்கும் இடையே, இவர்கள் தம்மை ''நடு நிலைமை'' ஆளர்களாக இருத்தி வைப்பதற்கே இதைப் பயன்படுத்தினர் என்பதே உண்மையாகும்)

 

ஆயினும் தேடல் தனது கருத்தாக ஆசிரியர் தலையங்கத்தை வெளியிடவேண்டிய பொறுப்பை மறுபுறத்தே கொண்டுமிருந்தது. இவர்கள் எவ்வளவு தான் சாமத்தியமாக எழுதினாலும், இவர்களது நிலைப்பாடு அதில் பிரதிபலித்தே தீரும். இதற்கு நடுநிலைமை என்னு ஒன்று இருக்கமுடியாது என்பதை இவர்கள் அறியாமல் இல்லை. (இத் துண்டறிக்கை தேடகத்தின் சிலரால் வெளியிடப்படதாகினும், தேடலின் பழைய நிலைக்கு அவர்களும் உடந்தையே!)

 

1991ல் புலிகள், யாழில் அரசமைத்து இருந்த காலத்தில்... தமிழ் இனவாதம், பேரினவாதமாக வளர்ந்த வேளை..(முஸ்லீம் மக்கள் வெளியேற்றம், இனப்படுகொலைகள்) வெளிவந்த ''தேடல்'' இதழ் -7 இன் ஆசிரியர் தலையங்கத்தைப் பாருங்கள்...

 

"புலிகளும்.... வரலாற்று தவறுகளும்"

 

"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இரண்டு முக்கிய நடவடிக்கைகளை அண்மையில் எடுத்துள்ளனர். தாம் சார்ந்த விடுதலை அமைப்புக்களை விட்டு வெளியேறியும், சொந்த மண்ணை விட்டு வெளியேறாது மண்ணில் வாழ்ந்து வந்து வந்த பல நல்ல உள்ளங்களை அழித்துள்ளார்கள். வட பகுதியை விட்டு சகல முஸ்லீம் மக்களையும் இரண்டு மணி நேரத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்கள்.

 

இவ்விரண்டு நிகழ்வுகளும் தமிழின விடுதலை போராட்டத்தை முன்தள்ளுமா? இல்லை பின்தள்ளுமா...? இதற்கான சரியான பதிலினை தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். மாறாக, அவ்வாறு செய்யாமல் எத்தனை பெரிய இராணுவ தாக்குதல்களை செய்தாலும் அது தமிழின விடுதலை போராட்டத்தை முன் தள்ளப் போவதில்லை.


............

 

தாம் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்ந்து வந்த முஸ்லீம் மக்களை வெளியேற்றிய புலிகளுக்கும்: சிங்கள இனவெறி அரசின் நடவடிக்கைகளுக்கும் வேறுபாடு காண முடியாது இருக்கிறது. தமிழ் பிரதேசத்தில் வாழும் இன்னுமொரு தேசிய இனத்தை அங்கீகரிக்காமல் ஒரு தேசிய இனம் தன் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா? ஆசிரியர் குழு (நன்றி: ''தேடல்'' - 7)

 

சரி விசயத்துக்கு வருவோம்: தேடல் குழந்தைப் பருவம் தொட்டே, இன முரண்பாட்டையும், தேசிய இன முரண்பாட்டையும் ஒன்றாகவே நினைத்து குழம்பி வந்துள்ளது. அதனால் தான் "இவ்விரண்டு நிகழ்வுகளும் தமிழின விடுதலை போராட்டத்தை முன்தள்ளுமா? இல்லை பின்தள்ளுமா...?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. போதாக் குறைக்கு "தமிழ் பிரதேசத்தில் வாழும் இன்னுமொரு தேசிய இனத்தை அங்கீகரிக்காமல் ஒரு தேசிய இனம் தன் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?" என புலியைப் பார்த்துக் கேட்கிறது. தேசிய இன முரண்பாட்டுக்கு (தமிழ் தேசிய இனத்துக்கும் -சிங்கள தரகு முதலாளித்துவ அரசுக்கும் இடையிலான முரண்பாடு) அல்லாமல்- இன முரண்பாட்டுக்கு ( தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் அடிப்படையில், தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு), இவர்கள் சுயநிர்ணய உரிமையை தூக்கிப்பிடிக்க, முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து துரத்தியது இடஞ்சல் என இனரீதியான சுயலாபத்திலேயே சிந்திக்கிறது. இன்று இவர்கள் இன முரண்பாட்டைத் தூக்கிப் பிடிப்பதால் தான், சிங்கள இனவாத அரசையும் சிங்கள மக்களையும் இவர்களால் வேறு பிரிக்க முடியவில்லை.(புலிகள் - சிங்கள தேசமே தம்மீது யுத்தம் புரிவதாக சொல்கிறது) இந்த குறைபாட்டால் தான், முடிந்த அளவுக்கு புலிகள் அல்லது அரசு என்ற அணிகளுக்குள்ளையே மாறி மாறி குத்துக் கரணம் அடித்து வருகிறார்கள். இதற்கு வெளியே இருக்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மிகப் பிரமாண்டமான சக்தியில் நம்பிக்கை இழந்து கிடக்கிறார்கள். இன முரண்பாட்டை இவர்கள் தூக்கத் தூக்க, இலங்கையில் இனவாத அரசுகளின் இருப்பானது சாகா வரம் பெற்றுள்ளது. சுலபமாகவே அரசும், புலிகளும் என்ற இரண்டு நிலைகளும் - தேசிய விடுதலைப் போராட்டத்தை முண்டமாக்கி மூலையில் தூக்கி வீசி விடுவதை சாதுரியமாகச் செய்துள்ளது.

 

முதலில் இவர்களின் அறிக்கையைப் பார்த்துவிட்டு மேலே பேசுவோம்.

 

1. "தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற அரசியலை முடிவுக்குக் கொணர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையை இந்திய அரசு முன்தள்ளியது."


இது தவறன அரசியல் முடிவாகும். சுருக்கமாகச் சொல்வதானால்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தொடர்ச்சியில், ஆயுதப் போராட்டத்தை வளர்த்து விட்டதுதான் உண்மை. குறிப்பாக முற்றுகைப் பொருளாதாரத்துக்கு, வடக்குக் கிழக்கை அமைதி குலைந்த பிரதேசமாக்கி நெருக்குவது என்பதோடு இந்திய விஸ்தரிப்பு வாதத்தை, ஏகாதிபத்திய நலனோடு எதிர் நிறுத்துவது. இந்தியா பாராளுமன்ற அரசியலைத்தானே தனது தீர்வாக முன்வைத்தது. இல்லை என்றால், 70களில் இ.தி.மு.க வடக்கே தடைசெய்யப்பட்ட போதோ, தென்னிந்திய திரைப்பட மற்றும் பத்திரிகைகள் மட்டுப்படுத்தப்பட்ட போதும் இந்தியா மூச்சு விடாதது ஏன். இதைவிடவும் குட்டிமணி இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது எப்படி?


2. "தேசிய விடுதலைப் போராட்ட தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுத முறையில் வெற்றி பெற்று பெருன்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலை புலிகள் உருவாகினார்கள்."


இதுவும் தவறானது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்த்தின் தலைமை இன்னும் உருவாகவில்லை! மொழிப் பிரச்சனையால் ஒன்றுபட்ட வடக்குக் கிழக்குக் கான தலைமையும், அதன் தொடர்ச்சியான தமீழீழக் கோரிக்கையும் - மொழி ரீதியான தேசிய கருத்தாடலுக்கு ஒற்றைத் தலைமையை அவசியமாக்கியது. சுய பொருளாதார வெளிப்பாடான தேசிய கருத்தமைவை அழிக்கவும், இன - மொழி அடிப்படையில் தேசிய கருத்தாடலை வைத்திருக்கவும் புலிகள் அதிக ஆர்வம் காட்டியதாலும் இனப்படு கொலைகளை மற்றவர்களை விட கூசாமல் செய்ததாலும் புலிகள் இந்த இனவாத கருத்தமைவில், ஏகபிரதிநிதிகளாக காட்டப்பட்டனர்.


3. "இந்தியஅரசு தனக்கு சாதகமான அரசியல் குழுக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் தலைமையில் இல்லையென்ற காரணத்தால் சகோதர படுகொலைகளை ஊக்குவித்தது. இயலாமல் போனபோது இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாகக்கூறி தனது படைகளை அனுப்பி புலிகளுடன் யுத்தம் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொன்றழித்தது"


இந்திய அரசு இலங்கைக்குள் வர முன்னரே சகோதர படு கொலைகள் தலையெடுத்திருந்தன. இந்திய அரசை புலிகளும் இணைந்தே கூட்டி வந்தனர்.


4 "இன்றைய நிலையில் பெரும்பான்மைத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும், தமிழர் சுயநிர்ணயத்துக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பின்தள்ளும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்"


இன்று தமிழீழத்துக்கான வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில்:


வடக்கிலிருந்து 75,000 முஸ்லீம் மக்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கிழக்குக்கான தனித்துவமான முதலாளித்துவ தலைமை, புலிகளுக்குள் இருந்து பிரதேசவாதமாகப் பிரிந்துள்ளது. முதலாளித்துவ தலைமைப் பிரிவே வடக்குக் கிழக்குப் பிரிவாக இவர்களால் கருத்தமைவாக்கி விட்ட நிலையில் ... அதாவது இருப்பிலிருந்த மொழி, இனவாத தேசிய கருத்தாடலே பிரிவுபட்ட நிலையில்... தமிழ் முஸ்லீம் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்துவிட்ட நிலையில் உண்மையில் தமிழ் பேரினவாதமே இங்கு ஓங்கி வாழ்கிறது என்பது மறை பொருள்!


காலமென்னும் பயங்கரமான நகரும் பட்டை நம்மில் செய்த மாற்றங்களை பாருங்கள். அன்று புலிகளிடம் தேடகம் கேட்ட கேள்விகளுக்கு, இன்று தேடகமே பதிலளித்துள்ளது, அவர்களே பதிலளிக்கும் நிலை! அன்றைய வரலாற்றுத் தவறுகள், இன்று வரலாற்றின் தேவைகளாக இவர்களின் முன்னுள்ளது.
இன்று வன்னி மக்கள் எதிர் கொண்டிருக்கும் மரணத் தீர்வையில் இருந்து விலகவேண்டுமானால்


"அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும்!" என்று கோருவதால் சாத்தியமாகி விடுமா? இந்த யுத்தம் தொடங்கி வருடக்கணக்கு ஆகிவிட்டது. கிழக்கில் யுத்தம் நடந்தபோது, 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் யுத்தப் பிரதேசத்திலிருந்து அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்பொழுது யாரும் யுத்த நிறுத்தத்தை கோரவில்லை. ஏனென்றால், கிழக்கின் அரசியல் இதை விரும்பியது. மறுபக்கத்தில் புலிகளின் தலைமைக்கு இது ஒரு பாரிய நெருக்கடியையும் கொடுக்கவில்லை.


கிளிநொச்சியை நோக்கி யுத்தம் நகர்ந்தபோதும், புலிகள், அகலக்கால் வைத்து வரும் இராணுவம் திரும்பிப் போகாது என்று சொன்ன போதும், இந்த யுத்த சூழலுக்குள் இருக்கக் கூடிய மக்கள் அவலங்களுக்காக யாரும் யுத்த நிறுத்தத்தைக் கோரவில்லை. ஏனென்றால் புலிகளின் மிதமிஞ்சிய ஆயுத பலத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் முற்றுகை இடப்பட்டு முடக்கப்பட்டதும் யுத்த நிறுத்தம் இவர்களுக்கு அத்திய அவசியமாகி விட்டது. இருப்பிலுள்ள யதார்த்தத்தையும் மீறி!


சரி, யுத்த நிறுத்தத்தைக் கோருவதில் கூட வேறு தெரிவுகளுக்கு இடமளிக்கிறார்ககளா என்றால் அதுவும் இல்லை. புலிகளும் மக்களும் பிரிக்க முடியாத பரம்பொருள் என்ற முடிவுக்கு வெளியே இதையாரும் கோரினால் துரோகமாகவே கருதுகிறார்கள். இனி, யுத்த நிறுத்தத்தை யாரிம் கோருவது, எப்படிக் கோருவது என்பதில் கூட தெரிவுகளுக்கு இடமில்லை. சர்வதேச அரசுகளிடமும், இந்திய அரசு ஊடாகவும் கோருவதற்கு வெளியே தெரிவுகளுக்கு இஸ்ரமும் இல்லை, இவர்களுக்கு.


தமிழ் நாட்டில் கொந்தளிக்கிற அளவுக்கு, இலங்கையில் மிக மோசமாக ஒடுக்கப்படுகிற மலையகம் கிஞ்சிதமும் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. சிறுபான்மை தேசிய இனமான தமிழ் முஸ்லீம் மக்கள் புலிகள் மக்களை விடவேண்டும் என்பதைத் தவிரவும் புலிகளின் நிலை பற்றி சிரத்தை கொள்ளவில்லை. இதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆக மொத்தத்தில் இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களிடையேயே யுத்த நிறுத்தத்துக்கான குரல்கள் ஓங்குவதற்கு தடையாக இருப்பது என்ன? இதற்கான விடைகள் எல்லோருக்கும் தெரிந்தது தான்.


இதைவிடவும், அரசு இன்று யுத்தத்தை நிறுத்துமா?


ஆம்! என்போர்: மக்கள் அங்கே மடிந்து கொண்டிருப்பதால், இதைச் சர்வதேசத்துக்குக் காட்டினால் யுத்தநிறுத்தம் வந்துவிடும் என்ற வெறும் நம்பிக்கையில் மட்டுமே -ஆம் என்கின்றனர்.


1971ம் ஆண்டு ஜே.வி .பிக்கு எதிரான யுத்தத்தில் 3 கிழமைகளில் 50,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டும், 15,000 பேர் சிறையில் அடைக்கப்பட்ட போதும், எந்தச் சர்வதேசமும் இதை ஏனென்று கேட்கவில்லை. இதை நினைவில் நிறுத்தும் தேடகம் இதையும் ஒரு காரணமாகக் காட்டி போரை நிறுத்திவிட முனைவது சிறுபிள்ளைத் தனமாகவுள்ளது. ஜேவிபியை கொல்லும் போது இராணுவத்தில் பல்லின மக்களும் இருந்தனர் என்பது மட்டுமன்றி, அன்றைய தமிழ் அரசியலும் அதை வரவேற்றது! இதைச் சாட்டாக வைத்து பல சமூக அக்கறை கொண்டோரையும் சிறையில் தள்ளியது, கேடுகெட்ட தமிழ் இனவாத அரசியல்! இந்த அரசியலின் தொடர்ச்சி... தான் இன்று இதைப் புரட்டிப் போடுகிறது தனது சுயநலத்துக்காக. அதன் தொடர்ச்சியான புலிகளுக்காக.


யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்:


அரசுக்கு இன்று ஒரு பேச்சுவார்த்தை மேடையை விடவும் (அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்), யுத்தக் களமே தேவையாக இருக்கிறது. அதில் தான் அதற்கு அதிக இலபமுண்டு. இது இந்திய - சீனா மற்றும் உலக அரசியல் நிகழ்ச்சி நிரலின் முதல் அத்தியாயமாக புலிகளை அகற்றல் இருப்பதால், இனி ஒரு யுத்த நிறுத்தம் சாத்தியமே இல்லை. இதைத்தான் நாம் தலை தலையாக அடித்துக் கூறியிருந்தோம். புலிகளுக்கு கேட்பதற்கு காதுகளும் இருக்கவில்லை, தேடகதுக்கு பார்ப்பதற்கு கண்களும் இருக்கவில்லை. ஏனெனில் இவர்கள் வெறும் இன முரண்பாட்டுக்குள் மூழ்கிக் கிடக்கும் முடவர்களே ஆகும்! இவர்கள் எழுந்து வருவது என்பது சீவியத்தில் நடக்காத காரிமாகும்.


இன்று இந்த வெறும் இன முரண்பாட்டின் அடிப்படையில் மூண்டிருக்கும் ''இனப்போருக்கு'' விடைகொடுப்போம் என்று கோருவதற்கு யாருமில்லை! தேசிய இனங்களுக்கும் - அரசுக்கும் இடையிலான, தேசிய இன முரண்பாட்டை தீர்க்கும் அரசுக் கொரிரான -தேசிய இனங்களை- ஒன்றுதிரட்டும் திட்டம் யாரிடமும் இல்லை. ஏனென்றால் ஒன்றில் அரசு.- அல்லது புலிகள் என்ற இரண்டு விரல்களுக்குள் எச்சிலடித்துப் பார்க்கக்கூட சிறுபிள்ளைத் தனமான முயற்றசிக்குக் வெளியே கூட, எம்மிடம் அரசியல் தெளிவு அறவே இல்லை.


முக்கி முக்கி புலிகளுக்கும், புலி எதிர்ப்புக்கும் நசுக்கி விடும் குசுவதைத் தவிர, தமிழர்களின் உரிமைகளை (தமிழ், தமி்ழ் முஸ்லீம், மலே, பறங்கிய, எல்லைப்புற சிங்கள்..) புரட்சிகரமாக வென்றெடுக்க இவர்களிடம் எதுவுமில்லை. இவர்கள் தாம் ஏதோ ஒரு பக்கம் விசுவாசிகளாக இருப்பதையே ஆயுட்கோட்பாடாகக் கொண்ட சிறந்த நவீன அடிமைகள்.


இன்று யுத்த சூழலுக்குள் சிக்கிக் கிடக்கும் வன்னி மக்கள். இந்த மக்களின் நலன் மட்டும் தானா மக்கள் நலன்? இதற்கு வெளிளே மக்கள் நலன் என்று ஒன்று இல்லையா? வன்னி மக்கள் யுத்த சூழலுக்குள் சிக்கிச் தவிப்பதால் அவர்களின் நிலைமை முதன்மை ஆனதுதான், ஆனாலும் ஏனைய மக்களின் நலன் கைகழுவக் கூடியதா? அவ்வாறு இல்லையானால் யுத்த சூழலுக்கும், இதற்கு வெளியிலுமுள்ள மக்கள் நலனை இணைத்த (தேசிய ) மக்கள் நலனுக்கான பொது நடைமுறை என்ன?


இந்தக் கேள்விகளுக்கு வெளியே, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் எங்கே இருக்கிறது? அது எப்படி இருக்கிறது? ஒரு கதைக்கு புலிகளால் டக்ளஸ் அழிக்கப்பட்டால் அழிந்து போகாத தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், புலிகள் அழிந்தால் மட்டும் அது பின்னடைவுக்கு உள்ளாகும் என்பது எந்த மக்கள் நலன் சார்ந்தது என்பதை தேடகம் சொல்ல முடியுமா?


அன்று கூட்டணியினர் அரசை எதிர்த்து நின்றபோதும், அவர்கள் தேசியவாதிகளும் அல்ல: அதேபோல அன்று அரசுடன் நின்ற துரையப்பாவும் துரோகியுமல்ல-தேசிய வாதியுமல்ல: இவ்வாறான வர்க்க ரீதீயான சார்பு நிலைகளின் தொடர்ச்சியே.. இன்று புலிகளும், டக்ளசும்! வர்க்க ரீதியாக இவர்களை வரையறுப்பதற்கு வெளியே தேசியமும், துரோகியும் அரசு சார்பு, எதிரை வைத்தா தீர்மானிப்பது? இதா இயங்கியல்?


இன முரண்பாட்டைத் தூக்கிக் கொண்டு யுத்தத்தை நிறுத்தவும் முடியாது, தேசிய விடுதலையை நோக்கி பயணிக்கவும் முடியாது. இன முரண்பாட்டைத் தூக்குகின்ற ஒவ்வொருவனும், அரசின் மறைமுக நண்பனாவான்.


வினையை விதைத்து விட்டு, தினை விளைவதாக கூறுவது பக்கா சந்தர்பவாதமாகும். இனவாதத்தை விதைத்து விட்டு, தேசிய விடுதலைப் போராட்டம் நடக்குதென்று இவ்வளவு நாளும் ஆடிய கூத்துக்கள் போதும்! இதற்கு புலிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டுமென்ற அர்த்தமல்ல. இனப் போருக்கு எல்லோரும் விடைகொடுக்க முன்வரவேண்டும்! இது இனி ஒரு மனிதத்தைத் தின்னக் கூடாது!! இனவாதத்தை தூக்கி எறிந்து விட்டு,எம்மை நாமே தேசிய நலன்களின் புதிய அச்சில் வார்த்தெடுக்காமல் எவருக்கும் விமோசம் கிடைக்கப் போவதில்லை. சிறுபான்மை இனமொன்று பொரும்பான்மை இனமொன்றை தன் போர்ப்பலத்தின் திறனைக் கொண்டுமட்டும் விடுதலை பெற்றதாக வரலாறே கிடையாது! தமிழ் - சிங்கள மக்களுக்கிடையே வளர்ந்து வந்த இனவெறியே பாசிசத்தின் ஆணிவேராகும்!

 

சுதேகு
250209