மனிதஅவலத்தை பற்றி பேசுவது சடங்காகி சம்பிரதாயமாகிவிட்டது. இதற்குள் அரசியல் சூழ்ச்சிகள். இதற்கு அமைய அவலம் அரசியலாக்கப்பட்டு, அவையே அவர்களின் அரசியலாகின்றது. இதற்கு பின் பிழைப்புத்தனம், நக்குண்ணித்தனம் என்ற விதம்விதமான கயவர் கூட்டத்தின் பிழைப்புகள்.

இதைப் பற்றி பேசுபவர்களின் அரசியலோ வலதுசாரியம் முதல் இடதுசாரிய பிழைப்புவாதம் வரை உள்ளது. இவர்கள் என்றும் மனிதனாக மனிதனுக்கு என சிந்தித்தவர்களல்ல. மனிதன் தன் விடுதலையை, தான் போராடிப் பெறுவதை, இவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மக்கள் தம் விடுதலைக்காக தாம் போராடுவதை முன்னிறுத்தி, மனித அவலத்தை முன்மொழிபவர்களல்ல. 

 

இந்த கயவாளிப் பயல்கள் என்ன செய்கின்றனர். சிங்கள பேரினவாத அரசிடம் எம் மக்களை கொல்லாதே என்று கோருகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க கூடாது என்பது புலிகளின் பாசிசக் கட்டளை. இதற்குள் மனிதாபிமானம் பற்றி உணர்ச்சிகரமான வித்தைகள். இதன் மூலம், சிங்கள பேரினவாத அரசு கொல்லுவதை நிறுத்திவிடுமா!? எம் மக்களின் எதிரியான இந்தியாவும் ஏகாதிபத்தியங்களும், இதை இலங்கையிடம் கோரிவிடுமா!? இல்லை. அப்படிக் கோரினாலும், உங்கள் மனிதநேயம் போல் அவையும் தங்கள் அரசியல் தேவையையொட்டிய சம்பிரதாயபூர்வமான நாடகங்கள் தான்.

 

இங்கு இதன் பின்னணியில் மனித அவலத்துக்கு தீர்வு இருப்பதில்லை. யுத்தத்தை நிறுத்து என்று கோருவது பிழையில்லை. எப்படி, எந்த நோக்கில், எதனடிப்படையில் கோருவது என்பதுதான் இங்கு பிரச்சனை. 

 

மறுபக்கத்தில் தமிழ் மக்களை கொல்வதை பேரினவாதம் நிறுத்தாது, என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம். அப்படியிருக்க தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க, நாம் என்ன செய்தோம். எதை முன்வைத்தோம்.

 

இதை புலிகள் நினைத்தால் மட்டும் தடுக்க முடியும். நீங்கள் நினைத்தால், அதை புலியிடம் கோரமுடியும். நீங்கள் இதையா கோருகின்றீர்கள்? இல்லை. சரி இது தவறா!?

 

இப்படி நீங்கள் மனித விரோதிகளாக இருந்தபடி, மனித அவலம் பற்றி ஓப்பாரி வைக்கின்றீர்கள். இன்று இந்த எல்லைக்குள் தான் மனிதம் அழிகின்றது. புலிகள் மக்களை விடுவிக்கத் தயாராகவில்லை. நீங்கள் அதை கோரவும் தயாராகவில்லை. இதனால் மக்கள் கொல்லப்படுவது, தொடருகின்றது. கொல்லப்படுவதற்கு துணையாக நீங்கள் உள்ளீர்கள். இதனால் நாங்கள் எந்தவிதத்திலும் உங்களுக்கு ஓத்துழைக்க முடியாது. இதன் அர்த்தம், இலங்கை அரசை ஆதரிப்பதல்ல.

 

இன்று நடக்கும் போராட்டத்தை எடுங்கள். சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து, அவர்கள் உள்ளடங்கிய ஒரு பொதுக் கோசத்தை ஏன் உருவாக்க முடியவில்லை. உங்கள் வரட்டுக் கோசத்தின் கீழ் அவர்களை வரக்கோருவது, எந்த வகையில் நியாயம். சர்வதேச மக்கள் உள்ளடங்கிய வகையில், அவர்களின் பொதுக் கோசத்தின் கீழ் ஒரு போராட்டத்தை நடத்த முன் வந்திருக்க வேண்டும். இதை நீங்கள் செய்யவில்லை. சரி, அவரவர் கோசத்துடன் போராட அழைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் நிராகரிக்கபப்பட்டது. இதற்கு அப்பால் மாற்றுக் கருத்தாளர்கள் தனிநபர்களாக உங்களுடள் சேர்ந்து கலந்துகொண்டபோது மிரட்டப்பட்டனர், தனியாக நடத்தப்பட்ட போது குழப்பப்பட்டது.

 

இப்படி மனித அவலத்துக்கு எதிரான போராட்டம் பொதுவில் தனிமைப்பட்டது. வெறும் உணர்ச்சிக்குள், தமிழினம் சிறைவைக்கப்பட்டது. விளைவு என்ன?

 

1.வரட்டு புலிக்கோசத்தின் கீழ் அனைத்தையும் முடக்கினர்.     

         

2. ஏகாதிபத்திய தலைவர்களின் அருமை பெருமைகளை கூறி, கருணையை வேண்டி நின்றனர். அதுவே புலிக்கு எதிரான, எம் மக்களுக்கு எதிரான  தலையீடாக இன்று மாறுகின்றது.


3. போராட்டம் முன்னேற முடியாது, தனிநபர்கள் வன்முறையாக வெளிப்படுகின்றது.

 

மொத்தத்தில் ஒரு நெருக்கடி. போராட்டம் எதிரியின் நோக்கத்துக்கு ஏற்ப குறுகிப்போனது. எதிரி பதிலளிக்க வேண்டிய எந்த பொறுப்புமின்றி, உங்கள் போராட்டம் அவர்களை விடுவித்தது. புலிகள் நடத்திய போராட்டம், புலிகளே பதிலளிக்க வேண்டிய வகையில் தனிமைப்பட்டு முடங்கிப்போனது. எம் மக்களின் போராட்டம், எதிரியிடம் இப்படியும் காட்டிக் கொடுக்கப்பட்டது. மற்றவனை துரோகி என்று கூறிக்கொண்டு, எமக்குள் நாமே மக்களுக்கு எதிரான  துரோகிகளாகியதே எம் போராட்ட வரலாறு. கொள்கை, கோட்பாடு, நடைமுறை என்று எங்கும், எம் மக்களுக்கு துரோகமிழைத்தவர்கள் தான், மனித அவலத்தையும் காட்டி துரோகமிழைத்துள்ளனர்.

 

பி.இரயாகரன்
24.02.2009