சிங்கள பேரினவாதம் தன் சுதந்திரமாக பிரிட்டிஸ்சார் கொடுத்த சுதந்திரத்தையே கருதியது முதல், தமிழினத்தை ஓடுக்குவதன் மூலம் தான் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. தமிழ் தலைமைகள் இதனுடன் ஓத்துழைத்தும், விலகி வந்த நிலையில், சிங்கள பேரினவாத ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் ஆயுதப் போராட்டமாக அது மாறியது. இப்படி கடந்த 30 வருடமாக பண்புமாற்றம் பெற்ற இந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஒரு இன அழிப்பாகவே பேரினவாதம் நடத்திவருகின்றது.

கடந்த காலத்தில் சிங்கள இனவாதத்தை எதிர்கொண்ட தமிழ் தலைமைகள், ஏன் இந்த இனவாதம் என்ற அடிப்படையில் இருந்து அதை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதை பயன்படுத்தி, அரசியல் செய்யும் தம் சொந்த பிழைப்புத்தனத்தையே தமிழின உணர்வாக்கினர். இதன் அடியில் இருந்து வந்த ஆயுதப்போராட்டம் அதை மீறவில்லை. புலிகள் ஒரு தனி சர்வாதிகார பாசிச மாபியாக் கும்பலாகவே சீரழிந்தது. அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், மக்களிடமும் அரசியல் ரீதியாக தோற்றனர். இதனால் ஆயுதங்கள் மூலம் தமிழ்மக்களை ஓடுக்கியவர்கள், இன்று சிங்கள பேரினவாத எதிரியுடன் தம் ஆயுதங்களைக்கொண்டு மக்கள் மேலான தம் ஓடுக்குமுறையை தக்கவைக்கமுடியாது தோற்று வருகின்றனர்.

 

இப்படி சிங்கள ஓடுக்குமுறைக்குள் தமிழ் சமூகம் செல்லுகின்றது. புலிகள் அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தோற்றுப்போகும் நிலையில், இந்த தோல்வி ஊடாக ஏற்படும் மனிதஅவலத்தை கொண்டு, தம்மை தக்கவைக்க முனைகின்றனர். மனிதஅவலம் தான், இன்று புலியை பாதுகாக்கும் இறுதி ஆயுதமாகியுள்ளது.

 

இந்தவகையில் சிங்கள பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் ஓடுக்குமுறையை சார்ந்தே, புலிகள் இருப்பு என்ற நிலைக்கு அவர்கள் தரம் தாழ்ந்து போனார்கள். இந்த அடிப்படையில், சிங்கள பேரினவாதத்தை உசுப்பேற்றி, அதன் மூலம் தமிழன் அழிவை உருவாக்குவது புலிகளின் இருப்புடன் தொடர்புடைய ஒன்றாகிவிட்டது.   

            

தமிழ்மக்களை கொல்வதும், அவர்களின் அவலத்தை அன்றாடம் சொல்வதும், புலி ஊடகவியலின் அரசியலாகிவிட்டது. முன்பு இரணுவத்தை கொன்றும், தாக்குதலை நடத்திக் காட்டி செய்த பிரச்சார அரசியல், இன், மனித அவலத்தை காட்டி பிராச்சாரம் செய்யும் நிலைக்குள் அவை சுருங்கிவிட்டது.

 

இதனால் இந்த மனித அவலம் தொடர வேண்டும் என்பது, அதை உருவாக்குவதுமே இன்றைய புலி அரசியல். இந்தவகையில் மக்களை பலியாடாகவே, பேரினவாதத்தின் முன் புலிகள் நிறுத்துகின்றனர். எந்த புலி 'மனிதாபிமானியும்" இதில் இருந்து மக்களை மீட்க முன்வரவில்லை, முனையவில்லை.

 

மக்கள் யுத்த முனையில் கொல்லப்படவும், அவர்கள் தப்பிவரும் வழிகளில் அழிக்கப்படவும், தப்பி வந்தபின் திறந்த வெளியில் அடைக்கப்படுகின்றதுமான நிலையில் உள்ளது, மக்களின் அவலம். இந்த நிலையை சிங்களப் பேரினவாதம் தன் இன அழிப்பின் ஊடாக செய்கின்றது என்பது, வெளிப்படையான உண்மை. ஒரு உண்மை மற்றொரு உண்மையை மறைக்க முடியாது.

 

தமிழ் மக்கள் சந்திக்கின்ற அவலங்கள்; நெருக்கடிகள் தான், புலியின் இன்றைய அரசியலாக இருக்கின்றது. மக்களை இந்த அவலத்திலும் நெருக்கடியிலும் தள்ளுதல் தான், புலியின் இன்றைய நடத்தையாகி செயலாகிவிட்டது.

 

மனிதஅவலத்தில் தாம் வாழ்தல் என்பதால், மக்களை பணயக் கைதியாக்கி உள்ளனர். மக்களின் பிணத்தையும், மக்களின் ஓப்பாரியையும் காட்டி புலிகளின் இலட்சிய அரசியல் என்ற நிலைக்குள், புலிப்பாசிசம் வக்கற்றுப்போனது.

 

மக்களை இதில் இருந்து விடுவிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்கள் பேரினவாத சித்திரவதைகளை சந்திக்காமல் வாழ்வை உருவாக்குதல் என்ற அடிப்படையில், புலிகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

 

அரசு குறைந்தபட்சம் பிரச்சாரத்துக்கு தன்னும், மக்களி;ன் பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றது. பாதுகாப்பு பிரதேசத்தை உருவாக்குகின்றது. பாதுகாப்பாக வரும் இடைத்தங்கல் முகாம்களை உருவாக்குகின்றது.

 

இப்படி அது தன் சொந்த பாசிசத்தை மூடிமறைக்க, குறைந்தபட்சம் மக்களை தனிமைப்படுத்தி வெளியேற்ற முனைகின்றது. அதைக் கோருகின்றது. ஆனால் புலிகள் இதற்கு எதிர்மறையாக, மக்களை கொல்லப்படுவதை விரும்புகின்றது. இப்படி புலி அரசியல் முதல் நடத்தைகள் வரை, இதற்குள் எல்லைப்பட்டு அதற்குள் கோசங்கள் பிரச்சாரங்கள் என்று மக்களின் அவலத்தை உற்பத்தி செய்கின்றது.

 

இதை இன்று காட்டாது தமிழ்நாடு முதல் புலம்பெயர் தமிழன் வரை, தம் பின்னால் ஒரு போராட்டத்தைக் கூட வழிநடத்த முடியாதநிலை.

 

தமிழினத்தை கொடுமைக்கு உட்படுத்தி அரசியல் செய்யும் புலிகள். புலிப் பினாமிகள் உலகெங்கும் இந்த கொடுமையைக் காட்டி, உணர்ச்சி வசப்படுத்தி நக்கும் அரசியல் அவலம்;. தமிழன் என்று கூச்சல் எழுப்புவது, அந்த மக்களுக்காக தாம் போராடுவதாக கூறிக்கொண்டு, அவர்களை கொன்று குவிக்கும் நடைமுறையை ஊக்குவித்துக் கொண்டு, தமிழரின் அந்த அவலங்களின் மேல் அரசியல் செய்கின்றனர்.

 

இங்கு தான் பேரினவாதம் வெற்றிபெறுகின்றது. முன்பு மாற்று கருத்தாளர்களை கொன்றும், ஓடுக்கியும், எதிரியின் பின் அணி திரளவைத்தனர். இப்படி மாற்றுக் கருத்து என்பது, சிங்கள பேரினவாதத்தின் தயவில் என்ற நிலைக்கு, புலிகள் தம் பாசிச வழியில் வழிகாட்டினர். இன்று மக்களை பணயம் வைத்து நடத்துகின்ற புலி அரசியல், மக்களின் பாதுகாப்பே பேரினவாதம் தான் என்று, மக்கள் எண்ணுமளவுக்கு மக்களை புலிகள் கொடுமைக்குள்ளாக்குகின்றனர். மக்கள் இந்த எல்லையில் தான், தாமாக புலியை மீறி தப்பிவருகின்றனர். தன்னால் தான் புலி அழிகின்றது.

 

பி.இரயாகரன்
13.02.2009