இரும்புத்தாது கனிம வளமிக்க சத்தீஸ்கர் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான கோண்டு பழங்குடியின மக்களை அம்மாநிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, எஃகு ஆலை நிறுவிச் சூறையாட டாடா, மித்தல், எஸ்ஸார்

 முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இம்மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு எதிராகப் பழங்குடியின மக்களைத் திரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகளை முறியடிக்க, பழங்குடியின மக்களில் ஒருசிலரைக் கொண்டே எதிர்ப்புரட்சி குண்டர்படையை ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் கட்டியமைத்துள்ளனர். இக்குண்டர்படையின் பெயர்தான் சல்வாஜுடும்.


 சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா, பிஜாபூர் மாவட்டங்களில் நக்சல் வேட்டை என்ற பெயரில் இந்தக் குண்டர் படை பழங்குடியின மக்களைக் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கிவருகிறது. பழங்குடியினரின் பல கிராமங்கள் முழுவதுமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடியினர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


 சல்வா ஜுடுமின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அரசு தெரிந்தே ஆதரித்து வருகிறது. இதை எதிர்த்துப் பல்வேறு அரசியல் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், தனி நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதனைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை தேசிய மனித உரிமைக் கமிசனிடம் ஒப்படைத்தது. தகுதியான நபர்களைக் கொண்ட ஓர் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு, தேசிய மனித உரிமை கமிசனை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன் படி தேசிய மனித உரிமை கமிசனும் ஓர் உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.


 பொதுவாக இது போன்ற உண்மை கண்டறியும் குழுக்களில், தேசிய மனித உரிமைக் கமிசனின் உறுப்பினர்களையோ அல்லது துறை சார்ந்த அனு பவமுள்ள நபர்களையோ தேர்ந்தெடுப்பது வழக்கம். சில சமயங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட இது போன்ற உண்மை கண்டறியும் குழுக்களில் இடம் பெறுவார்கள். ஆனால், சல்வாஜுடும் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தேசிய மனித உரிமைக் கமிசனின் குழுவில் இருந்தவர்கள் அனைவரும் போலீசு அதிகாரிகள். திருடனிடமே சாவியைக் கொடுத்ததைப் போல, அரசு பயங்கரவாத போலீசுப் படையின் அங்கமாகச் செயல்படும் சல்வாஜுடுமின் அட்டூழியங்களை விசாரிக்க போலீசையே நியமித்திருந்தனர்.


 தேசிய மனித உரிமைக் கமிசனின் போலீசு பிரிவு நடத்திய புலனாய்வு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை அவர்கள் தயாரித்துள்ள அறிக்கையே நிரூபிக்கிறது. முன் முடிவுகளோ, காழ்புணர்ச்சியோ இல்லாத நடுநிலையோடு இருப்பதற்கான போலி நடிப்பு கூட இந்த அறிக்கையில் இல்லை. 13 பக்கங்களை கொண்ட அறிமுகப் பகுதியே "அபாயம்' என்று குறிப்பிட்டு மாவோயிஸ்ட்டுகளைக் கடுமையாக விமர்சிக்கிறது. அடுத்த ஐந்து பக்கங்களுக்கு "மாவோயிஸ்டுகளின் மனித உரிமை மீறல்கள்' குறித்தும், ஒன்றரை பக்கங்களுக்கு "சல்வா ஜுடுமின் மனித உரிமை மீறல்கள்' குறித்தும் உள்ளது. இன்னும் ஒன்றரை பக்கங்களுக்கு "உள்ளூர் போலீசு, பாதுகாப்பு படைகள் மற்றும் சிறப்பு போலீசு அதிகாரிகள் (SPO)  போன்றவற்றின் பாத்திரம்' என்ற பகுதி வருகிறது.  நிவாரண முகாம்களைத் தாண்டி இனிமேல் சல்வாஜுடும் செயல்பட முடியாது என்று வருத்தத்தோடு முறையிட்ட பிறகு, நீண்ட நெடிய 67 பக்கங்களுக்கு "ஆய்வில் கண்டறிந்தவை' என்ற தலைப்பின்கீழ் முறையீட்டு மனுக்களில் பட்டியலிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்த புலனாய்வு அறிக்கை வருகிறது.


 மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருப்பதே மக்களை ஒடுக்குவதற்காகத்தான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் அந்தப் பகுதியில் இயங்குவதால்தான் பழங்குடியினருக்கு கூலி உயர்வு கிடைத்துள்ளது; பீடி இலை கொள்முதல் செய்யும் ஒப்பந்ததாரர்களின் அடக்குமுறை, வனத்துறை அதிகாரிகளின் லஞ்ச ஊழல், முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; போலீசின் அட்டூழியங்கள், பாலியல் வன்முறைகள் அம்பலப்படுத்தப் பட்டுள்ளன — போன்ற உண்மைகள் கூட இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால், மாவோயிஸ்டுகள் குறித்து இதுவரை யாரும் கேட்டறிந்தேயிராத பல புதிய குற்றச்சாட்டுகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக "பழங்குடியின குழந்தைகள் 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று மாவோயிஸ்டுகள் உத்தரவிட்டிருப்பதாக' அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இவ்வாறு மாவோயிஸ்டுகள் மீது புலனாய்வுக் குழுவுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி அறிக்கையின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகிறது.


 அறிக்கை, மாவோயிஸ்டுகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள அதே வேளையில், சல்வாஜுடுமின் குற்றங்களைப் பற்றிச் சொல்லும் போது, "கூறப்படுகிறது', "சொல்லப்படுகிறது', "இருக்கலாம்' எனப் பூசி மெழுகுகிறது. உதாரணத்திற்கு, ஆந்திரப் பிரதேசத்திற்கு விரட்டப்பட்ட பெருந்திரளான சத்தீஸ்கர் பழங்குடியினர் குறித்துச் சொல்லும்போது, "சல்வாஜுடுமால் அவர்கள் இடம் பெயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது' என்கிறது அறிக்கை. 


 சல்வாஜுடும் ஏன் உருவானது என்பது குறித்து அரசு ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் ஆயுத நடவடிக்கைகளின் பின் விளைவாக, தங்கள் மீது பாயும் அரசு ஒடுக்குமுறை தங்களது உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உலை வைப்பதாக உள்ளது என்று கிராம மக்கள் கருதியதாகவும், இதன் விளைவாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கியதாகவும் அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஊழல் பேர்வழியான மகேந்திர வர்மாதான் போலீசு மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் துணையோடு பழங்குடியின மக்களைக் கொண்ட மாவோயிஸ்டு எதிர்ப்பு குண்டர்படையை உருவாக்கினான். இதனைக் "கொலைகார கும்பல்' என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். அவர்கள் கிராமங்களைச் சூறையாடி அங்கிருக்கும் மக்களை அடித்து நொறுக்கி மிரட்டுவதன் மூலம் அந்த மக்களை சல்வா ஜுடுமில் சேர வைக்கிறார்கள். பிறகு அவர்களைக் கொண்டே பக்கத்துக் கிராமங்களைத் தாக்கி அழிக்கிறார்கள்.


 முதலில், கிராமங்களில் இருக்கும் மாவோயிஸ்டு ஆதரவாளர்களை விரட்டியும், பின்னர் எஞ்சியிருப்பவர்களைத் தனிமைப்படுத்தியும் மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிப்பதற்கு வசதியாக, அந்த பகுதியை போலீசு படையினருக்கு முழுமையாகத் திறந்து விடுவதுதான் சல்வா ஜுடூமின் முக்கியமான வேலையாகும். உண்மை இவ்வாறிருக்கும்போது, சல்வாஜுடும் குண்டர்படையே மாவோயிஸ்டுகளின் அடக்குமுறைக்கு எதிரான ஆதிவாசிகளின் எதிர்க்கிளர்ச்சி அமைப்பு என்பதைப் போல அறிக்கை காட்டுகிறது. இந்தியா முழுவதும் அரசை எதிர்க்கும் கிளர்ச்சிகளை சல்வாஜுடும் போன்ற குண்டர் படைகளின் மூலம் ஒழிப்பதையே சிறந்த வழிமுறையாகக் கருதும் போலீசின் புத்தியே அறிக்கையில் இவ்வாறு வெளிப்படுகிறது.


 "ஆய்வில் கண்டறிந்தவை' என்ற தலைப்பின் கீழ் அறிக்கையில் குற்றச்சாட்டுகள் குறித்து சொல்லப்பட்டுள்ளவற்றை வாசிக்கும் எவருக்குமே, சல்வாஜுடும் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால், கவனத்துடன் ஊன்றிப் படிக்கும் போது பல சிக்கலான கதைகள் வெளிவருகின்றன. சில குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் யாராவது அவை பொய் என்று சொல்லியதாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றை "பொய்யான குற்றச்சாட்டு' என்று முடிவு செய்கிறது அறிக்கை. ஆனால் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதாக கருத வாய்ப்புள்ள இடங்களிலோ "உறுதிப்படுத்தப்படாத தகவல்' என்று கூறி அறிக்கை அவற்றை மூடி மறைத்து விடுகிறது.


 உதாரணமாக, சல்வாஜுடும் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதனை இந்த அறிக்கை "உறுதிப்படுத்தப்படவில்லை' என்று பதிவு செய்கிறது எனக் கொண்டால், உண்மையில் என்னதான் நடந்தது என்பதை யார் வந்து புலனாய்வு செய்வது? குற்றம் சுமத்துபவருக்கும் விசாரணை அதிகாரிக்கும் இடையில் நடக்கும் வாதப்பிரதிவாதங்களைப் புலனாய்வு என்று கருதமுடியாது. அது நீதிமன்றத்தின் வேலை. குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து சொல்வதுதான் புலனாய்வு குழுவின் வேலை. காணாமல் போன நபர்கள் என்னவானார்கள், கிராமங்கள் ஏன் காலியாகின, ஏன் தீக்கிரையாக்கப்பட்டன என்பதைப் புலனாய்வு குழுதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமே தவிர, அவற்றை "உறுதிப்படுத்தப்படாத தகவல்' என்று சொல்லி ஒதுக்கித் தள்ள முடியாது.


 ஆனால், இங்கே உண்மை கண்டறியும் குழுவோ, உண்மைகளைக் கண்டறிய எந்த முயற்சியும் செய்த மாதிரித் தெரியவில்லை. எரிந்து மிச்சமிருந்த கிராமங்கள் குறித்து எவ்வித விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்று உள்ளூர் போலீசை ஒரு கேள்வி கூட அது கேட்கவில்லை. புலனாய்வு செய்வதற்காகவே சத்தீஸ்கர் அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கும் போலீசுக்காரர்களிடம் விசாரணை செய்யாமலேயே "உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள்' என்று அறிக்கையில் பதிவாகியுள்ளது.


 மேலும் இந்த விசாரணை முழுவதும், சல்வாஜுடுமின் முகாம்களில் உள்ளவர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. சல்வா ஜுடுமின் தாக்குதலால் பெரும்பான்மையான பழங்குடியினர் ஆந்திராவிற்கு ஓடிவிட்ட நிலையில், தண்டேவாடா பகுதிகளில் எஞ்சி இருப்பவர்கள், சல்வாஜுடுமுக்கு ஆதரவாளர்களும் சல்வாஜுடுமுடன் ஒத்துப் போவது என்று முடிவு செய்தவர்களும் மட்டுமே. இந்நிலையில் அந்தப் பகுதியில் மட்டுமே செய்யப்படும் எந்தப் புலனாய்வும், உண்மையை வெளிக் கொணருவதாக இருக்காது. சல்வாஜுடுமால் மோசமாகப் பாதிக்கப்பட்டப் பழங்குடியினரை முறையாக விசாரித்திருந்தாலே, சல்வாஜுடுமிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்க முடியும். ஆனால், புலனாய்வுக் குழுவின் நோக்கம் அதுவல்லவே!


 ஒட்டுமொத்தமாக சல்வாஜுடுமைப் புனிதப்படுத்தும் நோக்கத்தோடு அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை வேலிக்கு ஓணான் சாட்சி சொன்ன கதையாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில், ""மாநிலத்தின் தொழில் வளர்ச்சி'' என்ற பெயரில் தரகுப் பெருமுதலாளிகளின் சூறையாடலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதுதான் சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை. அக்கொள்கை வழியில் உருவாக்கப்பட்ட குண்டர்படைதான் சல்வாஜுடும். இதன்படி, அரசின் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும், அரசு மற்றும் சல்வாஜுடும் குண்டர்படையின் பயங்கரவாத அட்டூழியங்களையும் எதிர்த்து அம்பலப்படுத்தும் அனைவருமே எதிரிகள்; அத்தகையோர் மீது அடக்குமுறையை ஏவுவதில் தவறில்லை என்பதுதான் சத்தீஸ்கர் மாநில அரசின் நியாயவாதம்.


 இதனடிப்படையில்தான் கடந்த 2007ஆம் ஆண்டில் குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அனைத்திந்திய துணைத் தலைவரும் குழந்தை மருத்துவ நிபுணருமான டாக்டர் பினாயக் சென், சத்தீஸ்கர் மாநில சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி. குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் சத்தீஸ்கர் மாநில நிர்வாகிகளுள் ஒருவரான அஜய் கங்காதரன்; கமலேஷ் பாய்க்ரா, அப்சல்கான் எனுமிரு பத்திரையாளர் உள்ளிட்டு 43 பேர் சிறையிடப்பட்டனர். சல்வாஜுடுமின் அட்டூழியங்களை எதிர்த்த இவர்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று மாநில அரசால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். டாக்டர் பினாயக் சென்னுக்குப் பிணை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மாநில அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று "நடுநிலைமை' காட்டியது, உச்சநீதி மன்றம்.


 மறுகாலனியாக்கம் எனும் பயங்கரவாதப் போரில் "நடுநிலைமை' கிடையாது. இனியும் ஒளிந்து கொள்ள முடியாமல் நடுநிலைமை எனும் புனிதப் போர்வை கிழிந்து கந்தலாகிவிட்டது. உச்சநீதி மன்றம் மட்டுமல்ல; இதற்கு அப்பால் தேசிய மனித உரிமைக் கமிசனும்கூட இயற்கை நீதியையும் நடுநிலைமையும் கொண்டதாக இருக்கமுடியாது என்பதற்கு இந்த விசாரணை அறிக்கையே சாட்சியாக உள்ளது.


· ராஜன்