இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் கடந்த நான்கு மாத காலமாக சிங்கள இனவெறி இராணுவம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரைத் தீவிரமாக நடத்தி வருகிறது. பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில்

, கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் முல்லைத் தீவைச் சுற்றி வளைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், ஒட்டு மொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூர போரை நடத்தி ஈழத்தைச் சுடுகாடாக்கி வருகிறது.


தப்பியோடும் போது கைப்பிடித்து வந்த உறவுகளை குண்டுத் தாக்குதலில் பறிகொடுத்து, பிணமாக வீதியோரங்களில் விட்டுச் செல்லும் அவலம்; தென்திசைக் காற்றில் கந்தக நெடியுடன் வீசும் பிணவாடை; உணவில்லை; மருந்தில்லை; குடியிருக்கக் குடிசையுமில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதமே இல்லை. வன்னி நிலப்பரப்பெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்த நான்கு இலட்சம் ஈழத் தமிழர்கள், இன்று முல்லைத் தீவின் காட்டுப்பகுதிகளில் விரட்டி முடக்கப்பட்டுள்ளனர். தமிழன் வாழ்விடங்களை அழித்து, தமிழன் உயிர்களைக் குடித்து கிளிநொச்சி, ஆனையிறவு, பரந்தன், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் என விரிந்து ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம், முல்லைத் தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகக் கொக்கரிக்கிறது.


முல்லைத் தீவு பகுதியில் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முல்லைத் தீவின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இடைத்தங்கல் முகாம் சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவோ, மருந்துப் பொருட்களோ இல்லை. அதுமட்டுமல்ல; முட்கம்பிகளால் சூழப்பட்ட அப்பாதுகாப்புப் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள மக்களின் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது, சிங்கள இராணுவம். இப்பகுதியின் மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ள குண்டு வீச்சுத் தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களே காயமடைந்துள்ளனர். புலிகள், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி, தனது கிரிமினல் குற்றங்களை மறைத்துக் கொள்கிறது, சிங்கள அரசு. எனினும் இந்தியா, பாகிஸ்தான், சீனா முதல் அமெரிக்கா வரையிலான நாடுகளின் முழு ஆதரவோடு இந்தப் போரை சிங்கள அரசு நடத்தி வருவதால், இந்தப் படுகொலைக்கு எதிராக சம்பிரதாயமான ஒரு கண்டனம் கூட யாரிடமிருந்தும் வெளிவரவில்லை.


குறிப்பாக, இந்தப் போரில் சிங்கள அரசு ஈட்டிவரும் வெற்றிகள் குறித்து தமிழகத்தின் பாசிச ஜெயா, "துக்ளக்'' சோ, "இந்து'' ராம், சுப்ரமணிய சாமி முதலான பார்ப்பன கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் திளைக்கின்றன. அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அப்பாவித் தமிழர்கள்' போரினால் பாதிக்கப்படுவது குறித்து பெரிதும் கவலைப்படுவதுபோல் நடிக்கின்றன.


இந்தியா, இலங்கைக்குப் பீரங்கிகள் அனுப்பியிருக்கிறது என்பதும், அதுவும் தமிழகம் வழியாகவே அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. பரந்தன் முல்லைத்தீவு நெடுஞ்சாலை (ஏ35) அருகேயுள்ள விசுவமடு அணைக்கட்டைத் தகர்த்து, சிங்கள இராணுவம் முன்னேற முடியாதபடி புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள சிப்பாய்களோடு, சிங்கள இராணுவச் சீருடையணிந்த இந்திய சிப்பாய்கள் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது. எனினும், "தமிழ்நாட்டிலிருந்து எவ்வித அரசியல் அழுத்தம் எழுந்தாலும், ராஜபக்சே நடத்தும் இந்தப் போரை எக்காரணம் கொண்டும் தடுப்பதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக உள்ளது'' என்று கூறுகிறது, அனைத்துலச் செய்தி நிறுவமான ராய்டர்.


"வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் இலங்கை சென்றால் போதாது; வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்ல வேண்டும்'' என்ற கோரிக்கையை ஏதோ மைய அரசை நிர்ப்பந்திக்கும் மிகப் பயங்கரமானதொரு கோரிக்கை போல வைத்தது, தி.மு.க. அரசு. "பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார்'' என்ற செய்தியை அமைச்சர் அன்பழகன் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தவுடன், உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.


ஆனால் பத்திரிக்கை செய்திகளோ இந்தக் கேலிக்கூத்தை அம்பலமாக்கியிருக்கிறது. "புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் வைத்து வரும் கோரிக்கைக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பெரிதும் வலியுறுத்திக் கூறினர்'' என்கிறது "இந்து'' நாளேடு. "எங்களுடைய அழைப்பின் பேரில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை வந்துள்ளார்''  என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள். "புலிகள் மீது இந்திய அரசுக்கு எவ்வித அனுதாபமும் கிடையாது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலியாகக் கூடாது என்பது மட்டுமே எமது கவலை'' என்று கூறியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.


இப்படியாக, பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் என்பது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆறுதல் படுத்துவதற்கான கண்துடைப்பு நடவடிக்கை கூட அல்ல என்று அப்பட்டமாக அம்பலமாகி விட்டது. இருப்பினும், பிரணாப் முகர்ஜியின் கூற்றுக்கு புதிய பொழிப்புரை எழுதி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார், அமைச்சர் அன்பழகன். ஈழத் தமிழர் பிரச்சினையை, அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாகவும், இந்திய அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரச்சினையாகவும் தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள் மாற்றின. இதனை இந்திய ஆளும் வர்க்கங்களும் சிங்கள அரசும் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டன. "போர் நிறுத்தம் கிடையாது; ஈழத் தமிழருக்கு சுயநிர்ணய உரிமையும் கிடையாது. இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையே நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை'' என்பதாக பிரச்சினை சுருக்கப்பட்டு விட்டது. "அவ்வாறு கொல்லப்படுவதற்குக் காரணம், சிங்கள இராணுவத்தின் தாக்குதல் அல்ல; மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் புலிகள்தான். எனவே ஜனவரி 29ஆம் தேதி இரவு 12 மணி முதல் 48 மணி நேரம் அவகாசம் தந்து போரை நிறுத்துகிறோம். அதற்குள் மக்கள் பாதுகாப்பாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'' என்று கெடு விதிக்கிறார், சிங்கள இனவெறி அதிபர். இந்தப் "போர்நிறுத்தத்தை' இந்திய அரசும் வரவேற்றுள்ளது.


தமிழக ஓட்டுக் கட்சிகளின் வேடதாரி அரசியலுக்கு நடுவே, போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பல பிரிவினரின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்கின்றன. சென்னைகொளத்தூரை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர், தமிழரைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசின் போரைத் தடுக்குமாறு முழக்கமிட்டுக் கொண்டே, மத்திய அமைச்சக அலுவலகங்கள் உள்ள சென்னை சாஸ்திரிபவன் வளாகத்தில் தீக்குளித்து மாண்டு போயுள்ளார். உணர்ச்சி வேகத்தில் அவர் செய்த செயல் தவறானதாக விமர்சிக்கப்பட்ட போதிலும், தமிழகம் இன்னமும் சொரணையற்றுக் கிடப்பதைக் கண்ட அவரது குமுறலின் வெளிப்பாடுதான் இது என்பதை மறுக்க முடியாது. ஈழத் தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமான பிரச்சினையாக தமிழக ஓட்டுக் கட்சிகள் மாற்றிவிட்டதால், அநீதியான இப்போரை நிறுத்த வேண்டுமென்ற மக்களின் உணர்வு ஒரு அரசியல் எழுச்சியாக இன்னமும் உருவெடுக்கவில்லை. இதனால், தமிழீழ ஆதரவாளர்கள் உள்ளிட்டு போர் நிறுத்தம் கோருவோர் அனைவரது போராட்டங்களும் தவிர்க்கவியலாமல் ஒரு முட்டுச் சந்தில் சிக்கியுள்ளன.


காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் உள்ள மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுக்கும் என்று நம்புவது பகற்கனவு மட்டுமல்ல; இந்திய பிராந்திய மேலாதிக்க அரசின் கொலைவெறி முகத்தை மறைக்கும் மக்கள் விரோதச் செயலுமாகும். தமிழகம் இனியும் சொரணையின்றி கிடப்பதில் பொருளில்லை. சிங்கள பாசிச இனவெறி அரசுக்கும், அதன் கொலைகாரக் கூட்டாளியான இந்திய பிராந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிராக தமிழகம் பொங்கியெழ வேண்டிய தருணமிது! முடங்க வேண்டிய நிர்பந்தம் சந்தர்ப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்கும்தான் இருக்கிறது.


கிளிநொச்சி வீழ்ந்தாலென்ன, முல்லைத்தீவு வீழ்ந்தாலென்ன; வென்றதில்லை இனவெறிஆதிக்கம்! ஓயப்போவதுமில்லை தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போர்! அப்போருக்கு ஆதரவாகத் தமிழகமே, விழித்தெழு! போராடு!!