'ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!" என்ற தலைப்பில் 'ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!" என்ற வினவின் கட்டுரையை தன் போலி கம்ய+னிச நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்க முனைகின்றது.

இந்தக் கழுதை இதை விமர்சிக்க எடுத்துக்கொண்ட அடிப்படையோ, புலிகளின் பாசிசம் தான். இதைத்தான் இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை, தம் சொந்த மேலாதிக்க கனவுக்கு பயன்படுத்துகின்றது.

 

புலிப்; பாசிசத்ததை எதிர்கொள்வது எப்படி? இதை மார்க்சியம் எப்படி அணுகக் கோருகின்றது? அது எம் சொந்த மக்களின் பிரச்சனை. மக்களாகிய நாங்கள் தான், அந்தப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடி அதை அழிக்க வேண்டும். இதை முதலில் மார்க்சியவாதி அங்கீகரிக்க வேண்டும். இந்த பாசிசம் எங்களுடைய பிரச்சனை. இதைச் சொல்லி இந்தியாவோ, ஏகாதிபத்தியமோ தலையிட முடியாது.

 

தெளிவாக இதில் இந்தியா தலையிடமுடியாது. அப்படி தலையிட எந்த அதிகாரமும் அதற்கு கிடையாது. அதுவே அத்துமீறல், ஆக்கிரமிப்பு. இப்படி தலையீட்டால், ஆக்கிரமித்தால்,   அதற்கு எதிராக போராடுவது மார்க்சியர்களின் சர்வதேசியக் கடமை. இதையா நீங்கள் செய்கின்றீர்கள்?

 

தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பது மார்க்சியமல்ல. அதை புலிப் பாசிசத்தின் பெயரால் யாரும் மறுக்க முடியாது. அது அந்த மக்களின் பிரச்சனை.

 

இலங்கைப் பேரினவாத அரசு இதில் தலையிடவோ அல்லது அதை அழிக்கவோ எந்த உரிமையும் கிடையாது. இதை எதிர்ப்பது சர்வதேசியவாதிகளின் கடமை.

 

மொத்ததில் ம.க.இ.க. இதில் சரியாக உள்ளனர். புலியை பாசிட்டுகளாக வரையறுக்கின்றனர். இந்தியா ஆக்கிரமிப்பை சரியாக மதிப்பிடுகின்றனர். அதற்கு எதிராக போராடுகின்றனர். இலங்கை அரசின் பேரினவாதத்தை சரியாக அம்பலப்படுத்துகின்றனர்.

 

ம.க.இ.க.வை புலிக்கூடாக பார்ப்பதாக, திரித்து புரட்டுவதன் ஊடாக, கதையையே மாற்றிவிட முனைவது போலிக் கம்யூனிசத்தின் சித்தாந்த அரசியல் அடிப்படையாக உள்ளது. ம.க.இ.க புலிப்பாசித்தை பற்றி வைத்த விமர்சனமளவுக்கு, இந்தியாவில் யாரும் அரசியல் ரீதியாக புலியை விமர்சனம் செய்தது கிடையாது.  

  

அடுத்து புலியை பாசிட்டுகளாக கூறும் நீங்கள், இலங்கை அரசை பாசிட்டாக வரையறுப்பதில்லையே, என்? புலியை மட்டும் எதிர்க்கும் நீங்கள், பேரினவாத அரசை மென்மையாக பார்ப்பது ஏன்? இந்தியா அரசு இலங்கையில் தலையிடுவதை ஏன் எதிர்ப்பதில்லை?

 

புலி முதல் அனைத்து தமிழ் குழுக்களையும் இந்தியா தன் ஆக்கிரமிப்பு நோக்கத்துக்காக  பாலூட்டி வளர்த்து. அவர்களை வெறும் கூலிக் குழுக்களாக, பாசிட்டுகளாக மாற்றியது. புலிகள் பாசிட்டுகள் என்பது, இந்தியா உருவாக்கிய ஒன்று தான். இப்படியிருக்க புலியை மட்டும் பாசிட்டாக கூறுவது ஏன் குற்றவாளியே இந்தியா தான்.

 

இலங்கையில் இனவாதம் கிடையாது என்பது, வடிகட்டிய முட்டாள் தனத்தின் மூலம் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் பேரினவாத கூச்சலாகும். இலங்கையில் இனவாத ஒடுக்கமுறையும், அதன் வேறுபட்ட பண்புகளும் கடந்த 100 வருடங்களாக நிலவுகின்றது. இதை இலங்கையில் ஆளும் இனவாத பேரினவாத கட்சிகள் கூட ஓப்புக்கொண்டது தான். இதை மறுப்பதோ அபத்தம். 'தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்" என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. அனைத்தும்  அடிமைத்தனத்தின் எல்லைக்குட்டது. சுதந்திரத்தை கோரினால், பாதுகாப்பு கிடையாது.   

 

'அங்குள்ள யாழ்ப்;பாணத் தமிழர்கள் எல்லாம் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்" என்றதாக யார் சொன்னது.? அது பேரினவாத கூலிக் குழுக்கள் கட்டாயப்படுத்தி திரட்டும் கூட்டத்தில் வைக்கும் கூலிக் கோசங்கள். புலிகள் திரட்டுவது போல், அதுவும் போலியானது. உங்களைப் போல்.

 

'பெரும்பான்மை சிங்கள மக்கள் சோரம் போயிருந்தால்" சோரம் போகாமலா பேரினவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. அங்கு என்ன அரசுக்கு எதிராக வர்க்க போராட்டமா நடக்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவா சிங்கள மக்கள்  போராடுகின்றனர்?! எப்படி புலிக்கு பின்னால் மக்கள் உள்ளனரோ, அப்படித்தான் சிங்கள மக்கள் அரசின் பின் உள்ளனர்.

 

மக்கள் சுயமாக தமக்காக போராடும் நிலையில் இல்லை. எந்த கருத்தியல் ஆதிக்கம் பெற்றுள்ளதோ, அதன் பின் மக்கள் மந்தைகளாக உள்ளனர்.

 

பி.இரயாகரன்
05.02.2009