பல பத்தாயிரம் தமிழ் மக்கள் திரண்டு வீதிகளில் இறங்குகின்றனர். இதை மேற்கு ஊடகங்கள் முதல் மேற்குமக்கள் வரை கண்டுகொள்வதில்லை. போராட்டத்தை நடத்தியவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் கூட இதைச் சொல்லிப் புலம்புகின்றனர். ஏன் இந்த நிலைமை. உலகின் வேறு எந்த போராட்டத்துக்கும் நடக்காத ஒரு அவலம். 

பலர் நம்புகின்றனர் இது ஊடகத்துக்கு வந்துவிட்டால், மேற்கு மக்கள் வீதிகளில் இறங்குவார்கள் என்று. அவர்கள் இதை புரிந்துகொள்வார்கள் என்று. ஏகாதிபத்தியம் கருணை காட்டுமென்று. 

 

தம் கண்ணை குருடாக்கியவர்கள் என்ன நினைக்கின்றனர். தாங்கள் தவறல்ல, தம் செய்கைகள் தவறல்ல, நம் நடத்தைகள் தவறல்ல என்று நம்புகின்றனர். விளைவு  மேற்கு மக்கள் பற்றிய அவநம்பிக்கையாகின்றது. அவர்கள் பற்றிய தவறான புரிதல், தனிப்பட புலம்ப வைக்கின்றது. தவறு அவர்களது அல்ல, மாறாக தவறுகளே நீங்கள் தான்.

 

கடந்த வரலாற்றை மீளத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் எப்போதாவது, அந்த மக்கள் நடத்திய போராட்டத்துடன் இணைந்து போராடியிருகின்றீர்களா!? அந்த மக்களின் பிரச்சனைகள், உங்கள் பிரச்சனையாக இருந்த போது கூட, அவர்கள் மட்டும் தனித்து போராடினார்களே ஏன்? சரி தனிப்பட்ட நபர்கள் அப்படி சேர்ந்து போராடிய போது, அதை புலிகள் அனுமதித்தார்களா இல்லை. எல்லாவற்றையும் மறுத்து, அழித்தவர்கள் நீங்கள் தான்.

 

99 சதவீதமான தமிழர்கள் தொழிலாளராக வாழும் நிலையில், அந்த உணர்வுடன் நாங்கள் எத்தனை பேர் மேற்குதொழிலாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடினோம். அந்த வர்க்க உணர்வை மறுத்த புலிக்கு பின்னால், நாம் காவடி எடுத்தவர்கள். இந்த நிலையில் எந்த உணர்வுடன் அவன் மட்டும், உங்களுடன்; உங்கள் பின்னால் வரவேண்டும். அதைத்தானே நாங்கள் தொலைத்து விட்டோம்.

 

சரி, நீங்கள் எப்பவாவது மனிதனாக மனிதத்தன்மையுடன் இருந்து இருக்கின்றீர்களா? எம் மக்களுக்காக எப்போதாவது சிந்தித்தீர்களா? எப்போதும் புலிக்காக மட்டும் சிந்தித்தீர்கள். நீங்களே இப்படி இருக்கும் போது, அவன் மட்டும் எப்படி எம் மக்களுக்காக உங்களுடன் சேர்ந்து போராடமுடியும்? சொல்லுங்கள். மொத்தத்தில் நீங்கள் தான், எதிர்த்தன்மை வாய்ந்தவராக இந்த சமூகத்தில் இருக்கின்றீர்கள். அதனால், அவனில் இருந்து அன்னியமாகி விட்டீர்கள். 

 

ஏன் இந்த மனித அவலம் நிகழ்கின்றது. உங்கள் கோசம் மனிதத்தன்மை வாய்ந்ததா அல்லது புலித்தன்மை வாய்ந்ததா? சொல்லுங்கள். நீங்கள் சர்வதேச சமூகத்தை வெல்லும் வகையில், எதை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

 

1. இலங்கை அரசே யுத்தத்தை நிறுத்து!

 

2. விடுதலைப் புலிகளே மக்களை விடுவி!

 

3. சர்வதேச சமூகமே மக்களை பொறுப்பெடு 

 

இப்படியான மக்கள் கோசத்தையா வைக்கின்றீர்கள். புலியை சுற்றி கும்பிடுபோடும் உங்கள் போராட்டம், உலக மக்களில் இருந்து தனிமைப்படுத்தி தமிழ் மக்களுக்குள்  குறுகிப்போய்விடுகின்றது. மனித அவலம் தொடருகின்ற இன்றைய நிலையிலும், இதற்கு எதிராக எந்த ஜனநாயக அணுகுமுறையும் கிடையாது. மக்களை இந்த அடிப்படையில் அணிதிரட்டவில்லை. அதே அதிகாரம், அதே வழிமுறை, அதே கிறுக்குத்தனம் ஊடாக, மந்தைகளாகவே மக்கள் திரட்டப்படுகின்றனர். இதன் பின் எப்படி மேற்கு மக்கள் வருவார்கள்;?

 

புலியை சுற்றி வலம்வரும் பக்தகோடிகள் முன்வைக்கும் மனித அவலம் பற்றிய செய்தியின் நம்பகத்தன்மை, இதை நம்ப உலகமில்லை. நரி வருது என்ற சிறுவர் கதை போல், பொய்களையே வரலாறாக புனைந்தவர்கள் முன்னால் உண்மையில் நரி வரும் போது அதை நம்ப ஒரு உலகம் இல்லை. தவறுகளை திருத்தாத அதே எல்லைக்குள் போராட்டம், எம் இனத்தின் மேலான அழித்தொழிப்பாக கட்டவிழ்த்து விடப்படுகின்றது.


 
பி.இரயாகரன்
04.02.2009