ஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்புப் போர் உச்சமடைந்து வரும் சூழலில் பாசிச சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இப்படுகொலைகளுக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராகவும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகிறது.


 திருச்சியில், 08.12.08 அன்று மாலை பாலக்கரை பிரபாத் திரையரங்கம் எதிரில் அனைத்து கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பு.மா.இ.மு. தலைமையில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 மாவட்ட இணைச்செயலாளர் தோழர் கிளர்ச்சியாளன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, இன்ஃபன்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்களான தோழர் கீர்த்திகா, தோழர் தமிழன்; பிஷப் ஹீபர் கல்லூரி மாணவி தோழர் ஜான்சி, அரசு சட்டக் கல்லூரி மாணவர் தோழர் அங்காளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


 ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான இந்திய அரசின் சதியை அம்பலப்படுத்தி பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தமும், சென்னைடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலுக்குக் காரணமான ஆதிக்க சாதி வெறியர்களைக் கண்டித்து ம.க.இ.க தோழர் இராசாவும் சிறப்புரையாற்றினர். ம.க.இ.க. மையக் கலைக்குழு தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் போராட்ட உணர்வூட்ட, எழுச்சியோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.


 சேலம் மாவட்டம், மேட்டூர் அணைசதுரங்காடி காந்திசிலை அருகே பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்க சதிகளை அம்பலப்படுத்தியும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் தோழர் ஜெயகாந்த்சிங் உரையாற்றினார்.


 பேராசிரியர் பெரியார்தாசன், தனக்கே உரித்தான நையாண்டி பாணியில், மலேகான் குண்டுவெடிப்பை நடத்திய இந்துவெறி பாசிசவாதிகளை அம்பலப்படுத்தியும் பார்ப்பன பயங்கரவாதத்தை வீழ்த்த அறைகூவியும், சிறப்புரையாற்றினார். இந்து வெறியர்களை அங்குலம் அங்குலமாக அவர் தோலுரித்துக் காட்டியபோது, பெருத்த ஆரவாரத்துடன் மக்கள் வரவேற்றனர்.


 ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும்நாடகமும், புரட்சிகர அரசியலை மக்களின் நெஞ்சங்களில் உணர்வோடு பதிய வைத்தன.


 பு.ஜ.செய்தியாளர்கள்.