அன்பார்ந்த நண்பர்களே !

வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

 

vbf11

முன்னுரை:
எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சிலர் இணையத்தில் வினவு எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். பொதுவில் பொழுது போக்கும், அரட்டையும் நிறைந்திருக்கும் இணைய உலகில் சமூக மாற்றத்திற்கான விசயங்களை பேசுவதும், எழுதுவதும், விவாதிப்பதும் சற்று சிரமமான விசயம்தான். இந்த முயற்சியில் வினவுத் தோழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சட்டக்கல்லூரியில் நடந்த ஆதிக்கசாதி வன்முறை குறித்து அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளுக்காக வந்த பல தரப்பட்ட வாசகர் கடிதங்களையும் இங்கே வெளியிடுகிறோம். இந்த இரண்டு கட்டுரைகளில் முதல் கட்டுரை சம்பவம் நடந்த மறுநாள் வெளியானது. இரண்டாவது கட்டுரை அடுத்த ஒரு சில நாட்களுக்குள் எழுதப்பட்டது. இரண்டு கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பலர் தங்களது கருத்துக்களை எழுதியிருந்தனர். இக்கருத்துக்களின் மூலம் சாதியம் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதோடு பரபரப்பான இந்த சம்பவத்தைத் தாண்டி ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதை சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதையும் இந்த மறுமொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கட்டுரையை விட மறுமொழிகளின் பக்கங்கள் அதிகம் என்றாலும் தமிழில் இது புதிய முயற்சியாகும். இக்கட்டுரைகளையும், மறுமொழிகளையும் வெளியிட அனுமதி கொடுத்த வினவுத் தோழர்களுக்கு நன்றி.

சட்டக் கல்லூரியின் வன்முறை வெடித்த அன்றே பு.மா.இ.மு தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு சென்று மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்குறிய வேலைகளைத் துவக்கினோம். தமிழகத்தின் பிற சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கி, ஆதிக்க சாதி வெறி சக்திகள் மாணவர்களிடையே தலையெடுக்காமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் எமது தோழர்கள் ஈடுபட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் பொத்தம் பொதுவாக வன்முறையைக் கண்டிப்பாதாக ஆபத்தில்லாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எமது அமைப்பு மட்டும் தேவர் சாதிவெறியையும் அதற்கு துணை நின்ற ஆதிக்க சாதிவெறி இயக்கங்களையும் குறிவைத்து பிரச்சாரம் செய்தது. பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களிடம் கூட தலித் மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை கொண்டு சேர்த்தோம்.

தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்பத் காண்பிக்கப்பட்ட காட்சியின் மூலம் கட்டியமைக்கப்பட்ட பொதுக்கருத்து எனும் உணர்ச்சிகரமான நிலையில் ஆதிக்க சாதி  வெறியைக் கண்டிப்பதும், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதும் அவ்வளவு எளிமையானதாக இல்லை.  ஆயினும் இந்த இடரை பு.மா.இ.மு சந்தித்து வெற்றி கண்டது. பல கல்லூரிகளில் இதைப் பற்றிய பிரச்சாரமும், விடுதிகளில் அறைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தும் உண்மையை விளக்கினோம். இரு தரப்பு மாணவர்களும் இந்தக் கூட்டங்களுக்கு வந்தனர். இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக சென்னையில் அப்போது வெளியிடப்பட்ட பிரசுரத்தையும்      இந்நூலில் வெளியிட்டிருக்கிறோம்.

பொதுவில் தலித் மாணவர்களுக்கெதிரான கருத்தே கோலேச்சிக் கொண்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் அதற்குப் பணிந்து அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியைத் திறக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக மாணவர்களிடையே பிரச்சாரம் செய்து விடுதியை செப்பனிட்டு விரைவில் திறக்கவேண்டும் என கோரிக்கையை வைத்து போராடினோம். இதன் விளைவாக நீதிமன்றமும் விடுதியைத் திறப்பதற்கு உத்தரவிட்டு தற்போது விடுதியை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு புறம் சட்டக்கல்லூரி பிரச்சினையை வைத்து மாணவர்களுக்கு அரசியல் கூடாது, சங்கங்கள் கூடாது, கல்லூரி தேர்தல்கள் கூடாது என மொத்தமாக ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கோரிக்கைகளும் பலத்த குரலில் பேசப்பட்டன. மாணவர்களிடையே சாதிய ரீதியான பிளவை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சதியை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தோம்.

காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என தனியார் மயம் கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கும் பாதகமான சூழ்நிøலையில் மாணவர்கள் சாதி ரீதியாக பிரிந்து நிற்பதில் உள்ள இழப்பையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்தோம். வர்க்கமாக அணிதிரண்டு போரடவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாக இருக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் இந்த சாதிவெறியும், ஆதிக்க சாதி மனோபாவமும் களைந்து கொள்ளப்படவேண்டிய கழிவுகள் என்பதை மாணவர் உலகம் கற்றுக் கொள்ளவேண்டும். பார்ப்பனியம் விதித்திருக்கும் சாதியத் தடைகளை அகற்றுவதற்கான போரில் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூல் உங்கள் பார்வைக்கு வருகிறது. ஆதரவு தருக.

தோழமையுடன்
-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

பக்கம் - 88, விலை ரூ.35
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044 - 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம், 
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
தொலைபேசி: 044 - 28412367

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.