இன்று இதையே அனைத்து தமிழ் ஊடகவியலும் செய்கின்றது. மறுபக்கத்தில் இதை நாம் தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்வதையே தவறு என்கின்றனர். நிர்வாணக் காட்சியை மூடிமறைக்கும் புனிதத்தின் பெயரில், இந்த கொடுமையை மறைப்பதன் மூலம் இதற்கு துணை போகின்றவர்கள், எம்மையும் இதைச் செய்யக் கோருகின்றனர். பேரினவாதம் காலாகாலமாக எம் பெண்களுக்கு செய்துவந்த பாலியல் கொடுமைகளை, பத்தோடு பதினொன்றாக்க முனைகின்றனர்.

எம் செயல் இதற்கு எதிரானது. நாம் இதை தமிழ் மக்களின் முன் வைத்து, உன்னைப்போன்ற பெண்ணுக்கு அல்லது உன் இனத்துப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைப் பார் என்கின்றோம். இப்படி நாம் செய்வது தவறு என்கின்றனர் புலித்தேசியம் பேசுபவர்கள். மக்களிடம் இதை எப்படி சொல்லமுடியும் என்பது, அவர்கள் பாணியிலான ஆட்சேபனை. அவர்கள் கூறும் காரணம் நிர்வாணமான உடல், இங்கு காட்சிக்கு வருகின்றது என்பது தான். அப்படியாயின் இதை யார் தான் பார்க்க முடியும்!? மக்களின் பெயரில் போராட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதி புனிதர்களா!? மக்கள் என்ன, இதைப் பார்த்து ரசிக்கும் காம வெறியர்களா!? இதற்கு எதிராக போராட முடியாத மந்தைகளா!?

 

நாங்கள் மக்களை நம்புகின்றோம். அவர்கள் தான் இதற்காகவும் போராட முடியுமென்று கருதுகின்றோம். இதற்கு வெளியில் நாம் யாரையம் நம்புவது கிடையாது.  மக்களை ஆபாசம் பிடித்த காம வெறியர்களாக, இதைப் பார்க்க முடியாதவர்களாக, நீங்கள் கருதுவது போல் நாங்கள் கருதவில்லை. இதை மக்கள் தான் நிச்சயமாகப் பார்க்கவேண்டும். இதை ரசித்து  செய்த காம வெறியன் நிலையிலே தான் மக்கள் பார்ப்பார்கள் என்று கூறுகின்ற முட்டாள்கள் உள்ளவரை, அவர்கள் மக்களை இழிபிறப்பாக கருதுகின்ற உங்கள் புனிதம் தான், இன்று தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவுகின்ற செயலுக்கு துணைபோகின்றது. 

 

இரண்டாவதாக இதை வெளியிட்டதற்கு எதிராக மற்றொரு தரப்பு எமக்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றது. இது புலிக்குச் சார்பானதென்றும், எம்மைப் புலிகள் என்றும் புலியெதிர்ப்பு பேசும் 'ஜனநாயகவாதிகள்" கூறுகின்றனர். இன்று இதை மூடிமறைக்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் இந்த ஈனச்செயலைக் கண்டு கொதிக்காத 'ஜனநாயக"வாதிகளாக, பேரினவாதத்தின் நாய்களாகியே குலைக்கின்றனர். இது போன்ற செயல்கள் கண்டு கொள்ளத் தேவையில்லாதவை என்று, புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இந்த நிலையில் தான் அரசு, இவர்களுடன் சேர்ந்து இதன் மீது விசாரணை என்று நாடகமாடுகின்றது.   

  

மூன்றாவது ஆட்சேபனை புலிகள் அல்லாத, புலிக்கு எதிரான நீங்கள் எப்படி இதை வெளியிட முடியும். ஒன்றில் புலிக்கு சார்பாக இருந்து இதை வெளியிட முடியும். இல்லையென்றால் நீங்கள் வெளியிடமுடியாது. நீங்கள் யார்? என்ற கேள்வி, இந்த ஏகப்பிரதிநிதிகளால் எழுப்பப்படுகின்றது. இந்த வகையில் இதை பிரசுரித்ததை ஆட்சேபிக்கின்றனர்.

 

இப்படி இதை நாம் முதலில் வெளியிட்டதற்கு எதிரான ஆட்சேபனைகள், அவர்களின் குறுகிய குதர்க்கமான அரசியல் எல்லைக்குள் இருந்து எழுகின்றது. பொதுவாகவே ஊடகவியல்கள் எல்லாம், இதை சுற்றி சுற்றி அரோகரா போட்டு இயங்குகின்றது.

 

இவர்கள் யாருக்கும் தமிழ் மக்கள் பற்றி எந்த அக்கறையும் கரிசனையும் கிடையாது. எந்த சுயமும் கிடையாது. நாங்கள் இதை தமிழ்மக்கள் முன் கொண்டு சென்றதையும், செல்வதையுமே அதை மையப்படுத்தி நிற்பதும், இவர்களுக்கு சகிக்க முடியாத ஆட்சேபனையாகவும் வெறுப்பாகவும் மாறியிருக்கின்றது.

 

இந்த விடையம் கடந்தகாலத்தில் புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்கு எதிரான எமது போராட்டத்தின், பொது உண்மையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. புலியெதிர்ப்பு எப்படிப்பட்ட மக்கள் விரோதத்தன்மை வாய்ந்தது என்பதையும், அது பேரினவாதத்தை எப்படி பாதுகாக்க முனைகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. புலிகள் மக்களைச் சார்ந்து போராடத்  தயாரற்ற தன்மையையும், பேரினவாதத்துக்கு எதிராக மாற்று கருத்தைக் கூட அங்கீகரிக்கத் தயாரற்ற போக்கையும் கூட இது எடுத்துக்காட்டுகின்றது. இவை எல்லாம் அவர்களின் அரசியல் நடைமுறையை, அணுகுமுறையை எடுப்பாக எடுத்துக் காட்டி நிற்கின்றது. 'சுதந்திர" ஊடகவியல் பேசும் அரசியல் எல்லாம் இன்று அம்மணமாகி நிற்கின்றது.

 

மக்களை நம்பிப் போராடுவதைத் தவிர, எமக்கு வெளியில் யாருமில்லை. இதுதான் அந்த மக்களின் நிலையும் கூட.

 

பி.இரயாகரன்
04.01.2008

 

இது மற்றொரு தலைப்பில் தொடரும்