"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ?"

 

"பார்த்தீங்களா அவளை? அவ வர்றதும், டக்குன்னு மாடிக்கு போறதும், மணிக்கணக்கா செல் ஃபோன்ல பேசறதும், கண்ட கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதும், .... எனக்கு ஒண்ணும் சரியாப் படலீங்க! கொஞ்சம் கண்டிச்சு வையுங்க அவளை, ஆமாம்!"

 

"ஏண்டி எங்கிட்ட வந்து இத்தெல்லாம் சொல்றே? ஒம் பொண்ணுதானே அவ? நீ பேச வேன்டியதுதானே? அவளைத் தப்பு சொல்றதே ஒனக்கு வழக்கமாப் போச்சு!"

 

"எனக்கென்ன வந்ததுன்னு இருக்க முடியாதுங்க! நீங்க செல்லம் குடுத்துதான் அவ இப்பல்லாம் என்னை மதிக்கறதே இல்லை. ஒங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க! என் புத்தியை செருப்பாலதான் அடிசுக்கணும். எப்படியோ போங்க!"

 

"சரி, இப்ப என்ன ஆச்சுன்னு இந்தக் குதி குதிக்கறே நீ? அவ வரட்டும். நான் பேசறேன்."

 

"இதோ வந்தாச்சு. ரொம்பத் திட்டாதீங்க அவளை. பக்குவமா கேளுங்க!!"

 

"சாந்தி, இங்கே வாம்மா! அப்பா ஒங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்."

 

"என்னப்பா? சொல்லுங்க. எனக்கு நாளைக்கு ஒரு பேப்பர் சப்மிட்[Paper submit] பண்ணனும். நிறைய நோட்ஸ்[notes] எடுக்கணும். சீக்கிரமா சொல்லுங்க."

 

"அது யாரு அந்த ராஜேஷ்? அவனோட அடிக்கடி சுத்தறேன்னு சொல்றாங்களே ."

 

"என்னப்பா இது? அவன் என்னோட பெஸ்டு ஃப்ரெண்டு. [Best Friend]அவந்தான் இந்த ப்ராஜெக்டுல[project] எனக்கு ஹெல்ப்[help] பண்றான். ரொம்ப நல்லவன்பா அவன். இப்படி கேக்கறீங்களே? சொல்றவன் ஆயிரம் சொல்வாம்ப்பா. நீங்க எதையும் நம்ப வேணாம். வேணும்னா அவன் செல்ஃபோன் நம்பர்[cell phone number] தரேன். நீங்களே அவன் கூட பேசுங்க.".............

 

இது போன்ற காட்சிகள் பலவித மாறுதல்களுடன் அன்றாடம் பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

 

சில சமயம் புரிதல், சில சமயம் வீம்பு, கோபம், தாபம், சந்தேகம், ஆத்திரம், சண்டை, எதிர்த்துப் பேசுதல், என்று மாறுபட்டு இவை நிகழலாம்.

 

ஆனால் அடிப்படைக் கருத்து ஒன்றுதான்.

 

இதுவரை நாம் பார்த்து, நம் பேசக் கேட்டு, நாம் சொல்லி வளர்ந்த பெண்ணோ, பையனோ, இப்போது நம்மிடமிருந்து விலகி, நம்மை அந்நியமாகப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை நம்மிடம் ஏற்படுத்தி, நம் வாழ்க்கையே திசை திரும்பி விட்டது போன்ற ஒரு தோற்றம், பயம் நமக்குள் நிகழ்கிறது .

 

இது எதனால்?

 

நம் பார்வை மாறியதா?

இல்லை அவர்கள் மாறி விட்டார்களா?

 

இரண்டும் இல்லை.

 

அவர்கள் வளர்ந்ததை, வளரத் தொடங்கி விட்டதை, நம்மால் ஒப்புக் கொள்ள முடிய வில்லை என்பதே நிஜம்.

 

பாலியல் ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்.

 

வெட்கம், நாணம், திமிர், சுதந்திரப் போக்கு இவையெல்லாம் ஏற்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர்கள் ஒரு வித துணிந்து செயல் படும்[experimentation] நிலையில் இருக்கிறார்கள்.

 

இதுவரையிலும் அப்படித்தான் இருந்தோம் என்றாலும், திடீரென ஒரு அதிகப்படியான காக்கும் உணர்வு[Protective nature] நமக்குள் வருகிறது.

 

அவர்களுடன் நேரடியாக, நேர்மையாக, அமைதியாக, அவர் உணர்வு புரிந்து நடக்க வேண்டிய இந்த முக்கியமான சமயத்தில், நாம் 

பொறுமை இழப்பதும், 

ஆத்திரப் படுவதும், 

தனித்து இயங்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதும், 

எது பேசணுமோ அதை விட்டு மற்ற விஷயங்களைப் போட்டுக் குழப்பி பிரச்சினையை மோசமாக்குவதும், 

அவர்களைச் சரியாக நடத்தாதுமான நிகழ்வுகள்தான் நாம் செய்கிறோம்.

 

உதாரணத்துக்கு இந்த உடலுறவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

 

நம் பெண் கெட்டுப் போய்விடக் கூடாதே, நம் பையன் தப்பா நடக்கக் கூடாதே என்னும் ஆதங்கத்தில், நாம் எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறோம்?

 

அவையெல்லாம் தவறு என்று சொல்ல வரவில்லை நான்.

 

உடலுறவு என்றால் என்ன, 

எப்போது அது நிகழ வேண்டும், 

பருவம் மாறி நிகழ்வதால் ஏற்படக் கூடிய மாற்று விளைவுகள் என்னென்ன, ஏன் அவசரப் படக் கூடாது, 

அது செய்யாமலேயே அன்பை வெளிக்காட்டுவது எப்படி 

என்பதை அவர்கள் உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுவது நல்லதா அல்லது வேறு யார் மூலமாவதா?

 

இது பற்றிப் பேசுவது சற்று சங்கடமான விஷ்யம்தான் என்றாலும், நீங்கள் பேசுவதுதான் நல்லது.

 

இதை நன்றாகப் புரிந்து கொண்ட வீடுகளில் பிரச்சினைகள் அதிகம் வராது.

 

ஒரு புரிதல் நிகழ வேண்டும் இருவருக்குள்ளும்.

 

"இங்க பாருப்பா, ஒருத்தரோட அன்பா இருக்கறதுல தப்பே இல்லை. 

இப்ப செய்யலைன்னா வேற எப்போ செய்ய முடியும்?

ஆனா, அந்த அன்பை வெளிக்காட்டறதுக்கு, உடலுறவுதான் வழி, அப்போதான் அடுத்தவருக்கு நம்ம மேல ஆசைன்னு தப்புக் கணக்கு போட்டுறக் கூடாது. 

இது அதுக்கான வயசு இல்லை. 

உடலுறவு மூலமா, குழந்தை பிறக்கலாம். 

இல்லை நாங்க தடுப்பு சாதனங்களை உபயோகப் படுத்திப்போம்னு சொன்னா, அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும் நீ. 

இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, அதை சமாளிக்க வேண்டிய வழி வசதிகள் இருக்கான்னு தீவிரமா யோசிக்கணும்.

நம்ம காலுல நிக்கக் கூடிய சக்தி நமக்கு இருக்கான்னு முதல்ல தீர்மானம் பண்னிக்கணும். 

அது எல்லாத்தையும் விட மிக முக்கியமானது, நீ ஒரு பெரிய இழப்பை இந்த சுகத்துக்காக சம்பாரிச்சுக்கறேங்கறதைப் புரிஞ்சுக்கனும். 

அன்பை வெளிக்காட்டணும்னா, 

நெருங்கிப் பேசறது, 

ரெண்டு பேரும் சேர்ந்து கை கோத்தபடி நடந்துட்டு வர்றது,

பாட்டு, டான்ஸுன்னு போறது, 

ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுக்கறது, 

இது போல இன்னும் எத்தனையோ இருக்கு. 

இது மூலமா நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும். 

அப்புறமா, இருக்கவே இருக்கு, கல்யாணம். 

அதுக்கப்புறம் நீங்க என்ன செஞ்சாலும் யார் கேக்கப் போறாங்க? "

 

இது போல வெளிப்படையாகப் பேசினால், அடுத்த முறை அவனோ அல்லது அவளோ மீண்டும் இதற்கு [sexual intercourse] நெருக்கும் போது, தானாக உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள். 

 

இது நிகழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

 

அதையும் மீறி, உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார், உங்கள் மகன் அல்லது மகள் எனத் தெரிய வருகிறது.

 

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html