காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல்,புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, ''போல்ட்நட்'' தயாரிக்கும் ஆலைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. பின்னர் பாட்டில் தண்ணீர் தயாரிக்கப் போவதாகக் கூறிப் பஞ்சாயத்து அனுமதி பெற்றது. இப்போது ''கால்ஸ்'' என்ற

 நிறுவனத்தின் பெயரில் சீமைச்சாராய வடிப்பு ஆலைக்கான எல்லா கட்டுமான வேலைகளையும் வேகமாகச் செய்து வருகின்றது. இரண்டு பெரிய ஆழ் குழாய் (சுமார் 480 அடி ஆழம்) கிணறுகளைத் தோண்டி அன்றாடம் 6 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை இப்போதே உறிஞ்ச ஆரம்பித்து விட்டது இந்த ''கால்ஸ்'' கும்பல். இது தவிர, இன்னும் பத்து ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டி ஆலையை இயக்கத் தீர்மானித்துள்ளது.


நிலத்தடி நீர்தான் இப்பகுதிவாழ் மக்களின் ஒரே ஆதாரம். இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டவுடனேயே ''கால்ஸ்'' ஆலையைச் சுற்றியுள்ள விவசாயக் கிணறுகளில் நீர் வற்றி விட்டது. மேலும் பத்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள பதினெட்டு கிராமங்களும் அங்குள்ள மக்களும் விவசாயத்தை இழப்பதோடு, குடிக்கக்கூட நீரின்றித் தவிக்க வேண்டிய பேரபாயம் ஏற்படும்.


அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தும், உள்ளூர் ஓட்டுப் பொறுக்கித் தலைவர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியும் சாராய ஆலையைத் தொடங்கியுள்ள ''கால்ஸ்'' கும்பல், சட்டப்படி முறையான அனுமதி எதையும் பெறவில்லை. முதலில் அனுமதியளித்த பஞ்சாயத்தும் மக்களின் எதிர்ப்பால் அனுமதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனாலும், அதிகார வர்க்கம், போலீசு மற்றும் அடியாள்படையைக் கொண்டு சட்டவிரோதமாக ஆலைக் கட்டுமானப் பணிகளை வேகமாகச் செய்து வருகிறது ''கால்ஸ்'' கும்பல்.


இந்த அநீதிக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இப்பகுதிவாழ் மக்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆலையை அகற்றக் கோரி 2000க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, காங்கிரசு; தி.மு.க; ம.தி.மு.க; ஆகிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் அடியாட்களுடன் வந்து மிரட்டினர். அக்குண்டர்களை கல்லாக்கோட்டை மக்கள் ஓடஓட அடித்து விரட்டினர். சாராய ஆலைக்கு சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள் ஊருக்குள் நுழைய அனுமதியில்லை என்று அறிவித்து, மீறி உள்ளே வரும் லாரிகளைச் சிறைபிடித்துத் திருப்பியனுப்பியுள்ளனர், இக்கிராம மக்கள்.


''கால்ஸ்'' கும்பலின் ஏவல்நாயாகச் செயல்படும் போலீசு, முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்கள் மீது குண்டாந்தடி தாக்குதல் நடத்தியதோடு, கொலைமுயற்சி உள்ளிட்ட பல கொடிய பிரிவுகளின் கீழ் முன்னணியாளர்கள் மீது பொய் வழக்குகளைப்போட்டுள்ளது. பிணை வழங்கிய நீதிமன்றமோ, நாகப்பட்டினத்தில் தங்கி காலைமாலை என இருவேளையும் போலீசு நிலையத்தில் கையெழுத்திடுமாறு நிபந்தனை விதித்து, ''கால்ஸ்'' கும்பலுக்கு விசுவாசமாக நிற்கிறது. இதைப் புரிந்து கொண்ட முன்னணியாளர்கள், ஊருக்குத் திரும்பிவந்து, ''முடிந்தால் போலீசு ஊருக்குள் வந்து கைது செய்யட்டும், பார்க்கலாம்'' என்று உள்ளூர் மக்களின் பேராதரவோடு போராட்டத்தை தொடர்கின்றனர். ஊருக்குள் நுழைந்தால் காக்கிச் சட்டை கந்தலாகிவிடும் என்பதால் பம்மிப்பதுங்குகிறது போலீசு.


அதிகார பலமிக்க போலீசுக்கே இந்த கதி என்றால், உள்ளூர் ஓட்டுக் கட்சி துரோகிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையோ நாயை விடக் கேவலமாகி விட்டது. இத்துரோகிகளைச் சமூகப் புறக்கணிப்பு செய்துள்ள மக்கள், மளிகைக் கடை தேநீர் கடைகளில் எந்தப் பொருளையும் வழங்குவதில்லை. உள்ளூரில் முடிதிருத்திக் கொள்ளக் கூட இத்துரோகிகளால் முடியவில்லை. பொது இடங்களில் நடமாடினால் கூட உழைக்கும் மக்கள் அவர்களைக் காறி உமிழ்கிறார்கள்.


ஒற்றுமையுணர்வோடும் உறுதியோடும் தொடரும் கல்லாக்கோட்டை மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து, ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் இப்பகுதியெங்கும் தொடர் தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக 16.11.08 அன்று கல்லாக்கோட்டையில் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ''கால்ஸ்'' சாராய அலையை விரட்டியடிப்போம் என்ற அறைகூவலுடன் பொதுக்கூட்டம்கலைநிகழ்ச்சியை நடத்தின. சாராய ஆலை எதிர்ப்புப் போராட்ட முன்னணியாளர்கள் பங்கேற்புடன் நடந்த இப்பொதுக்கூட்டமும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும், பகுதிவாழ் மக்களின் போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தது.


பு.ஜ.செய்தியாளர்கள்