புதுச்சேரி மாநிலம் வடமங்கலம் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தமது தொழிலாளர்களின் குடும்பத்தினரை அழைத்து ஒருவேளை உணவும் பரிசுப் பொருளும் வழங்கும் "குடும்பத் தினவிழா(!)'வை  கடந்த 16.11.08 அன்று நடத்தியது.
 தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தி வருவது மட்டுமல்ல, தொழிற்சங்கம் அமைத்தக் "குற்றத்திற்காக'வே தொழிலாளிகள் பலரை பழிவாங்கி வருகிற நிறுவனத்திற்கு "குடும்ப விழா' நடத்த என்ன அருகதை இருக்கிறது?

 

 இதே நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட பாண்ட்ஸ் ஷூ டிவிசன், எச்.யு.எல். டீ டிவிசன், மற்றும் கோத்ரெஜ் சாரலி தொழிலாளர்களிடம், இச்"சன்மானத்தை'ப் புறக்கணித்து, தன்மானத்தோடு தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க அறைகூவி,  ""ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை'' அறிவித்தது,   பு.ஜ.தொ.மு. இணைப்புச் சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன். 

  
 நிர்வாகத்தின் தடையுத்தரவையும் போலீசின் மிரட்டலையும் முறியடித்து, "குடும்ப தினவிழா' நடந்த மண்டபத்தின் அருகாமையிலேயே  அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தபடியே நடத்தி, நிறுவனத்தின் முகத்தில் கரியைப் பூசியது,< இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்.


 வழக்கத்திற்கு மாறாக, இம்முறை கூடுதல் பரிசுப் பொருள்களை நிர்வாகம் வழங்கியிருப்பதும்; அப்பரிசுப் பொருளை பெற்றுக்கொண்டு திரும்பிய தொழிலாளர்கள் இப்போராட்டப் பந்தலைக் கடந்தபோது குற்றவுணர்வில் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதும் இப்போராட்டத்திற்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி என்றால், அது மிகையல்ல!


— இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்,
வடமங்கலம்.