"புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் அல்ல, அவர்களின் நலன்களுடன் தமிழ்மக்களின் நலங்களும் சில பின்னிப்பிணைந்துள்ளது". புலிகள் தாம் சார்ந்த வர்க்கத்திற்காக நிற்கின்றார்களா? அப்படியாயின் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி அவர்களையே நம்பி ஆயுதம் ஒப்படைப்பதாகக் கூறியவர்கள் பின் தங்களின் நலன் பாதுகாக்கப்படாத போது அவர்களையே எதிர்த்தார்கள். இலங்கையரசை நம்பவில்லை என்றவர்கள் பின் பிரேமதாசா அரசுடன் பேச்சு நடத்தியது மட்டுமல்லாமல், ஆயுதமும் வாங்கி தற்போது அவர்களுடன் மோதுகின்றார்கள். ஏன்? இங்கு அவர்களின் நலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களின் நலன் பாதிக்கப்படும் என்றால் புலியினர் இஸ்ரேல் என்ன அமெரிக்காவுடனும் மோதத் தயார். அங்கு இருப்பவர்கள் சயனற்றை கழுத்தில் கட்டிய தொண்டர்கள். இந்த நிலையில் அவர்களை ஒரு வர்க்கத்திற்குள் வரையறுப்பது எப்படி?

இக் கருத்துக்கள் தொடர்பாக சமர் 1,2, தூண்டில், மனிதம், உயிர்ப்பு ஆகியவற்றில் விவாதங்கள் வெளிவந்தன, இவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே கருத்துக்களை விவாதிக்கிறோம். அக் கருத்துக்கள் தொடர்பாக இவ்விதழில் பிறிதொரு விவாதத்தை முன் வைக்கிறோம். தாங்கள் அவ் விவாதங்களையும் பார்க்கவும். உங்கள் கருத்தும், மனிதம் சஞ்சிகையில் வந்த கருத்துக்களையும் ஒன்றாகப்பார்க்க முடிகிறது. உங்கள் கருத்துக்கள் தொடர்பாக மனிதத்தின் கருத்துக்களை ஒட்டி வைத்த கருத்தையும் பார்க்க. இருந்தும் உங்களது கருத்துக்களையும் தனியான ஆராய முற்படுகிறோம்.

புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் இல்லை என வாதாட முற்படுபவர்கள் உலகில் நடுநிலைமை என்று ஒன்று உண்டு என வாதட முற்படுகின்றனர். எந்த நடவடிக்கைக்கும், எக்கருத்துக்கும் ஒரு வர்க்கத் தன்மையுள்ளது. இது தொடர்பாக இரண்டாம் அகிலத்துக்கும், லெலினுக்கும் இடையில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. புலிகளின் நலன்களுடன் தமிழ் மக்களின் நலன்கள் சில பிணைந்துள்ளது என்ற உங்கள் வாதத்தில் புலிகளின் நலன்களென்று நீங்கள் கூறுவது எதை? புலிகள் தாம் சார்ந்தோருக்கெனப் போராடும் குறிக்கோள்கள் அனைத்தும் தரகுமுதலாளித்துவம் சார்ந்ததே. சிறு குழுக்களாகவிருக்கும் இவர்கள் எப்போதும் தமது நலனுக்காவே போராடுவார்கள். இத் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான அம்சமும் கூட, இத் தரகுமுதலாளித்துவ கோரிக்கைகளுக்கு அப்பால் எந்தக் கோரிக்கையும் வர்க்கத்தன்மையற்றதென நீங்களோ, மனிதம் சஞ்சிகையோ சுட்டிக்காட்டவில்லை. ? இதை மேலும் விபரமாக மனிதம் தொடர்பான விமர்சனத்தில் பார்ப்போம். நீங்கள் சொல்லுவது போல் புலிகளுக்கு வர்க்கத்தன்மையில்லை எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் புலிகள் சுரண்டலை நடத்தவில்லை. இக் கருத்தை நாம் ஆராய முற்படும் பொழுது எவ்வளவு பலவீனமானது. தமிழ் மக்கள் மீது புலிகள் சுரண்டலை நடத்துவதில் இன்று முதலிடம் வகிக்கிறார்கள். சாதாரண |"ஜனநாயகத்தை" அடக்கி ஒடுக்கி தங்களின் வர்க்க இருப்புக்காக சுரண்டலைப் பிரதானமாக கொண்டு இன்று தம்மைப் பேணுகிறார்கள்.

இதே கருத்துடன் கிட்லர், சதாம் உசையின் பிரச்சனையை எடுப்போமாயின் இருவரின் குரல்களிலும் தேசியத்தன்மை (சொந்த மக்களின் கோரிக்கை) காணப்பட்டது. அதே நேரம் எதிரியைப் போன்று சொந்த மக்களை நசுக்கியபடி எல்லா வழிகளிலும் சுரண்டல்களை நடத்தினார்கள். அவர்களும் காலத்துக்கு காலம் நண்பர்களை மாற:றி தம்மைப் பாதுகாத்து கொள்ள முயன்றனர். அதற்காக இவர்களுக்கு வர்க்கத் தன்மையில்லை என்றோ, எந்த வர்க்கமென்று வரையறுப்து என்றோ கேள்வியெழுப்ப முடியாது. இவர்களின் வர்க்கத்தன்மை தெளிவானது.

புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் உருவாகிய பொழுது அவை ஒரு குட்டிபூர்சுவா இயக்கமாகவே இருந்தது. அது தனது வளர்ச்சியுடன் தனது தன்மையை மாற்றிக்கொண்டது. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டு தமிழீழப் போராட்டத்தில் தலையீடு நடத்தியது. ஆரம்பத்தில் பயிற்சி முகாம்களை உருவாக்கிய பொழுது ஒவ்வொரு இயக்கத்தையும் தனது வர்க்க நோக்கத்தின் அடிப்படையில் ஆராய முற்பட்டது. இதன் அடிப்படையில் தனது தரகு ஆகவும், நம்பகரமான சக்தியாக டெலோவையும், ஈ-பி-ஆர்-எல்-எவ் யும் கணித்தது. புளொட்டிலிருந்த குழப்பமான சக்திகளின் நடவடிக்கைகளை அடுத்து புளொட்டை அவதானத்துடன் கையாண்டது. புலியை அதன் பின்னணியைக் கொண்டு, புலிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது புறக்கணித்தது. பயிற்சி கொடுத்த நபர்களின் எண்ணிக்கை, பயிற்சியின் தரம், கொடுத்த ஆயுதங்களின் தொகை ஒவ்வொரு இயக்கங்களுக்கும் மாறுபட்டதாக இருந்தது. இக் காலத்தில் என்-எல்--எவ்-டிக்கான பயிற்சி நிராகரிக்கப்பட்டதுடன் தீவிர கண்காணிப்பையும் இந்தியா செய்தது. இந்திய அரசு ஒவ்வொரு இயக்கத்தையும் அதன் வர்க்கத்தன்மையையும் மதிப்பிட்டது.

இதே போல் புலிகளும் ஒவ்வொரு இயக்கத்தையும் இந்தியாவையும் மதிப்பிட்டது. ஆரம்பம் முதலே இந்தியா தொடர்பாக புலிகள் காலத்துக்காலம் தேவைப்படும் போதும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்க முனைந்தனர். ஆனால் புலிகளில் இருந்த அரசியல் தெளிவின்மையும், பிறிதொரு ஏகாதிபத்தியத்தின் சார்பும், கீழ் மட்டத்திற்கு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மேல்மட்டம் கொடுக்கத்தவறியதன் விளைவே. கீழ்மட்டம் இந்தியா இறங்கிய பொழுது வரவேற்றது.

புலிகள் இந்தியா தொடர்பாக அரசியல் ரீதியாக ஆராய்ந்ததன் குறைபாடும், இந்தியா தொடர்பாகவிருந்த பயம் அவர்களுக்குள் இருந்த நெருக்கடியும், தரகுத்தன்மையும் இந்தியா சார்பாக மாற்ற தயாராகவுமிருந்தனர். இதுவே ஆயுதத்தை வாங்கவும், கொடுக்கவும் முயன்றது. அதே நேரம் இந்தியா ஏமாற்றி விடும் என்ற பயமும் தான். ஒரு பகுதி ஆயுதத்தை மறைத்து வைத்ததும். இந்தியா மற்றைய இயக்கங்களை இறக்கிய பொழுது மோத முற்பட்டது. இதில் இந்தியா புலிகள் தொடர்பாக இருந்த நம்பிக்கையீனமும், தனக்கு நம்பகமானவர்களை நாட்டில் இறக்கியது. அதே நேரம் இலங்கையில் தொடர்ந்து இருக்க புலிகளுடன் மோதும் அவசியத்தையும் உணர்ந்தது. இதுவே புலிகள் தொடர்பாக இந்தியாவின் நிலையாகவிருந்தது.

இலங்கையில் இந்தியப்படையின் இருப்பை சிங்கள மக்கள் எதிர்த்த அதே நேரம் ஜே-வி-பியின் வளர்ச்சி இந்தியாவின் வருகையுடன் வேகங் கொண்டது. இந் நிலைமையைத் தொடர்ந்து இலங்கையரசு ஆட்டம் காணும் நிலைமை ஏற்பட்டது. இதை ஈடு கொடுக்கவே பிரேமதசா இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன் இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோரினார். பிரேமதாசா அரசு மேற்கத்தைய தரகுத்தன்மையை கொண்டிருந்தமையும், புலிகளும் அதே தன்மையை கொண்டிருந்தமையும் இருவரும் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரேமதாசாவுடன் இணைந்து ஆயுதம் வாங்கியதும், இந்தியாவை வெளியேற்றியதுமாகும். இவ் வெளியேற்றம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு அவசியமானது.

இவர்களுக்கிடையிலான மோதல்களை லெனின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்னுமொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கத்திற்காக குறிப்பிடத்தக்க சூழ்நிலையில் பயன்படுத்தி கொள்ளும். இக்கருத்து தொடர்பாக சமர் வெளியீடான அரசியல் அனாதைகளின் ஜனநாயகப்படுகொலை என்ற புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு புரட்சியை தடுக்க ஒரு புரட்சிகரமான சக்திகள் வளரவிடாமல் தடுக்க, தென்னாசியாவின் ஸ்திரதன்மையை உடைக்க, குழுக்களுக்கிடையிலான மோதல்களை ஏற்படுத்தியதும், இலங்கையுடன் மோதலை ஏற்படுத்தியதும் ஏகாதிபத்திய வழிமுறைகளே. இதே வகையில் இந்தியா பங்களாதேச விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தியது. இது தொடர்பாக மேலும் விளக்கத்திற்கு மேற்குறிப்பிட்ட சமர் வெளியீட்டைப் பார்க்கவும்.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் தங்கள் நலன் பாதிக்கப்படும் போது மோதுவார்கள் என்ற விடயம் தொடர்பாகவும், முரண்பாடுகள் தொடர்பாகவும் ஆராய முற்படுவோம். ஒத்தவர்க்கத்திற்கிடையில் முரண்பாடுகள் உண்டு. அந்த வகையில் புலிகள் இஸ்ரேலுக்குமிடையில் முரண்பாடுகள் உண்டு. சுரண்டல் தொடர்பாகவிருக்கும் இம்முரண்பாடு நட்பு முரண்பாடாகவே இருக்கும். சிலவேளைகளில் இம் மோதல் ஏற்படலாம், ஏற்பட்டாலும் மீண்டும் ஜக்கியப்படுவார்கள். எப்போதும் சுரண்டலுக்கு ஆதரவாகவும் சுரண்டப்படுபவர்களுக்கு எதிராகவுமிருப்பார்கள். ஓடுக்கப்பட்டவர்கள் எழும்பொழுது ஜக்கியப்படுவார்கள். இன்று ஜப்பான், அமெரிக்கா, மேற்கு நாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகள், பகை முரண்பாடாகத் தோன்றுவதும், சிலவேளை யுத்தம் கூட நடக்கலாம். ஆனால் எப்போதும் சுரண்டல் நடத்துவதில் ஜக்கியப்படுவார்கள். சதாம் ஹ{சையின் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது, பின் அமெரிக்காவுடன் மோதியதும் சுரண்டல் தொடர்பான முரண்பாடே. அதே நேரம் அமெரிக்கா சாதாம் ஹ{சையினை அகற்றி நீண்டகாலத்தில் ஏற்படும் முஸ்ஸிம் அரசு ஆபத்தானது என கருதியதுமே சாதாம் ஹீசையினை மீண்டும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது. சாதாம் இருப்பதால் இன்று இருக்கும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே. எனவே சதாமின் வர்க்கத்தன்மையை வரையறுக்க முடியாது என கூறமுடியாது. உலகில் எழும் யுத்தங்கள் அனைத்தும் சுரண்டல் தொடர்பானவையே. புலிகளுக்கு வர்க்கத் தன்மையுண்டு. அவர்கள் சுரண்டலை நடத்துவதில் தீவிரமாகவும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் சார்ந்தும் உள்ளனர்.

உங்கள் கடிதத்தில் புலிகளை ஒரு வர்க்கத்திற்குள் வரையறுப்பது எப்படி? என கேட்டுள்ளீர்கள். அப்படியாயின் புலிகளுக்கு வர்க்கத்தன்மை என்ன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்கள். எனவே புலிகள் வர்க்கத்தன்மை என்ன என்பதே எம் முன் உள்ள கேள்வியாக இருக்க வேண்டும். அதை விடுத்து புலிகள் வர்க்கம் அற்றவர்கள் என ஏன் விவாதிக்க வேண்டும்? புலிகளின் வர்க்கத்தன்மை என்ன என்பதை அறிய தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையைப் பார்க்கவும்.