குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில், சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து போனதை விசாரித்து வந்த நானாவதி கமிசன், இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் எந்தப் பொய்யைப் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அந்தப் பொய்யையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

 

"இச்சம்பவம் உள்ளூர் (கோத்ரா) முசுலீம்கள் திட்டம் போட்டு நடத்திய சதிச் செயல்; குஜராத் முதல்வர், அவரது அமைச்சர்கள், அம்மாநில போலீசு அதிகாரிகளுக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், மறுவாழ்வும் அளிப்பதில் குஜராத் மாநில அரசு எவ்விதச் சுணக்கமும் பாரபட்சமும் காட்டவில்லை'' என நானாவதி கமிசன், தனது தீர்ப்பின் முதல் பாகத்தில் அறிவித்திருக்கிறது. ""இச்சம்பவம், உள்ளூர் முசுலீம்களின் சதிச் செயல் என்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் சதிச் செயல்'' என நானாவதி கமிசன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தால், நரேந்திர மோடி இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும்!


 காங். கூட்டணி மைய அரசைக் கைப்பற்றிய பிறகு, ரயில்வே அமைச்சகம் கோத்ரா சம்பவம் பற்றி விசாரிக்க யு.சி. பானர்ஜி என்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு கமிசன் அமைத்ததும்; அக்கமிசன் ""கோத்ரா சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து'' எனத் தீர்ப்பளித்திருப்பதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சம்பவம், நேரெதிரான இரண்டு தீர்ப்புகள்  சுவாரசியமான முரண்பாடுதான்.


 இந்து மதவெறிக் கும்பலின் ஊதுகுழலான துக்ளக் ""சோ'', ""பானர்ஜி கமிசனின் அறிக்கை, பீகார் சட்டசபை தேர்தலுக்காக லல்லு பிரசாத் யாதவ்வால் அரங்கேற்றப்பட்ட நாடகம்'' என ஒதுக்கித் தள்ளுகிறார். சோவின் தர்க்கவாதம் உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனாலும், நானாவதி கமிசனின் அறிக்கையை நீதிநெறி பிறழாதத் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், இத்தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட போலீசு அதிகாரி நோயல் பார்மரின் அறிக்கையின் (கோத்ரா சம்பவம் பற்றிய போலீசு விசாரணை அறிக்கை) நகலாக இருக்கிறது.


 ""1000 முசுலீம்கள் இரயிலுக்குத் தீ வைத்து இந்துக்களைக் கொல்லுங்கள் என்று கத்திக் கொண்டே தாக்குதல் நடத்தி, பெட்ரோலை ஊற்றி, எரிகிற துணிகளை உள்ளே வீசி, இந்தச் செயலைச் செய்திருக்கின்றனர்... அந்தப் பகுதியில் இருந்த மசூதியில் இருந்து இந்துக்களைத் தாக்குமாறு, முசுலீம்களைத் தூண்டிவிடும் முழக்கங்கள் ஒலிபெருக்கி வழியே ஒலிபரப்பப்பட்டன. இதற்கான சதி, சம்பவத்திற்கு முதல் நாள் கோத்ராவில் உள்ள அமன் விடுதியில் தீட்டப்பட்டது. அன்றிரவே, 140 லிட்டர் பெட்ரோல் வாங்கப்பட்டது... மௌல்வி உமர்ஜி என்பவர்தான் இச்சதியின் மூளை'' எனக் குறிப்பிட்டுள்ள நானாவதி கமிசன் "இச்சதி'யில் பங்கேற்ற பிறரையும் தனது தீர்ப்பில் அடையாளம் காட்டியுள்ளது.


 சம்பவம் நடந்த அன்று சபர்மதி விரைவு வண்டியில் பயணம் செய்த பயணிகள், உதவி நிலைய அதிகாரி, நிலையக் கண்காணிப்பாளர், ரயில்வே பாதுகாப்பு போலீசார் உள்ளிட்டு 100 சாட்சியங்களின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நானாவதி கமிசன் கூறுகிறது. மேலும், தனது சாட்சியங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, ""பயணிகள் அளித்த சாட்சியம் கமிசன் முன்பு மட்டுமே கூறப்பட்டவையல்ல; சம்பவம் நடந்த உடனேயே மாவட்ட ஆட்சியரிடம் இதே விவரங்களை, இதே நபர்கள் அளித்திருக்கிறார்கள். எனவே, இந்த சாட்சியங்கள் கமிசனுக்காகப் புனைந்து கூறப்பட்டவையல்ல; சம்பவம் நடந்த உடனேயே  சாட்சிகள் தங்களுக்குள் கலந்து பேசி பொய்க்கதை புனைய நேரமில்லாத போது  பலரும் கூறிய ஒரே வகை விளக்கங்கள் இவை'' என நானாவதி கமிசன் தெளிவுபடுத்தியிருக்கிறது.


 மாவட்ட ஆட்சியர் சம்பவம் நடந்த அன்று சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை நானாவதி கமிசன் அறிக்கை சாட்சியங்களின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவி, நானாவதி கமிசன் முன் அளித்துள்ள சாட்சியத்தில் ""நான் முசுலீம்கள் கும்பலாக நின்றதைப் பார்க்கவில்லை; "இஸ்லாம் அபாயத்தில் இருக்கிறது, "இந்துக்களை வெட்டுங்கள்' என ஒலி பெருக்கி வழியாக முழக்கமிடப்பட்டதை நான் கேட்கவில்லை'' எனக் கூறியிருக்கிறார். கமிசனின் "கண்டுபிடிப்புக்கும்', மாவட்ட ஆட்சியரின் சாட்சியத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதால், நானாவதி கமிசன், ""மாவட்ட ஆட்சியர் ஓரிடத்தில் நில்லாமல், அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்ததால், அவரால் கும்பலைக் காண முடியவில்லை; (மசூதியில் இருந்து ஒலிபரப்பான) அறிவிப்பைக் கேட்க முடியவில்லை'' என விளக்கம் அளித்திருக்கிறது.


 மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி சுதந்திரமான சாட்சிகளாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, கமிசனிடம் சாட்சியம் அளித்திருக்கும் ரயில்வே ஊழியர்கள், "ரயிலுக்கு வெளியே நின்றிருந்த கும்பல் ஆத்திரத்தோடு இருந்ததாகவும்; ரயில் மீது கற்களை வீசி எறிந்ததாகவும்தான்'' கூறியிருக்கிறார்களே தவிர, "அந்தக் கும்பல் ரயிலுக்குத் தீ வைத்ததைத் தாங்கள் பார்த்ததாக''க் கூறவில்லை.


 "ராம பக்தர்கள்'' எனத் தங்களைக் கூறிக் கொண்டு, கமிசனிடம் சாட்சியம் அளித்த சில பயணிகள்தான், ""ரயிலுக்கு வெளியே நின்றிருந்த முசுலீம் கும்பல்கள்தான் தீ வைத்ததாக'' கூறியுள்ளனர். இந்த ராம பக்தர்களின் சாட்சியத்தில் உள்நோக்கம் இருக்குமா என கமிசன் சந்தேகிக்கவில்லை. அப்படி சந்தேகிப்பது தெய்வ குற்றம் ஆகிவிடுமோ எனப் பயந்துவிட்டது போலும். அதனால், ரயில் மீது கல்லை எறிந்தவன்தான் (ரயில் மீது கல்லெறியப்பட்டதை பானர்ஜி கமிசனும் ஏற்றுக் கொண்டுள்ளது) தீயை வைத்திருப்பான் என்ற எளிமையான முடிவுக்கு வந்துவிட்டது போலும்.


 இக்கல்லெறிச் சம்பவம் கூட காரணமின்றி நடந்துவிடவில்லை. சபர்மதி விரைவு ரயில் கோத்ரா நிலையத்தில் வந்து நின்றபொழுது, ராம பக்தர்கள் ரயில் நிலைய முசுலீம் வியாபாரிகளிடம் தகராறு செய்ததையும்; ஒரு இளம் பெண்ணை ரயிலுக்குள் பலவந்தமாக இழுக்க முயன்றதையும் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் நானாவதி கமிசனோ இவையெல்லாம் முசுலீம்கள் பரப்பிய வதந்திகள் என ஒதுக்கித் தள்ளிவிட்டது.


 குஜராத்தில் இருந்து ராம பக்தர்கள் அயோத்தி சென்று விட்டு சபர்மதி விரைவு வண்டி மூலம் திரும்புவது, குஜராத் மாநில உளவுத்துறைக்கே தெரியாதபொழுது, கோத்ரா முசுலீம்கள் இச்சதித் திட்டத்தை எந்த அடிப்படையில் தீட்டியிருக்க முடியும் என்ற அடிப்படையான கேள்விக்கு நானாவதி கமிசன் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.


 கோத்ரா ரயில் நிலையத்தை விட்டுக் கிளம்பிய சபர்மதி விரைவு வண்டி, சில நிமிட நேரத்திற்குள்ளாகவே ஏன் திரும்ப நின்றது? ரயிலை யார் நிறுத்தியது? என்பது சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. நானாவதி கமிசன் வெளியே இருந்தவர்கள்தான் ரயிலை நிறுத்தியதாகக் கூறுகிறது. ஆனால், ரயில்வே ஊழியர்கள் தற்பொழுது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வெளியே இருந்து நிறுத்துவது சாத்தியமில்லை என்கிறார்கள்.


 சபர்மதி விரைவு வண்டியை எரிக்கும் நோக்கத்தோடு கோத்ரா முசுலீம்கள், உள்ளூர் பெட்ரோல் நிலையத்தில் இருந்து 140 லிட்டர் பெட்ரோல் வாங்கியதைச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கலாபாய் பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரதாப்சிங் ஜி.படேல், ரஞ்சித்சிங் ஜே.படேல் என்ற இரண்டு ஊழியர்கள் ஏப்ரல் 10, 2002 அன்று கமிசனின் முன் அளித்த சாட்சியத்தில், ""நாங்கள் யாருக்கும் சில்லறையாக பெட்ரோல் விற்கவில்லை என்றும்; தங்களின் பெட்ரோல் நிலையத்தில் சில்லறையாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதில்லை'' என்றும் கூறியுள்ளார்.


 ரஞ்சித்சிங் தனது வாக்குமூலத்தை பின்னால் மாற்றிக் கொண்டு விட்டார். இதற்கு போலீசார் ரூ. 50,000 இலஞ்சமாக அளித்ததாக ""தெகல்கா'' வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசியப் புலனாய்வில் ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 எல்லாவற்றுக்கும் மேலாக, குஜராத்தின் தடய அறிவியல் துறை, பல்வேறு விதமான சோதனைகளை நடத்தி, வெளியில் இருந்து எரிபொருளை வீசியெறிந்து ரயில் பெட்டியை எரித்திருக்க வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. ரயில் பெட்டி உள்ளிருந்து தீப் பிடித்திருக்க வேண்டும்; ஏறத்தாழ 60 லிட்டர் பெட்ரோலை ரயில் பெட்டியில் தரையில் கொட்டி, அதனால் தீ பிடித்திருக்கலாம் என்பதுதான் குஜராத் தடய அறிவியல் துறையின் அனுமானம். இந்த அறிவியல்பூர்வமான ஆய்வை அடிப்படையாகக் கொண்டுதான் பானர்ஜி கமிசன், "இது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தாக இருக்கலாம்'' என்ற முடிவுக்கு வந்தது.


 "வெளியே நின்று கொண்டிருந்த முசுலீம்கள் ஏதோவொரு எரிபொருளை ரயில் பெட்டிக்குள் வீசியெறிந்து தீ வைத்ததாக''க் குற்றச்சாட்டைப் பதிவு செய்திருந்த போலீசார், தடய அறிவியல் துறையின் அறிக்கை வெளிவந்த பிறகு, புதுக்கதை ஒன்றை சோடித்தார்கள்; முசுலீம்களுள் ஒருவர் ரயில் பெட்டியை இணைக்கும் கண்டை கிழித்துக் கொண்டு பெட்டிக்குள்ளே போய், பெட்ரோலைக் கொட்டி தீ வைத்ததாக குற்றப்பதிவு அறிக்கையினை மாற்றி எழுதினார்கள். மோடி அரசுக்கு நெருக்கமான நோயல் பார்மர் என்ற போலீசு அதிகாரிதான் இந்த மாற்றத்தை செய்தவர். நானாவதி கமிசனும், இப்போலீசு அதிகாரியின் "கண்டுபிடிப்பை'' எவ்விதமான விசாரணைக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொண்டுள்ளது.


 "ராம பக்தர்கள் நிறைந்துள்ள பெட்டிக்குள் முசுலீம் ஒருவர் பெட்ரோல் கேனுடன் ஏறி பெட்ரோலை கீழே கொட்டி, தீயை வைத்துவிட்டு வெளியே வந்து விடமுடியுமா?'' என்ற கேள்விக்கு போலீசு மட்டுமின்றி, நானாவதி கமிசனும் பதில் அளிக்க மறுத்து விட்டது.


 முசுலீம்களால் கிழிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் கூண்டு, முக்கியமான சாட்சியமாகப் பாதுகாக்கப்படவில்லை. மாறாக, அக்கூண்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு விட்டது. தங்களது "கண்டுபிடிப்பில்'' யாரும் ஓட்டையைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, இந்த முக்கியமான சாட்சி அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம்.


 குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது கூடுதல் போலீசு இயக்குனராகப் பணியாற்றிய ஆர்.பி.சிறீகுமார், இந்த இனப்படுகொலையில் மோடியும், அவரது அமைச்சரவையும் போலீசு துறையும் வெளிப்படையாகப் பங்கெடுத்துக் கொண்டதைத் தக்க ஆதாரங்களுடன் நானாவதி கமிசனிடம் கொடுத்திருக்கிறார். "காலனிய காலத்தில் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையை விசாரித்த வெள்ளை நீதிபதி ஹண்டர் கூட, நாணயத்தோடு வெள்ளை அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் எனத் தீர்ப்புக் கூறினார். சுதந்திரமான, ஜனநாயகமான, மதச்சார்பற்ற இந்தியாவில் நடத்தப்பட்ட இவ்விசாரணையில் நாணயத்தை அறவே காணமுடியவில்லை'' என ஒப்பிட்டு, இத்தீர்ப்பை எள்ளி நகையாடியிருக்கிறார், அவர்.
 இக்கமிசனின் தீர்ப்பு மட்டுமல்ல, இக்கமிசனில் அமர்ந்திருக்கும் இரண்டு நீதிபதிகளின் அறிவு நாணயம் கூட கேள்விக்குரியதாகத்தான் இருக்கிறது. இக்கமிசனின் இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான அக்சய் மேத்தாதான், நரோடா பாட்டியாவில் நடந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்கு, நரேந்திர மோடியின் இரகசிய உத்தரவின் பேரில் பிணை வழங்கியவர். இந்த உண்மையை, ""தெகல்கா'' வார இதழ் நடத்திய இரகசியப் புலனாய்வில் பாபு பஜ்ரங்கியே போட்டு உடைத்து விட்டான்.


 ஜி.டி. நானாவதி, "உண்மை''யைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்திக் கொண்டிருந்தபொழுது, அவரது மகன் மௌலிக் நானாவதி உச்சநீதி மன்றத்தின் குஜராத் அரசின் வழக்குரைஞராக நியமனம் பெற்றார். இதைக் கையூட்டு எனச் சொல்ல முடியாதா? அதனால்தான் பாதிக்கப்பட்ட முசுலீம்களுள் பெரும்பாலோர் இக்கமிசனின் முன் சாட்சியம் அளிப்பதையே தவிர்த்து விட்டனர். இப்படிப்பட்ட மோடியின் விசுவாசிகளிடமிருந்து, மோடிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் தீர்ப்பைத் தவிர, வேறெதை எதிர்பார்க்க முடியும்?


· பாலன்