செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர்.  மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

 

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.

 

 

இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள்  நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ஒருவர் கொல்லப்படும் வரை தொடரும். அதுவரை நாடகங்களும் தொடரும். இவை அனைத்தும், தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறுகின்றது. 

 

கருணா புலியை விட்டு விலகிய பின், இலங்கை அரசின் கைக்கூலியாக மாறினான். இருந்தபோதும் மக்கள் விரோதியாக புலிகளில் இருந்தாலும், புலிகளின் கொலைக் கும்பலுக்கு முன்னால் சுதந்திரமாக நடமாட முடியவி;ல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு பிள்ளையான், கருணாவின் முதுகில் குத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினான். கருணாவின் விசுவாசிகளைக் கொன்றான்.

 

பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏற்ற சதிகாரனாக, சூழ்ச்சிக்காரனாக செயல்பட்டான். இலங்கை அரசுக்கு தேவைப்பட்ட கொலை கொள்ளைகளை குத்தகைக்கு எடுத்து, தலைமையை நிறுவிக்கொண்டான். அவனுடன் சேர்ந்து கொலை கொள்ளைகளைச் செய்தவர்கள் புடை சூழவே தலைவனானான். இதில் இருந்து சூழல் காரணமாக ஒதுங்கியிருந்த கருணா, ஒரங்கட்டப்பட்டான். யார் நாய்களுக்கு எலும்பைப் போட்டனரோ, அவன் அவர்களுக்கு தலைவனானான்.

 

இதற்கு கிழக்கு அரசியல் சாயம் பூசிய புலம்பெயர் பொறுக்கிகள், அவனின் அரசியல் ஆலோசகரானார்கள். இப்படி பிள்ளையான் கதை தொடங்கியது. கிழக்கு ஜனநாயகத்தின் செங்கோலாக்கப்பட்டான்.   

 

கிழக்கில் படுகொலைகள் மூலம் ஒரு சுத்திகரிப்பை செய்துமுடித்த கைக்கூலிக்கு, வெள்ளை வேட்டி கட்டி அரசியல்வாதியாக்கினர். வெள்ளைவேட்டியும் தேவைக்கு ஏற்ப கோட்டும் ரையும் கட்டி பவனிவரும் இந்தக் கைக்கூலி, கறைபடியா வேஷத்தை போட்டவிடு முனைகின்றான். புலம்பெயர் புலியல்லாத கும்பலின் ஒருபகுதி ஆலவட்டம் பிடித்து, பஜனைப்பாட்டு பாட பிள்ளையான் ஊர் உலகமெங்கும் பவனி வருகின்றான். 

 

பாவம் கருணா புலிக்கு பயந்து கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தான். லண்டனுக்கு அனுப்பப்பட்டு, அங்கு வைத்து காட்டிக் கொடுக்கப்பட்டான். இப்படி பிள்ளையான் அதிகாரம் இந்த காட்டிக் கொடுப்பு மூலம் நிறுவப்பட்டது.

 

அங்கு சிறையில் இருந்து மீண்ட இந்த புலிக் கொலைகாரன், கிழக்கில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட மீண்டும் இலங்கை அரசில் காலில் வீழ்ந்தான். இதன் மூலம் பாராளுமன்றம் சென்றான். கொலைகாரர்கள் சட்ட அந்தஸ்து பெற்று பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே, ஆடுகளத்தில் இறங்கியுள்ளனர்.  பிள்ளையானை விட அதிகமான கைக்கூலி நான் தான் என்று காட்டிக்கொண்டு, இலங்கை அரசுடன் சேர்ந்து பிள்ளையானைக் கவிட்டுப் போட முனைகின்றான்.

 

தமிழ் (கிழக்கு) மக்களின் பெயரில் எலும்புக்காக கடிபடுகிறார்கள்;. அதேநேரம் மக்களை இந்த நாய்கள், விரட்டிவிரட்டிக் குதறுகின்றது.   

 

இந் நாடகம் தமிழ்மக்களின் பெயரில் யாரேனும் இவர்களில் ஒருவர் மற்றவரை அழித்தொழிக்கும் வரை தொடரும்.


பி.இரயாகரன்

27.10.08