இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்)அனைத்து இடுகைகளையும் வாசிக்க


நீரை அடிப்படையாக கொண்ட நோய்கள் பல இருப்பதும் அதில் சிஷ்டோசோமியாசிஸ் என்ற ஒரு வகை நோய் இருப்பதையும் அது எப்படி தாக்குகிறது என்பதையும் பார்த்தோம். அதே போல் அந்த நோய் தமிழகத்தில் பரவலாக கிடையாது என்பதையும், அதற்கு பதில் நரம்பு சிலந்தி என்ற ஒரு நோய் இங்கு இருந்ததையும், தற்போது நரம்பு சிலந்தி தமிழகத்தில் கிடையாது என்றும் பார்த்தோம்

நரம்பு சிலந்தி என்ற நோய் பற்றி இந்த இடுகை. ஏன் இந்த நோய் குறித்து ஒரு தனி இடுகை என்பதை இறுதியில் புரிந்து கொள்வீர்கள் முதலில் இந்த நோய் என்னவென்றே தெரியாதவர்களுக்கு சில படங்கள். 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் ஒரு புழு இருக்கும்.

சரி, அப்ப இந்த புழுவை எப்படி வெளியில் எடுப்பது. அதை ஒரு தீக்குச்சியில் (அல்லது ஏதாவது குச்சியில்) சுற்றிக்கொண்டு தினமும் சிறிது சிறிதாக எடுக்க வேண்டும்

 

 


சரி, இனி இந்த புழுவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ”படி கிணறுகள்” (step wells) அதிகம் உண்டு. நம் ஊர் போல் கயிறு வாளி எல்லாம் தேவையில்லாமல் கிணற்றில் நேரடியாக இறங்கி நீரை எடுக்க வேண்டியது தான்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் !!

இந்த புழுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிணற்றினுள் இறங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அவரது காலில் இருக்கும் அந்த புழு சிறிது எட்டிப்பார்த்து நீரினுள் லார்வாக்களை விட்டு விடுகிறது. (மற்ற நேரங்களில் லார்வாக்களை வெளியிடாது. மற்ற நேரங்களில் வெளியிட்டால் லார்வாக்களால் பிழைக்க முடியாது என்பதால் அதனால் பலனில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலி புழு அது !!)

அந்த லார்வாக்கள் (இவைகளை L1 லார்வாக்கள் என்று அழைக்கிறார்கள்) சைக்லாப்ஸ் (cyclops) என்னும் சிறிய உயிரினங்களுக்குள் புகுந்து ஒரு 15 நாட்கள் உள்ளே இருந்து வளர்ச்சி பெறுகின்றன. (வளர்ச்சி பெற்ற பின் அவை L3 லார்வாக்கள் ஆகிவிடுகின்றன)

இப்படி இருக்கையில் அதே நீர்நிலைக்கு ஒருவர் வருகிறார். அங்கிருந்து நீரை எடுத்து செல்கிறார். அதை காய்ச்சாமல், வடிகட்டாமல் அப்படியே குடிக்கிறார். சைக்ளாப்ஸும் (அதனுள் இருக்கும் லார்வாவும்) அவரின் வயிற்றிற்கும் செல்கின்றன. சைக்லாப்ஸ் ஜீரணமாகி விடுகிறது. அதனுள் இருக்கும் L3 லார்வா வெளிவருகிறது இரைப்பையின் சுவற்றை துளைத்து சென்று உடலினுள் புகுந்து தோலுக்கு அடியில் வந்து விடுகிறது


9 முதல் 12 மாதங்களில் அவை புழுக்களாகிவிடுகின்றன. அதன் பிறகு இந்த நபர் நீரில் காலை வைத்தால் உடன் L1 லார்வாக்களை வெளியிட்டு, அவை L3
லார்வாக்கள் ஆகி, அந்த நீரை ஒருவர் வடிகட்டாமல் குடித்து அவருடம்பில் மீண்டும் புழுவாக வேண்டியது தான்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்த இந்த நோய் இன்று கிடையவே கிடையாது. இதிலென்ன, ஒரு காலத்தில் பரவலாக இருந்த பெரியம்மையும், போலியோவும் கூடத்தான் இன்று கிடையாது. டெட்டெனஸ், கக்குவான் இருமல் டிப்தீரியா போன்றவையும் வெகுவாக குறைந்து விட்டன என்று நீங்கள் கூறலாம்.

அந்த நோய்களை எல்லாம் நாம் தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்தி பின்னர் காணாமல் ஆக்கியது தடுப்பூசி மூலம் அல்ல. பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே

நோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ ஊசியோ, மாத்திரையோ இல்லாமல் மக்களின் நடத்தை மாற்றம் மூலம் மட்டுமே ”அழிக்க”ப்பட்ட ஒரு நோய் நரம்பு சிலந்திதான்..

ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்.

 

http://www.payanangal.in/2008/10/17-guinea-worm-water-based-disease.html