புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

   

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

 கருணாநிதி முதல் கழிசடை சினிமாக் கும்பல் வரை போடுகின்ற கூச்சல், தமிழ்மக்களின் அடிப்படையான உரிமைகள் சார்ந்ததல்ல. அது அவர்களின் சொந்த நலன் சார்ந்தது. அடுத்த தேர்தலை வெல்லுதல், யாருடன் அரசியல் கூட்டு என்ற உள்ளடகத்தில், அறிக்கைகள் கருத்துகள், பிளவுகள், கைதுகள் என்று எல்லாம் அரங்கேறுகின்றது.

 

இவை எவையும், மனித துயரத்தையும் அவலத்தையும் சந்திக்கின்ற ஈழத் தமிழ்மக்களின் பிரச்சனையை தீர்க்காது. இவை ஈழத்தமிழரின் நலனுக்கு எதிரான அரசியல் நலனில் இருந்து தான் அவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது.  ஈழத்தமிழ் மக்கள் பேரினவாதத்தின் கோரத்தையும், புலிகளின் கொடுமையையும் ஒரேநேரத்தில் ஓரே இடத்தில் அனுபவிக்கின்றனர். யாருமற்ற அனாதைகளாக, தம் மீதான வன்முறைக்குள் அவர்கள் அனுதினமும் மரணித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த மரணம் உணர்வாலும், உடலாலும் நிகழ்கின்றது.  

  

இந்த மக்களின் பெயரில்தான் அனைத்து மனிதவிரோதப் பொறுக்கிகளும் கூச்சலையும்;, கூத்துகளையும் அரங்கேறுகின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்தும், அவர்களின் அடிப்படையான வாழ்வியல் உரிமைகளை மறுத்தும் நிற்கும் புலிகளும், பேரினவாதிகளும், இந்திய விஸ்தரிப்புவாதிகளும், ஆடுகளத்தில் துப்பாக்கிகளைக் கொண்டு மக்களை ஈவிரக்கமின்றி அனாதைகளாக்கியுள்ளனர்.

 

ஒரு வாய் உணவை வழங்குவதையே தமிழ் உணர்வாகவும், தமிழ் தேசியமாகவும் காட்டி பிழைப்பதையே, ஊடகவியல் நஞ்சாக்கித் திணிக்கின்றது. புலிகள் முதல் இந்திய ஊடகவியல் வரை, பச்சையாகவே தமிழ்மக்களுக்கு எதிராக, அவர்களின் உரிமைக்கு எதிராக  திட்டமிட்டு செயல்படுகின்றது.   

  

தமிழ் தேசியம் புலித்தேசியமாகிய போது, மனிதஅவலமே அதன் இருப்புக்கு நெம்புகோலாகியது .


 
தமிழ் மக்களின் அவலம் எந்தளவுக்கு அதிகரிக்கின்றதோ, அதைக்கொண்டு தான் புலிகள் தம் இருப்பை தக்கவைக்கின்றனர். இந்த உத்தியைத் தவிர, வேறு எந்த சொந்த அரசியலும் புலிகளிடம் கிடையாது. தமிழனின் மனித அவலம் தான், இருப்பிற்கான புலியின் அரசியலாகிவிட்டது. இதனால் மனித அவலம் பெருகும் வண்ணம், புலியின் சொந்த நடத்தைகள் திட்டமிடப்படுகின்றது.

 

புலிக்கும் தமிழ் மக்களுக்குமான உறவு ஜனநாயக வழிப்பட்டவையல்ல. தமிழ் மக்களின் தேசிய உரிமைகள் சார்ந்தவையல்ல. மனிதனின் உரிமைகளை மறுப்பது தான் புலியிசம்.  புலிகளும் தமிழ் மக்களுக்குமான உறவு என்பது, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மறுப்பதுடன் சாதாரண ஜனநாயக உரிமையையும் மறுப்பதாகவும் உள்ளது.

 

இதுதான் தமிழ் மக்களின் அவலத்தை கொடூரமாக்குகின்றது. பேரினவாத ஒடுக்குமுறையை தமிழ்மக்கள் எதிர்கொள்ள முடியாத வகையில், அவர்களை அனாதைகளாக்குகின்றது. அவர்களை அடிமைகளாக்குகின்றது. 

 

புலிகளைப் பொறுத்தவரை தம் இருப்பு சார்ந்து எல்லைக்குள் இதை தக்க வைக்கின்றனர். தமிழனின் அவலம் தான், புலிகளின் ராஜதந்திர நகர்வாகின்றது.

 

இதற்கு அப்பால் தமிழ்மக்களின் மகிழ்ச்;சிக்காக, அவர்களின் உரிமைக்காக புலிகள் போராடவில்லை. அதுபோல் புலிகள் தமிழ்மக்களுடன் ஒரு ஜனநாயக உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு யாரும் தடையாகவுமில்லை. ஆனால் இதுவல்ல, புலிகளின் தாகம்.

 

புலிகளின் தாகமோ, பேரினவாதத்தை விட மிகமோசமாக தமிழ்மக்களை அடிமைப்படுத்தி வைதிருப்பதுதான். இதைத்தான் அவர்கள் தமிழ் தேசியம் என்கின்றனர். இதைத்தான் தமிழரின் உரிமை என்கின்றனர்.

 

இதுவல்லாத மக்களின் உரிமைக்காக, யார் தான்? எப்படி? எங்கே? குரல் கொடுக்கின்றனர். தமிழ் மக்களின் உரிமைக்காக, அதை மறுக்கின்ற பேரினவாதத்தை மட்டுமின்றி  புலித்தேசியத்தை எதிர்த்து போராடுவது தான் காலத்தின் அவசர தேவையாகும். இது மட்டும்தான், தமிழ் மக்களின் உரிமைக்கானதாக அமையும்.   

 

பி.இரயாகரன்
26.10.2008