"ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது' என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்ற மாதம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: "பர்தாவில் ஷகீலா!'

 

···


2003ஆம் ஆண்டு பாளையங்கோட்டை கலைவாணி திரையரங்கில் ஓடிய "இளமைக் கொண்டாட்டம்' என்ற திரைப்படத்தில் சென்சார் செய்யாத காட்சிகளில் ஷகீலா நடித்துள்ளார் என்பதற்காக அவர் மீதும், அவருடன் நடித்துள்ள நடிகர் வினோத் மீதும், திரையரங்க நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் தணிக்கை செய்யப்படாத படத்தைத் திரையிடுதல் மற்றும் ஆபாசமாக நடித்துக் கூட்டம் கூட்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடைபெற்று வருகின்றது.


இந்த வழக்கின் வாய்தாவுக்காக நெல்லை வந்த ஷகீலா பர்தாவில் மறைந்து கொண்டு வந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தையே மக்கள் கூட்டத்தால் நிரப்பி விட்டார். நீலத்திரையில் பார்த்த கனவுக்கன்னி கருப்புத் திரைக்குள் ஒளிந்து வந்த போதிலும், தமது கனவுக்கன்னியை நேரில் தரிசிக்கும் பரவசமான வாய்ப்பை அங்கிருந்த மக்கள் இழக்க விரும்பவில்லை. ஷகீலாவின் வாய்தா என்றைக்கு என்ற தேதியை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கவர் பண்ண காமிராவோடு நிருபர்களும் வந்து விட்டார்கள்.
வழக்கை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார் நீதிபதி. தேதியை ஷகீலா குறித்துக் கொண்டாரோ இல்லையோ, நிருபர்களும் ரசிக மகாஜனங்களும் நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்கள்.


நியூஸ் இனிமேல்தான் ஆரம்பிக்கிறது. "பர்தாவில் ஷகீலா' என்ற சேதியைக் கேள்விப்பட்டு கொதிப்புற்றுப் போன தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) நெல்லை மாவட்டத் தலைவர் பாளை ரஃபீக் பத்திரிகைகளிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:


""அன்றைக்கு வெள்ளிக்கிழமை, நான் தொழுகைக்கு கிளம்பிய நேரம்தான் நடிகை ஷகீலா பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வந்திருப்பதாக போன் வந்தது. நான் அன்றைக்கு தொழுகைக்கு மட்டும் போகவில்லை என்றால் அவரை செருப்பால் அடித்து கோர்ட்டில் இருந்து ஓடஓட விரட்டியிருப்பேன். பர்தா என்பது முஸ்லீம் பெண்களின் கண்ணியம், கலாச்சாரத்துக்குரிய ஆடை. அந்த ஆடையை இப்படிப்பட்ட ஒரு பெண்மணி தன்னைப் பிறர் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்து வருவதென்பது முஸ்லீம்களின் கோபத்தைக் கிளறியிருக்கின்றது. திரையில் பலர் கண்முன்பு பச்சை கொச்சையாக நடிக்கும் ஒரு நடிகை, நீதிமன்றத்திற்கு மட்டும் யோக்கியமாய் பர்தா அணிந்து வருவது என்ன நியாயம்? அடுத்தமுறை இதே பாளை கோர்ட்டிற்கு ஆஜராக வரும்போது அவருக்குப் பாடம் கற்பிப்போம். எங்கள் மகளிரணிப் பெண்கள் திரண்டு வந்து ஷகீலாவிற்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். அது என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்''


இதற்கு ஷகீலாவின் பதில் வருமாறு:


""நான் உருது பேசும் ஒரு முஸ்லீம் பெண். நான் பர்தா அணிந்து வருவதில் ஒன்றும் தப்பில்லையே. வறுமை காரணமாகத்தான் சினிமாவில் நடிக்கப் போனேன். கிளாமராக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை. படமெடுக்கும்போது டீசண்டாகத்தான் எடுப்பார்கள். படத்தை தியேட்டரில் ஓட்டும்போது இடையில் பிட்டை ஓட்டி விடுவார்கள். அதனால்தான் 2002க்குப் பிறகு மலையாளப் படங்களில் நடிப்பதையே விட்டு விட்டேன். நான் பர்தா அணிவது தப்பு என்று சொல்பவர்கள், நான் பணத்துக்காகக் கஷ்டப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்?''
இருதரப்பு வாதங்களும் முடிந்து விட்டன. அடுத்த வாய்தாவுக்காக ஷகீலா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னாலேயே இதற்கு தீர்ப்பு என்ன என்று கண்டுபிடித்தாக வேண்டுமே! வழக்கிற்கு உள்ளே போவோம்.


""தேவடியாளுக்கு பர்தா எதுக்கு?'' என்பது ரபீக் எழுப்பும் முதல் பிரச்சினை. "கண்ணியமான முசுலீம் பெண்கள் அணியும் ஆடையான பர்தாவை கண்ணியமற்ற ஷகீலா அணிந்து வருவதால், பர்தா போட்ட பெண்களின் கண்ணியம் காற்றில் பறந்து விடும்' என்பது இரண்டாவது பிரச்சினை. "இது முசுலீம் பெண்களின் உடை என்பதால் ஷகீலாவின் நடவடிக்கை முசுலீம்களின் மத உணர்வை புண்படுத்தியிருக்கின்றது' என்பது மூன்றாவது பிரச்சினை.


ரபீக்கின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சமீபகாலமாக பலான வழக்குகளில் கைதாகும் மேட்டுக்குடிப் பெண்கள், காமெராவிலிருந்து தப்பிக்கத் தோதான கோர்ட் சீன் டிரஸ்ஸாக பர்தாவைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இந்து மதவெறியர்களின் தாக்குதல், அரசின் அடக்குமுறை, முசுலீம் என்றாலே பயங்கரவாதி என்று ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் சித்தரிப்பு ஆகியவற்றால் குமுறிக் கொண்டிருக்கும் இசுலாமிய சமூகத்தினருக்கு, இந்த பர்தா விவகாரம் புண்ணில் உப்பு தேய்த்தது போல இருந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.


ஆனால் முசுலீம் பெண்களுடைய கண்ணியத்தின் அடையாளம் பர்தா என்ற விளக்கத்தை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆண்களின் கண்ணியமற்ற காமவெறிப் பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசம் தானே பர்தா? அப்படிப் பார்த்தால் அதனை ஆண்களுடைய பொறுக்கித்தனத்தின் அடையாளம் என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்!


ஷகீலாவை விடுங்கள். எவ்வளவு "கண்ணியமான' முசுலீம் பெண்ணாக இருந்தாலும் பர்தா போடவில்லை என்றால் "அவளும் கண்ணியமற்றவள்தான்' என்பதுதானே மதவாதிகள் வழங்கும் தீர்ப்பு! பெண்களின் கண்ணியம், ஒழுக்கம், கற்பு போன்ற எல்லாவற்றையும் கண்காணிக்கும் அதிகாரத்தை ஆண்கள் எடுத்துக் கொள்வதை அசிங்கம் என்பதா அயோக்கியத்தனம் என்பதா? ஷகீலா பிரச்சினை இருக்கட்டும். பர்தா போடாத இசுலாமியப் பெண்களைக் கொலை செய்த தலிபான்கள் கூட, இசுலாமியப் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் கொலையாகத்தானே அதனைச் சித்தரித்துக் கொண்டார்கள்? சென்ற ஆண்டு கோவையிலும் மேலப்பாளையத்திலும் "நடத்தை சரியில்லாதவர்கள்' என்று குற்றம்சாட்டி மூன்று முசுலீம் பெண்களைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்கள் சில முசுலீம் அடிப்படைவாதிகள். பாகிஸ்தானிலோ, இத்தகைய சம்பவங்கள் கணக்கில்லாமல் நடக்கின்றன. கேட்டால் "எம் பொண்டாட்டிய நான் அடிப்பேன். நீ யார்டா கேக்க?' என்ற பாணியில் "என் மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான் கொல்லுவேன். நீ யார் கேக்க?' என்று பதில் சொல்லக் கூடும்.


கேட்பவன் பாதிக்கப்பட்டவனாகவே இருந்தால்? பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சாரா என்ற ஏழைச்சிறுமி, குவைத்துக்கு வீட்டு வேலை செய்யப் போனாள். வீட்டுக்கார ஷேக் அந்தச் சிறுமியைக் கசக்கி நாசமாக்கினான். பொறுக்க முடியாத சாரா ஷேக்கை குத்திக் கொன்றாள். ஏன் கொலை நடந்தது என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டது. இருந்தாலும் தீர்ப்பு என்ன? சாராவுக்கு தூக்கு தண்டனை! இந்த அநீதியை எதிர்த்து பிலிப்பைன்சில் போராட்டமெல்லாம் நடந்த பிறகு அது ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டது. கண்ணியத்துக்கு ஆயுள் தண்டனை!


""ஷகீலா பர்தா போட்டுக் கொண்டு வந்தால் விரட்டி விரட்டி அடிப்போம்' என்கிறார் ரபீக். இதே நெல்லையில் ஷகீலா படம் பார்க்கப் போன முசுலீம் ஆண்களை இவர்கள் எப்போதாவது விரட்டி அடித்ததுண்டா? ஆபாசம் "பிட்' படத்தில் மட்டுமா இருக்கின்றது. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற அதைவிடக் கேவலமான படங்களை முசுலீம் ஆண்கள் பார்ப்பதில்லையா? முசுலீம்கள் யார் வீட்டிலும் டி.வி இல்லையா? யாருமே "மானாட மயிலாட' பார்ப்பதில்லையா? அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? கேட்டால் "சொல்லத்தான் முடியும். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்?' என்பார்கள். அந்த நியாயம் பெண்களுக்கு மட்டும் பொருந்தாது போலும்!


ஒரு பெண் அரை அம்மண நடனம் ஆடி, அதனைப் பார்க்கும் ஆண்களுக்கு அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஏனென்றால் ஆண்கள் இறைவனாலேயே "ஜொள்ளுப் பார்ட்டிகளாக' படைக்கப் பட்டவர்கள். ஆனபடியினாலே, அவர்கள் ஜொள்ளு விடும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க வேண்டியது, (அதாவது பர்தா அணிய வேண்டியது) பெண்களின் கடமை. மீறினால் தண்டனை!


"ஷகீலா பர்தா அணிந்து வரக்கூடாது' என்ற கோரிக்கைக்கு முசுலீம் பெண்களையெல்லாம் திரட்ட வேண்டியதில்லை. விசயத்தைச் சொன்னால் போதும்! சர்வ மதங்களைச் சேர்ந்த ஆண் ரசிகர்ளும் உற்சாகமாகத் திரண்டு வந்து ஷகீலாவின் பர்தாவைக் கிழித்து எறிந்து விடுவார்கள். அவ்வளவு ஏன், இந்த விசயத்தில் மட்டும் இந்து முன்னணி ஆட்கள் கூட "மத நல்லிணக்க உணர்வுடன்' ஆதரவும் கொடுப்பார்கள்.


இனி ஷகீலா தரப்பு வாதத்துக்கு வருவோம். பிட் படங்களில் நடித்ததற்கு ஷகீலா சொல்லும் நொண்டிச் சமாதானங்களான "வறுமை', "எனக்குத் தெரியவே தெரியாது' என்ற பொய்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையே இல்லை. அந்தம்மாளின் வாதத்தை ஒரே பாயிண்டில் சுருக்கி விடலாம். "தேவையின்னா நான் பர்தா போடுவேன். தேவையில்லைன்னா அவுத்தும் போடுவேன். இரண்டுமே என்னுடைய ஜனநாயக உரிமைகள்.'


அப்படியா? ஜனநாயக உரிமை என்பதைப் பலரும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் வீட்டின் குளியலறைக்குள் அவர் அவுத்துப் போடுவது அவருடைய ஜனநாயக உரிமை. லட்சக்கணக்கான மக்கள் முன் அவுத்துப் போடுவது எதற்காக? சம்பாதிப்பதற்காக என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்.


அது ஆண்களின் காமவெறியைக் காசாக்கும் சம்பாத்தியம். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்படும் அளவுக்கு ஷகீலா படம் வசூலைக் குவித்திருக்கின்றது. இத்தகைய படங்கள் ஆண்களின் "மொழியில்' எடுக்கப்படுவதால், டப்பிங்கே தேவைப்படாமல் எல்லா மாநிலங்களிலும் ஓடியிருக்கின்றது. ஷகீலாவின் படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? "இளைஞர்களைக் கெடுத்து விட்டது' என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். உண்மையில் அது பெண்களைத்தான் கெடுத்திருக்கின்றது.


பெண்களின் அங்கங்களை ரைட் ராயலாக மேயும் இளைஞர்களின் பார்வை, அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும் கொச்சையான கமெண்டுகள், பேருந்தின் உரசல்கள், மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள், விசுவாசிகளை வதைக்கும் பாதிரிகள், சிறுமிகளைக் குதறும் அண்டை வீட்டு அங்கிள்கள், பெண்களை வலையில் வீழ்த்த வேண்டிய பட்சிகளாகவும், ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய கறித்துண்டுகளாகவும் கருதும் மாணவர்கள்.. இப்படிப் பலவிதமான மிருகங்களை உருவாக்கி வளர்த்து விட்டிருப்பதில் ஷகீலா படங்களின் பங்கு மகத்தானது. இரைக்கு அலையும் நாயைப் போலவும், கூச்ச நாச்சமற்ற மிருகங்களைப் போலவும் நெல்லை கோர்ட்டில் ஷகீலாவுக்கு கூடிய கூட்டமே, அவரது குற்றத்தின் பரிமாணத்தை விளக்கப் போதுமானது.


ஷகீலாவின் மீது ஏதோ ஒரு போண்டா கேஸ் போடப்பட்டிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய படங்கள் எல்லாம் சென்சார் போர்டு முத்திரையோடுதானே வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன? அவை அனுமதிக்கப்பட்டது ஏன்? அரசியல் சட்டத்தின் மொழியில் சொல்வதென்றால் அது அந்தப் படத்தை இயக்கிய படைப்பாளியின் கருத்துரிமை; ஷகீலாவுடைய கருத்துரிமை. Right to free expression!


அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் என்ன "கருத்தை' சொன்னார் என்பது அன்று கோர்ட்டில் கூடிய ரசிகர்களுக்குத் தெரியும். அந்தக் "கருத்தை' காணத்தான் அவர்கள் அங்கே ஓடோடி வந்தார்கள். எனினும் "தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதோ பர்தாவால் மறைப்பதோ தனது தனிநபர் உரிமை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது' என்றும் கூறுகின்றார் ஷகீலா.


அந்தப் பக்கம் ரபீக்கின் மத உரிமை. இந்தப் பக்கம் ஷகீலாவின் தனிநபர் உரிமை. இரண்டு உரிமைகளுமே தத்தம் வழியில் ஆணாதிக்கத்தை வெறி கொண்டு ஆட வைக்கின்றன. இவற்றுக்கிடையில் நடக்கும் மோதலில் "ஷகீலாவின் பர்தா' கிழிந்து சின்னாபின்னமானாலும் ஆகாவிட்டாலும், ஒரு உரிமை ஏற்கெனவே சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது. அதன் பெயர் பெண்ணுரிமை!


வினவு ((http://vinavu.wordpress.com)

 

 

 

இணையத்திலிருந்து