அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பற்ற, சொந்த மக்களை பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்) தோற்றம் இது. "அமெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொறுங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில் எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் எழுந்துள்ள தேவையை ஒட்டி இந்த கட்டுரையை எழுதவேண்டியுள்ளது.
ஒரு வீடு வாங்குவது தொடர்பாக நமது நாடுகளுக்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். நமது நாடுகளில் (பணக்காரரை விட்டுவிட்டால்) ஓரளவு நல்ல மாத வருமானம் எடுக்கும் நடுத்தர மக்கள், சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு பணத்துடன், தமது சொத்துகள் எதையாவது அடைமானம் வைத்து வங்கி கொடுக்கும் கடனையும் வைத்து வாங்குவார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் தகைமையற்ற தொழிலாளிக்கும் கிடைக்கும் சம்பளம் சராசரி ஆயிரம் டாலர் ஆகில், அவர் ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வீட்டை வாங்குவாராகில், அவர் அதற்காக பெற்றுக்கொள்ளும் கடனை 20 அல்லது 30 வருடஙகளில் கட்டி முடிப்பார் என்ற எதிர்பார்ப்பில், வங்கிகள் Mortgage(அடமானம்) பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கின்றன. அந்தக் கடனுக்கு தகுதி பெற நிரந்தர வேலை இருப்பது அவசியம் போன்ற பிற நிபந்தனைகள் உள்ளன. நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது, மேற்குலக நாட்டு பிரசை ஒருவர் தன்னை தானே அடமானம் வைத்துக் கொள்கிறார்.
ஐரோப்பாவில் விதிகள் கடுமையாக உள்ளன. ஒரு வீட்டை வாங்கியவர், சில வருடங்களுக்கு பின்னர் விற்றால், இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காரணம், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப்பணம் முழுமையாக தமக்கு வட்டியுடன் வரவேண்டுமென நினைக்கின்றன. ஒருவேளை நிரந்தர வேலை பறிபோனால், வாங்கிய வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். கடன் வாங்கியவர் காலக்கெடுவுக்குள் இறந்தால், வீட்டுக்கடனை வங்கிகள் திரும்பப்பெற ஆயுட்கால காப்புறுதி கட்டியிருக்க வேண்டும். அல்லது அந்த வீட்டில் வசிக்கும் மனைவி பிள்ளைகள் தொடர்ந்து கட்ட வேண்டும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இந்த விதிகள் கடுமையாக இல்லை.
லண்டனில் எனக்குத் தெரிந்த சிலர், மாதம் 800 பவுன் வருமானம் எடுப்பவர்கள், வாங்கிய வீட்டிற்கு மாதம் 1000 பவுன் Mortgage கட்டுவதை பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்று கேட்டால், அங்கே சில வங்கி ஊழியர்கள் செய்யும் ஊழலால், அதாவது போலி பத்திரங்கள் தயாரித்து, வருமானத்தை கூட்டி காட்டி Mortgage எடுப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிலும் அது போன்ற நிலைமை எப்போதும் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் நிதி நெருக்கடி அதன் காரணமாக எழவில்லை. மோசடியே வங்கிகளின் அலுவலக செயல்முறையாக மாறியதன் விளைவு இது. சில வங்கி முகவர்கள் வருமானம் பற்றி எதுவும் கேட்காமலே கடன் கொடுத்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அதற்கு முன்னர் அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் பற்றி சிறிய அறிமுகம். முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டமாக, அமெரிக்காவில் வங்கிகள் அனைத்து நிறுவனங்களையும்(அது உற்பத்தி துறையாகட்டும், அல்லது சேவைத் துறையாகட்டும்) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. ஒரு கம்பெனி நடத்துவதற்காக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன்(Liquidity) மட்டும் இதற்கு காரணமல்ல. பல நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வங்கிகளே வாங்கி, பிரதிநிதிகளை கொண்டு பங்குதாரர் கூட்டத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன. அப்படித்தான் வீடு கட்டிக் கொடுக்கும் (ரியல் எஸ்டேட்) கம்பனிகளிலும் வங்கிகள் ஆளுமை கொண்டிருந்தன. அந்த அகங்காரமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானதை பின்னர் பார்ப்போம்.
அனேகமாக 2001 ம் ஆண்டிற்கு(செப்டம்பர் 11 ன் தாக்கம்?) பிறகாக, அமெரிக்க மக்கள் அதிகம் செலவளிக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பியது. பணம் ஓடித்திரிய வேண்டும் என்பது சந்தை பொருளாதார தாரக மந்திரம். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு சதமும், எங்கேயோ ஒருவருக்கு வருமானமாக போய்ச்சேருகின்றது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் படி, கடன் வழங்கும் விதிகளை தளர்த்த அரசாங்கமும், வங்கிகளும் முன்வந்தன. சந்தேகத்திற்கிடமின்றி இது பலரை கடன்வாங்க வைத்திருக்கும். ஆகவே வழமைக்கு மாறாக, வருமானம் குறைந்தோரும், அல்லது எந்த வருமானமும் இல்லாதவர்களும் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் யாருக்கு என்ன லாபம்? இப்போது தான் வங்கிகளை திவாலாக்கிய மாபெரும் பங்குச்சந்தை சூதாட்டம் ஆரம்பமாகின்றது.
நமது நாடுகளில் "ரியல் எஸ்டேட் கம்பெனி" என்று அறியப்பட்ட, வீடுகளை கட்டி விற்கும் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வீடுகளை கட்டி விற்றுத்தள்ளின. Mortgage முறையின் கீழ், ஒருவர் அந்த வீட்டை வாங்கி வங்கியிடம் அடமானம் வைக்கின்றார். அதற்கு வீட்டின் மொத்த விலையை வங்கி ரியல் எஸ்டேட் கம்பெனி கையில் கொடுக்கின்றது. அடமானம் வைத்தவரோ, வீட்டின் விலையை மட்டுமல்ல, தரகர் கூலி, சட்டவாக்க கூலி, போன்றவற்றை ரொக்கமாக கடன் என்ற பெயரில் வீடு வாங்கியவரின் தலையில் கட்டிவிடுகின்றது. கடனுக்கு வரும் வட்டி தான் வங்கிகளின் மிகப்பெரிய வருமானம். வழக்கமாக வீட்டு அடமானப்(Mortgage) பங்குகளை வங்கிகள் சந்தையில் ஏலம் விடுகின்றன. அதேநேரம் சாதாரண "வீட்டு சொந்தக்காரர்" மாதாமாதம் கட்டிவரும் வட்டிப்பணத்தை ஆதாயப் பங்காக(dividend) லாபம் பார்க்கின்றன.
பங்குச்சந்தையில் ஒரு பக்கத்தில் சூதாடியே பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஊகவணிகத்தில் கில்லாடிகளான அவர்கள், வீட்டு அடமானப் பங்குகளை அதன் உண்மையான பெறுமதியை விட பலமடங்கு அதிகமாக உயர்த்தினார்கள். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது மகிழாதவர் யார் இருக்கமுடியும்? இந்த சூதாட்டத்தால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், முதலீட்டு வங்கிகள், பங்குக்க்சந்தை தரகர்கள், பங்குதாரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே பெரும் பணம் புரட்டியது. அமெரிக்காவில் இந்த அற்புதம் நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளும் அமெரிக்க அசையா சொத்துகளில்(இங்கே வீடுகள்) முதலிட்டன. அப்படி கடல்கடந்து முதலிட்டு லாபமீட்டிய பெல்ஜிய வங்கியான Fortis, நெதர்லாந்து வங்கியான ABN-Amro என்பன இன்று நெருக்கடிக்குள் சிக்கி, திவாலாகும் நிலையில் அவ்வவ் அரசாங்கங்களால் தேசியமயமாக்கப் பட்டுள்ளன.
நடந்தது என்ன? அமெரிக்க பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து, வீட்டு மனை வியாபாரம் பற்றி பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன. விதி தளர்த்தலால், எந்தவித முன்யோசனையுமின்றி சேர்க்கப்பட்ட மக்களின் தொகையை காட்டித் தான் பங்குகளின் பெறுமதி கூடியது. ஆனால் அது ஒரு கற்பனாவாத பெறுமதியாக இருந்தது. பல வருடங்களாக யாரும் அதனை பொருட்படுத்தவில்லை.(பங்குச்சந்தையில் இதெல்லாம் சகஜம்). ஆனால் கடந்த வருடம் தான் வங்கிகளை எதிர்காலம் பற்றிய பயம் கவ்விக்கொண்டது. எந்த யோசனையுமின்றி, இத்தனை கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோமே, அது மீண்டும் எமது கைக்கு வருமா? என்று எழுந்த சந்தேகம் வங்கிகளை திவாலாக்கியது. பொய், புரட்டு, மோசடி நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது. அதற்கு அவர்களே பலியாகிப் போனார்கள்.
இப்போது என்ன நடக்கிறது? குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமெரிக்க திறைசேரி அதிகாரி போல்சன் அறிவித்த 700 பில்லியன் டாலர் உதவி, தமக்கு வேண்டிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு(வீடு வாங்கி, நடுதெருவுக்கு வந்தவர்கள்) ஒரு சதம் உதவி கூட இல்லை. அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் உதவி. இறுதியில் வென்றது முதலாளித்துவம், தோற்றது மக்கள்.
பொருளாதார நெருக்கடி இப்போது தான் ஏற்படுவதல்ல. முன்னர் ஒருமுறை தென் கொரியா கார் உற்பத்தி பெருக்கத்தால், வாங்குவார் அற்று தேங்கிப்போய், அது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. அப்போது கார் கம்பெனிகளை தென்கொரிய அரசு தேசியமயமாக்குவதை தடுத்து I.M.F. (அதுவும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனம்). இன்று ஒரு சோஷலிச அரசுக்கு நிகராக, அமெரிக்க அரசாங்கம் வங்கிகளை தேசியமயமாக்கி வருகின்றது.
அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவி எதற்கு பயன்படுத்தப்படப் போகின்றது? நிச்சயமாக பங்குகளின் பெறுமதியை அதிகரிக்க வைக்குமென்பதால், பங்குதாரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம்.(இல்லாவிட்டால் தெருவுக்கு வரவேண்டியிருக்கும்). இந்த அரச திறைசேரி நிதியை ஆதாயப்பங்கு வழங்கவும், அதைவிட மேல்மட்ட மானேஜர்களின் போனஸ் கொடுக்கவும் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?
அப்பாவித்தனமாக நெருக்கடியில் சிக்கி வீடுகளை இழந்து நிரந்தர கடனாளிகளாகிய மக்களின் கண்ணீரை துடிப்பதை விட, முதலாளிகளின் செல்வம் குறையக்கூடாது என்பதிலே தான் அமெரிக்க அரசுக்கு அக்கறை.