கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள சுண்டகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி என்ற இளம்பெண். கூலி விவசாயி நடராஜ் என்பவரின் மகளான இவர் ஓசூர் வட்டம் பாகலூரை அடுத்துள்ள பெலத்தூர் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக வேலையில் சேர்க்கப்பட்டார். தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கி, கிருஷ்ணவேணியை 3 மணிநேரம் கூடத் தூங்க விடாமல், அவசர வேலை என்று மிரட்டி ஆலை நிர்வாகம் அவரைக் கசக்கிப் பிழிந்துள்ளது.

 


 

இதனால் தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, மாதவிடாய்க் கோளாறுகள் உள்ளிட்ட பல உடல் உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதை மறந்து ஓய்வு கிடைக்கின்ற 34 மணி நேரத்தில் நன்றாகத் தூங்குவதற்காக ஆலை நிர்வாகமே தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளப் பழக்கப்படுத்தியுள்ளது.

 

தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் கடின உழைப்பு, ஓய்வின்மை தூக்கமின்மை, தூக்க மாத்திரை பழக்கத்தால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி, கடந்த 6.9.08 அன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கிச் சரிந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டார்.

 

கிருஷ்ணவேணி மட்டுமல்ல; அவரைப் போல் ஏறத்தாழ 1000 இளம் பெண்கள் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வறுமையிலுள்ள கிராமப்புற இளம் பெண்கள், தரகர்கள் மூலம் பிரிமியர் மில்லில் வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு சிறிய அறைக்குள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி இவர்களை அடைத்து வைத்து ஓய்வின்றி தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குகின்றனர். ஓய்வில்லாமலும், தூக்கமின்மையாலும் இயந்திரங்களில் கைகள் சிக்கி ஊனமான பெண்களோ பல நூறு பேர். பிரிமியர் மில்லின் கொடுமை தாங்காமல் நள்ளிரவில் சுவரேறிக் குதித்து தப்பியோடிய பெண்கள் பல நூறு பேர். இக்கொத்தடிமை முறையால் கொழுத்த இலாபமடைந்துள்ள பிரிமியர் மில் நிர்வாகம், இதனாலேயே 700க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளிகளாகச் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்துள்ளது.

 

பிரிமியர் மில் மட்டுமல்ல, செஸ்லேண்டு மில், ரமாகுவாலி டெக்ஸ், ஈ.ஆர். டெக்ஸ்டைல்ஸ் முதலான பல நூற்பாலைகளிலும் இதேபோன்று ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெற்றோரிடம் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை கொடுத்துவிட்டு, 3 ஆண்டுகளுக்கு கிராமப்புற இளம் பெண்களைக் கொத்தடிமைகளாக வைத்துச் சுரண்டிக் கொழுக்கத் தமிழக அரசே பச்சைக் கொடி காட்டியுள்ளதால், முதலாளிகளின் கொள்ளையும் கொடூரமும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

 

ஓராண்டுக்கு முன் கரூரிலுள்ள ஒரு நூற்பாலையில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கப்பட்ட பல பெண்கள், அந்த ஆலையின் நிர்வாகிகள், கண்காணிப்பாளரின் பாலியல் வல்லுறவினால் எச்.ஐ.வி. எனும் எயிட்ஸ் நோய் கிருமி அவர்களது உதிரத்தில் பரவி பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல் மெதுவாகக் கசிந்து உள்ளூர் மக்களின் போராட்டத்தால் அந்த ஆலையை அரசு மூடியது. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

 

தொடரும் இக்கொடுமைகளை அம்பலப்படுத்தியும், இளம் தொழிலாளி கிருஷ்ணவேணியின் மரணத்துக்குக் காரணமான பிரிமியர் மில் முதலாளியையும் நிர்வாகிகளையும் கைது செய்து தண்டிக்கக் கோரியும், இளம்பெண்களைக் கொத்தடிமைகளாக்கும் சுமங்கலித் திட்டத்தை ரத்துச் செய்யக் கோரியும், கிருஷ்ணவேணியின் பெற்றோருக்கு அரசு சார்பில் நட்டஈடு தரக் கோரியும் துண்டுப் பிரசுரம், சுவரொட்டி மூலம் ஓசூர் வட்டாரமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி விரிவாகப் பிரச்சாரம் செய்தது. அதன் தொடர்ச்சியாக பிரிமியர் மில்லில் பணியாற்றி வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களையும், இதர நூற்பாலைத் தொழிலாளர்களையும் அணிதிரட்டி 18.9.08 அன்று மாலை பாகலூர் சர்க்கிள் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஓட்டுக் கட்சித் தொழிற்சங்கங்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்த நிலையில், இளம் தொழிலாளியின் சாவுக்குக் காரணமான கொத்தடிமைக் கொடூரத்துக்கு எதிராக வர்க்க உணர்வோடு நடந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் போராட அறைகூவி

அழைத்தது.

 

பு.ஜ. செய்தியாளர்கள், 

ஓசூர்.