வறுமை காரணமாக தனது குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அத்துயரக் கதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் சேலம் அருகே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு இளம்பெண். மூன்று குழந்தைகளும் மாண்டுபோக, அவர் மட்டும் காப்பற்றப்பட்டு வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறார்.

 


 

வறுமையின் கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது ஏதோ விதிவிலக்கான துயரச் சம்பவம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. இன்று அந்த மூன்று குழந்தைகள்; நாளை...? ஒருவரல்ல, இருவரல்ல; தமிழகத்தில் பாதிப்பேர் வறுமையில் உழலும் ஏழைகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது, உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை.

 

உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உலகளாவிய வறுமை குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளி விவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள அளவுகோலின்படி ஒரு டாலருக்கும் கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்தது. ஒரு மனிதனுக்கு உயிர் வாழத் தேவையான, குறைந்தபட்சம் 2100 கலோரிகள் சத்து தரும் உணவை வாங்குவதற்கு எவ்வளவு தொகை தேவையோ அதை அடிப்படையாக வைத்து, சராசரியாக 1.25 டாலருக்கும் (ரூ.55) குறைவான வருமானமுள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியோ சராசரியாக 1.35 டாலர் என்று வரையறுத்துள்ளது. இந்த அளவுகோலின்படி, உலகிலேயே ஏழைகள் நிறைந்த நாடு இந்தியாதான். உலகெங்கும் வறுமையில் உழலும் ஏழைகளில் 33.3% பேர் இந்தியாவில் உள்ளனர்.

 

இந்திய மக்களில் 82 கோடியே 80 லட்சம் பேரின் (ஏறத்தாழ 75.6 சதவிகிதம் பேரின்) தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இந்தியர்களில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அதாவது, இவர்களின் தினசரி வருமானம் ரூபாய் 50க்கும் கீழாக உள்ளது. 1981ஆம் ஆண்டில், 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர் என்றும், 1991 முதல் 2005ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் வறியவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில்தான், இந்தியாவில் வறுமையும் வறியவர்களும் அதிகரித்துள்ளனர்.

 

தமது ஆட்சிகளைப் பொற்கால ஆட்சிகளாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் பீற்றிக் கொள்ளும் தமிழகத்தில், 55 ரூபாய்க்கும் கீழாக வருமானமுள்ளவர் ஏறத்தாழ பாதிப்பேராக உள்ளனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு, சமூகநலத் திட்டங்கள் புறக்கணிப்பு முதலானவற்றால் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. தொழில் வளர்ச்சி 6 சதவீதத்தையும் தாண்டி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் நிலையே இதுதான் என்றால், இதர பின்தங்கிய மாநிலங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் அனைத்துலக குறியீட்டு எண் பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் மிகவும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பட்டினிச் சாவுகள் தொடரும் எத்தியோப்பியா, இந்தியாவை விட மேலான நிலையில் உள்ளது.

 

இந்தியாவில் 60 சதவிகித குழந்தைகள் வறுமையாலும் சத்துணவின்மையாலும் மாண்டு வருவதாக யுனிசெஃப் நிறுவனம் கூறுகிறது. தமிழகத்தில் வயதுக்கேற்ற எடை இல்லாமல் 33 சதவிகிதம் குழந்தைகளும் இரத்த சோகையால் 73 சதவிகிதக் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலைஆகஸ்ட் மாதங்களில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் மாவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த 24 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் அடுத்தடுத்து மாண்டு போயுள்ளன. தேசிய ஊட்டச் சத்து திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டதன் கோரமான விளைவுதான் இது.

 

மருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவாகவும், மருந்து விலைகள் தாறுமாறாக உயர்ந்ததன் விளைவாகவும் ஏழைகளால் மருத்துவ வசதியைப் பெறவே முடிவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் மருந்து விலைகள் அதிகரித்ததன் விளைவாக 16 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே போயுள்ளனர்; 43 சதவிகித மக்கள் நிரந்தரக் கடனாளியாகியுள்ளனர்.

 

தமிழகத்தில் விவசாயக் கடன் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி; விவசாயக் கடனுக்கான வட்டி 7 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைப்பு என்றெல்லாம் திட்டக் குழு அதிகாரிகள் அறிவித்தாலும், இதன் பலன்கள் அனைத்தும் பணக்கார விவசாயிகளுக்குத்தான் போய்ச் சேர்ந்துள்ளது. இடுபொருட்களின் விலையேற்றம், உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை, கந்துவட்டிச் சுமை முதலானவற்றால் தமிழக விவசாயிகள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

 

வறுமைப் படுகுழியில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தள்ளப்பட்டுள்ள அதேநேரத்தில், மேட்டுக்குடியினருக்கான ஆடம்பரப் பொருட்களின் சந்தை 35% விரிவடைந்திருக்கிறது. இந்தியாவின் 5 பெரும் நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சராசரி வருமானம் 1.35 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளிகளின் வருமானத்தைவிட இது 20,000 மடங்கு அதிகம். இதை விவசாயக் கூலித் தொழிலாளிகளின் வருமானத்தோடு ஒப்பிட்டால் 32,000 மடங்கு அதிகம். நாட்டிலுள்ள 10 சதவிகிதப் பணக்காரர்கள் 52 சதவிகிதச் சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கும்போது அடிமட்டத்திலுள்ள 10 சதவிகித ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.2 சதவிகிதமாகச் சுருங்கி விட்டது. இந்தியா, பஞ்சைப் பராரிகளின் நாடு மட்டுமல்ல; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோடீசுவரர்களையும் கொண்ட நாடு என்பது வேதனை கலந்த உண்மை.

 

இந்த உண்மையை உலக வங்கியே தற்போதைய புள்ளிவிவர அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. ""வறுமை ஒழிப்புத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்திய போதிலும் பல ஏழை நாடுகளில் உலக வங்கியின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. வளர்ச்சிக்கும் விநியோகத்துக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது'' என்று அந்த அறிக்கை அங்கலாய்க்கிறது.

 

ஆட்சியாளர்களின் எஜமானராகிய உலக வங்கியே உண்மையைச் சொன்னாலும், ஆட்சியாளர்கள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ""இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டுத்திட்டாக எடுக்கப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் உலகவங்கி இந்த அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதை வைத்து தமிழகத்தை பஞ்சைப் பராரிகளின் மாநிலம் என்று முடிவு செய்வது தவறானது'' என்று அவர்கள் வேறு சில புள்ளிவிவர சதவிகிதக் கணக்கு காட்டுகின்றனர். ஆனால், உண்மைகளை உரசிப் பார்க்க புள்ளிவிவரங்கள் அவசியமில்லை. நாட்டு மக்களின் யதார்த்த வாழ்க்கை நிலைமைகளே வறுமையின் கோரத்தை உணர்த்தி விடுகின்றன. தமிழகம் அறிவிக்கப்படாத கஞ்சித் தொட்டியாக மாறியிருப்பதே இதற்குச் சான்று கூறப் போதுமானது.

 

கடந்த ஜூலையில், தமிழக அரசின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி 12 கோடி டாலர் (ஏறத்தாழ 528 கோடி ரூபாய்) கடனாகக் கொடுத்துள்ளது. இதற்கு புதுவாழ்வுத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டுதான் தற்போது ஒரு ரூபாய்க்கு அரிசி தரும் திட்டத்தைக் கவர்ச்சிகரமாக அறிவித்து தி.மு.க. அரசு ஆரவாரம் செய்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து மீட்க, உலக வங்கி நிதியைக் கொண்டு ஒரு ரூபாய் அரிசி திட்டத்தின் மூலம் அறிவிக்கப்படாத கஞ்சித் தொட்டியை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.

 

இக்கசப்பான உண்மைகளை ஆட்சியாளர்கள் மூடி மறைக்கலாம். ஆனால், பசித்த வயிறுகள் அமைதியாக இருக்கப் போவதில்லை.

· கவி