• தமிழ்ப்பதிவுகள், உலகம்

விஸ்ராவும், குப்பையும்கோடீஸ்வரர் பட்டியலில் உலகத்தில்

முதலாவது இடத்தில் இருக்கும் பில் கேற்ஸ் உலகிற்கு பெருமையுடன் வழங்கும் அடுத்த தயாரிப்பு விஸ்ரா. செய்திகளிலும் விஸ்ரா வந்த செய்தி முக்கிய செய்தியாகிவிட்டது. கணணிச் சஞ்சிகைகள் விஸ்ராவை “ஸ்பீற்றாக்க 10 வழிகள்” எழுத ஆரம்பித்து விட்டன. விஸ்ராவின் இன்னொரு சிறப்பு பில் கேற்ஸ் இதனை அமெரிக்காவின் உளவுப் பிரிவுகளில்ஒன்றான NSA (National Security Agency) உடன் இணைந்து தயாரித்திருப்பதாகும்.

விஸ்ராவும், குப்பையும்தடல்புடல் விளம்பரங்களுடன் வந்திருக்கும் விஸ்ராவை நிறுவுவதற்குரிய கணணிகள் புதிதாக வாங்கியதாக இருக்க வேண்டும் அல்லது ஆகக் குறைந்தது கடந்த 1 வருடத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் விஸ்ராவின் அனைத்து “மல்ரி மீடியா” சுகங்களையும் அனுபவிக்க முடியும். பழைய கணணி வைத்திருப்பவர்கள் “விண்டோஸ் எக்ஸ்பி”யுடனோ, 98உடனோ பின்தங்கியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

 

காலத்துக்குக் காலம் புதிய மென்பொருட்கள் வருவதும், அவற்றிற்கேற்ப புதிய வன்பொருட்கள் (ஹாட்வெயர்) வருவதும் ஒன்றும் புதிய விடயமில்லை. ஆளாளுக்கு கூட்டணி வைத்துக் கொண்டு அதை வாங்கினா இதையும் வாங்கிவிடு, இதை வாங்கினா அது உனக்குத் தேவைப்படும் என்று கணணிப் பயனாளிகளிடம் காசு கறந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

விஸ்ராவின் “பேஸிக் ” வெளியீட்டை தற்போது பாவனையிலிருக்கும் 50% ஆன கணணிகளிலேயே நிறுவ முடியும். “பிறீமியம்” வெளியீட்டை 6% வீதக் கணணிகளிலேயே நிறுவ முடியும் என்கிறது SoftChoice என்ற நிறுவனம்.

 

ஆக, கோடிக்கணக்கில் “பழைய” கணணிகள் குப்பைக்குப் போகின்றன. இங்கேதான் முக்கிய பிரச்சினை ஆரம்பிக்கிறது.

விஸ்ராவும், குப்பையும்கணணிகள் மட்டுமல்ல, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி இன்னும் பல இலத்திரன் கருவிகள் ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையேனும் புதிதாக வரும்போது, பழையவை கழிவாக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளை ஆபத்தற்ற முறையில் அகற்றுவதற்கோ அல்லது திரும்பப் பயன்படுத்தும் (Recycling) முறையைக் கொண்டுவருவதற்கோ இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது மட்டுமல்ல, அது குறித்தான அக்கறையையே காட்டுவதில்லை. வியாபாரிகளின் ஆதரவுடன் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் அரசுகளா இவற்றைக் கண்டுகொள்ளப் போகின்றன!

 

அப்படியானால் கோடிக் கணக்கில் கழிவாக்கப்படும் இந்த இலத்திரனியல் குப்பைகள் (E-Waste) எங்கேதான் போகின்றன? வேறெங்கே, மூன்றம் உலகநாடுகளுக்குத்தான்! வறுமையில் பிச்சையெடுக்கும் மக்களும், நாட்டை விற்பதற்கு கையேந்தி காசு வாங்கும் அரசியல்வாதிகளும் நிறைந்துள்ள நாடுகள் இங்கேதான் இருக்கின்றன. ஆசியா, ஆபிரிக்கா நாடுகளில் இந்தக் குப்பைகள் கொட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 

இவை கொட்டப்படும் இடங்களில் வாழும் மக்கள், குப்பையாக்கப்பட்ட எந்த ஒரு இலத்திரனியல் பொருளையும் தம் வாழ்நாளில் உபயோகித்தேயிராத அல்லது பார்த்தேயிருக்காத வறிய மக்கள்.

விஸ்ராவும், குப்பையும்இந்தக் குப்பையில் நிறைந்திருக்கும் lead, zinc, chromium, cadmium, mercury, copper போன்ற கொடிய நச்சுப் பொருட்கள் இந்த மக்கள் வாழும் நிலத்தில், அவர்கள் அன்றாடம் குடிக்கும் நீரில், சுவாசிக்கும் காற்றில் என்று எங்கும் பரவுகிறது. உடல் உறுப்புகள் பாதிக்கப்படுதல், திடீர் மரணம், நோய்கள் என்று மட்டும் இந்த வறிய மக்கள் துன்பப்படவில்லை. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அங்கவீனர்களாகவோ, குறுகிய காலமே வாழ்பவையாகவே பிறக்கின்றன.

 

விஸ்ரா, ஐபொட், பிளஸ்மா, டிவிடி, மல்ரிமீடியா என்று ஒரு கூட்டம் இலத்திரனியல் சொர்க்கத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, இதே இலத்திரன் பொருட்களால் இன்னொரு மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்படும் கொடுமையும் எழும் அவலக் குரல்களும் யாருக்குக் கேட்கும்??