யாரங்கே? வெளியே மிதக்கும்வெளி அய்யாவை (1) அழைத்து வாருங்கள். மாதம் மும்மாரி மழை பொழிகிறதோ இல்லையோ அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பலஸ்தீனம், இலங்கை-புலிகள், தலித்-பார்ப்பனியம், பின்நவீனத்துவம்-முன்நவீனத்துவம் என்று வலையுலகப் பெருமக்கள் போர் (2) அடித்துப் போயிருக்கையில், இதையெல்லாம் தாண்டிப் புனிதமான மன்னர் காலத்திற்கு பனங்காட்டுநரிகள் எம்மை அழைத்துச் செல்ல வழிசமைத்த வள்ளல் அல்லவா அவர். பா(சி)ச உணர்வுகளின் சைவத் தமிழ் வெள்ளாளத் தோள்கள் தினவெடுத்துப் பொங்கியெழ வைத்த மிதக்கும் வெளி அய்யாவுக்கு ஒரு பரிசு தர அழைக்கின்றேன்.

 

அன்று இமயத்திலே சேரன் கோவணம் பறந்த அந்தக் காலம் தெரிகிறது (3). ஆகா எத்தனை கொடிகள் !! பிறந்து, வளர்ந்த மண்ணைவிட்டு 24 மணிநேரத்தில் உடுத்த துணியுடன் முஸ்லீம்மக்கள் துரத்தப்பட்டபின், சோழர்கொடி ஈழத்தில் கம்பீரமாக அசைந்தது (4). தமிழ்மக்களுக்கு முழுதாக மொட்டை (5) போட்டபின் அண்டைநாட்டு ஆதரவுடன் பல்லவர் கொடி ஈழத்தில் ஏறியது. கடலால், தரையால் வானால் கொலைக்கரங்கள் நீட்டி குருதி குடித்தபடி ஈழத்தில் விஜயபாகுக்களின் கொடியும் ஏறியது.

 

ஆண்ட பரம்பரைகள் ஏராளம். அவையெல்லாம் மறுபடி பறுபடி எம்மை ஆள நினப்பதில் என்ன குற்றம் கண்டீர்?நீரென்ன மாமனா மச்சானா? அல்லது எங்கள் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தீரா?? (6)

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ். (அப்போது கக்கூசுக்குப் போயிருந்தால் எதனால் குண்டி துடைத்திருப்பார்கள் (7) என்று துரோகத்தனமாகக் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கவேண்டாம்). அதற்கும் முன்னாலுக்கும் முன்னால் தோன்றியது சைவம். அதன்மீதா கைவைக்கின்றீர்கள்.

 

ஆண்ட கதைகளை கிளறியெடுக்க வழிசமைத்த பதிவுபோட்ட மிதக்கும் வெளி அய்யாவே, உமது முஸ்லீம் திமிரைப் பாராட்டி இதோ ஒரு கவிதையைப் பரிசாக அளிக்கிறேன். இந்தாரும். (இங்கே மண்டபத்தில் எழுதிக் கொடுத்தார்கள்)

மீண்டும் மீண்டும்
கனவாய்.. பழங்கதையாய்..

பட்டியில் மாடாய் மீண்டும் நாங்கள்.
பருவம் தவறாமல்,
பறுவத்தில்
கத்தினால் மட்டுமே,
அவன் “அதுக்கும்” விடுவான்.

புல்லை மட்டுமே எமக்குக் காட்டுவான்.
எல்லாப் பாலையும் அவனே கறப்பான்.
எங்கள் கன்றுகள்… (?)

வெறும் முலை சப்பும்!

எங்களிற் பலரிடம் கேள் இதைப் பற்றி
சொல்லுவர்:
பிறவிப்பயனை முழுதாய் அடைந்ததாய்.

பாலைக் குடித்த அவனின் பிள்ளைகள்
பள்ளியில் மீண்டும்
முப்பாட்டன் படித்ததை
காது கிழிய அழுத்திப் படிக்கும்:
“பசு ஒரு சாதுவான பிராணி”
“பசுவுக்கு நான்கு கால்கள் உண்டு”
“பசு கன்று போடும், சாணமும் போடும்”
“பசு பால் தரும் (?)”

இது,
காப்பியமாகத் தொடர்ந்து வளரும்.
தமிழ்க்கொடி பறந்து வானை அளையும்.

“அளைஞ்சிட்டுப் போ” (8)

அடிக்குறிப்புகள்:
1. நன்றி: பாலா
2. போர்: Bore, War
3. அன்பே வா படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் பாடலைத் தழுவியது.
4. புலிகளால் முஸ்லீம் மக்கள் யாழிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
5. இந்திய அரசின் துணையுடன் ஈபிஆர்எல்எவ் பலவந்தமாக மக்களை லொறியில் அள்ளிக் கொண்டு போய் மொட்டையடித்து படைக்குச் சேர்த்தது.
6. கட்டப்பொம்மனில் சிவாஜி பேசியதில் நினைவில் இருந்தது.
7. ஒஸ்ரேலியாவிலிருந்து வெளியான அக்கினிக்குஞ்சு சஞ்சிகையில் எஸ்.பொ எழுதியது
8. இரா.றஜீன்குமார் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு கவிதைத் தொகுப்பிலிருந்து.

பொறுக்கி