தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் தனது இரும்பு உருக்காலையை நிறுவிக் கொள்ள அனுமதி அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம். 55,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு உருக்காலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள போஸ்கோ, ஆலை அமைப்பது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஆலோசனைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.


போஸ்கோ தொடங்கவுள்ள இரும்புச் சுரங்கம் மற்றும் உருக்காலையால் ஒரிசாவின் பாரதீப் பகுதியில் உள்ள பெரும் வனப்பகுதியே மொட்டையடிக்கப்படும் என்பதால், சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கு ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்பது ஒரு ஆலோசனை. காடுகளை அழித்து விட்டுச் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது? இந்த கமிட்டி மரம் நடும் திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கப் போகிறதா என்பது போன்ற கேள்விகளுக்குள் எல்லாம் உச்சநீதி மன்றம் சென்றதாகத் தெரியவில்லை; கமிட்டி என்பதோடு பிரச்சினையை முடித்து விட்டது.


காடுகள் அழிக்கப்படுவதால் அதில் இருந்து துரத்தப்படும் பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்க 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது இரண்டாவது ஆலோசனை. ஒரிசா மாநில அரசு போஸ்கோவுடன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாது அதன் கைக்குப் போகப் போகிறது. இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து விற்கும்போது, இன்றைய நிலவரப்படி அதனின் மதிப்பு ஏறத்தாழ 28 இலட்சம் ரூபாய் கோடியைத் தொடும். எனவே, நிவாரண உதவிக்காக 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது சுண்டைக்காய் பணம்தான்.


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேதாந்தா என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட், ஒரிசாவில் அலுமினிய ஆலை தொடங்குவது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், "அழிக்கப்படும் காடுகளுக்கு ஏற்ற சந்தை விலையைத் தீர்மானிக்கலாம்'' எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. "எதற்கும் ஒரு விலையுண்டு'' என்ற பணக்காரத் திமிர்தான் உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு. பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கிரிமினல் குற்றங்களைப் பொழுதுபோக்காகச் செய்யும் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்காமல், அவர்களுக்கு அபராதம் விதித்து மன்னித்து விடலாம் என்பது எத்தகைய அநீதியானதோ, அத்தகைய வக்கிரம் நிறைந்தது இத்தீர்ப்பு.


ஒரிசாவில் கொட்டிக் கிடக்கும் இரும்புத் தாது, பாக்சைட், குரோமியம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல், அலுமினியம் போன்ற மூலவளங்களைக் கொள்ளையடிக்க 37 அந்நிய நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கின்றன. உச்சநீதி மன்றத்தின் இந்த இரண்டு தீர்ப்புகளும் அவற்றின் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றன.


சில நீதிபதிகள் தவறாகக் கொடுத்துவிட்ட தீர்ப்புகளாக, போஸ்கோ, வேதாந்தா வழக்குகளைப் பார்க்க முடியாது. கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தில் இயங்கிவரும் கோக் ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடாது என அக்கிராம மக்கள் போராடிய பொழுது, கோக்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது கேரள உயர்நீதி மன்றம். சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தடை செய்ய முடியாது; பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதைத் தடுக்க முடியாது எனத் தனியார்மயத்திற்கு ஆதரவாக இந்திய நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை அளித்திருக்கின்றன. மக்களின் போராட்டங்களால் தனியார்மயத்திற்கு எவ்விதப் பங்கமும் வந்து விடக்கூடாது என்பதில் ஓட்டுக் கட்சிகளைவிட இந்திய நீதிமன்றங்கள்தான் முனைப்பாக இருக்கின்றன.


"தனியார்மயம் தாராளமயம் என்பது அரசின் பொருளாதாரக் கொள்கை; அதில் நாங்கள் தலையிட முடியாது'' எனக் கூறி, தனியார்மயத்தின் அத்துணை மோசடிகளையும் இந்திய நீதிமன்றங்கள் நியாயப்படுத்தி வருகின்றன. அதேசமயம், இந்திய நீதிமன்றங்கள் இந்தத் "தலையிடாக் கொள்கை''யை எல்லா வழக்குகளிலும் பின்பற்றுவதில்லை.


சேது சமுத்திரத் திட்டம் அரசின் பொருளாதார முடிவாக இருந்தாலும், அத்திட்டம் ராமர் பாலத்தை நாசப்படுத்தும் எனக் "கண்டுபிடித்து', அதன் பாதையை மாற்றச் சொல்லி உத்தரவு போடுகிறது, உச்சநீதி மன்றம்.


இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அதில் தலையிட்டு, மேல்சாதிவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாக அக்கொள்கையை நீர்த்துப் போகச் செய்கிறது, உச்சநீதி மன்றம்.


"பந்த்'' நடத்தக் கூடாது; வேலை நிறுத்தம் செய்யக் கூடாது'' எனத் தடை போட்டு இந்திய அரசியல் சாசனம் உழைக்கும் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கின்றன, இந்திய நீதிமன்றங்கள். பன்னாட்டு நிறுவனங்களின் நலன் என் றால் அதற்கு ஒரு கண்ணாடி; உழைக்கும் மக்களின் நலன் என்றால் அதற்கு வேறொரு கண்ணாடி என்பதுதான் இந்திய நீதிமன்றங்களின் கொள்கை.


ஓட்டுக் கட்சிகளும், அதிகார வர்க்கமும் தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையம், அரசியல் உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வருகின்றன. இதற்கு எதிராகப் போராடும் மக்கள், நீதிமன்றம் மூலமாவது தங்களுக்கு நீதி கிடைக்காதா என்று நம்பிப் போனால், நீதிபதிகளோ பன்னாட்டு நிறுவனங்களின் கங்காணிகளாகச் சோரம் போய்க் கிடக்கிறார்கள். அதிகாரமிருந்தால், ஒரே தீர்ப்பில் இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமை நாடு என்று அறிவிக்கவும் இந் திய நீதிபதிகள் தயங்க மாட்டார்கள்.


இவர்களின் துரோகத்தால் இந்திய மக்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பது உண்மையானாலும், சோர்ந்து போய் நம்பிக்கையை இழந்து விட முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இனி என்ன வழியைத் தீர்மானிப்பது? யாரை நம்புவது? என முடிவு செய்ய வேண்டிய தருணமிது.


ஆளும் வர்க்கம், ஓட்டுக் கட்சிகள், போலீசு, நீதிமன்றம் என்ற இந்திய அரசியல் அமைப்பின் அத்துணை உறுப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும்; மக்களுக்கு எதிராகவும் செயல்படும் பொழுது இந்த அரசியல் அமைப்பையே குழி தோண்டி புதைக்கும்படியாகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் அமைப்பை மாற்றுவது என்றால், தேர்தல் மூலம் ஆளும் கட்சியைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிகளிடம் அதிகாரத்தை அளிப்பதல்ல. தேர்தலைப் புறக்கணித்து, இன்னுமொரு சுதந்திரப் போராட்டத்தை, பகத்சிங் வழியில், ஆயுதம் ஏந்திப் போராடும் நக்சல்பாரிகளின் வழியில் நடத்துவதுதான் இந்திய மக்கள் முன்னுள்ள ஒரே மாற்றுப் பாதை; அதுதான், பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கும் மறுகாலனி ஆதிக்கத்தை முறியடிக்கும் பாதை!


· தனபால்