இன்று உலகம் உலக மயமாதலில் வேகம் பெற்றுள்ளது. ஒரு சில பன்நாட்டு நிறுவனங்களின் கைகளில் உலகச் செல்வம் குவியத் தொடங்கி உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் 1985 இல் 90 சதவிகித உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி இருந்தன. 3500 இந்திய கோடிக்கு மேல் ஆண்டு வருமானத்தைக் கொண்டுள்ள 400 தேசம் கடந்த தொழிற்கழகங்கள் இருந்தன. இவை உலகில் மூன்றில் ஒரு உற்பத்தியைக் கட்டுப்படுத்தின.

 வெளிநாட்டு வர்த்தகத்தில் பாதியையும், தொழில் நுட்பம், கனரக உற்பத்தியில் 80 சதவிகிதத்தையும் கட்டுப்படுத்தின. இன்று 12 வருடங்களின் பின் மேலும் இது இருக்கும் தேசிய எல்லைகளை அழித்தொழிக்கின்றது. அதாவது இனி தேசிய முதலாளிகள் என்ற பிரிவு தேவை இல்லை என்ற நிலைக்குள் உலக ஒழுங்கு உள்ளது.


உதாரணமாக பிரான்ஸை எடுப்போம். கடந்த 20 வருடங்களுக்கு முன் இங்கு தேசியச் nhசத்துரிமையை வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை முன்பை விட இன்று மிகக் குறைவானது மட்டுமன்றி, அது மேலும் கேள்விக்குள்ளாகி உள்ளது. அதற்கு எதிரான போராட்டம் நாள் தோறும் நடக்கிறது.


உதாரணமாக சிறு வியாபார நிறுவனங்கள் மிக வேகமாக அருகி வருகின்றது. மிகப் பெரிய கடைகள் சிறுகடைகளை விழுங்குகின்றது. பாரிசில் குறிப்பிட்ட எல்லைக்கு இக்கடைகள் போட முடியாத சட்டம் உள்ளதால் இக்கடைகளை ஒரளவு பாதுகாக்கின்றது. ஆனால் பரிஸின் எல்லை தோறும் இக்கடைகள் முளைப்பதால் சிறுகடைகள் வேகமாக மூடத்தொடங்கி விட்டன.


சாதாரண சொத்துரிமை என்பது இனியும் சிறியளவில் இருக்க முடியாது போய் உள்ளது. அது நிலம் வீடு என்பவற்றுக்கும் பொருந்தும். மொத்த மக்களுக்கிடையில் சொத்துரிமை இல்லை என்ற நிலைக்கு சென்றுள்ளது. இங்கு உடல் உழைப்பு, மூளை உழைப்புக்கிடையில் வேறுபாடு உண்டே ஒழிய சொத்திலோ வாழ்க்கைத் தரத்தில் அல்ல. (இவை தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய ஒரு வெளியீடான "ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் உலகம்" என்ற வெளியீட்டின் மூலம் விரைவில் நாம் கொண்டு வரவுள்ளோம்)


ஆகவே மேற்கு நாடுகளில் மெதுவாக இயல்பான வாழ்க்கைப் போராட்டத்துடன் நடக்கும் இந்த மாற்றம், மூன்றாம் உலக நாடுகளில் திணிக்கப்பட்டு வீங்கிய வடிவில் நடக்கின்றது.


உலக மயமாதல் தனிநபர் சொத்துரிமையை ஒரு சிலருக்கு கைமாற்றுகின்றது. உலகில் உள்ள பரந்து பட்ட மக்களுக்கு தனிச் சொத்துரிமையைக் கூட மறுத்து, எதுவுமில்லாத மனிதர்களாக மாற்றிவிட முயற்சிக்கின்றது. இது தேசிய எல்லையைக் கடந்து உற்பத்திக் கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், ஒவ்வொரு நாட்டு அரசும் உலக மயமாதலின் அங்கமாக மாறிவிடுகின்றது. ஒரு நாட்டில் இனியும் தேசிய முதலாளிகள் இருக்க முடியாது. இந்நிலையில் இயல்பாக ஒவ்வோரு நாட்டு தேசிய முதலாளிகளும், தான் தனது எல்லைக்குள் சுரண்டும் உரிமைக்காக தேசியப் போராட்டத்தைக் கோருகின்றனர். அதே நேரம் உலக மயமாதல் மூலம் தேசிய சொத்து பலாத்காரமாக பறிமுதல் செய்யப்படும் போது, பல்தேசிய நாட்டுக்குள் உள்ள முரண்பாடு, தனித்து தேசியத்தை கோருதல் அதிகரிக்கின்றது. இதை முதலாளித்துவப் பரிவு முன்னெடுப்பதும், அறை கூவுவதும் எங்கும் நடக்கின்றது.


இந்நிலையில் உலகில் உள்ள அரசுகள் இந்த உலக மயமாதலின் அங்கமாக மாறி ஒரே இயந்திரமாக அதற்கு சேவை செய்யும் நிலையின் ஊடாக, தனக்காக அற்ப தொகை கோருகின்றது. இந்த உலக மயமாதல் என்ற இயந்திரத்தின் பகுதிகள் மீதான, மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்த உள்நாட்டு மக்களுக்குள் பிளவுகளை விதைக்கின்றன. . அதேநேரம் ஒவ்வோரு முதலாளித்துவப் பிரிவும் தாம் இழக்கும் பங்குகளை மீளக் கோரி போராட முற்படுகின்றன. இதை அடக்க உலக மயமாதலின் மையம் தனது அரசு கூலிகள் மூலம் வன்முறையையும் பாசிசத்தையும் பிரயோகிக்கின்றது. இதனால் ஒரு பிரிவு


சரணடைந்து விடுகின்றது. மற்றப்பிரிவு முதலாளிகளின் தலைமையில் போராட முற்பட்டு பாசிசமாக மாறிவிடுகின்றது. இது அரசு உள்ள நாடுகளிலும், பல்தேசிய நாடுகளிலும் ஒரு பொதுப் பண்பாக உள்ளது.


இன்று உலக மயமாதலின் போக்கில் பன்நாட்டு நிறுவனங்களும், உள்ளுர் போட்டி தேசிய முதலாளிகளுக்குள் சிக்கிக் கொள்ளும் மக்கள் தமது அற்ப வருமானத்தை இழத்தல், அதிகரித்துச் செல்கின்றது. ஆகவே உலக மயமாக்கலுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்பது, பரந்து பட்ட மக்களின் எழுச்சியாக தொடங்குகின்றது.


இது தனது எல்லைக்குள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போரை உள்ளடக்கிய தேசியமாகவும், சாராம்சத்தில் சர்வதேசியமாகி உலகளவில் பரந்து பட்ட வர்க்கப்போராக அறைகூவல் விடுகின்றது. ஆகவே இன்று உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் ஊடேயான தேசியப் போராக எழும் அதேநேரம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராக உலகமயமாக்கலுக்கு எதிராக மாற்றம் பெறுகின்றது. எனவே இன்று உலகப்புரட்சியின் சகாப்தம் என்பது வர்க்க போராட்டமாக சாராம்சத்தில் சர்வதேசியப்போராக, சர்வதேசப் புரட்சியின் நிலைமைக்குள் உலகம் நகர்கின்றது. இதை பாட்டாளிகள் மட்டுமே தலைமை தாங்க முடியும். இது மூன்றாம் உலகமாக இருந்தாலும் முதலாம் உலகநாடாக இருந்தாலும் இது ஒரு பொது அடிப்படையாக இன்றைய உலக மயமாதல் நகர்கின்றது.


இதைப்பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க தவறும் அனைத்து நாடுகளிலும் உருவாகும் தேசியம் பாசிசமாக மாறும். இது ஒரு பொதுப்பண்பு. இந்த இரண்டு வழியிலுமே உலகம் அனைத்து யுத்தங்களையும், முரண்பாடுகளையும் சந்திக்கின்றன.


இன்று எழும் இந்த வர்க்கப் போரின் ஊடே உள்ள தேசியப் போக்கை "கற்பிதம்" என பிரகடனம் செய்வோரின் நோக்கம் அடிப்படையில் உலகமயமாதலை நியாயப்படுத்தும் கோட்பாடாகும். உலகமயமாதல் தேசியப் பொருளாதாரத்தை மறுக்கின்றது. இதற்கு எதிரான போரை வெறும் கற்பிதம் எனக் கூறுவதும், ஏகாதிபத்தியம் இனி தேசியம் என்பது இல்லை எனக் கூறுவதும் ஒன்றே. ஆனால் கூறும் விதம் மட்டும் மாறுபட்டுள்ளது.


இன்று ஒவ்வொரு நாளும் தனது தேசியம் என்ற பொருளின் மீது நின்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடுக்கும் சர்வ தேசிய போரை "கற்பிதம்" எனக் கூறுபவன் அடிப்படையில் ஏகாதிபத்திய உலக மயமாதலின் கோட்பாட்டுடனேயே ஒழிய வேறு ஒன்றல்ல.


"தேசியம் ஒரு கற்பிதம்" என்பது ஏகாதிபத்தியத்தின் நனவு கொண்ட கனவுகள். ஆனால் ஒவ்வொரு தேசத்தினதும், நாட்டினதும் நனவு கொண்ட பொருள் கொண்ட போராட்டமே வர்க்க அடிப்படை கொண்ட சர்வதேசியப் போராக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளது. "தேசியம் ஒரு கற்பிதம்" என்பதை நீண்ட காலத்தைக் கொண்டே பார்ப்போமாயின், அப்போது மட்டுமே அது கற்பிதமாக பொருள் அற்று உள்ளது. ஆனால் இன்று யதார்த்தத்தில் "தேசியம் ஒரு கற்பிதம்" என கூறுவது ஒரு கருத்து முதல்வாதமாகும்.


காலத்தைக் கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்பிதமாகக் கூறமுடியும். ஒரு குறித்த மனிதனின் உயிர் கூட அவன் பிறக்கமுன், இறந்தபின் கற்பிதமானதுதான். ஏன் சிறு குறுநில மன்னர் ஆட்சி முதல் சம்ராஜியங்கள் இருந்த காலத்தில் இன்றைய தேசம் ஒரு கற்பிதம் தான் .அதேபோல் ஒரு கம்யூனிச தேசம் உருவானபின் இன்றைய தேசம் கூட கற்பிதமானது தான். ஆனால் இன்று உள்ள தேசம் கற்பிதமானதல்ல.


இன்று தேசம் என்பது தனக்கான பொருளைக் கொண்டு உள்ளது. அது உள்ள வரை, அப்பொருளை கற்பிதம் என பிரகடனம் செய்பவன் அடிப்படைப் பொருளை மறுப்பதாகும்.


நிலப்பிரபுத்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு பாட்டாளி எப்படி கற்பிதமானதோ அதேபோல் ஒரு கம்யூனிச சமூகத்தில் ஒரு பாட்டாளி கற்பிதமானதே. ஆனால் இன்று ஒரு பாட்டாளி கற்பிதமானது எனக் கூறுவது ஆயின் ஒரு பாட்டாளி என்ற பொருளை மறுப்பதாகும். இது அடிப்படையில் ஏகாதிபத்தியக் கோட்பாடாகும்.


உலகில் உள்ள அனைத்துப் பொருளும், ஏன் இந்த பூமியும், இந்த சூரிய மண்டலங்களும், 200 கோடி சூரிய குடும்பங்களும் கூட ஒரு காலத்தில் இருக்கவில்லை. அதேபோல் எதிர்காலத்தில் இருக்க முடியாது போய்விட்டாலும். இங்கு இருகாலத்திலும் அனைத்துமே கற்பிதமானது. ஒரு மனிதன் தோற்றத்துக்கு முந்திய மனிதன் கற்பிதமானது. அதேபோல் இந்த பூமி அழியும் போது மனிதன் கூட இந்த பூமியில் கற்பிதமானது தான். ஏன் இன்றைய இலங்கை, இந்தியா உலகப்படத்தில் இருக்கும் இடம் கூட காலத்தால் கற்பிதமானது தான். இந்தியா ஆபிரிக்காவில் இருந்து பிரிந்த பகுதி தான். ஏன் இமய மலை கூட கற்பிதமானது தான். ஏன் எனின் இந்திய நிலத்தொடர் ஆசியாவுடன் மோதித்தான் இமயமலை உருவானது. ஏன் எல்லாக்கண்டமும் காலத்தால் கற்பிதமானது. ஏனெனில் அவை முன்பு ஒரே நிலத்தொடராகத்தான் இருந்தன. காலத்தால் கற்பிதமானவை, யதார்த்தத்தில் கற்பிதமானது எனக் கூறுவது கருத்து முதல் வாதமாகும்.


ஆகவே இன்று மனிதனோ, தேசமோ, பூமியோ, சூரிய குடும்பமோ, 200 கோடி சூரிய குடும்பங்களோ கற்பிதமானதல்ல. மாறாக அது பொருளாக உள்ளது.


மனிதன் வசிக்கும் வீடு இல்லாத காலத்தில் அது கற்பிதமானதுதான். ஆனால் உள்ள காலம் கற்பிதமானதல்ல. மாறாக வீடு ஒரு பொருளாக உள்ளது.


உலகில் சில பொருட்கள் காலத்தால் உருவாகின்றன. காலத்தால் அழிகின்றன. ஒருகாலத்தில் மனிதனை கூட்டம் கூட்டமாகக் கொன்ற கொள்ளை நோய்கள் இல்லாத காலம் கற்பிதமாக இருக்கலாம். ஆனால் நோய் உள்ள காலம் கற்பிதமானது அல்ல.


உலகில் ஒரு பொருள் உள்ள காலத்தை அதைக் கற்பிதம் எனக் கூறுவதாயின் அவன் அப்பொருளின் இருப்பை மறுக்கிறான் மாறாக கருத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளின் இருப்புகளுக்கு மாறான சிந்தனை புகுத்தி அதன் மூலம் பொருளின் ஆய்வை மறுக்கின்றான். எனவே கற்பிதம் என்பது பொருள் இல்லாத வரை மட்டுமானதே. மாறாக பொருள் உள்ளவரை அது கற்பிதம் அல்ல. மாறாக அது பொருளாகவே, அதுவாகவே உள்ளது. அதை நாம் சரியாக ஆய்வுக்கு உட்படுத்தி அதை செயல் தளத்தே இனங்காண வேண்டும்.


அடுத்து நிறப்பிரிகையின் முன்னுரையில் இன்னுமொரு தேசிய மறுப்பு, வர்க்க மறுப்பு வரையறையைப் பார்ப்போம்.


"பொதுவான மொழி, தேச எல்லை, பொருளாதார வாழ்வு, உளவியல் உருவாக்கம் ஆகிய நான்கையும் தேசமாக உருப்பெறுவதற்கான இறுக்கமான நிபந்தனைகளாக முன்வைக்கும் ஸ்ராலினிய வரையறையை நாம் மறுத்தோம். இன ஒடுக்கு முறையும், அதற்கு எதிரான போராட்டங்களும் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இவற்றிற்கு அப்பாற்பட்ட எதேனும் ஒன்றையோ (எ.கு மதம்) குவிமையமாகக் கொள்ளலாம். ....... ஸ்ராலினிய வரையறை அன்றைய போல்செவிக் அரசியலுக்கு எற்ப உருவாக்கப்பட்டது." என "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற நூலில் தேசியத்துக்கு எதிராகக் குறிப்பிடுகின்றனர்.


ஸ்ராலினின் தேசம் தொடர்பான வரையறை என்பது இன்றைய உலக நிலமை உட்பட அன்றைய நிலைக்கும் தெளிவாக சரியானது. . ஸ்ராலினின் வரையறையை மறுப்பவன் உண்மையில் தேசிய இனத்துக்கு எதிராக ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக உள்ளதை மறைக்க, பரந்தளவு தேசிய ஜனநாயகவாதியாக முகமூடி போட வேண்டி உள்ளது.


இவர்கள் குறைந்த பட்சம் தேசியம் என்றால் என்ன என்ற அரிச்சுவடியை கூட மறுக்கின்றனர். பின் மறுத்தபடி "தேசவிடுதலைப் போர் தான் தேசத்தை உருவாக்குகின்றது" என்பது பொருளை மறுத்து கருத்து முதல்வாதக் கோட்பாட்டை கெல்னரின் முன்தள்ள அதை அ.மார்க்ஸ் மீள முன் தள்ளுகின்றார். தேசம் தான் தேசியப் போராட்டத்தை உருவாக்குகின்றது. ஏனெனில் பொருள் இன்றி எதுவும் தோன்றாது.