இந்தக் கேள்விகளும், குழப்பங்களும், திரிபுகளும் மலிந்த ஒரு சமூக அமைப்பில் நாங்கள் வாழ்வதால், இதை தெளிவுற வைப்பது அவசியமாகிவிடுகின்றது. இந்த வகையில்


* இதை யாழ் மக்களுக்கு எதிரானதாக அர்த்தப்படுத்துவது நிகழ்கின்றது.


* இதை சாதிய ஆதிக்கம் பெற்ற ஒரு கருத்தாக, அதாவது வெள்ளாள சாதி ஆதிக்கத்தைக் குறிப்பதாக கருதப்படுகின்றது.


*இதை ஒரு பிரதேசரீதியான ஒடுக்குமுறையாக கருதப்படுகின்றது


* இதை புலிப்பாசிசத்தை குறிக்கும் ஒரு குறித்த சொல்லாடலாக கருதப்படுகின்றது.


* தனிமனிதர்கள் ஊடாக இதை காண்பதும், விளக்குவதுமாக காணப்படுகின்றது


* எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகளின் வடிவில், இதற்கு எதிரான ஒவ்வொரு சமூகப் பிரிவினூடாக காணப்படுவதும் நிகழ்கின்றது.


இப்படி பல வகையில் பலவாக இது அர்த்தப்படுத்தப்படுகின்றது, புரிந்து கொள்ளப்படுகின்றது, விளக்கப்படுகின்றது. யாழ் மேலாதிக்கம் பற்றிய அலங்கோலமான காட்சிப் படிமங்கள் பொதுவாக இதுவாகவே உள்ளது.

 

யாழ் மேலாதிக்கம் என்பது, யாழ் சமூகத்தினுள்ளான ஒரு சிறிய பிரிவு காலகாலமாக பெற்றுள்ள சமூக பொருளாதார மேலாண்மையை தக்கவைக்கும் கோட்பாடாகும். இந்த வகையில், யாழ் மேலாதிக்கம் மொத்த மக்களுக்கும் (குறிப்பாக தமிழ் மக்களுக்கு) எதிராக வினையாற்றுகின்றது. யாழ் மேலாதிக்கம் பல தளத்திலானது. மிகவும் நுட்பமாக சின்னச்சின்ன விடயங்களில் கூட அது வினையாற்றுகின்றது.


சமூகங்களை பிளப்பதும் பிரிப்பதும், இதனை அதனடிப்படையில் இழிவாடுவதும், அதன் மூலம் ஒடுக்குவதும் இதன் குறிப்பான அம்சமாகும். இந்த வகையில் சமூக கோட்பாடுகளை, அதை ஒட்டிய பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளையும் கட்டமைக்கின்றது. இந்த வகையில் யாழ் சமூக பொருளாதார மேலாதிக்க நிலையை தக்கவைக்கும் வகையில், எதிர்வினையாற்றுவதே யாழ் மேலாதிக்கமாகும். இது யாழ் பிரதேசத்தில் வாழும் பரந்துபட்ட மக்களைச் சார்ந்து, அதன் நலனில் செயலாற்றுவதில்லை. குறுகிய எல்லையில், குறுக்குவழியில் சமூகத்தை பிளந்து தன்னை பாதுகாக்கும் கோட்பாடாகும்.


யாழ் மேலாதிக்கம் என்பது, குறித்த சமூக பிரிவுகள் மீதான ஒடுக்குமுறையின் குறித்த சிறப்பு வடிவம் அல்ல. குறித்த ஒரு சமூக ஒடுக்குமுறை தனிச் சிறப்பு வடிவம் கொண்டது என்பதால், அதை எதிர்கொள்ள தெளிவான அடையாளப்படுத்தல்களும் போராட்ட வடிவங்களும் உள்ளது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ள சாதியத்துக்கு எதிரான போராட்டமும், ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள பெண்ணிய போராட்டங்களும், பிரதேசவாத ஒடுக்குமுறையை எதிர் கொள்ள பிரதேசவாதத்துக்கு எதிரான போராட்டங்களும் உள்ளது. அதாவது இது துல்லியமாக தெளிவுபடுத்தப்பட்டு, எதிரி பற்றியும் அதன் கோட்பாடு பற்றியும் தெளிவான நடைமுறைசார் போராட்ட வடிவங்கள் உண்டு.


இந்த நிலையில் யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன? ஒட்டுமொத்த சமூக ஒடுக்குமுறையினை ஒரு குறியீடாக கொண்டால், அந்த ஒடுக்குமுறை வடிவத்தை ஒரு சிறிய பிரிவின் நலனுக்காக மட்டும் பயன்படுத்துவதைக் குறிக்கின்றது. அதாவது அனைத்து பரந்துபட்ட மக்களுக்கும் எதிரான வகையிலும், குறிப்பாக இந்த யாழ் மேலாதிக்கம் யாழ் மக்களுக்கே எதிரானது.


இது சுரண்டும் வர்க்க அடிப்படையிலான அனைத்தையும் தழுவிய சுரண்டும் நலன்களைக் கொண்ட போதும், இது அதனிலும் இருந்து மிகவும் நுட்பமாக வேறுபட்டது. சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டும் ஜனநாயகத்தை, சுரண்டும் நலனை தனது வர்க்கத்துக்கு மறுப்பதில்லை. ஆனால் யாழ் மேலாதிக்கம் அப்படிப்பட்டதல்ல. இது எந்த வகையில் என்றால், சுரண்டும் வர்க்க நலன்கள், சுரண்டும் அனைத்து வர்க்க பிரிவினரது நலனையும் பிரதிபலிப்பதில்லை. இதைக் கட்டமைப்பது வாழ்வது தான் மேலாதிக்கமாக உள்ளது. இது ஒரே சுரண்டல் பிரிவுக்கிடையிலான மோதலாகவும் மாறுகின்றது. சமூகத்தை கூறு போடுகின்றது. இந்த கூறு குறுகிய அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்தின் அனைத்து நலனையும் பேணாது, அதற்குள்ளும் மிக குறுகிய, ஒரு சிறிய பிரிவின் நலனை முதன்மைப்படுத்தி தனது குறுகிய நலனை தக்கவைக்க முனைகின்றது. இந்த வகையில் இந்த குறுகிய நலனே யாழ் மேலாதிக்கமாக உள்ளது. உண்மையில் இந்த யாழ் மேலாதிக்கம் சுரண்டும் வர்க்க அனைத்து நலனை அடிப்படையாக கொண்டு, அதையும் பிளந்து ஒடுக்குவதன் மூலம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது.


உதாரணமாக பார்ப்பனீயம் என்ற இந்துமதம் சாதியமாக இருக்கின்ற எல்லையில், அது உயர் சாதிய நலனை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. அதிலும் பார்ப்பன நலனை குறிப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. இந்த பார்ப்பனீயம் அனைத்தும் தழுவிய சமூக முரண்பாடுகள் சார்ந்து சுரண்டும் ஒரு வர்க்க கோட்பாடாகவும், அதை நடைமுறைப்படுத்துவதாகவும் இருக்கின்றது. அதேநேரம் அதற்கு முரணாக சாதி குறைந்த சுரண்டு வர்க்கம் மீது, முஸ்லீம் சுரண்டும் பிரிவு மீதும், இது போன்று பலதளத்தில் தன்னளவில் ஒரு ஒடுக்குமுறையைக் கையாளுகின்றது. இது கோட்பாட்டு தளத்தில், பண்பாட்டுத் தளத்தில், நடைமுறைத் தளத்தில் கையாளுகின்றது. இதைப் படிமுறை சமூக ஒடுக்குமுறை ஊடாகக் கட்டமைக்கின்றது. இதனால் மக்களின் எதிரியாக பார்ப்பனீயம் சிறப்பு பெற்று, தனித்துவமாகவும் இருக்கின்றது. உண்மையில் சுரண்டும் வர்க்கத்தின் அனைத்தும் தழுவிய தன்மை ஒருபுறம், மறுபக்கத்தில் குறுகிய தன்மையை அதனுள் அது கொண்டு செயலாற்றுகின்றது. இப்படி குறுகிய ஒரு சிறிய வட்டத்தை அது கட்டமைக்கின்றது.


இதை வரையறுத்துக் கூறப்போனால் பொதுவான ஒரு சட்டவிதியை அல்லது கோட்பாட்டை, குறித்த பிரிவுகளுக்கு வழங்க மறுப்பது இதன் சாரமாகும். இது அதுவல்லாத பரந்துபட்ட மக்களுக்கும் அதை மறுப்பதே, அதன் மற்றொரு சாரமாகும். இது சில வேளைகளில் வெளிப்படையானதாகவும், சில வேளைகளில் மறைமுகமானதாகவும் இருக்கின்றது. கிட்லரின் ஆரிய மேலாண்மை வெளிப்பட்டு அம்பலமானது போல், பார்ப்பனீயம் வெளிப்படையானதாக பொதுவான சமூக மட்டத்தில் உணரப்படுவதில்லை. பார்ப்பனீயம் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரியாக உணரப்படாத வகையில், பார்ப்பனீய மேலாண்மை இயங்குகின்றது.


இது பொருளாதார தளத்தில், பண்பாட்டுத் தளத்தில், கலாச்சார தளத்தில் ஆதிக்கம் பெற்ற ஒன்றாக இயங்குகின்றது. பார்ப்பனீயத்தை உயர்த்துவதன் மூலம், குறுகிய ஒரு பிரிவு அதிக சமூக பொருளாதார நலன்களை அடைகின்றது. இது நிச்சயமாக ஒரு சமூகப்பிரிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பல சமூகப் பிரிவைச் சேர்ந்த குறுகிய பிரிவுகள் இயங்கமுடியும்.
இந்த வகையில் தான் யாழ் மேலாதிக்கமும். யாழ் மேலாதிக்கம் தமிழர்கள் என்ற பெயரில் இயங்குகின்றது. ஆனால் அது ஒட்டு மொத்த தமிழர்களையும் பிரதிநித்துவம் செய்வதில்லை. மாறாக குறித்த ஒரு பிரிவின் குறுகிய நலனை முன்னிலைப்படுத்தி, தமிழர்களின் அதேயொத்த மற்றைய பிரிவை இழிவாடி தூற்றி வாழ்கின்றது.


உதாரணமாக முஸ்லீம் மக்கள் பிரிவுடன் முரண்பாடு வரும் போது, அந்த மக்களை இழிவாடுகின்றது. கிழக்கு மக்களுடன் முரண்பாடு வரும் போது அந்த மக்களை இழிவாடுகின்றது. இயக்கங்களில் குற்றங்களை, அந்த இயக்கத்தில் உள்ள சாதி குறைந்தவர்களின் தலையீடாக குறுக்கி இழிவாடுகின்றது. இப்படி ஆதிக்கம் பெற்ற பிரிவின் இழிவாடு வடிவங்கள், கொச்சைப்படுத்தும் வடிவங்கள், வசைபாடல்கள் அன்றாடம் கட்டமைக்கப்படுகின்றது. இவை சமூக பொருளாதார அரசியல் மேலாண்மை சார்ந்து, அன்றாடம் பல்துறை சார்ந்து காணமுடியும். சின்னச்சின்ன வாழ்வியல் அனுபவங்களின், வாழ்வியல் முறைகளில், அன்றாடம் இதை அடிப்படையாக கொண்ட இழிவாடல்கள், சின்னத் தனங்கள், மொழியாடல்கள், வசைபாடல்கள் வாழ்வியல் முறைகளில் சதா பயன்படுத்தப்படுகின்றது இது அரசியல் தளத்தில் மிகப்பெரிய ஒரு ஒடுக்குமுறையாக வெளிப்படுகின்றது.


சமூக பொருளாதார நலன்களை யாழ் மேலாதிக்கம் அனுபவிக்கின்ற போது, தமிழரின் அனைத்து சமூக பிரிவுக்கும் ஒரே அடிப்படையைக் கொண்டு அது செயல்படுவதில்லை. சுரண்டும் போது சுரண்டல் வரையறையை பொதுவாக கொள்வதில்லை. குறிப்பாக பண்பாட்டுத் தளத்தை எடுத்தால், சுரண்டலை செய்யும் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனுக்கும், சுரண்டும் கிழக்கை சேர்ந்தவனுக்கும், சுரண்டும் ஒரு பெண்ணுக்கும், ஒரே அளவுகோலைக் கொண்ட, பண்பாட்டு அடிப்படையை யாழ் மேலாதிக்கம் கொண்டிருப்பதில்லை. சமூகங்களை அல்லது மக்கள் கூட்டங்களை இழிவுபடுத்துவதன் மூலம், தனது தனிப்பெருமையை கட்டி பாதுகாப்பதும், அதைக் கொண்டு நுகர்வதும் தான் யாழ் மேலாதிக்கம். மிகவும் நுட்பமானது, ஆனால் இயல்பில் அது வெளிப்படையாக உள்ளது. நாம் அதற்கு இசைவாக பழக்கப்பட்டவர்கள் என்பதால், அதை உணர்வதில்லை. மறுக்க முனைகின்றோம். ஆனால் அது ஒரு முரண்பாடாக, சமூகங்களை பிளக்கவும் இழிவாடவும் பயன்படுகின்றது.

 

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் முதன்மை முரண்பாடாகி, தமிழர் என்ற பொது அடையாளப்படுத்தல் ஆதிக்கம் பெற்று கருத்தாக, அதேநேரம் அதுவே ஒரு மாபெரும் அணிதிரட்டலாக நிலவிய காலத்தில் கூட இது உறங்கிவிடவில்லை, மாறாக சமூகங்கள் இழிவாடப்படுகின்றது. கிழக்கான், வன்னியன், தீவான், பள்ளுப் பறைகள் என்ற எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகள் சமூகத்தில் மறைந்துவிடவில்லை. மாறாக அவையே ஆதிக்கம் பெற்ற ஒன்றாக, சமூக நிகழ்ச்சிப் போக்கில் அவையும் பாரிய பிளவுகளை உருவாக்கியது, உருவாக்குகின்றது. இதுதான் யாழ் மேலாதிக்கம்.


இது எந்த வகையில் என்றால், தமிழ் மக்களின் தலைமைகளை பிரநிதித்துவம் செய்யும் அரசியல், உள்ளடக்கத்தில் இந்த யாழ் மேலாதிக்கத்தை பிரதிநித்துவம் செய்கின்றது. இந்த யாழ் மேலாதிக்கம் புலிகள் அல்லது மற்றைய இயக்கங்களிள் தோற்றத்துடன் உருவானதல்ல. மாறாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை உருவாக்கிய, சமூக பொருளாதார யாழ் மேலாதிக்க தன்மை ஊடாகவே கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இதை மாற்றாத போக்குத் தான், இன்று வரையிலான யாழ் மேலாதிக்கமாக, அதன் அரசியலாக உள்ளது.


மிக நுட்பமானது, ஆனால் வெளிப்படையானது. யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை பிரதிபலிப்பதில்லை. யாழ் மேலாதிக்கம் மிக குறுகிய ஒரு பிரிவை அடிப்படையாக கொண்டது. இது யாழ் பிரதேசத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க வேண்டுமென்பதல்ல. சிங்கள இனத்தில் பிறந்த ஒருவன் கூட, யாழ் மேலாதிக்கத்தைக் கொண்டு இருக்கமுடியும். இது பிறப்புக்குள் உட்படுவதில்லை. ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன், கிழக்கைச் சேர்ந்தவன், ஒரு முஸ்லீம் கூட யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யமுடியும்.


உண்மையில் இந்த யாழ் மேலாதிக்கத்தை இனம் காணல் என்பது, ஒரு ஒடுக்குமுறை சார்ந்ததாக குறுக்கிக் காட்டுவது கூட யாழ் மேலாதிக்கத்தின் ஒரு வால்தான். அதைவிட்டு அது விலகுவதில்லை. யாழ் மேலாதிக்கத்தின் பன்மைக் கூறு மீது செயல்படுவதுதான், யாழ் மேலாதிக்கத்தை உண்மையாக மறுத்து போராடுவதாகும்.


13.02.2007