எத்தனை வகைத் தெருக்கள்!
என்னென்ன வகை இல்லங்கள்!
ஒத்திடும் சுண்ண வேலை
உயர் மரவேலை செய்யும்
அத்திறம் வேறே; மற்றும்
அவரவர்க் கமைந்த தான
கைத்திறம் வேறே என்று
காட்டின கட்டிடங்கள்.

இயற்கையின் உயிர்கட் குள்ளே
மனிதன்தான் எவற்றி னுக்கும்
உயர்ச்சியும், தான் அறிந்த
உண்மையை உலகுக் காக்கும்
முயற்சியும், இடைவி டாமல்
முன்னேற்றச் செயலைச் செய்யும்
பயிற்சியும் உடையான் என்று
பட்டணம் எடுத்துக் காட்டும்.

நடுவினிற் புகையின் வண்டி
ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் 'தம்மில்
இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து
கணக்கற்ற பொருள் குவிக்கும்
படைமக்கள் சிட்டுப் போலப்
பறப்பார்கள் பயனை நாடி!

வாணிகப் பண்டக சாலை
வைத்துள்ள பொருள்கள் தாமும்,
காண் எனக் காட்டி விற்கும்
அங்காடிப் பொருள்கள் தாமும்,
வீணாளைப் பயன் படுத்தும்
வியன்காட்சிப் பொருள்கள் தாமும்,
காணுங்கால் மனிதர் பெற்ற
கலைத்திறம் காணச் செய்யும்.

உள்ளத்தை ஏட்டால் தீட்டி
உலகத்தில் புதுமை சேர்க்கும்
கொள்கைசேர் நிலைய மெல்லாம்
அறிஞரின் கூட்டம் கண்டேன்;
கொள்கைஒன் றிருக்க வேறு
கொள்கைக்கே அடிமை யாகும்
வெள்ளுடை எழுத்தா ளர்கள்
வெறுப்புறும் செயலும் கண்டேன்.

உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும்
உயர்வழக் கறிஞர் தம்மை
விண்வரை வளர்ந்த நீதி
மன்றத்தில் விளங்கக் கண்டேன்;
புண்பட்ட பெருமக் கட்குப்
பொதுநலம் தேடு கின்ற
திண்மைசேர் மன்றிற் சென்றேன்
அவரையே அங்கும் கண்டேன்.

மாலைப்போ தென்னும் அன்னை,
உழைப்பினால் மடிவார் தம்மைச்
சாலிலே சாரா யத்தால்
தாலாட்டும் கடையின் உள்ளே
காலத்தைக் களியாற் போக்கக்
கருதுவோர் இருக்கக் கண்டேன்,
மாலையில் கோழி முட்டை
மரக்கறி ஆதல் கண்டேன்.

இயற்கையின் எழிலை யெல்லாம்
சிற்று஡ரில் காண ஏலும்!
செயற்கையின் அழகை யெல்லாம்
பட்டணம் தெரியக் காட்டும்!
முயற்சியும் முழுது ழைப்பும்
சிற்று஡ரில் காணுகி ன்றேன்;
பயிற்சியும் கலையு ணர்வும்
பட்டணத் திற்பார்க் கின்றேன்!

வருநாளின் நாடு காக்க
வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,
திருநாளின் கூட்ட மாகத்
தெருஓரம் சுவடி யோடு,
பெருநாளைப் பயன்நா ளாக்கும்
பெரும்பெருங் கழகம் நோக்கி
ஒருநாளும் தவறிடாமல்
வரிசையாய் உவக்கச் செல்வார்!

கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm