மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில்
கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் து஡ள் து஡ளாகச்
செயினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்!

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும்
உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாடுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்?

தென்றலின் நலம்

குளிர்நறுஞ் சந்தனஞ் சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே
மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன்
வரவினை வாழ்த்தா ருண்டா?

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன்
ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை
அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ?

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை!

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத
என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்
குளிர்செய்து, மேனி யெங்கும்
வழிந்தோடிக் கிலு கிலுப்பை
தன்னையு ம் அசைப்பாய் வாழி.

தென்றல் இன்பம்

இருந்தஓர் மனமும், மிக்க
இனியதோர் குளிரும் கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு
மாற்றாகிப் பின்னர் வானிற்
பருந்தாகி இளங்கி ளைமேற்
பறந்தோடிப் பாடு கின்றாய்!

தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே
எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
"எழுதிய தாளை நீ ஏன்
கிளப்பினை" என்று கேட்டேன்,
"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!

தென்றலிற்கு நன்றி

கமுகொடு, நெடிய தென்னை,
கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை,
உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்க
தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ?

தென்றலின் விளையாட்டு

களச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளயா டிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm