தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசை
சிறியதொரு நாற்காலி தவிர மற்றும்
இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,
எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று
வருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;
மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி
ஒருதடவை வௌியினிலே பார்த்தேன். அங்கே
ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்!

நெஞ்சத்தில் `அவள்'வந்தாள்; கடைக்கண் ணால்என்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம்
மிகலாபம் விளைத்த தன்றோ என்றனுக்கே!
`அஞ்சுகமே வா'என்று கெஞ்சி னேன்நான்
அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.

இவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி!
இதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்
தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
`வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள்; உன்றன்
மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா? என்செயலாம்! நீயும் நானும்
உயர்வானில் ஏறிடுவோம் `பறப்பாய்' என்றேன்.

மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும்,மணி விழியும், பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்
துலங்கினாள். நானும்ஆண் புறாவாய்ப் போனேன்.
அல்லலற வான்வௌியில் இருவர் நாங்கள்;
அநாயாச முத்தங்கள் கணக்கே யில்லை;
இல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி
அவைசாய்ந்த அமுதுண்போம்; இன்னும் போவோம்.

பொன்னிறத்துக் கதிர்பாயும்முகிலிற் பட்டுப்
புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்
மின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து
விரிக்கும்இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச்
சென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே
சிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்!
என்னைஅறி யேன்!தன்னை அறியாள்! பின்னர்
இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!

`பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.
பழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள்,
ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்
உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும், உள்ளம்
நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை,
நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற
பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்
பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt247