கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும்!நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?
தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்
சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே!
இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சி மனப்பான்மை
ஏற்படுத்தல்; பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.

விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கால் வையம்
வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்?
மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற
மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்.
உரத்தினிலே குண்டுபுகும் வேளையிலும் மக்கள்
உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!
பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள்
பிறர்தமர்என் றெண்ணுவது பேதமையே அன்றோ?

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!
புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?
ஏற்றசெயல் செய்தற்கும் ஏன்அஞ்ச வேண்டும்?
உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள், நன்றே
உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt241