இலண்டன் தமிழர் நலன்புரிச்சங்க கிழக்கும் மேற்கும் மலரிலுள்ள சிறுகதைகள் பற்றி சுருக்கமாக சில வரிகள்.....

 

 

'கிழக்கும் மேற்கும்" கதை பொதுவில் மிகமோசமான கருத்தமைவுகளையே கொண்டிருக்கின்றன.
தமிழரின் அகதிவாழ்வு, 2ம்தர வாழ்வு, சாதி ஒடுக்குமுறை, வறுமை, மத முரண்பாடு, இன ஒடுக்குமுறை, ஆண்பெண் முரண்பாடு, எமது பூர்சுவாதனம் என எண்ணற்ற மனித விழுமியங்களுக்கு சவால்விடும் மனிதவிரோதபோக்குகளை எவ்வளவு தூரம் கிழக்கும் மேற்கும் கதைகள் பிரதிபலிக்கின்றன எனின் பெருமளவில் இல்லை என்பதே பதிலாகிறது.


உயிரோட்டமுள்ள, யதார்த்தக் கற்பனையுடன், விமர்சனத்தைக்கொண்ட, தீர்வை முன்வைக்கும் எத்தனை கதைகளை மலர் கொண்டுள்ளது என்பதைக்கேட்டுப் பார்ப்பதும் மிகமுக்கியமாகும்.

இவற்றைவிட சிறந்த படைப்புக்கள் தமிழரிடம் இருந்துவருகின்றன  என்பதைப்பார்க்கும்போது இம்மலர் அனைத்துலக தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்பதை கேள்விக்குள்ளாக்குவதுடன் உண்மையானதுமல்ல.

 

சமூகம் பற்றி ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவன் சார்பாக நின்று படைப்பாளர்கள் அணிவகுப்பது அவசியம். பொதுவில், கதை மரபு என வகுக்கப்பட்ட பூர்சுவா கதைவடிவையும், உள்ளடக்கத்தையும் தாண்டுவது அவசியமாகும். வழக்கிலிருக்கும் கதைமரபை மீறும்போது 'தீட்டு"ப்பட்டுவிடும் என அழுவதற்குச் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், தீட்டினைக் கடப்பதன்மூலம், ஒரு தனித்துவத்தை கதைகளின் மரபில் தொடங்கமுடியும். இது ஈழ மரபில் தனித்துவமான முன்னோக்கிய பாத்திரத்தை எமக்கு அள்ளித்தரும்.

 

மலரில், பார்த்திபன் என்ற படைப்பாளி பற்றிய யமுனாராஜேந்திரனின் அறிமுகம் என்பது பலத்த விமர்சனத்திற்குரியது. பார்த்திபனை முடக்கமுனையக்கூடியது.

 

பார்த்திபன் அறிமுகத்தில் அவரது உருவாக்கம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இலங்கையில் ஒரு ஏழுத்தாளர் அல்ல. புலம்பெயர்சூழலில் அராஜகப்போக்கைக் கண்டித்து அதற்கெதிராக தூண்டில் என்ற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்ததையும், அதற்கூடாக பார்த்திபன் உருவாகியதையும் ஏன் யமுனா மறைக்கிறார். பார்த்திபனின் கதைகளின்மீது விமர்சனத்தை வைக்காது வெறுமனே முதுகுசொறிவது ஒரு படைப்பாளியை சீர்குலைக்கவே செய்யும்.

 

யதார்த்தத்தை லதமமடட னுடன் இணைந்து கொண்டுவரும் எழுத்தாளனாக இருக்கும் பார்த்திபன் இச்சமூகநடைமுறைமீது, கீறலிலிருந்து ஒருவிமர்சனத்தை மட்டும் செய்யும் பார்த்திபன் கதைகள் ஒரு முழுமைபெறாத குழந்தைநிலையிலே உள்ளன. இவை சமூகத்தை விமர்சிப்பதோடு, ஒரு மாற்றுவழியையும் முன்வைக்குமாயின் ஒரு முன்னோக்கிய வரலாற்றுப்பாத்திரத்தை வழங்கமுடியும்.

 

பி. றஜாகரன்.