அண்மையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை பின்னால், காணமல் போன மற்றொரு அரசியல் வரலாறு உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் இணைபிரியாத ஒரு குரலாக, ஒரு நண்பனாகவே தமிழ் மக்கள் தேசிய விடுதலை முன்னணியுடன் (என்.எல்.எப்.ரியுடன்) தன்னை

அன்று இனம் காட்டிக்கொள்ள முனைந்தவர். நாம் இவரை அன்று அடிக்கடி அச்சுவேலியில் சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்கள் முதல் தன்னை மிக நெருங்கி என்.எல்.எப்;.ரி ஆதரவாளராகவே அறிமுகமானவர். உண்மையான வர்க்க விடுதலையை மையமாக வைத்து என்.எல்.எப்;.ரியை தனது கடின உழைப்பால் உருவாக்கிய விசுவானந்ததேவனின் மிக நெருங்கிய நண்பரும் கூட. விசுவானந்ததேவனுடன் அவர் கொண்டிருந்த நீண்ட கால உறவுக்கு, சண் தலைமையிலான இடதுசாரிய போராட்டம் காரணமாக இருந்தது.

ஆனால் அவர் சுயமான சுதந்திரமானதுமான ஒரு செயற்பாட்டாளராகவே நாம் அவருடன் அறிமுகமானோம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எம்முடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர். அன்று டக்ளஸ் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆல் விடப்பட்ட அச்சுறுத்தலை அவர் துணிச்சலாக தனித்தே எதிர் கொண்டவர். தனக்கு மரணம் ஏற்பட்டால் அது ஈ.பிஆர்.எல்.எவ் டக்கிளசால் தான் என்று பதியப்பட்ட கசெட் ஒன்றைக் கூட எம்மிடம் தந்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிரட்டலுக்கு அஞ்சாது துணிச்சலாக நின்ற இந்த மனிதன், அன்று தெல்லிப்பளையில் ~பள்ளர்| சமூகம் மட்டுமே படித்த ஒரு பாடசாலையின் அதிபராக இருந்தவர்.

 

அப்படித் தான் பாடசாலைகளுக்கான அதிபர்களை சாதி மேலாதிக்கம் கொண்ட யாழ் கல்வித்துறை தெரிவு செய்து அனுப்பியது. அங்கு அவர் அந்த மாணவர்களின் கல்விக்காக கடுமையாக உழைத்தார். யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிகளின் இயக்கமாகவே தேசியவிடுதலை இயக்கங்கள் உருவான போது, அராஜகமும், அதிகாரத்துவமும், அடக்குமுறைகளும் அதனுடன் இயல்பாகவே ஒட்டிக் கொண்டது. இந்த இயக்கங்களின் அடாவடித்தனங்கள் பலவற்றை எதிர்கொண்டு போராடிய இந்த மனிதன், தனது நேர்மையான கடுமையான சமூக வாழ்வினால் யாழ் மத்திய கல்லூரியின் அதிபரானார். கையைப் பிடித்து, காலைப் பிடித்து, சாதியைக் காட்டி, அதிகாரத்தைக் காட்டி உயர் பதவிகளை பிடிக்கும் யாழ் ஆதிக்க பிரிவுகளின் பதவி வேட்டைக்கு அப்பால், ஒருவர் யாழ் முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபராக வருவது என்பது மிகச் சிரமமானது. சமூகத்துக்காக தன்னையே அர்ப்பணித்து போராடிய ஒருவர், அந்த மக்களால் நேசிக்கபடும் ஒரு நிலையில் தான் இராசதுரை அதிபரானர். அவர் யாழ் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அடிநிலை சாதியைச் சோந்த (~~நளவர்|| சமூகத்தைச் சேர்ந்தவர்) இவர் சமூகத்துக்கான கடின உழைப்பால் அதிபரானார். அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்ததால், அவரின் மரணத்தின் பின்பும் பல அச்சறுத்தலையும் அவதூற்றையும் மீறி அந்த சமூகத்தால் நேசிக்கப்படும் ஒருவரானார். காக்காய் பிடிக்கும் இன்றைய பினாமிய அதிபர்கள் போல் அல்லது நேர்மையாகவே விடயங்களை அணுகமுற்பட்டவர்.

 

கல்லூரி அதிபர் என்ற ஒரே நிலையில் புலிகள் முதல் டக்ளஸ் வரை ஒரு எம்பி என்ற முறையில் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல், தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. சமூகத்தின் இடிபாடுகளில்; இருந்து அவர் தனது பாடசாலையையும் சமூகத்தையும் மீள கட்டமைக்கும் போராட்டத்தை உயிர் உள்ளவரை அவர் நடத்த வேண்டியிருந்தது. கொள்ளை அடித்தலையே அரசியலாக கொண்ட புலிகளின் விடாப்பிடியான அணுகுமுறை, சமூகத்துக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் ஒருவனுக்கு சினமூட்டுவது இயல்புதான்.


சமூகம் சார்ந்த பொது அமைப்புகளையும் அழித்து வெறும் பெயர்பலகை அமைப்பாக மட்டும், தமது சொந்தத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த அனுமதித்துள்ள எமது யாழ் சமூக அமைப்பில், சமூகத்தை நேர்மையாக நேசித்த ஒருவன் எப்படி இந்த சமூகச் சிதைவை அனுமதித்து அங்கீகரிக்க முடியும்.

 

புலி சார்பு, புலியெதிர்ப்பு அரசியல் எல்லைக்குள் மட்டும் மனிதர்களை முத்திரைகுத்தி சிதைக்கும் எமது சமூக பொது கண்ணோட்டத்தில், உண்மையான மனிதர்களை தேடியெடுக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட இருபது வருடத்துக்கு முன்பு உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே நாம் இவருடன் அறிமுகமானவர்கள். இன்று அதை கண்டறிவது என்பது கூட மிகச் சிரமமான ஒன்றாக உள்ளது. உண்மையான நேர்மையான சமூகத்தை நேசித்த மனிதர்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில், அதை புலி சார்பு புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புதைத்துவிடுவது இன்று அடிக்கடி நிகழ்வதுண்டு.


ஒரு மனிதனின் நோமையான விடாப்பிடியான போராட்டத்தில் முன்மாதிரியாகவே இராசதுரையின் கடினமான போராட்டம் அமைந்திருந்தது. அன்று இவருடன் நெருங்கிய தொடர்பை என்.எல்.எப்;.ரி சார்பாக கொண்டிருந்த ஒருவரின் செய்தியே கீழே உள்ளது.

பி.இரயாகரன்
23.10.2005

 

குதூகலப் பிரியனுக்கு, ஒர் அழகிய பூக்கொத்து!

இராசதுரை மாஸ்ரர்)டீ.நுன.இடீ.யு.இஆ.யு.
வழமைபோல வீதிக்கொலைகளில் ஒன்றாக இந்த குதூகலப் பிரியன், இராசதுரை துடிதுடித்து வீழ்ந்து கிடக்கின்றான்... இவரது மரணத்தை இணையத்தளங்களில் பார்த்தபோது, பழக்கப்பட்ட ஒரு மரணமாகவும், டக்ளசின் நன்பராகவும், புலிகளின் எதிரியாகவும் மட்டுமே இந்த இணையத்தளங்கள் காட்டி நின்றன. ஆனால் இந்த மனிதனின் மீது எவ்வளவு வேகமாக அந்த துப்பாக்கிக் குண்டுகள் பாச்சப்பட்டதே?, அதைவிட இன்னும் இன்னும் அதி வேகமாக அவரால் நேசிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தே எழுந்தனர்! மரணபயத்தின் மௌனத்தையும் கிழித்துக்கொண்டு அந்த மக்களின் ஆத்மபலம், அதிகார வர்க்கத்தின் முகத்தில் அறைந்தது. ஆயினும் இவரை ஒர் அதிபராக அடையாளம் காட்டுவதற்கு மேல் அவரை அடையாளப்படுத்தவோ, அவரைத் தேடவோ முற்படவில்லை. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் அரசியல் இலாபங்களுக்காகவே இம்மரணங்கள் தேவைப்படுகிறது, பேசப்படுகிறது.

 

இற்றைக்கு சரியாக இருபது வருடங்களுக்கு முன்னர், இந்த பிரியமான குதிரைக் குட்டியை, குதூகலப் பிரியனை நீங்கள் சந்தித்திருப்பீர்களானால் இந்த உள்ளதமான மனிதனின் ஆளுமை உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர் நேசித்த அந்த ஒடுக்கபட்ட மக்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்!

 

• சந்ததியார் பற்றி இவரிடம் அப்போது கேட்டிருப்பீர்களானால், சந்ததியார் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது தம்மை கல்லாலடித்த கதையை உங்களுக்குக் கூறியிருப்பார்.

 

• இன்றைய நண்பராகக் கூறும் டக்களசைப்பற்றி அப்போது கேட்டிருப்பீர்களானால், 85 களில் அச்சுவேலி, ஆவரங்கால்-புத்தூர் மினிபஸ் பிரச்சனையின் போது, தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்பெனக் கூறப்படும் ஈ.பிஆர்.எல்.எவ் க்கு எதிராக தனது சொந்தப் பெயரிலேயே தான் சார்ந்த மக்களுக்காக நியாயம் கேட்ட இந்த நியாயவாதியைக் கண்டிருப்பீர்கள். இவரது துண்டுப்பிரசுரத்தை வாபஸ் பெறக்கோரி ஈ.பிஆர்.எல்.எவ் இன் அன்றைய இராணுவத்தளபதி இதே டக்ளஸ் 31 நாள் மரண அவகாசம் கொடுத்ததைக் கதை கதையாக உங்களுக்குச் சொல்லியிருப்பார்.

 

இந்த மரண அவகாசத்தில் கூட அவர் கலங்கி நின்றதில்லை. அப்போதிருந்த எந்த விடுதலை அமைப்பிடமும் தனது உயிருக்காக அடைக்கலம் கோரவுமில்லை. தான் சார்ந்த மக்களின் அந்தக் கோட்டைக்குள், அந்த மக்களின் அதிகார ஆன்மபலத்தில் அந்த நியாயத்தை வெற்றியாக நிலைநாட்டினார். மரணத்தை விடவும் தான் நேசித்த அந்த மக்களின் நியாயத்துக்காக மலைபோல நிமிர்ந்து நின்ற அந்த வைராக்கியமான மனிதனை நீங்கள் கண்டிருப்பீர்கள்!

 

ஆம், இந்த மக்களின் குதூகலப் பிரியனுக்கு ஓர் வரலாறு உண்டு! அது மிகவும் கடினமானதும், நீளமானதும். சரித்து வீழ்த்தப்பட்ட இந்த மனிதனின் உடல்மீது அல்லாமல், அவர் நேசித்த அந்த அன்புக்குரிய மக்கள், தமது அதிகாரத்தின் மீது, அவரின் வரலாற்றை நேர்மையாக எழுதுவர். எழுதியே தீருவர்.


துப்பாக்கிக் குண்டுகளைவிடவும் வெகுஜனத்தொடர்பு வலிமையானது என்பதை உனது மரணத்தால் இவர்களின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டாய் நண்பனே! குதூகலப் பிரியனே!! உனது மக்கள் உனக்காகக் காத்திருக்கின்றனர். உனது இந்த நீண்ட உறக்கத்திலும், அவர்கள் இன்னும் இன்னும் விழிப்பாகவே இருக்கின்றனர் என்ற செய்தியே நாம் உமக்குத்தரும் அழகான பூக்கொத்து.

சுதேகு
211005