இவ்வளவு தெளிவான காலத்தில் நம் மக்களில் பலருக்கு இன்னும் அறிவு ஏற்படாததற்குக் காரணம், மானங்கெட்ட தன்மையோடு அறிவிற்கு ஏற்காத வகையில் கடவுளையும், மதத்தையும், சாஸ்ரத்தையும், கடவுள் கதைகளையும் ஏற்படுத்தி அதனை நம்பும்படியாகச் செய்து விட்டதாலேயே ஆகும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே ஆவார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே மற்ற நாட்டு மக்கள் அறிவு வளர்ச்சி பெறுகின்றனர்.கடவுள் நம்பிக்கையின் காரணமாகவே நம் நாட்டு மக்கள் இன்னும் அறிவு பெறாமல் வளர்ச்சியடையாமல் இருக்கிறார்கள். இந்தக் கடவுளில் நாம் கைவைக்க ஆரம்பித்த பின்தான் இன்று நம் மக்கள் ஓரளவு வளர்ச்சி பெற்று வருகின்றனர்.

நம் நாட்டிற்கு வந்த பெரிய கேடு கடவுள். கடவுளின் பெயரால் மதம், மதத்தின் பெயரால் சாஸ்திரம் என்பதெல்லாம் ஆகும். ஒரு மனிதன் இராமனை, முருகனை, கணபதியை நம்புகின்றான் என்றால் அவனை விட அடிமுட்டாள் எவனுமிருக்க முடியாது.இவற்றை உற்பத்தி செய்திருக்கின்ற கதைகளைப் பார்த்தால் பார்ப்பானைவிட அறிவற்ற ஒரு காட்டுமிராண்டி உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு மடத்தனமாக, காட்டுமிராண்டித் தன்மையுடையதாக அவற்றைக் கற்பித்திருக்கின்றான். அவனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களைத் தான் நம் மக்கள் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு மக்கள் மடையர்களாக இருப்பார்கள். இல்லாத சாமியை செருப்பாலடித்தது உன் மனதைப் புண்படுத்துகிறது என்றால், இத்தனை ஆயிரம் மக்களைச் சூத்திரர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நான் மட்டும் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளக் கூடிய வகையில் நீ பூணூல் அணிந்து கொண்டிருப்பதும், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருப்பதும் வைத்துக் கொண்டிருப்பதும் எங்கள் மனதைப் புண்படுத்துமா இல்லையா? என்று கேட்கின்றேன்.

எங்களை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கிய கடவுளை செருப்பால் மட்டுமல்ல, வேறு எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாமே!இந்து மதக் கொள்கைகளும், சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள்களும் இருக்கின்ற வரை நாம் மனிதர்களாக முடியாது. சாஸ்திரப்படி எந்தக் கொலையும் செய்யலாம், எந்த அயோக்கியத்தனமான அதருமத்தையும் செய்யலாம்; என்பது தருமமாக இருக்கிற வரை எப்படி மனிதன் யோக்கியனாக இருக்க முடியும். இந்தக் கடவுள் மதம் சாஸ்திரங்களைக் காரித்துப்ப வேண்டும்; தீயிட்டுக் கொளுத்தவேண்டும்.இந்தக் காரியத்தை நான் இன்று செய்யவில்லை. 40 - வருடங்களாகச் செய்து வருகின்றேன். திருமதி. இந்திராகாந்தி அம்மையாரே நான் இதை 35- வருடங்களாகச் செய்து வருகிறேன் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மனிதன் ஒரு சிட்டிகை சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டால் அவன் செய்த பாவம் எல்லாம் போகும் என்று சொன்னால், எந்த மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான்? செம்மண் பட்டையடித்துக் கொண்டால் பாவம் போகும் என்றால், எந்த மனிதன் அயோக்கியத்தனம் செய்யாமல் இருப்பான்? நம் மக்கள் அறிவுள்ளவர்களாக வேண்டும். நம் நாடு மற்ற உலக நாடுகளைப் போன்று வளர்ச்சியடைய வேண்டும். மற்ற உலக மக்களைப் போன்று நம் மக்களும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசையாகும்.

நான் சொன்னதைப் போல் பலர் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.

நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. நாம் கெட்டதற்குக் காரணம் நாம் இந்து என்று சொல்லிக் கொண்டதாலேயே ஆகும். இந்து என்பது பார்ப்பானால் உண்டாக்கப்பட்டதே தவிர, எந்தப் புராண இலக்கியத்திலும் இந்து என்பதற்கு ஆதாரமில்லை.

பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்கக்கூடாது, மதக் குறியான சாம்பல் மண் பூசக் கூடாது, கோயிலுக்குப் போகக் கூடாது, எதற்காக நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டும்? அதனால் எவனோ பார்ப்பான் தின்ன வேண்டும் என்பதோடு நாமெல்லாம் முட்டாளாகிறோம். இதைத் தவிர வேறு பயன் பலன் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக வேண்டும்.


(தந்தை பெரியார் அவர்கள் 13.04.1971 இல் திண்டுக்கல்லில் ஆற்றிய சொற்பொழிவு)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_593.html