இன்றையத் தினம் நாம் இங்கு பகுத்தறிவாளர் கழகத்தினைத் துவக்கி வைக்கிறோம் என்றால், அதன் பொருள் மனிதர்கள் கழகத்தினைத் துவக்கி வைக்கிறோம் என்பதே ஆகும். பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர். பகுத்தறிவு இருந்தும் அதைப் பயன்படுத்தாத காரணத்தால் இதுவரை வெறும் மனிதர்களாக வாழ்ந்து வந்தோம். இனி இக்கழகத்தின் மூலமாகத் தான் பகுத்தறிவாளர்களாக வாழப் போகிறோம்.

மனிதன் தோன்றிய காலம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு 5- ஆயிரம் வருட சரித்திரம் தெரிகிறது. இந்த 5 - ஆயிரம் வருடமாக அறிவு இருந்தும். மாறிக் கொள்ளக் கூடிய நிலை இருந்தும் மனிதன் 5 - ஆயிரம் வருடங்களாகப் பல மதங்கள், பல ஜாதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றான். இது பகுத்தறிவுள்ள தன்மையா என்று சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் ஒரு கடவுள் இருக்கிறார் என்கிறான். ஆனால் பல கடவுள்களை வணங்குபவனாக இருக்கிறான்.

மனிதன் கட்டுப்பட்டு நடக்க மதம் என்கின்றான். ஆனால் அது ஒரு மதமாக இல்லை. ஒரே கொள்கையுடையதாகவும் இல்லை. பல மதங்களைச் சார்ந்தவனாகவும் இருக்கின்றான். இதன் காரணமாக மனிதன் வளர்ச்சியடையாமல் போய்விட்டான். சாதாரணமாக இந்த இரு நூறு ஆண்டுகளில் மனிதன் பெற்றிருக்கிற வளர்ச்சியினை ஏன் இதற்கு முன் பெறவில்லை. இன்றுள்ள அறிவுதானே அன்றுமிருந்தது. அன்று முடியாதது இன்று எப்படி முடிகிறது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் சராசரி ஆயுள் அய்ந்து வயதாக இருந்தது. இன்றைய தினம் மனிதனின் சராசரி வயது என்ன என்றால், நம் நாட்டில் 50, வெளிநாடுகளில் 70. இன்னும் 10, 20 - ஆண்டுகளில் 70 ஆண்டுகள் சராசரியாக வாழ்வோம். வெளிநாட்டானின் சராசரி வயது 100 ஆக இருக்கும். 2000 - ஆண்டுகளுக்கு முன் கடவுள், மதம், மதத்தலைவர்கள், வள்ளுவன் எல்லாமிருந்தும் அன்று ஏன் மனிதனின் சராசரி வயது அய்ந்தாக இருக்க வேண்டும்?

அன்று உலக ஜனத்தொகையே 20 - கோடிதான். கி.பி.1465 - இல் உலக ஜனத்தொகை 45 - கோடி. 1650 -இல் 47 - கோடி; 1800 -இல் 70 - கோடியாயிற்று. கிட்டத்தட்ட 135 - வருடத்தில் 23 - கோடி பேர்தான் அதிகமானார்கள். 1900 -த்தில் 165 - கோடி; 1914 - க்கும் 1954 -க்கும் இடையில் 40 - வருடத்தில் உலக ஜனத்தொகை 320 - கோடி ஆயிற்று. இந்த 40 - ஆண்டுகளில் மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி இருக்கின்றான்.

மனிதனின் அறிவு வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் போக்குப் போனால் வெளிநாட்டு மக்கள் சராசரி 100 - ஆண்டுகள் வாழ்வார்கள். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தியதால் வளர்ந்திருக்கின்றான் என்பதற்கே. வள்ளுவன் காலத்தில் 100 -க்கு ஒருவன் கூடப் படித்தவன் இருக்கமாட்டான்.

நம் நாட்டை எடுத்துக் கொண்டால் 1920 -இல் நாம் 100 -க்கு 5 - பேர்தான் படித்திருந்தோம். வெளிநாட்டான் 100 -க்கு 60, 65 - பேர்தான் படித்திருந்தான். இப்போது நம்மவன் 100 - க்கு 50 - க்கு மேல் படித்திருக்கிறான். வெளிநாட்டான் 100 - க்கு 94, 97 - பேர் படித்திருக்கிறான். நமக்கும் அறிவிருக்கிறது மற்றவனுக்கும் அறிவிருக்கிறது; இருந்தும் நம்நாட்டில் நாம் 100 - க்கு 97 - பேராக இருக்கிறவர்கள் கீழ்ச் சாதியாகவும், 100 -க்கு 3 - பேராக இருக்கிறவன் உயர்ந்த சாதியாகவும் இருக்கிறான் என்றால், இதற்குக் காரணம் என்ன? 100 - க்கு 97 - பேராக இருக்கிற இந்நாட்டு மக்கள் ஏன் கீழ் மக்களாகவும், சூத்திரர்களாகவும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாகவும் இருக்க வேண்டும்?

நம் தாய்மார்கள் ஏன் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? இத்தனை ஆண்டு காலம் இருந்து அடைந்த பலன் என்ன? என்பதைச் சிந்திப்பதோடு இதற்குக் காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டாமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் என்று தெரியும் போது அவற்றை அழித்து ஒழிக்க வேண்டாமா? என்று கேட்கிறேன்.வள்ளுவன் பெரியவன். அவன் பார்ப்பானை ஒத்துக் கொள்கிறான். பார்ப்பானின் நடப்புகளை, சாஸ்திரங்களை ஒத்துக் கொள்கின்றான். அவன் வாழ்ந்த காலம் 2000 - ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போதிருந்த அறிவு அவ்வளவு தான். அந்த அறிவு இன்றைக்குப் பயன்படாது.

இராமலிங்கம் சொன்னார் என்றால், அதுவும் வைதீகக் கருத்துத்தான். பல மூடநம்பிக்கைகள் நிரம்பி இருக்கின்றன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் கடவுளைக் குறிப்பிட்டே பாடியிருக்கிறார். நான் எந்த இலக்கியத்தையும் தொட்டவனல்ல. என் அறிவைக் கொண்டு சிந்தித்ததைச் சொல்கின்றேன். எவன் மீது பற்றுக் கொண்டாலும் அவன் பின்னால் தான் செல்லத் தோன்றுமே தவிர, அவன் தன் சொந்த அறிவுப்படி செல்லத் தோன்றாது. மனிதன் மாறுதலுக்கு ஆளாக வேண்டும். மாறுதல் என்றால் சிந்தனைக்கு ஆளாக வேண்டும். சிந்தனை என்றால் பற்றற்றுச் சிந்திக்க வேண்டும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பகுத்தறிவுவாதி என்று யாரைச் சொல்வது? வள்ளுவனைப் பின்பற்றினால், இன்னொருவனைப் பின்பற்றினால் பகுத்தறிவுவாதியாக முடியுமா?


(02.12.1970 அன்று சேலத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 15.03.1971)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_23.html