சூத்திரர்களுக்குத் திருமணம் கிடையாது. எனவே சூத்திரனுக்குத் திருமணம் பார்ப்பான் செய்து வைக்க வேண்டுமானால் பூணூல் போட்டுத் தான் செய்து வைப்பான். காரணம் நான் முன் சொன்னபடி நாம் சூத்திரர்கள். நமக்கு சாஸ்திரப்படி திருமண உரிமை கிடையாது. கீழ்ச்சாதிக்காரனுக்குத் திருமணம் செய்து வைத்தால் பார்ப்பானுக்கு தோஷம் என்று வேறு எழுதி வைத்து இருக்கிறான். அதாவது உரிமை இல்லாதவனுக்கு உரிமை செய்து வைத்தால் பார்ப்பானுக்குத் தோஷம் ஆகும்.சூத்திரன் படிக்கக் கூடாது. சூத்திரனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பார்ப்பான் நரகத்துக்குப் போவான் என்று மனுநீதி கூறுகின்றது.இடைக்காலத்தில் தான் நான்காம் சாதியாருக்கு திருமணச் சடங்கு புகுத்தப்பட்டது. முன்பு மேல் மூன்று வருணத்திற்கு மட்டும் தான் இருந்து வந்தது.தமிழனுக்கு பழைமையான நூல் என்று பெருமை பாராட்டுகின்றார்களே அந்தத் தொல்காப்பியத்திலேயே உள்ளது.பார்ப்பான் தனது வருமானத்தைப் உத்தேசித்தே நமக்குத் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொள்கிறான். நாமும் மேல் சாதிக்காரன் வந்து பண்ணினால் தான் பெருமை என்று எண்ணி அழைக்கின்றோம். இதன் மூலம் இழிந்த சாதி என்பதை ஒத்துக் கொள்ளுகின்றோம் என்பது தானே பொருள்.சமூதாயத்துறையில் நம் இழிநிலைக்குக் காரணமான கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். மணமக்கள் பகுத்தறிவுடனும், சிக்கனமாகவும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடனும்- வாழ வேண்டியது அவசியம்.

 

(16-09-1962- அன்று இராமநத்தம் திருமணத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- “விடுதலை” – 26-09-1962

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_04.html