பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

பொதுவாகத் திராவிடர் கழகத்தார் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுபவர்களும் அல்ல. அரசியலில் தலையிடுபவர்களும் அல்ல. தேர்தலில் நிற்கக்கூடாது என்பது எங்கள் கொள்கையாகும். எங்கள் கொள்கை மக்கள் சமூதாயத்தில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம், இழிவு, மடமையைப் போக்கி விழிப்பு அடையச் செய்ய வேண்டும் என்பதுதான்.

 

முதலாவது நமக்கு நெடுநாள்களாகக் கல்வி இல்லை. நம் மூவேந்தர்கள் காலம் முதல் இந்த நிலை. நாம் சாதியிலோ இழிமக்கள் - காட்டுமிராண்டிகள் நமக்கோ புத்தி இல்லை, மடையர்களாக இருக்கின்றோம். இவைபற்றி எவனும் கவலைப்படுவது இல்லை. எடுத்து விளக்குவதும் இல்லை. இப்படி நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம் என்றால் இது பார்ப்பானுடைய அயோக்கியத்தனம் மட்டும் அல்ல -நமது மடத்தனமும் கூட ஆகும். இந்த விஷயங்களில் எங்களுக்கு ஏற்பட்ட கவலை, வெட்கம், ரோஷம் இவற்றின் காரணமாக இந்தக் கொடுமைகள் எல்லாம் ஒழிக்கவே இப்படிப் பாடுபடுகிறோம்.

 

எங்களால் மற்றவர்கள் மாதிரி சட்டசபைக்கு நின்று வெற்றி பெற்று மந்திரி பதவிக்கோ, பார்லிமென்டுக்கோ போகத்தெரியாதா? நாங்கள் உட்கார்ந்தால் சட்டசபை நாற்காலி முள்ளு மேல் முள்ளு குத்துமா? நாங்கள் மற்றவர்கள் மாதிரி சம்பளம் வாங்கித் தின்றால் கசக்குமா? நான் மட்டும் தொடர்ந்து அரசியலில் இருந்தால் நான் தின்ற மிச்சம்தானே இன்று மற்றவர்களுக்கு. நண்பர் வீரமணி கூறியதுபோல நான் காந்தியுடனேயே சட்டசபைக்குப் போகக் கூடாது என்று வாதாடியவன். சட்டசபை என் காலடியில் வந்து வலிய விழுந்த காலமும் உண்டு. நண்பர் ஆச்சாரியார் அவர்கள் வந்து வலிய விழுந்த காலமும் உண்டு.

 

நண்பர் ஆச்சாரியார் இன்று உயிருடன்தான் இருக்கின்றார். நான் காங்கிரசை விட்டு வெளிவந்த பிறகும்கூட எங்கள் வீடு தேடி வந்து அவர் கூறினார் நாயக்கரே நீங்கள் இல்லாமல் சட்டசபைக்குச் செல்லுவது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டப் (துன்பமும் - இழப்பும்) பட்டவர் காங்கிரசில் சேர வேண்டாம். கதர் போட வேண்டாம். நீங்கள் பாட்டிலே கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருங்கள். உங்களுக்குச் சட்டசபை மெம்பர் வேலை பண்ணி வைத்து விடுகின்றோம் என்றார். நான் மிகவும் அவர் மீது அனதாபப்பட்டு உங்கள் அழைப்புக்கு மிகவும் தலைவணங்குகின்றேன். என்னால் ஒத்துக் கொள்ள இயலாது என்று மறுத்து விட்டேன். நான்கு நாள் அவகாசம் கொடுத்து யோசனை பண்ணிச் சொல்லுங்கள் என்றார். அப்பவும் மறுத்துவிட்டேன். அவருடன் நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் எங்கள் ஊர் காங்கிரஸ்காரர். நண்பர் ஈஸ்வரன் அவர்களும் வந்து இருந்தார். அவர்களுக்கும் நான் கூறுவது பொய் அல்ல என்று தெரியும். இருவரும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

அடுத்து ஆச்சாரியார் 1937 - இல் மந்திரி பதவிக்கு வந்தாரே அந்த சமயத்திலேயே எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பார்ப்பனரையே எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பார்ப்பனரையே என்னிடம் அனுப்பி மேல்சபை நாமிநேஷன் இரண்டு காலியாக வைத்துள்ளேன். அது உங்களை உத்தேசித்தே நீங்கள் எப்படியும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தூது அனுப்பினார். நான் மறுத்துவிட்டேன். பிறகு அவர் நான் வெளியில் இருந்து ரகளை பண்ணுவேன் என்று எங்கள் கூட இருந்த இராமநாதனைக் கூப்பிட்டு மந்திரி பதவி கொடுத்தார். ஆச்சாரியார் அவர்கள் மந்திரிப் பதவி ஏற்றவுடன் இந்தியைக் கட்டாயமாக ஆக்கியபோது நாங்கள் எதிர்த்துப் போராடினோம்.

 

அப்போது தான் நம் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்ச்சி வந்தது. நமது தமிழ்ப் புலவர்களுக்கு எல்லாம் உணர்ச்சி வந்தது. புத்தகக் கடைக்காரர்கள் எல்லாம் தனித்தமிழ் புத்தகம் போட ஆரம்பித்தார்கள். 2000 - பேர்களுக்கு மேல் சிறைக்கு அனுப்பினார். என்னை மூன்று வருஷம் தண்டித்தார். இதன் காரணமாக எதிர்ப்புகள் உண்டாகி சமாளிக்க முடியாமல் அவர் மந்திரி பதவியை விட்டுப் போகும்படி நேர்ந்தது. அப்போததான் என்னைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கும்படி இரண்டு கவர்னர் மட்டும் அல்ல - கவர்னர் ஜெனரலே சொன்னார். நண்பர்களை எல்லாம் விட்டுக் கூறச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். இந்த இராஜா சர் முத்தையா செட்டியார் எவ்வளவோ வற்புறுத்தினாரே!

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல காலம் வருவதைத் தவற விட்டுவிடாதீர்கள் என்று வற்புறுத்தினார். எனக்கு எவ்வளவோ உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் இதன் காரணமாக என் மீது கோபித்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியையே விட்டுவிட்டுப் போய்விட்டார்களயே! இந்த இராஜாஜியே என்னிடம் வந்து கெஞ்சினார் நாயக்கரே மந்திரி பதவியை ஒத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ்காரனால் தொல்லை வராமல் நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். காந்தியிடம் வேண்டுமானாலும் சம்மதம் பெற்று வருகின்றேன். நீங்கள் இஷ்டப்பட்டால் எனக்கும் ஒரு மந்திரியாக இடம் கொடுங்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து உதவுகின்றேன் என்றார். அப்போது இந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி யாரும் இருந்தார். நாங்கள் இரகசியம் பேச ஆரம்பித்ததம் நடைக்குப் போய்விட்டார். நான் ஒரு வாரத்தில் பதில் சொல்லுவதாகத் தட்டிக் கழித்து ஒரு வாரம் ஆனதும் மறுத்துவிட்டேன்.

 

தோழர்களே! நாங்களே (திராவிடர் கழகத்தின்) நின்றால் எங்களால் வெற்றி பெற முடியாது என்று உங்களால் சொல்ல முடியாது. 1952 - இல் காங்கிரஸ் ஆட்சியை ஆறவுன்ஸ் அரசாங்கம் அராஜக அரசாங்கம் என்று எல்லாம் கூறித் தோற்கடித்தேனே. 375 - சட்டசபை ஸ்தாபனத்தில் 175- பேர்களே காங்கிரசும் பாக்கி 200 - எதிர்கட்சியும் வரும்படியாகச் செய்தேனே!

 

இப்படி நாங்கள் ஜெயிக்க வைத்து இருக்கும் போது நாங்கள் நின்றால் 6-7 பேராவது ஜெயிக்கமாட்டோமா? இந்த கம்யூனிஸ்ட்கள் எங்கள் வீட்டு வாசலில் அல்லவா காத்துக் கொண்டு கிடந்தார்கள்? இப்படி மெஜாரிட்டியாக வந்ததும் என்னை அல்லவா மந்திரி சபை அமைக்கும்படி இவர்கள் எல்லாரும் கூறினார்கள். நான் கூறினேன், மந்திரிசபை அழைப்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் என்ன திட்டம் என்று வகுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு இந்தக் கம்யூனிஸ்ட்கள் பார்ப்பனர்களுடன் சேர்ந்த கொண்டு முதலில் மந்திரி சபையை ஏற்றுக் கொள்வோம். பிறகு திட்டங்கள் வகுக்கலாம் என்றார்கள். நான் கூடாது முதலில் தான் திட்டம் வகுக்க வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க இடம் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வற்புறுத்தினேன்.

 

இந்தக் கம்யூனிஸ்ட்கள் தந்திரமாகப் பார்ப்பனர்களுடன் உறவு கொண்டு கொலைகாரப் பார்ப்பான்களான பிரகாசத்தை முதன் மந்திரியாகவும் அடுத்த மந்திரியாகவும் அடுத்த மந்திரியாக தென்னேட்டி விஸ்வநாதம் ஆகியவர்களைக் கொண்டு வர முயற்சித்தார்கள். நான் உடனே பத்திரிகையில் எழுதினேன். வெற்றி பெற்ற இந்த அய்க்கிய முன்னணிகள் மந்திரிசபை அமைப்பைதைவிட தோற்றுப்போன காங்கிரஸ் பதவிக்கு வந்தாலும் பரவாயில்லை என்று எழுதினேன். உடனே இராஜாஜி தாம் முன்னுக்கு வந்து கவர்னரிடம் தம்மை நாமிஷேனில் மெம்பராக ஆக்குங்கள். என்னிடம் பொறுப்பைக் கொடுங்கள். நான் எப்படியும் சரி பண்ணி மந்திரிசபை அமைத்த விடுகிறேன் என்று கேட்டார். பிரகாசா என்ற கவர்னரும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களைப் பார்த்து மெஜாரிட்டியாக நீங்கள் வந்தபோதும் நீங்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம் குறைவாக இருந்தாலம் ஒரே கட்சிக்காரர்கள் என்று கூறி ஆச்சாரியாரைக் கூப்பிட்டு அவரை மேல்சபை மெம்பராக நாமிநேஷன் செய்து மந்திரிசபை அமைக்க அவருக்கு அனுமதி அளித்தார்.

 

இராஜாஜி (மந்திரி சபை) பொறுப்பை ஏற்றுக் கொண்டு படையாச்சிக்கு ஒரு மந்திரி தருகின்றேன் என்றார். அவர்கள் 10-12 பேர்கள் வந்து சேர்ந்தார்கள். வெள்ளாளருக்கு ஒரு மந்திரி என்றார். வெள்ளாளர்கள் எல்லாம் அவருடன் போய்ச் சேர்ந்தனர். மற்றும் பர்மிட் லைசென்ஸ் இப்படிக் கூறிப் பலரைச் சேர்த்து மந்திரிசபை அமைத்துவிட்டார். பதவிக்கு வந்தவுடனே நாம் எந்த உணவுக் கன்ட்ரோலையே காரணம் காட்டி காங்கிரசை எதிர்த்தோமா அந்த உணவுக் கண்டிரோலை எடுத்தார். நாங்கள் இராஜாஜியைப் பாராட்டி எழுதினோம். பிறகு பலமாக அமர்ந்து கொண்டோம் என்ற கருத்தில் பேயாட்டம் ஆட ஆரம்பித்தார். நமது கல்வியில் கைவைத்து 6000- பள்ளிகளை ஒரு நேரம் தான் படிக்க வேண்டும் - பாக்கி நேரம் அவன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

 

பிறகு நாங்கள் தான் (திராவிடர் கழகத்தினர்) பலாத்காரத்தில் இறங்குவோம் என்று அச்சுறுத்தி ஒழித்தோம். கண்ணீர்த்துளிகள் நாளை ஆட்சிக்கு வந்தார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என்பதற்கு கார்ப்பரேஷனே (மாநகராட்சி) போதுமே. கார்ப்பரேஷன் இன்று கழுதை பரண்ட களமாக அல்லவா உள்ளது? இவர்கள் நாளை பதவிக்கு வந்தால் எவ்வளவு விபரீதமாகப் போய்விடும்இ ஆச்சாரியார் அவர்கள் கூறுகின்றார். தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும். வர்ணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார்.

 

இப்படிப்பட்டவர்களை உள்ளே விட்டால் ஆபத்து நம்மை முன்னேறாமல் மட்டம் தட்டுவார் என்று எதிர்க்கின்றோம். இந்தக் கண்ணீர்த் துளிகள் யோக்கியமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்னிடமல்லவா வர வேண்டும். நீங்கள் ஆச்சாரியார் ஆட்சி ஒழிய வேண்டும் என்று கூறும் காரணம் எல்லாம் சரி. எங்களுக்கு 5-6 பேர்களுக்கு எப்படியாவது வகை செய்து கொடுங்கள். நாங்களும் உங்களோட கூடிக் கொண்டு ஆச்சாரியாரை எதிர்கின்றோம் என்று அல்லவா வரவேண்டும்? அதனை விடுத்து நமக்குக் ( தமிழர்களுக்கு) கேடு செய்வதே தொழிலாகக் கொண்ட ஆச்சாரியாரிடமா சென்று அவர் காலடியில் விழுவது?

 

ஆச்சாரியார் வருணசிரம தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்றார். அவன் அவன் சாதித் தொழில் செய்ய வேண்டும் என்று பொம்மை போட்டுக் காட்டி இருக்கின்றார். நீ போய் அவரை (இராஜாஜியை) ஆதரிக்கின்றாய் என்றால் என்ன நியாயம்? ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தால் தவில் அடிக்க வேண்டியவன் தவில் அடிக்கவும், தாளம் போட வேண்டியவன் தாளம் போடவும், பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பவர்கள் பொட்டுக் கட்டிக் கொள்ளவும், பரியாரி (முடிதிருத்துநர்) சிரைக்கவும், வண்ணான் வெளுக்கவும் வேண்டும் என்று தானே சட்டம் போடுவார்?

 

எவன் எவன் என்ன சாதித் தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பரவாயில்லை. நமக்குப் பதவி கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்த நீங்கள் (கண்ணீர்த்துளிகள்) பின் எதைச் செய்யத் துணியமாட்டீர்கள்? நேற்று சொன்னாரே பறையன் இனத்தில் வந்த திரு.சண்முகம் பிள்ளை எங்கள் நிழல் பட்டாலே குளிக்க வேண்டும். இத்தனை அடி தூரத்தில் இருக்க வேண்டும் என்று ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்த நிலை மாறி நாங்கள் நாற்காலியில் (பதவியில்) உட்காரும் வாழ்வு பெற்றோம் என்கின்றாரே? பறையருக்கே அந்த நிலை என்றால் மற்ற நமது (மற்ற தமிழர்) நிலை எப்படி உயர்ந்துள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

 

இப்படிப்பட்ட பாதகர்களை இந்த சென்னைவாசிகளான பைத்தியக்காரர்கள் தானே ஓட்டுப் போட்டுத் தேர்ந்து எடுத்துள்ளீர்கள். மற்றப்படி கிராமத்தில் உள்ள மக்கள் எல்லாம் கூட இவர்கள் வண்டவாளங்களை எல்லாம் உணர்ந்து உள்ளார்கள். இந்தப் பட்டணத்து மக்கள்தானே உணர்ந்து கொள்ள முடியாத நிலை. மற்ற ஊர்க்காரன் இந்த கண்ணீர்த்துளிகள் போய் ஓட்டு கேட்டால் என்ன கூறுகின்றார்கள்? என்ன எங்களை பட்டணத்துக்காரர்கள் என்றா நினைத்துக் கொண்டு பேசுகின்றாய் என்றல்லவா கேட்கின்றார்கள்? நீ பதவிக்குப் போய் நாசமாய்ப் போவதற்கு மூன்று கோடி தமிழ் மக்களையும் அல்லவா காட்டிக் கொடுக்கின்றாய். நீ சொந்தத்தில் தயாரான அண்ணா துரையாக இருந்து செய்தாயானால் எனக்குக் கவலை இல்லை.

 

எங்களிடம் (திராவிடர் கழகத்திடம்) இருந்து தயாரான அண்ணதுரை என்று கூறிக்கொண்டல்லவா இப்படிப்பட்ட பாதகத்தை நீ செய்கின்றாய்? வேறு நாடாக இருந்தால் இவர்களைத் தூக்கில் அல்லவா போடுவார்கள்? பர்மாவில் எட்டு மந்திரிகளை சுட்டுக் கொன்றது போலக் கொன்று போடாமல்) இந்த நாட்டில் இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணுகிறவர்களுக்கு அல்லவா இங்கு மரியாதை நடைபெறுகின்றது?

 

(16-11-1961 அன்று சென்னை - இராயபுரத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு விடுதலை 18-11-1961) பெரியார் களஞ்சியம் பொகுதி : 9 பக்கம் : 85)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_09.html