ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை பெண் தானும் தனது பங்குக்கு நுகரக் கோருவதா பெண்ணியம்? இப்படித்தான் குஷ்பு விவகாரத்தில் பலரும் தம்மைத் தாம் வெளிப்படுத்தினர். இவர்கள் பலர் குஷ்புவை பெண்ணியல்வாதியாகவும், தம்மை அவரின் சிஷ்சிகளாகவும் வரிந்து கட்டிக் கொண்டு கூத்தாடினர்.

 


ஆணாதிக்க உலகமயமாதல் கட்டமைக்கும் தனிமனித உலக ஒழுங்கு உருவாக்கும் சமூக வெறுப்புகளே சமூக ஒழுக்கவிதிகளாகி விபச்சாரமாகின்றன. இன்றைய உலகமயமாதல் உருவாக்கும் வக்கிரமான சந்தை நுகர்வே, இன்றைய பாலியல் நுகர்வுக்குமான அடிப்படையாகியுள்ளது. இதில் ஆண் மட்டும் நுகர்வதற்கு பதில், பெண்ணையும் நுகரக் கோரும் உலகமயமாதலின் தாராளமயமாதல் நிகழ்ச்சிநிரல் தான், தீவிர பெண்ணியமாக வெளிவருகின்றது. உலகமயமாதல் என்ற ஆணாதிக்க நிகழ்ச்சி நிரலில், தீவிரமான பெண்ணின் சோரம் போகும் பங்காற்றலைத் தான், இன்று பெண்ணியமாக காட்டி, அதைப் பலர் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றனர். கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது. ஆணின் ஆணாதிக்க மனிதவிரோதச் செயல்கள் சமூகவிரோதத் தன்மை கொண்டதாக இருப்பதை காணமறுப்பதே, பெண்ணியமாகிவிட்டது. சமூகத்தன்மையை மறுக்கும் தனிமனித சுயநலம் கொண்ட ஆணாதிக்க ஆணை, பெண்ணின் சமூக நிலைக்கு ஒரு சமூக உயிரியாக மாற்றி அமைக்கப்பட வேண்டியதே பெண்ணியம் என்பதை மறுப்பதே, இன்று தீவிர பெண்ணியத்தின் பெயரில் நிகழ்கின்றது. பெண் ஆணாதிக்கவாதியாகின்றாள்.


தீவிர பெண்ணியம் என்ற பெயரிலும், மாற்று இலக்கியம் என்ற பெயரிலும் புலம்பெயர் நாடு முதல் இந்தியா இலங்கை வரை இன்று முன்வைக்கும் கருத்துகள், மக்களின் சமூக வாழ்வுடன் எந்தவிதத்திலும் தொடர்பற்றவை. சொந்த தனிமனித வக்கிரங்கள், தனிமனித ஆசைகளும், ஒழுக்ககேடான முறைமையில் சமூகம் மீது தமது அதிகாரத்தின் மூலம் திணிக்கப்படுகின்றது. சமூக தேவைகளை மறுக்கும் நுகர்வுப்பாலியலே தீவிர பெண்ணியமாகி, அதுவே குட்டிபூர்சுவாப் புலம்பல்களாகவும் கொப்பளிக்கின்றது.

 

உதாரணத்துக்கு அண்மையில் லண்டனில் நடந்த பெண்கள் சந்திப்பு தனது ஒழுக்ககேட்டின் மீது நின்று புலம்பியதை இந்தியாரூடே பத்திரிகைக்கு பேட்டியாக கொடுத்திருந்தனர். அதில் "குஷ்பு தெரிவித்த கருத்துகளை மனதார வரவேற்று அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது." இது அண்மையில் இந்தியாரூடே பத்திரிகையில் வெளியாகிய செய்தி.

 

இதே போன்று பாரிஸ் இலக்கிய சந்திப்பு தனது சமூக விரோத ஒழுக்ககேட்டில் ஒர் அங்கமாக "தமிழகத் திரைப்படக் கலைஞர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் குஷ்புவின் பேச்சுரிமை கருத்துரிமையை மறுத்து குஷ்புவை தமிழ் நாட்டை விட்டே விரட்டுவோம் எனக் கூறியும் குஷ்புவின் கருத்துரிமைக்காக குரல் கொடுப்போரை அச்சுறுத்தியும், குஷ்பு மீது பலவழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் கலாச்சார அடிப்படைவாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று கூறி, தமது சொந்த இலக்கியச் சந்திப்பு மரபை மீறி திடீர் தீர்மானம் எடுக்கின்றது.

 

கவர்ச்சியைக் காட்டியே சமூகத்தின் முன்னிலைக்கு வந்த ஒரு மேட்டுக்குடி பெண்ணின் நுகர்வு சார்ந்த சொந்த பாலியல் வக்கிரத்தை, அதையே அவரின் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் நியாயப்படுத்துவது நிகழ்கின்றது. குஷ்புவின் கருத்துச் சுதந்திரத்தை கோரும் இவர்கள், தங்கபச ;சானின் கருத்துச் சுதந்திரத்தை குஷ்பு மறுத்ததை பற்றி இவர்கள் யாரும் பேசமுற்படவேயில்லை. உலகமயமாதல் உருவாக்கும் சமூக ஒழுக்கக்கேட்டை ஆதரிக்க, கருத்துச் சுதந்திரம் என்ற இலக்கிய அரசியல் பம்மாத்து இவர்களுக்கு தேவைப்படுகின்றது. அனைத்துக்கும் கருத்துச் சுதந்திரம் என்றால், பிறகு ஏன் இதில் மட்டும் சந்தர்ப்பவாதம்.

 

குஷ்புவுக்காக மூக்கால் சிந்திப் புலம்புகின்றனர். குஷ்பு சொன்ன பாலியல் நடத்தைநெறி பற்றி, இவர்களுக்கு மாற்றுக் கருத்துகிடையாது. மறுபக்கத்தில் சமூகத்தில் பாலியலை இயற்கையாக உணர்ந்து வாழமுடியாது, கோடானுகோடி மக்கள் கூனிக்குறுகி இந்த சமூக அமைப்பில் வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் என எதுவும் செய்ய வக்கற்றரவராகவே, தமது சொந்த அரசியல் நிலைப்பாட்டால் புளுத்துக் கிடக்கின்றனர். பெண்ணியம் பற்றிய இந்த தீவிர பெண்ணியத்தின் தத்துவ வறுமை, உலகமயமாதல் வழங்கும் விபச்சாரத்துக்கு கொடிபிடிக்க தூண்டுகின்றது. இலக்கியச் சந்திப்பும் சரி, அதனுள் இருப்போரும் வெளியில் உள்ளவர்களும் சேர்ந்து கூடும் பெண்கள் சந்திப்பும் சரி, சமூகத்தை இழிவாடி அதில் தம்மை மிதப்பாக்கி கூத்தடிக்கும் கும்பல் தான் என்பதை மறுபடியும் நிறுவியுள்ளது. சமூகத்துடன் எந்த தொடர்பையும் கோட்பாட்டு ரீதியாகத் தன்னும் கொள்ள மறுக்கும் இவர்களின் அரசியல் வக்கிரமானது. இதில் பலர் புலியெதிர்ப்பு கும்பலுடன் கூடிக்குலவுபவர்கள். பலர் சமூக சீரழிவுவாதிகள். சிலர் பாலியல் சுதந்திரம் பேசி, அதில் கலந்துகொள்ளும் ஒரு சில பெண்களையாவது பாலியல் ரீதியாக நுகர முயற்சிப்பவர்கள். அதற்காகவே பெண்ணியம் பேசும் ஆண்களும் உள்ளனர். இப்படி பல ரகங்கள். தமது சொந்த ஒழுக்கக்கேட்டில் நின்று, கோசங்களையும் தீர்மானங்களையும் மற்றவர்களின் கருத்துகளை இழிவாக மட்டம் தட்டியே திணிக்கின்றனர்.

 

இலக்கியத்தின் பெயரில், பெண்ணியத்தின் பெயரில் பாலியல் ரீதியாக பெண்களை நுகர்பவர்கள்; அல்லது நுகர முனைபவர்கள் குஷ்புக்காக தூக்குக ;காவடி எடுக்கின்றனர். இந்த ஆணாதிக்க நுகர்வுக்கு ஏற்ப, தத்துவ வறுமை கொண்ட பெண்கள் கோட்பாட்டு ரீதியாக அந்த பாலியல் சுதந்திரத்துக்கு தத்துவ விளக்கம் அளித்து, தம்மைத்தாம் ஆணாதிக்க வக்கிரத்துக்கு இசைவாக சிதைத்துக் கொள்பவர்கள். இப்படி பலர். கடந்த புலம்பெயர் இலக்கிய வரலாற்றிலும் இதற்கென நிறையவே உயிருள்ள சாட்சியங்கள் உண்டு. நான் இலக்கியச் சந்திப்புக்கு முன் எழுதிய விமர்சனத்தின் அடிப்படையில், இவர்களின் சீரழிவு உள்ளது. இம்முறை அது உலகமயமாதலை தலித்தியத்தின் பெயரில், பெண்ணியத்தின் பெயரில் நியாயப்படுத்துகிறது. இந்த அடிப்படையில் தான் குஷ்பு தனது சொந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன் சார்ந்து வெளியிட்ட, நுகர்வு வெறிசார்ந்த பாலியல் சுதந்திரம் என்ற கருத்துக்கு பின்னால் இவர்களும் சேர்ந்து கூத்தாடினர்.

 

பெண் விடுதலை என்பது பாலியல் சுதந்திரம் அல்ல

 

பெண் விடுதலையைப் பற்றி பேசமுற்படுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை முதலி;ல் தெளிவுபடுத்த வேண்டும். சூக்குமமாக சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்;ப கூத்தடிப்பது பெண்ணியமல்ல. முதலில் தெளிவாக இன்றைய ஆணாதிக்க உலகைப்பற்றிய கருத்துகளை சமூகத்தின் முன் வைக்கவேண்டும்;. ஆணாதிக்க உலகை எப்படி மாற்றினால், அது பெண்ணியமாக இருக்கும் என்பதை முரணற்ற வகையில் தெளிவாக்க வேண்டும். அதாவது ஆணாதிக்கமற்ற சமூகமாக, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்;. அங்கும் இங்குமாக ஒழிந்து நின்று கொண்டு, கருத்துரைக்க முடியாது. பெண்ணியத்தை சூக்குமமாக இருண்டவெளியில் வைத்து சமூகத்தை கொச்சைப்படுத்த முடியாது. இங்கு தனிப்பட்ட ஒரு பெண், தனது சொந்த வாழ்வியல் துயரத்தை போக்க போராடுவதற்கு, இது எந்தவிதத்திலும் தடையானதல்ல. சமூகத்துக்கு கருத்துரைப்பவர்கள், இப்படித் தான் பெண்கள் வாழவேண்டும் என்று கூற முற்படுபவர்கள், நிச்சயமாக தெளிவான வகையில் பெண்ணியத்தை விளக்கியாகவேண்டும். நாம் குறிப்பாக இன்றைய சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த ஆணாதிக்கத்தில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டும்;. இன்றைய அனைத்து சமூக பொருளாதார அமைப்பும், அது சார்ந்த சித்தாந்தங்களும், மனித கோட்பாடுகள், இது உருவாக்கும் வாழ்கை முறைகள் அனைத்தும் ஆணாதிக்கம் சார்ந்தது. இதில் இருந்து பெண்ணியம் எப்படி வேறுபடுகின்றது என்பதே, அடிப்படையான பெண்ணியம் பற்றிய புரிதலாகும், விவாதமாகும்;. குஷ்புவின் ஒழுக்கக்கேடான சமூகவிரோதக் கூற்றுகள் கூட, இந்த ஆணாதிக்க அமைப்பில் இருந்தே வருகின்றது.

 

ஆணாதிக்க வடிவங்களினுள் சோரம் போகும் பெண்ணியம்

 

இன்றைய ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பில், அனைத்தும் ஆணாதிக்க வடிவங்கள் தான். எந்த ஆணாதிக்க ஒழுக்கமும், இருக்கும் சமூக அமைப்பில் மறுக்கப்படும் போது அவையும் ஆணாதிக்கம் தான். அதாவது இருக்கும் சமூக அமைப்பை மறுக்கும் போது தான், ஆணாதிக்கமற்ற நிலை உருவாகின்றது. இன்று இருக்கும் ஆணாதிக்க சமூகப் பொருளாதார அமைப்பு என்ன எனப்பார்ப்போம்.

 

1. உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, பெண்ணைப் பற்றி முன்வைக்கும் பார்வை என்ன என்பதையே எந்தப் பெண்ணியமும் முதலி;ல் தெளிவாக்க வேண்டும். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளிக்க முன், இது தெளிவாக்கப்பட வேண்டும். இதில் இருந்துதான், நாம் சமூகத்தில் வெளிவரும் கருத்துகளை பெண்ணிய நோக்கில் பகுத்தாயமுடியும். இல்லையென்றால் தத்துவ வறுமையில், ஒழுக்ககேடான விபச்சாரத்தை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும்;. இதுவும் ஆணாதிக்கம் சார்ந்தது.


2.நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வை என்ன என்பதையும், பெண்ணியம் முதலில் முன்வைக்க வேண்டும். இதை தெளிவுபடுத்தாவிட்டால், தத்துவ வறுமை உலகமயமாதல் பெண்ணின் ஒழுக்கக்கேடான வாழ்வை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும்.

 

3.இதே போன்று முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வையையும் தெளிவாக முன்னிறுத்த வேண்டும்;. இந்த முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு கோரமாக இழிந்து மனிதவிரோதத் தன்மை கொண்டதாக மாறும் போதுதான், உலகமயமாதல் என்ற பொருளாதார கட்டமைப்பு உருவானது. இங்கு பெண்பற்றிய பார்வை இக்காலத்தில் வௌ;வேறானதாகவே அமைந்தன. இதைப் பற்றிய வரலாற்று வளர்ச்சியை பெண்ணியம் கோட்பாட்டு ரீதியாக தெளிவாக்க வேண்டும்.


ஆனால் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் யாரும் இதைச் செய்வதில்லை. சொந்த தத்துவ வறுமையில் நின்று, சந்தர்ப்பத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் பெண் பற்றிய வாழ்வியல் ஒழுங்கை பெண்ணியமாக கருதுவது நிகழ்கின்றது. நிலப்;பிரபுத்துவ சமூக அமைப்பில் அடிமைப் பெண்ணாக பெண்ணை உருவாக்கிய எமது அமைப்பில், உலகமயமாதல் அமைப்பு உருவாக்கும் மாற்றத்தை பெண்ணியமாக கருதுவதும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதும் இயல்பாக ஏற்பட்டு விடுகின்றது. இதை ஒரு பெண்ணின் புரட்சியாக நம்புவதும் கூட நிகழுகின்றது.

 

மேல் குறிப்பிட்ட இந்த மூன்று ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து, பெண் பற்றி மூன்று விதமான பொதுப்போக்கு காணப்பட்டது, காணப்படுகின்றது. இந்த மூன்றும் ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பு சார்ந்தது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கும், உலகமயமாதல் என்ற சமூக அமைப்புக்கும் இடையில் பெண்பற்றி ஆணாதிக்கப் பார்வை, முரண்பட்ட எதிர்நிலைத் தன்மை கொண்ட போக்காக காணப்படுகின்றது. இதுவே இன்று முரண்பாடாக, கூக்குரலாகவும் கூட வெளிப்படுகின்றது. இன்று ஒரு பெண் பற்றிய ஆணின் பார்வை சரி, பெண்ணின் பார்வை சரி, இந்த சமூக பொருளாதார கூறுகளுக்கு வெளியில் எதையும் கொண்டிருப்பதில்லை.

 

உண்மையில் பண்பாட்டு கலாச்சாரத்துறையில் இவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடு, பொருளாதார துறையில் காணப்படுவதில்லை. பண்பாட்டு, கலாச்சாரத் துறையில் முரண்பட்டு எதிர்நிலையில் மோதும் இவர்கள், பொருளாதாரத் துறையில் உலகமயமாதலை ஆதரிப்பவர்களாக ஐக்கியப்பட்டு உள்ளனர். குஷ்பு விவகாரத்தில் மோதும் இரு தரப்பும், உலகமயமாதலை ஆதரிப்பதில், அந்த சமூக பொருளாதார கோட்பாட்டை முன்னெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி, இந்த அரசியல் விபச்சார தரகுவேலையை சிறப்பாகவே செய்தார். இதில் எதிரெதிராக களத்தில் நிற்பவர்கள் தலித்துகள், பெண்ணியல் வாதிகள் என்று கூறிக்;கொள்பவர்கள்! ஆனால் இருதரப்பும், உலகமயமாதலை விசுவாசமாக ஆதரிக்கின்றனர். ஒரு விசித்திரமான, ஆனால் மக்கள் விரோதத் தன்மை கொண்ட ஒரு உண்மையாகும்.

 

பெண்ணின் மீதான ஆணாதிக்க அடக்குமுறையை ஆணாதிக்க சமூக பொருளாதார உள்ளடக்கத்தில் புரிந்து விளக்காத அனைத்தும், இந்த ஆணாதிக்கத்தில் ஏதோ ஒரு சார்புத் தன்மை கொண்டதாகவே அமைகின்றது. இந்த ஆணாதிக்க சமூக பொருளாதாரத்தில் பெண் ஆணின் பாலியல் நுகர்வுப் பொருளாக இருப்பதால், இந்த பொருளாதார அமைப்பில் பெண் விடுதலை அடைதல் என்பது கற்பனையிலும் சாத்தியமற்றது. மாறாக இந்த சமூகப் பொருளாதார அமைப்பின் மீதான ஒட்டுமொத்த மறுதலிப்பின்றி, எந்த பெண்ணும் இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார கூறுகளில் இருந்து விடுதலையடைய முடியாது. இதை மறுதலிக்கும் எந்தப் பெண்ணியக் கோட்பாடும், நிலவும் ஆணாதிக்க சமூக பொருளாதாரம் சார்ந்து ஆணாதிக்கமாகவே நீடிக்கும். சுற்றி சுற்றி இந்த ஆணாதிக்க அமைப்பில் சறுக்கி வீழ்வதே நிகழும்.

 

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகப் பொருளாதார பெண்ணை, ஆண் தனது தனிப்பட்ட நுகர்வுக்குரிய ஒரு சொத்தாகவே கருதினான், கருதுகின்றான். இதன் ஒரு அங்கமாக சொத்துரிமை சார்ந்து, வளர்ச்சியுற்றதுதான் குடும்பம் என்ற அலகு. இது பெண்ணின் நோக்கில் ஒரு திரிபுதான். பெண் ஒருதார மணத்தை, தனிச்சொத்துடமை அமைப்பில் ஆணின் வரைமுறையற்ற காட்டுமிராண்டித் தனமான புணர்ச்சியில் இருந்து தப்பிப்பிழைக்கவே, தனது சொந்தத் தேர்வாகவே தெரிவு செய்தாள். ஆனால் ஆணாதிக்க சமூக அமைப்பின் வளர்ச்சியில் அவள் விரும்பி தேர்ந்த வடிவம் கூட திரிபடைந்தது. கடந்த 2000 வருடங்கள் பல மாறுதலை அது கண்டுவந்த போதும் கூட, பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ ஆணின் அதிகாரம் சொத்துரிமையின் அடிப்படையிலேயே காணப்பட்டது. பெண்ணின் உழைப்பை சுரண்டவும், பெண்ணின் மீதான பாலியல் நுகர்வை அடையவும், இதனடிப்படையிலான குடும்ப அலகு ஒரு இறுக்கமான வடிவத்தில் காணப்பட்டது. இதைப் பாதுகாப்பதில் மதமே மிகமுக்கியமாக ஆணாதிக்க சமூக கோட்பாட்டுக்குரிய பங்கை வகித்தது.

 

சமூக பொருளாதார கட்டமைபில் ஏற்பட்ட முரண்பாட்டால் உருவான உலகமயமாதல் என்ற சமூக கட்டமைப்பு, எப்படி நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை மறுத்ததோ அப்படி கடந்தகால நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு சார்ந்த ஆணாதிக்க பெண்ணையும் மறுதலிக்கின்றது. இதை இன்று பெரும்பாலான பெண்ணியல் வாதிகள் புரிந்து கொண்டதில்லை. மாறாக உலகமயமாதல் ஆணாதிக்கத்தையே, பெண்ணியமாக விளக்குவதே இன்று தீவிர பெண்ணியமாக காட்டப்படுகின்றது. இதுதான் உண்மை. இதை அவர்கள் யாரும் மறுக்க முடியாது.
இன்று உலகமயமாதல் என்ற ஆணாதிக்க பொருளாதாரக் கட்டமைப்பு பெண் பற்றி கொண்டுள்ள கொள்கை என்பது, ஒரு பெண்ணை வெறும் நுகர்வுச் சரக்காக மட்டும் காண்கின்றது. இன்றைய விளம்பரங்கள் அனைத்தும் இந்த வகையில் தான், பெண்ணைச் சித்தரிக்கின்றது. சினிமா முதல் ஒலி, ஒளி நிகழ்ச்சி வரை, ஏன் பெண் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து தளத்திலும், பெண் ஒரு நுகர்வுக்குரிய கவர்ச்சிகரமான பெண்ணாகவே இன்று உலகமயமாதல் காட்டுகின்றது. இது பழைய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஆணாதிக்கக் கட்டுக்கோப்பையே கிண்டல் செய்கின்றது. அதை ஜனநாயக மீறல் என்கின்றது. அதை அநாகரிகமானதாகவும், மனித உரிமை மீறலாகவும் கூட காட்டுகின்றது. இதன் போதே தீவிர பெண்ணியல் வாதிகள் என்போர் (இங்கு ஆண் பெண்) வேப்பிலைக்கட்டிக் கொண்டு, இதற்கு அரோகரா போட்டு கும்மியடிக்கின்றனர்.

 

உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு பெண்ணை நுகர்வுக்குரிய ஒரு பாலியல் பண்டமாகவே கருதுகின்றது. உலகமயமாதல் உலகில் சொத்துரிமையை சமூக அலகில் இருந்து பிரித்து, அதை தனிப்பட்ட சொத்தாக குடும்பத்தக்கு வெளியிலும் குவிக்கின்றது. குடும்பச் சொத்து என்ற நிலப்பிரபுத்துவ சொத்துரிமை கூறு கூட, தனக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த சொத்துடமைக் குடும்பத்தையும் கூட உலகமயமாதல் சிதைக்கின்றது. நுகர்வு சார்ந்த பாலியல் நோக்கில், நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு என்பது சுதந்திரமான பாலியல் நுகர்வுக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் காண்கின்றது. பெண்ணை பாலியலில் சுதந்திரமான தனிப்பட்ட பெண்ணாக, குடும்பத்துக்கு வெளியில் கவர்ச்சிகரமான பதுமையாக நிறுத்துகின்றது. அதேநேரம் பெண்ணின் உழைப்பை ஆணுக்கு ஊடாக அல்லாது, கூலி கொடுத்து வாங்கும் ஒரு உழைப்புக் கருவியாக சந்தையில் நிறுத்துகின்றது. ஆணின் உழைப்புக்கான கூலியைக் குறைத்து, ஆண் ஒரு குடும்பமாக பெண் அதில் தங்கி வாழமுடியாத நிலையை உருவாக்கி, பெண்ணை கூலிகளாக மூலதனம் சந்தைக்கு கொண்டு வந்தது.

 

இப்படி ஆணாதிக்க சுரண்டல் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைவாக, பெண்ணும் மாற்றப்படுகின்றாள். இவை பொதுவாக சமூக ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களின் பொது நிலைப்பாடாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் அதை எப்படி உள்வாங்கி உணருகின்றாள் என்பதைப் பார்ப்போம்.


நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு பெண், கட்டுக்கோப்பான தனது குடும்ப அலகை பராமரிப்பதே தனது கடமை என்று காண்கின்றாள். குடும்பத்தின் தேவையையும், ஆணின் தேவையையும் பூர்த்தி செய்து வாழ்வதே பெண்ணின் ஒழுக்கமாக காண்கின்றாள். தனிப்பட்ட ஆணுக்கான சேவை உழைப்பும், பாலியல் ரீதியாக குறித்த ஆணுடன் இணங்கி வாழ்ந்து மகிழ்ச்சி அடைவதே குடும்பமாக காண்கின்றாள். இதை அவள் மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற முனைந்தாள். இதில் இருந்தே ஆணாதிக்க பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பெண் சார்ந்து உருவாகின. தாய்மைக்குரிய சமூகப் பண்பு பெண்ணிடம் உயர்ந்து நின்றதால், காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சமூக அமைப்பிலும் கூட, பெண் சமூக உயிரியாக இருந்ததால் மொத்த சமூகத் தன்மையையே உயிருள்ளதாக்கி வைத்திருந்தாள். இதனால் சமூகம் உயிருள்ளதாக இருந்தது. சமூகத் தன்மை குடும்பம் சார்ந்த போதும் கூட, சமூகத்தின் இயல்பான வாழ்வியல் இதுவே அடிப்படையாக இருந்தது.

 

ஆனால் இவை எல்லாம் உலகமயமாதல் அமைப்பில் முற்றாக தகர்ந்து போகின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உயிரி என்பதை மறுப்பதே, உலகமயமாதலின் ஆதாரமான கொள்கை. ஆணோ பெண்ணோ அல்லது குழந்தையோ யாராக இருந்தாலும், அவாகள் ஒரு சமூக உயிரியாக இருக்க வேண்டியதில்லை. மாறாக தனிமனித நலனுடன் ஒருவரையொருவர் சார்ந்தல்ல, குழிபறித்து வாழ்வதை வழிகாட்டுகின்றது. பழைய குடும்ப அலகுக்கு பதில், சுயநலமாக ஆணைப் போல் பெண் மற்றும் குழந்தைகளும் சுயநலத்துடன் வாழ்தலையே சுதந்திரம், ஜனநாயகம் என்கின்றது. பழைய நிலபிரபுத்துவ குடும்ப அலகு என்பது, அதாவது ஆணின் சுயநலம் சார்ந்த இந்த அமைப்பு தகர்ந்து போகின்றது. இதையே தீவிர பெண்ணியல்வாதிகள் பெண்ணியம் என்கின்றனர். இது பெண்ணை ஆணில் இருந்து விடுவிக்கின்றது என்கின்றனர். பெண் பாலியல் ரீதியாக சுதந்திரம் அடைகின்றாள் என்கின்றனர். உண்மையில் நடப்பது ஒரு ஆணின் சொத்து சார்ந்து பெண் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்த நிலை என்பது தகர்ந்து, பெண் நுகர்வுக்குரிய பாலியல் பொருளாகி ஆணாதிக்க சந்தைப் பொருளாகின்றாள்;;. இதில் பெண்ணையும், பாலியல் ரீதியாக ஆணைப் போல் ஆணுக்கு சோரம் போய் பெண்ணை நுகரக் கோருகின்றது. இந்த ஆணாதிக்க உலகமயமாதல்; உருவாக்கும் பெண்ணின் நிலையைத்தான், தீவிர பெண்ணியம் என்று கூறி கும்மியடிப்போர் பெண்ணியம் என்கின்றனர். இதை யாரும் இல்லை என்று நிறுவவே முடியாது.

 

முதலாளித்துவ சமூக அமைப்பு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு மாற்றாக உருவான போது கூட, கடந்து வந்த குடும்ப அலகை முற்றாக சிதைத்துவிடவில்லை. இப்படி நீடித்த சமூக அமைப்பு, உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார அமைப்பில் குடும்பம் என்ற அலகு அவசியமற்றதாகின்றது. பாலியல் என்பது இங்கு நுகர்வு கண்ணோட்டத்தில், தனிமனிதனின் சுயநல எல்லைக்குள் சுருங்கிப் போனது. இது இயந்திரத் தன்மையானதாகவும், கவர்ச்சியை அடிப்படையாக கொண்டதாகவும், போலித்தனமான கூறுகளே, இந்த பாலியல் இணைப்பின் புள்ளியாகின்றது.

 

ஆண் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பெண்ணை கற்புள்ள ஒருதார மணத்தில் ஒழுக்கத்தைக் கோரிய போது கூட, ஒழுக்கத்தை தனக்கு விதிவிலக்காக்கி பொது விபச்சாரத்தை ஆண் தக்கவைத்துக் கொண்டான். இன்று உலகமயமாதல் பெண்ணின் கற்பு சார்ந்த ஒருதார மணத்தை தகர்த்து, அதனிடத்தில் பெண் பொது விபச்சாரியாக்கப்படுகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவான போது, அது இயல்பில் பெண் மீதான ஆணின் காட்டுமிராண்டித்தனமான வரைமுறையற்ற பாலியல் அத்துமீறலைத் தடுக்க, பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தை தேர்ந்தெடுத்தாள். ஆனால் பின் அந்த ஒருதாரமணமே பெண்ணின் சிறைக்கூடமாகவும் மாறியது. ஆணால் ஆண் பலதார மணத்தில் வாழ, பொது விபச்சாரத்தை தக்கவைத்து இருந்தான். பெண் அன்று எதைத்தடுக்க ஒரு தாரமணத்தை தேர்ந்தாளோ, அதை தகர்த்து ஆண் மீண்டும் பொது விபச்சாரியாக்கி பெண் மீதான பாலியல் அதிகாரத்தைப் பெற்று விடுகின்றான். இங்கும் பெண்ணும் ஆணுக்கு நிகராக நுகரலாம் என்பது, தொழிலாளியும் முதலாளியாகலாம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது.

 

ஏனென்றால் இந்த சமூகப் பொருளாதார அமைப்பே ஆணாதிக்கமாக உள்ளதால், பெண்ணின் நிலை இயல்பாகவே பொது விபச்சார நிலையை அடைகின்றது. இதையே பெண் விடுதலை என்று எகாதிபத்தியமும் சொல்லுகின்றது. தீவிர பெண்ணியமும் இதைத் தான் வாந்தியெடுத்து சொல்லுகின்றது. பெண்ணின் சுயம் சார்ந்த ஒழுக்கம் (இது ஆணுக்கும் உண்டு)அவசியமற்றதாக்கி, பொதுவிபச்சாரமே ஒழுக்கமாகின்றது. நுகர்வை, செல்வத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் (பொதுவாக மேற்கத்தையவர்கள்) எப்படி நுகர்கின்றனரோ, அப்படித் தான் பெண்ணையும் பாலியல் ரீதியாகவும் நுகர்வதை உலகமயமாதல் வழிகாட்டுகின்றது. ஆண் பெண் பாலியல் உறவு என்பது, வெறும் உடல் சார்ந்த பாலியல் சரக்கு என்ற நிலையைத்தான்; ஆண் பெண் உறவு வழிகாட்டுகின்றது. இங்கு எந்த சமூக உணர்வும், இவர்களுக்கு இடையில் உருவாவதை உலகமயமாதல் மறுக்கின்றது. உதாரணமாக பிரான்சில் டிஸ்கோ ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் வேலைபற்றி ஒருவர் குறிப்பிட்டார். அவரின் வேலை ஆண் பெண் சோடியாக, அதாவது சோடியாக யார் மலசலகூடத்துக்குச் சென்றாவும் அவர்களை தடுப்பதுதான் அவரின் வேலை. நான் முன்பு வேலை செய்த ஒரு டிஸ்கோவில், மலசலக் கூடத்துக்கு முன்னால் ஆண்உறையைப் பெறும் தன்னியங்கி இயந்திரம் ப+ட்டப்பட்டு இருந்தது. உள்ளே கால் வைத்தால் சறுக்கும் வகையில் ஆண் உறைகள்.

 

இது டிஸ்கோவில் மட்டுமல்ல. பல தளத்தில் காணப்படுகின்றது. நுகர்வு என்ற உள்ளடக்கம், பணம் கொடுத்தும், பரஸ்பரம் நுகர்தல் என்ற எல்லைவரை விரிந்து காணப்படுகின்றது. இதைத்தான் பெண்ணியம் என்றால், இதைத் தான் பாலியல் சுதந்திரம் என்றால், இந்த கோட்பாட்டாளர்களின் நுகர்வு வெறியே வக்கிரப்பட்டு வெளி வருகின்றது. குஷ்பு போன்ற மேட்டுக் குடிகள் தமது சொந்த வாழ்வு சார்ந்து இப்படித் தான் வாழ்கின்றனர். அவர்களின் மேட்டுக்குடி வாழ்வில் சமூக நலன் சார்ந்து எந்தக் கூறும் இருப்பதில்லை. இது அவர்களின் பாலியல் கூறிலும் கூட இருக்கமுடியாது. இருப்பது நுகர்வு அடிப்படையிலான கண்ணோட்டம் தான். பாலியலிலும் கூட சமூகக் கூறு உள்ளது. இதை தீவிர பெண்ணியம் கண்டுகொள்வதேயில்லை. இதில் இருந்தே உலகமயமாதலில் பெண் தாய்மைப் பண்பை இழந்து, சமூகப் பண்பை இழந்து வெறும் பாலியல் சரக்காக உடல் சார்ந்த பண்டமாகி விடுகின்றாள். இந்த நிலையை ஆதரிப்பவர்கள் தான், தீவிர பெண்ணியம் என்ற பெயரில் கவர்ச்சியாக தம்மை சிங்காரித்துக் காட்டுகின்றனர். இதை ஆதரிக்கும் ஆண், அந்த நுகர்வுக்குரிய பெண்ணை அடையும் நோக்கில் அணுகுகின்றான். இந்த தத்துவ உலகில் இப்படி ஆண்களையும், பெண்களையும் கூட நாம் கண்டு வருகின்றோம்.



பெண் சமூக உயிரிக்குரிய இயற்கையாகவே அவளிடம் எஞ்சிக் கிடந்த தாய்மைப் பண்பை வலிந்து இழக்கும் போதே, குழந்தைக்கு பாலூட்ட மறுக்கின்றாள். குழந்தையின் பிறப்பையே இழிவாகப் பார்க்கின்றாள். கற்பப் பையை அறுத்து எறிவது பற்றி வீரவசனம் பேசுகின்றாள். தனது சொந்த குழந்தையையே கைவிடுகின்றாள். ஆனால் பாலியல் ரீதியாக ஆணுடன் உறவு கொள்வதை மட்டும் நுகர்வு அடிப்படையில் கைவிடுவதில்லை. ஒரு அராஜகப் பெண்ணாக தன்னைத்தான் சிங்காரித்து சீரழிகின்றாள். இதைத்தான் பெண்ணியமாக சித்தரிக்கின்றனர். இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பை மாற்றாத ஆணாதிக்கமே இன்று பெண்ணியமாக சித்தரிக்கப்படுகின்றது. பெண்ணியம் பேசும் இன்றைய இந்த சித்தாந்த வாதிகளின் கோட்பாடே இதுதான்.

உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதார கட்டமைப்பில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பின் ஊடாக வளர்ச்சியுற்ற உலகமயமாதல் என்ற கட்டமைப்பின், பல இடைகட்டங்களை பெண் பல வடிவங்களில் கடந்துவந்தாள். இப்படி மாறிவந்த சமூகப் போக்கு சார்ந்து, ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களிடையே தான் எப்போதும் ஆதிக்கம் பெற்ற ஆணாதிக்க ஒழுக்கம் அதிகார ப+ர்வமான பண்பாடாக நடைமுறையில் இருந்தது. ஆனால் ஆதிக்கம் பெற்ற சமூகப் பொருளாதார அமைப்பினால் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில், இது அதிகார ப+ர்வமான பண்பாடாகவும் ஒழுக்கமாகவும் கூட ஒருநாளுமே இருக்கவில்லை. இந்த சமூகப் போக்குடன் முரண்பட்ட சமூகமும், குறிப்பாக பெண்களும் பொது ஆணாதிக்க ஒழுக்கத்துடன் முரண்பட்டு பலவேறு கூறுகளுடன் தான் அவள் வாழ்ந்தாள். ஆதிகம் பெற்ற சமூக போக்கு முரண்பாடாக, இங்கு பெண்கள் சுதந்திரமுள்ளவராக இருந்தனர்.

 

உதாரணமாக உயர்சாதி பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஒருதார மணமுறையை, தாழ்த்தப்பட்ட பெண்கள் தமது ஒழுக்கமாக கடைப்பிடிக்கவில்லை. இங்கு பெண்ணின் விருப்பார்ந்த தேர்வு சுதந்திரமானதாக இருந்தது. இது இன்று ஏகாதிபத்தியம் பெண்ணியம் கூறும் அடிப்படையில், அதாவது பாலியல் அடிப்படையில் நிகழவில்லை. மாறாக பாலியல் அல்லாத கூறுகளே, ஆண் பெண் உறவில் முதன்மை பெற்றதாக இருந்தது. இங்கு ஆண் பெண்ணுக்கு இடையில் பரஸ்பர விசுவாசம் அந்தக் குடும்பத்தின் மையக் கூறாக இருந்தது. பெண்ணின் பிரிவும் ஐக்கியமும் பாலியல் சார்நத்தாக இருக்கவில்லை. வாழ்வு சார்நத்தாகவே இருந்தது.


இன்றைய பெண்ணியல் வாதிகளினதும், பெண் விடுதலையை பேசும் ஆண்களினதும் கருத்துகள் இதற்கே எதிரானது. கோட்பாட்டு ரீதியில் தீவிர பெண்ணியம் பற்றிய கோட்பாடுகள் செயல்பாடுகள், நடைமுறைகள் உலகமயமாதல் சமூக பொருளாதார விளைவின் சீரழிவாக உள்ளது. ஆனால் கிராமப்புற பெண்ணகளின் நிலைப்பாடுகள் ஜனநாயகக் கூறாக உள்ளது.



நிலப்பிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் தீவிர பெண்ணியம் உலகமயமாதல் பெண்ணை சுதந்திரமாக காணும் போக்கு காணப்படுகின்றது. இதற்கு மாறாக உலகமயமாதல் சமூக அமைப்பில் பெண் வெறும் பாலியல் பண்டமாக இருப்பதை எதிர்த்து, நிலப்பிரபுத்துவ குடும்பப் பெண்ணை வலியுறுத்துவது காணப்படுகின்றது. இந்த வகையில் தான் இன்று புலம்பல்கள், தீர்மானங்கள், வாய் வீச்சுக்கள், போராட்டங்கள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

 

இந்த இரண்டும் மக்கள் விரோத ஆணாதிக்க சமூக பொருளாதார கூறாக இருப்பதை இவர்கள் காண்பதில்லை. ஒரு பெண்ணை இந்த நிலையில் வைத்திருக்கின்ற சமூக பொருளாதார கூறுகளை பற்றிய தெளிவான பார்வை இன்றி, அதை சமூகம் சார்ந்து புரட்சிகரமாக மாற்றுவதைப் பற்றிய அரசியல் சமூக பொருளாதார நடைமுறையின்றி, பெண்விடுதலை பற்றிய கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இவை அனைத்தும் இந்த ஆணாதிக்க சமூகப் பொருளாதார கட்டமைப்புக்குள், ஏதோ ஒரு வகையில் தன்னைத்தான் அடையாளம் காட்டிக் கொள்பவைதான்;. இந்த சமூக உண்மையை யாரும் மறுத்து நிறுவமுடியாது.

 

ஏகாதிபத்திய பாலியல் சுதந்திரத்தை முன்வைத்த குஷ்பு விவகாரம்

 

குஷ்பு போன்ற ஏகாதிபத்திய அன்னக்காவடிகளே, சமூகத்தின் உயர்குடிகளாக உள்ளனர். இவர்களின் அலட்டல் அலட்டலாகவே அப்படியே ஒரு வழமையான சினிமா வசனம் போல் போய் இருக்க வேண்டியது. ஆனால் அதை நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய அரசியலுக்கும், தலித்துக்களின் சாதி அரசியலுக்கும், குறுந்தேசிய பாசிசக் கூறுக்கும் இசைவாக பயன்படுத்திய போது சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு கோட்பாட்டு ரீதியாக வழக்கறிஞர் ரஜனி, அ.மார்க்ஸ்… போன்றோர் தமது உலகமயமாதல் கோட்பாட்டுக்கு இணங்க விளக்கி அதை முற்போக்காக காட்டமுனைந்தனர்.

 

முதலில் குஷ்பு என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். "பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்;. கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்." என்றார். இதை "தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா?" என்ற கருணாநிதியின் தமிழ்முரசு இதை அரசியலாக்கிய போது, மீண்டும் குஷ்பு தினத்தந்தியில் "திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?" என்றார்.

 

இப்படி சர்ச்சை உருவானது. பார்ப்பனியமயமாகும் தலித் சாதி அரசியல் இதை ஒருபுறம் காலில் கீழ் போட்டு உடைக்க, மறுதளத்தில் இதை பெண்ணியமாக சித்தரித்து தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடினர். மற்றொரு பிரிவு குஷ்புவை ஆதரிக்கும் அதேநேரம், பார்ப்பனியத்துடன் பகைக்க விரும்பாத மற்றொரு கும்பல் ஒன்று, கருத்துச் சுதந்திரம் பற்றி கேள்வி கேட்டு குஷ்புக்கு சாமரை வீசினர்.

 

இங்கு குஷ்பு கூறியதே தமது பெண்ணியம் என்பதே இலக்கியச் சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்பின் தீர்மானகரமான முடிவாகும்;. இந்த குஷ்பு வகையறாக்களின் பெண்ணியம் தான், தமது பெண்ணியம் என்ற நிலைப்பாட்டை தீர்மானமாக்கினர். முன்பு எந்த முடிவுகளையும் எடுக்காது கூடி குடித்து கும்மாளம் அடித்து கலையும் இலக்கியச் சந்திப்பு, முதன்முதலாக ஏகாதிபத்திய சார்பு முடிவுகளை உள்ளடக்கிய வகையில் சில முடிவுகளை எடுத்துள்ளது.

 

குஷ்பு வைத்தது பெண்ணியமா? இல்லை. மாறாக ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகமயமாதல் அமைப்பில் வெம்பிப் போகும் பெண்ணின், சொந்த சுயபுராணம். இதை சமூகத்துக்கும் பொருத்திக் காட்ட முனைந்தார். இன்றைய உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகரும் பெண்ணின் நிலையில் இருந்து, நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு விடுத்த வக்கிரம் தான் குஷ்புவின் கூற்று.

 

இந்த சமூக முரண்பாடு இந்தியாவில் ஆழமாக ஊடுரூவி வரும் ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற நுகர்வுப் பண்பாட்டில் இருந்து, நிலப்பிரபுத்துவ கட்டுக்கோப்பான பொருளாதார சமூக அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் இது. இது பொருளாதார துறையில் மட்டுமல்ல பாலியல் துறையிலும் கூட, ஏன் பண்பாட்டு கலாச்சாரத் துறையிலும் கூட ஏற்படுகின்றது. உலகமயமாதல் என்ற பண்பாட்டு சமூக அமைப்புக்கும், கடும்போக்கான பண்பாட்டு நிலப்பிரத்துவ அமைப்புக்கும் இடையில் எங்கும் எதிலும் முரண்பாடு உள்ளது. இதன் எதிர்நிலைத் தன்மை சார்ந்த முரண்பாட்டின் மீது ஆதரவு அல்லது எதிர்ப்புகள் தான் குஷ்பு விவகாரத்திலும் ஆளுமை பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் மக்களுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும், இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் ஆணாதிக்கம் சார்ந்தது என்ற அடிப்படையிலும், இந்த விவகாரத்தில் மக்கள் நலன் சார்ந்த கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

 

குஷ்பு போன்ற மேட்டுக்குடி பணக்கார நடிகைகளின் சொந்த வாழ்க்கை சார்ந்த உலக கண்ணோட்டத்தை தான், இந்த சமூகம் பின்பற்ற வேண்டும் என்ற திமிரில் இருந்தே குஷ்புவின் கருத்து கொப்பளிக்கின்றது. திமிர் பிடித்த பணக்கார நடிகைகளாக உள்ள இவர்கள், அடிமட்ட சமூகங்களையே இழிவாக எப்போதும் காண்பவர்கள். சினிமாவில் மட்டும் அதையே தமக்கு ஏற்ப திரித்து நடிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பது வக்கிரமும் பாசிசமும் தான். சமூகத்தின் அடிமட்ட மக்களுடன் தொடர்பற்றவர்கள் தான் இவர்கள். மனித வாழ்க்கையே புரிந்து கொள்ளாதவர்கள். இன்று ஏகாதிபத்திய நுகர்வை மட்டுமே, வாழ்க்கையின் அடிப்படையாக கொள்பவர்கள். இது வெறுமனே நடிகைகள் மட்டுமல்ல, பணக்காரக் கும்பலின் பொது வக்கிரமாகும். இவர்களின் வாழ்க்கைக்குள் பூதக் கண்ணாடி கொண்டு மனிதத்துவத்தை தேடவே முடியாது. ஆனால் தேட முடியும் என்று தேடி தீர்மானங்களையும்;, அறிக்கைளையும், கோட்பாடுகளையும் வெளியிடுகின்றனர்.

 

மக்களை ஏமாற்றிச் சுரண்டிய இந்தப் பணக்காரக் கும்பல் உலகமயமாதலை விசுவாசமாக வாலாட்டி ஆதரிப்பவர்கள். உலகமயமாதலின் நுகர்வுப்பண்பாட்டை, அந்தக் கலாச்சாரத்தை விரும்பி வலிந்து தேர்ந்து எடுப்பவர்கள்தான்;. இவர்களுக்கு என்று தனியான ஒரு கருத்தற்றவர்கள். ஏகாதிபத்திய உலகமயமாதல் நடைமுறை வாழ்வு சார்ந்த கோட்பாட்டை, கிளிப்பிள்ளை போல் மீள ஒப்புவிப்பவர்கள். அப்படியே வாழ்ந்து காட்ட முற்படுபவர்கள்.

 

வரைமுறையற்ற நுகர்வே இவர்களின் மையமான கோட்பாடு. பாலியலைக் கூட இந்த வகையில் தான் இவர்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உறவை வெறும் பாலியலாக மட்டும் உடல் சார்ந்ததாக குறுக்கி நுகர்பவர்கள்;. உறவு ஒரு சமூக உயிரிக்கு இடையிலானது என்பதையே மறுக்கின்றனர். இதனடிப்படையில் பாலியலை நுகர்வு என்ற விபச்சாரம் வரை புரிந்து, அதை உள்வாங்கிக் கொள்ளுகின்றனர். இந்த வகையில் குஷ்பு போன்றவர்கள் கருத்துரைக்கின்றனர். பாலியலை வெறும் சந்தைக்குரிய ஒரு நுகர்வாக மட்டும் சிறுமைப்படுத்தி, அதைக் கொப்பளித்து துப்பியுள்ளனர். நிலவும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்க கோட்பாடு, தமது நுகர்வு கலாச்சாரத்துக்கு சவாலாக இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாது புலம்பும் போது, மொத்த சமூகத்தையும் கேவலமாக வசைபாடுகின்றனர். "தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?." என்ற மற்றொரு முன்னாள் நடிகை சுபாஷனியும் தனது மேட்டுக்குடி பார்ப்பானியத் திமிருடன் வக்காளத்து வாங்குகின்றார். தாங்கள் தமிழருடன் சம்பந்தமில்லாத அன்னியர் என்பதை இந்த நடிகை தனது கூற்றிலும் கூறிவிடுகின்றார். குஷ்புவோ "திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?" என்ற தனது சொந்த வாழ்க்;கை சார்ந்த மேட்டுக்குடி விபச்சார அனுபவத்தில் இருந்த இப்படி சொல்லுகின்றார். இவர்களின் பாலியல் சார்ந்த நுகர்வு வெறிதான், இப்படி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்த வைத்தது.

 

பணத்துக்கு விபச்சாரம் செய்வது எப்படியோ அப்படித்தான் இந்த மேட்டுக் குடிகளின் பாலியல் நுகர்வு உள்ளது. பணத்துக்கு விபச்சாரம் செய்தலில் ஆண் மட்டும் நுகருகின்றான். ஆண் விபச்சாரர்களிடம் பெண் மட்டும் நுகருகின்றாள். பணத்துக்கு விபச்சாரம் செய்பவர்கள் இந்த சமூக அமைப்பின் வறுமை, மற்றும் ஆணாதிக்க கொடூரங்களினால் விபச்சாரியாக வாழ்க்கையில் தள்ளப்பபட்டவர்கள்.

 

இதில் இருந்து மாறுபட்ட மேட்டுக்குடி வாழ்க்கை சார்ந்த பாலியல் உறவு விபச்சாரமாகவே உள்ளது. எந்த மனித சமூக உறவும் இந்த பாலியல் உறவில் இருப்பதில்லை. விலையுயர்ந்த அன்பளிப்புகள், நடிப்பு சார்ந்த பாலியல் கவர்ச்சி, சினிமா பாணி காதல் நுகர்வு இப்படித் தான் இவர்களுக்கு இடையில் உறவு ஒரு விபச்சாரமாக மலருகின்றது. இங்கு நுகர்வு என்பது ஆண் அல்லது பெண் ஏதோ ஒரு பகுதிக்கு அவர்களின் தேர்வு சார்ந்து ஏற்படுகின்றது.

 

இந்த மே(h)ட்டுக்குடிகள் சொந்த வாழ்க்கை சார்ந்த கவர்ச்சியான நடிப்பு அனுபவத்தையே உலகமாக காண்பது இயல்பானது. சமூகத்தை தன்னளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கும் போது, மொத்த சமூகத்தையே இப்படித் தான் இருக்கின்றது என்று நம்புகின்றது. தமது குறுகிய வாழ்க்கை வட்டம், தமது குறுகிய நுகர்வு வெறி, தமது குறுகிய பண்பாடு என அனைத்தும் சேர்ந்து, இப்படித் தான் நாய் வேஷம் போட்டு குலைக்கவைக்கின்றது. சமூகக் கண்ணோட்டத்தையே அது மறுதலிக்கின்றது. குறிப்பாக அதே இந்திய ரூடேயின் தரவுகள் மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகிதப் பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்கள் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். சென்னையில் 82 சதவீகிதமான பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் குஷ்பு அதையும் மீறி கருத்துரைக்கின்றார். சொந்த மேட்டுக்குடி பெண்களே இப்படி கூறும் போது, சமூக ரீதியாக சீரழிந்து போன வாழ்க்கை அதையே நடிப்பாக தொலைத்த கும்பலின் குரல்கள் வக்கிரமாக வெளிப்படுகின்றன. "திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?" என்று குஷ்பு கேட்கின்ற போது, சொந்த மேடடுக்குடி வர்க்கப் பெண்களையே கொச்சைப்படுத்தி கேவலப்;படுத்திவிடுகின்றது. சொந்த சமூகத்துடன் கூட ஒட்டோ உறவோ கிடையாது. ஏன் இந்தியாரூடே எடுத்த தரவு சார்ந்த கருத்தைக் கூட, உள்வாங்கி கொள்ள முடியாது, சொந்த வாழ்க்கை சாhந்த வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை பெண்ணியம் என்ற அ.மார்க்ஸ், வழக்கறிஞர் ரஜனி போன்றோர் ஏகாதிபத்திய விசுவாசத்துடன், அந்த சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தி குரைக்கின்றனர்.

 

இங்கு குஷ்பு பாலியலை திருமணத்துக்கு முன்னம் கொண்டிருக்கலாம் என்று கூறிய போது, ஒழுக்கக்கேடே முதன்மை பெறுகின்றது. இங்கு பாலியல் நுகர்வாக்கி, அதை யாருடனும் எப்படியும் என்ற விடையம் வந்துவிடுகினறது. இங்கு கற்பம் அடையாமல் இருந்தால் போதும். பால் நோய் வராமல் இருந்தால் போதும். இதைப் பெண் புரிந்து கொண்டால் சரி என்கின்றனர். இதை;தான் பெண்ணியம் என்று சிலர் கூறுகின்றனர். உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்கம் வழங்கும் பெண்ணின் ஒழுக்கக் கேட்டை மூடிமறைக்கும் வழியைக்காட்டுகின்றனர். நுகர்வதை ஊக்குவித்து அதை இரகசியமாக இந்திய சமூக அமைப்பில் பாதுகாக்க வழி கூறுகின்றார்.

 

இதில் எங்கே பெண்ணியம் உள்ளது. இங்கு பாலியல் நுகர்வு முன்மொழியப்படுகின்றது. எப்படியும் நுகரலாம் என்று பெண்ணுக்கு புகட்டப்படுகிறது. சமூகத் தன்மையற்ற சந்தை நுகர்வு, இங்கு கொலுவேற்று நிற்கின்றது. சந்தை மனித இனத்தின் மீது எதை செய்ய விரும்புகின்றதோ, அதை நீ உனது ஒழுக்கமாக கொள் என்பது பொருளாதாரத்தின் ஒழுக்க விதி. இந்த ஒழுக்கக்கேட்டையே குஷ்பு வகையறாக்கள் மேதாவிகள் போல் உள்வாங்கி சொந்த மேட்டுக்குடி வாழ்பனுபவங்களுடன் அதையே பேட்டியளிக்கின்றனர்.

 

மனித இனத்தின் விடுதலைக்காக வழிகாட்ட வக்கற்றவர்கள், தம்மைத் தாம் முற்போக்குகள் என்று கூறிக்கொள்ளும் வகையறாக்கள், இதற்காக காவடி எடுக்கின்றனர். இதுவெல்லோ பெண்ணியம் என்கின்றனர். பெரியாரை இழுத்து வைத்து புணர்ந்து காட்டுகின்றனர். குஷ்புவின் வாழக்;கை சார்ந்த ஒழுக்கக்கேட்டை ஆதரித்து அ.மார்க்ஸ். "குஷ்பு இந்தியாடுடேவுக்குத் தெரிவித்துள்ள ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப் போல அவர் கருத்துக் கூறியிருக்கிறார். மாறிவரும் சமூகப் போக்கினை குஷ்பு புரிந்து கொண்ட அளவுக்கு கூட நமது அரசியல் தலைவர்கள் கொள்ளவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது." அ.மார்க்சின் சமூக ஆய்வுத் தளம் எப்படி உள்ளது என்பதைத் தான் இது காட்டுகின்றது. குஷ்புவின் இந்த கூற்றின் பின் உள்ள சமூக பொருளாதார அடிப்படை தான் என்ன. அது உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார உள்ளடகத்தின் கொப்பளிப்பு அல்லவா.

 

குஷ்பு இந்த நுகர்வுச் சந்தை விதிக்கு அமைய புலம்பும் போது, கவர்ச்சியைக் காட்டி சமூகத்துக்கு முன் தன்னை நிலைநிறுத்திய அதே திமிருடன் தான், கொப்பளித்து கருத்துரைக்க முடிகின்றது. இதைத் தான் அ.மார்க்ஸ் ஒவ்வொரு வரியிலும் உடன்பாடு உண்டு என்று கூறி, இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் ஒழுக்கக்கேடான மேட்டுக்குடி பெண்ணின் வாழ்வின் முறையை ஆதரிக்கின்றார். இதையே அடிமட்டத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் தமது சொந்த வாழ்வியல் முறையாக கொள்ளவேண்டும் என்று உளறுகின்றார். இதைத்தான் இந்தக் கும்பல் பெண்ணியம் என்கின்றது.

 

வழக்கறிஞர் ரஜினி. "ஆண்களைத் தலைவர்களாகக் கொண்ட அரசியல் அமைப்புகள் தங்களது சொந்த ஆதாயத்திற்காக குஷ்பு என்கிற பெண்ணுக்கு எதிராக பெண்களையே தூண்டிவிடுகிறார்கள்" என்கிறார். அடிப்படையில் குஷ்பு ஒரு பெண் என்ற வகையிலும், குஷ்புவை எதிர்த்தவர்களின் கட்சி தலைவர்கள் ஆண்கள் என்ற வகையிலும் இதை குறுக்கி, குஷ்புவுக்கு வக்காலத்து வாங்குகின்றார். ரஜனி குறித்த கட்சிகளிள் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கூறை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, குஷ்புவின் ஆடம்பரமான உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் நுகர்வு விபச்சாரத்தை சமூகமே கைக்கொள்ளவேண்டும் என்று வழக்காடுகின்றார். இவர் பாரிஸ் இலக்கிய சந்திப்பில் உலகமயமாதல் பெண்ணின் விபச்சாரத்தனத்தை, ஆதரித்து, அதன் அடிப்படையில் குஷ்புவின் ஒழுக்கக்கேட்டை ஆதரித்தார். இதை நாம் தனியாக கீழே விரிவாகப் பார்ப்போம்.

 

அடுத்த தலித் ஆய்வாளரும் ஏகாதிபத்திய உலகமயமாதலின் எடுபிடியுமான ரவிக்குமார் "சர்வேயின் முடிவுகளின்படி கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. அதை இந்த அளவு பிரச்சனையாக்கியிருக்கத் தேவையில்லை" என்று கூறி விடையத்தை முடக்கி தப்பிவிடவே முனைகின்றார். இதை அரசியலாக்கி மோதுவது அவர் தாங்கி நிற்கும் தலித்துகள். உலகமயமாதலை ஆதரித்து நிற்கும் மோதல் தரப்புகள், இரண்டும் சமூக பொருளாதார ஆணாதிக்கம் சார்ந்து அரசியல் ரீதியாக அம்பலமாவதை கண்டு அதில் இருந்து தப்பிவிடவே முனைகின்றார்.

 

ஆணாதிக்க சமூக பொருளாதார பண்பாடே ஒழுக்கக்கேடான பாலியலாகின்றது.

 

ஆணின் பாலியல் தேவைகளின் வரையறுகளே, பெண்ணின் மீதான பாலியல் கோட்பாடுகளாக இருந்தன, இருக்கின்றன. இதில் இருந்தே பெண்ணின் பாலியல் என்பது வரையறுக்கப்பட்டது. இந்த வகையில் பாலியல் என்பது, நிலபிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒழுக்கமாகவும், பெண்ணின் கற்பாகவும் கூட மாறியது. ஆண் இதில் இருந்து விதிவிலக்கு பெற்றவனாக, அதுவே சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு பண்பாடாகவும் மாறியது.


ஆனால் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் தகர்வு இதையும் மாற்றி அமைக்கின்றது. பெண்ணை ஆண் விரும்பியவாறு நுகரும் வகையில் சமூகத்தை மாற்றிவருகின்றது. இங்கு கடந்தகாலத்தில் நிலவிய சமூக கூட்டுறவாக்கம் அவசியமற்ற ஒன்றாகிவிட்டது. பெண்ணை சந்தையில் வாங்கும் ஒரு சரக்காக கருதும் வண்ணம், சமூகப் பொருளாதார கூறு ஆண் பெண் உறவையே சிதைத்துள்ளது. முதலாளித்துவம் ஒரு சமூக பொருளாதார உறவாக மாறிய போது, கூலிகளை சந்தையில் பெற்ற போது சமூக உறவுகள் எப்படிச் சிதைந்ததோ, அதே போன்ற ஆண்கள் பெண்களை சந்தையில் பெற்று நுகரும் நிலைக்கு உலகமயமாதல் பெண்களை இட்டுச் செல்லுகின்றது. பெண் மேலும் பாலியல் பண்டமாகவே அடிமையாகின்றாள். இதையே சிலர் பெண் விடுதலை என்கின்றனர்.

 

இந்த நிலையில் நிலப்பிரபுத்துவ பெண்ணை அப்படியே நுகர்வது என்பது முரண்பாடாகின்றது. பெண் சுயேட்சையாக பாலியல் நுகர்வுக்கு தானாக இணங்கிப் போகும் பெண்ணின் உலகக் கண்ணோட்டம் மட்டும் தான், ஆணின் இன்றைய தேவையை பூர்த்திசெய்யும். இதைத்தான் ஆதிக்கம் பெற்றுவரும் உலகமயமாதல் ஆணாதிக்கம், பெண்ணுக்குரிய பெண் விடுதலை என்கின்றது. இதற்கு எடுபட்டுப் போகும் பெண், இதை பெண் விடுதலையாக கருதும் போக்கையே தீவிர பெண்ணியமாக பிதற்றுகின்றனர். சமூகம பற்றிய புரிதல் இன்றி இது கொலுவேறுகின்றது. இயல்பாக உலகமயமாதல் சமூக பொருளாதார அமைப்பு உருவாக்கிவரும் நவீன ஆணாதிக்கத்தை, சமூக இயக்கத்துடன் தொடர்பற்ற அறிவுயீவிகள் தான் பெண்ணியமாக தத்துவார்த்த அடிப்படையை திணிக்கின்றனர். உண்மையில் இது பெண் தானாக கண்டுபிடித்தவையல்ல. மாறாக ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணின் மீது திணித்தவை. இதற்கு சமூகத்தில் மாறிவரும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கும் நுகர்வு வெறி, பெண்ணை விபச்சார நிலையில் வழி காட்டுகின்றது. ஒழுக்கக்கேடான இந்த பண்பாடின் கட்டமைப்பே, உலகமயமாதல் தான்;. உலகமயமாதல் சந்தையில் பொருட்களை குவித்து அதை வரைமுறையற்ற வகையில் எப்படி நுகரத் தூண்டுகின்தோ, அப்படித் தான் பெண்ணையும் நுகரத் தூண்டுகின்றது. பெண் உலகச் சந்தையின் கூண்டில் விடப்பட்ட விளம்பரப் பொம்மை போல், கவர்ச்சியான பாலியல் பொருள் தான். இது உடல் சார்ந்தது.

 

ஆனால் ஒரு மாற்றம். சந்தையில் எப்படி ஆண் நுகர முடியுமோ, அப்படி பெண்ணும் நுகர முடியும். இரண்டு உயிரிகள் என்ற வகையில், நுகர்வு பரஸ்பர நுகர்வின்றி சாத்தியமில்லை. சந்தையில் கூலியை வாங்கும் மூலதனம் போன்று, பெண்ணை நுகரும் ஆணாதிக்கம் செயல்படுகின்றது. இந்த ஆணாதிக்க நுகர்வு ஒழுக்கத்தையே, பெண் விடுதலை என்கின்றனர். இன்று பெண்ணியம் பேசும் பலரும், இதன் தீவிரமான ஆதரவாளர்கள். இவர்கள் எடுத்துக் கொள்ளும் பல்வேறு கருத்துகளின் நடத்தைகளில், இந்தக் கூறுகளை சரியாகவே இனம் காணமுடியும்.

 

இதை நாம் சமூக வெறுப்பூட்டல்களில் சரியாகவே இனம் காணமுடியும்;. நிலப்பிரபுத்துவம் ஆணாதிக்க பெண்ணின் கடமையாக வரையறுக்கப்பட்ட அனைத்தையும், பெண் வெறுக்க வேண்டும் என்று இந்த பெண்ணியம் புகட்டுகின்றது. மாறாக ஒரு ஆண் எப்படி சமூக மறுப்பாளனாக வாழ்கின்றானோ, அப்படி பெணணும் வாழ்வதே பெண்ணியம் என்கின்றது. இது எப்படி பெண்ணியமாகும்;. இது நிச்சயமாக இந்த ஆணாதிக்க அமைப்பில், ஆணாதிக்கமயமாதல்; தான். சந்தை நிலப்பிரபுத்துவ பெண்ணின் கடமைகளை சிதைக்கும் போது, சந்தைக்கு அது அதிக லாபம் தருகின்றது. உதாரணமாக பெண் சமைக்க மறுத்தால் மிகப் பெரிய பன்னாட்டு உணவுவிடுதிகள் அதிக லாபம் அடைகின்றது. குழந்தைக்கு சொந்த பாலைக் கொடுக்க மறுத்தால், பன்னாட்டு குழந்தை உணவு விநியோகஸ்தர்கள் அதிக லாபம் அடைகின்றனர். இப்படி பற்பல. உண்மையில் பெண் தான் தக்கவைத்திருந்த பல அறிவியலை ஆணாதிக்க அமைப்பிடம் இழந்து போகின்றாள். அதை ஆணாதிக்க சந்தை கைப்பற்றுகின்றது. சமூகத்தில் சிறியளவில் பண்பாடு சார்ந்து மரபாக பாதுகாத்த பலவிதமான உணவு சார்ந்த பழக்கவழக்கங்கள் பெண்ணுக்கு நுகர்வுச் சுதந்திரத்தை பரிசளித்து விட்டு, அவளிடம் இருந்து அறிவியல் உண்மைகள் பறிக்கப்படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது. உலகமயமாதல் குறிப்பாக இதில் கவனம் எடுத்துச் செய்கின்றது. இப்படி பற்பல.

 

இதன் சமூக விளைவு என்ன. பன்னாட்டு நிறுவனங்கள் சுதந்திரமான தேர்வை மறுத்து தரும் ஒரு சிலவற்றை, மக்கள் மந்தையைப் போல் உண்ணப் பழக்கப்படுகின்றனர். இங்கு பெண் சுதந்திரமாக பல தேர்வுகளை கொண்டிருந்தாள் என்ற அரசியல் உண்மையைக் கூட, பெண்ணியத்தால் கண்டுகொள்ள முடியாத அவலம் எற்படுகின்றது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பன்மையான சமூகத் தேவையை மறுத்து, பெரும்பாலானவற்றை அழித்து மிகுதியை தனது கண்டுபிடிப்பாக்குகின்றது. உண்மையில் பெண் இவற்றை இழந்து போகின்றாள். மறுபக்கத்தில் பெண் தன்னிடம் இருந்த அறிவியல் கூறை இழக்க, ஆண்களே மிகச் சிறந்த சமையல்காரனாக மாறுகின்றான். இன்று உணவு சார்ந்த கலை, படிப்படியாக ஆணின் ஆதிக்கத்துக்கு வந்துள்ளது. இப்படி பெண் தான் கண்டுபிடித்த பல அறிவியல் உண்மைகளை இழந்தாளோ, அப்படி தன்னிடம் எஞ்சி இருக்கும் அறிவியல் கூறுகளை இழப்பது உலகமயமாதலில் வேகம் பெற்றுள்ளது. இதையே தீவிர பெண்ணியம் பெண்ணியம் என்கின்றது.

 

நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண் ஆணின் கருவியாகி, ஆணாதிக்கத்தை எப்படி பாதுகாக்கின்றாளோ, அப்படித்தான் உலகமயமாதல் சமூக அமைப்பில் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் கருவியாகின்றாள்;. நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கக் கூறுகளை மறுத்து, ஏகாதிபத்திய பாலியல் நுகர்வுப் பெண்ணாக மாறுவது பெண்விடுதலையல்ல. உதாரணமாக

 

1.தீவிரவாதப் பெண்கள் என்று தம்மைத்தாம் கூறிக் கொள்ளும் உலகமயமாதல் பண்பாட்டின் கும்மியடிகள், பெரும்பாலானோர் குழந்தை வளர்ப்பை வெறுக்கின்றனர். குழந்தை வளர்ப்பு என்பதை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகம் பெண்ணின் கடமையாக வரையறுத்தது என்பது உண்மை. ஆணால் அதை மறுதலித்து குழந்தை வளர்ப்பை நிராகரிக்கும் உலகமயமாதல் ஒழுங்கு பெண்ணியமல்ல. இதில் சனத்தொகை குறைப்பு என்ற உலகமயமாதல் சதியும், இந்த பெண்ணிய கும்மியடிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குழந்;தை வளர்ப்பு என்பது ஒரு சமூக நடவடிக்கை. பெண்ணிடம் அது காணப்பட்ட போது, சமூக நோக்கில் மிக உயர்ந்த, ஆணாதிக்கத்திடம் இல்லாத ஒரு பண்பாகும்;. சமூக நோக்கங்களையும், சமூகக் கூறுகளை மறுத்து உருவான ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் கடந்து வந்த சமூகக் கூறுகளை தன்னிடம் எச்சமாக வைத்திருந்தாள். இதை ஆணாதிக்கத்தின் இழிவான சமூகக் கூறுகளில் இருந்து அகற்றி, அதை சமூகத்தின் பெருமைக்குரியதாக மாற்றிப் போராட வேண்டிய பெண்ணியம், அதற்கு எதிராக ஆணாதிக்கத்தை நோக்கி தன்னைச் சிதைப்பதையே பெண்ணியமாக காட்டுகின்றனர். உண்மையில் இதன் சமூகக் கூறுகள், தனிமனித சமூகவிரோத ஆணாதிக்க கூறுகளாக சிதைந்துவிடுகின்றது.

 

2.கர்ப்பப்பையை வெட்டியெறிவோம் என்று பெண்ணியப் புலம்பல்கள், எதைத்தான் சொல்ல முனைகின்றது. பெண்ணின் பெருமைகளை சிறுமைப்படுத்துவதில் முடிகின்றது. ஆணாதிக்க சமூகத்துக்கு முந்தைய பெண்ணின் பெருமைகள், இந்த கருப்பையில் குழந்தையை சுமப்பதில் காணப்பட்டது. தனிச்சொத்துரிமை ஆணாதிக்கம் இதைச் சிறுமைப்படுத்தியது. இதன் வழியில் பெண் தனது சொந்தக் கருப்பையையே சிறுமைப்படுத்துவது அதைவிடக் கேவலமானது. ஆணாதிக்கத்தின் வழியில் அதை மேலும் இழிவாக்குகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் கருப்பையை சிறுமைப்படுத்தி, அதை தனது வாரிசுக்குள் சிறைப்படுத்தியது. உலகமயமாதல் ஆணாதிக்கம் கருப்பையை நுகருவதற்கு இடைஞ்சலாகவே கருதுகின்றது. கருவைத் தாங்கும் ஒரு பெண் தனது நுகர்வுக்கு தடையாக இருக்கின்றாள் என்பதை, நுகர்வு ஆணாதிக்கம் புகட்டுகின்றது. இதையே கவ்விக் கொண்டு, கருப்பையை அறுத்தெறிவோம் என்கின்றனர். இப்படி புலம்புவோர் தமது நுகர்வு வெறியை தக்கவைப்பதில் மட்டும் கவனமாக உள்ளனர். நுட்பமாக பார்த்தால், ஆணுடன் பாலியல் உறவை கொள்வதை மட்டும் இது மறுதலிக்கவில்லை. இங்கு உடல் சார்ந்த பாலியல் நுகர்வு முதன்மை பெறுகின்றது. இதனால் தான் பெண் உறுப்பை அழிப்பதைப் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை.

 

3.வரைமுறையற்ற பாலியல் சுதந்திரத்தை கோருவதே பெண்ணியம் என்கின்றனர். இது பழைய காட்டுமிராண்டி சமூகத்தின் நிலைக்கு சரிந்து செல்வதை குறிக்கின்றது. பழைய காட்டுமிராண்டிச் சமூகத்தில் இருந்த பாலியல் என்பது, பெண்ணை பாலியல் சார்ந்த ஒரு உடல் பண்டமாக கருதி ஒரு நுகர்வு வெறியுடன் இருக்கவில்லை. விரும்பி இணையும் ஒரு இயற்கையான ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. அந்த வகையில் இன்று இருப்பதில்லை. சந்தையில் உள்ள ஒரு பொருளை அடங்காவெறியுடன், தேவையைக் கடந்து நுகரும் வெறியுடன் தான் மேட்டுக்குடிகள் நுகருகின்றனர். அதே உள்ளடகத்தில் தான் ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணை பாலியல் ரீதியாகவும் நுகருகின்றது. இதையே பெண்ணையும் நுகரக் கோருவதால், இதைப் பெண்ணியம் என்கின்றனர்.

 

மனிதன் தான் இயல்பாக விரும்பிய இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த போது அங்கு பாலியலில் வக்கிரம் இருக்கவில்லை. தனியுடமை சமூகம் உருவான போது, தனிப்பட்ட ஆண்களின் சொத்துடமை ஆதிக்கம் வளர்ச்சியுற்ற போது, பாலியல் கூறும் திரிபடைந்தது. ஆண் பெண்ணை தனது தனிமனித சொத்துடமை கண்ணோட்டத்தில் நோக்கி, தான் மட்டும் நுகரும் சமூக அமைப்பை படைத்தபோது, பெண்ணை அவன் ஒரு பாலியல் கருவியாக கருதத் தொடங்கினான். தனிமனித சமூக அமைப்புக்கு ஏற்ப அனைத்து செல்வத்தையும் தனதாக்கும் குறிக்கோளுடன் சமூகத்தைச் சுரண்டியதைப் போல், பெண்ணையும் தனது பாலியல் நுகர்வுக்குள் உள்ளடக்கி வரைமுறையற்ற வகையில் சுரண்டத் தொடங்கினான்;. பெண்ணின் சுயேட்சையான தேர்வு என்பது, ஆணின் தனிமனித சொத்துரிமைக்கு முன்னால் மறுதலிக்கப்படத் தொடங்கியது. பெண் மீதான ஆண்களின் வரைமுறையற்ற பாலியல் நுகர்வுச் சுதந்திரம், காட்டுமிராண்டித்தனமானதாக மாறியது.

 

இதில் இருந்து பெண் தப்பிக்கவேண்டிய ஒரு நிலை பெண்ணுக்கு ஏற்பட்டது. பெண் ஒரு பலமான ஆணின் துணையை நாட நிர்ப்பந்திக்கப்பட்டாள். இதன் மூலம் தனது சொந்தத் தெரிவை பாதுகாக்க முடிந்தது. இதுவே தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண் படிப்படியாக தான் தேர்ந்தெடுத்த ஒரு கற்பு நெறியாகியது. தான் விரும்பும் ஆணுடன் வாழும் உரிமையை இது பாதுகாக்கும் அடிப்படையில், பெண் இந்த வழியை தேர்ந்தெடுக்க முடிந்தது. இது உருவாகி வந்த தனிமனித சொத்துடைமை சமூக அமைப்புக்கு எற்றதாகவும் மாறியது.


ஆனால் இதுவும் பின்னால் திரிபடைந்தது. பெண் தான் தேர்ந்தெடுத்து வாழும் கற்பு என்ற சுயம் சார்ந்த உள்ளடகத்தை, தனிச் சொத்துரிமை வாரிசு ஆண் தனக்கு இசைவாக்கி தன்னுடன் மட்டும் வாழும் ஒழுக்கமாக்கினான்;. இதுவே பல கட்டங்களை கடந்தும், வாழ்க்கை ப+ராவும் குறித்த பெண் கற்புடன் குறித்த ஆணுடன் வாழ நிர்ப்பந்திக்கும் வகையில் கற்பு திரிபடைந்தது.

 

இன்று தீவிர பெண்ணியல்வாதிகள் கற்பு என்பதை நிராகரிப்பதாக பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் பெண்ணின் தேர்வு இந்த ஆணாதிக்க அமைப்பில் மீண்டும் மறுக்கப்படுகின்றது. மாறாக நுகர்வு என்ற உலகமயாதலின் கோட்பாட்டில், பெண் உடல் சார்ந்த ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விபச்சாரியாக்கப்படுகின்றாள்;. உலகமயமாதலில் பெண் ஆண்களின் தேவையை ப+ர்த்தி செய்யும், நுகர்வு பண்டமாகவே மாற்றப்படுகின்றாள். இப்படி விரிவாக நாம் பலவற்றை ஆராய முடியும்.

 

குஷ்புவை குதறும் பார்ப்பானிய தலித் ஆண்டைகள்

 

குஷ்பு கூறிய உலகமயமாதல் ஆணாதிக்க நுகர்வுக் கருத்தை, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஆண்டைகள் கண்ணோட்டத்தில் எதிர்க்கும் பார்ப்பானியமயமாதல் அரங்கேறியது. திருமாவளவனின் தலித் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் பார்ப்பானிய கண்ணோட்டத்தில், இதையே தமது சொந்த அரசியலாக்கினர். படுபிற்போக்கான நிலப்பிரபுத்துவத்தின் ஆணாதிக்க சமூகக் கூறுகளை தோண்டியெடுத்து, உசுப்பிவிட்டதன் மூலம், பார்ப்பானிய மயமாக்கலை தமது அணிக்குள் வேகம் கொள்ளவைத்தனர். இதை கடந்தகாலத்தில் மார்க்சியம் தெளிவாக அம்பலப்படுத்தி வந்தது.



தலித்துகள் என்றும், பிற்படுத்தப்பட்ட சாதிகளாக உள்ள இந்த சமூக பிரிவுகளிடையே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க பார்ப்பானிய கூறுகள், ஆதிக்கம் பெற்ற ஒன்றாக கடந்த வரலாற்றில் இருந்ததல்ல. அங்கு தாம் சொந்தமாக உழைத்து வாழும் ஆணும் பெண்ணும், சுயமான தெரிவுடன் கூடிய அதிகமான சுதந்திரத்தையே தக்கவைத்திருந்தனர். இதையே தகர்க்கும் போராட்டம் தான், இந்த எதிர்ப்பின் அரசியல் சாராம்சமாகும்;. இவர்களின் பாலியல் சுதந்திரம் என்பது, குஷ்பு வகையறாக்களின் நுகர்வு உடல் சுதந்திரமல்ல. மாறாக இயல்பாக இணைந்து வாழும் சுதந்திரம்.

 

இந்த நிலையில் தமது சொந்த குறுகிய தலித் சாதி அரசியல் முட்டுச் சந்தியில் திணறும் போது, குறுகிய வக்கிரங்களை எப்போதும் அரங்கேற்றுகின்றனர். உண்மையில் தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடப் போவதாக கூறி சாதிய ரீதியில் அணிதிரண்ட போது, சாதிய எதிர்ப்பு முதன்மை பெற்ற ஒரு அம்சமாக இருந்தபோது, போர்க்குணமிக்க சாதியெதிhப்பு போராட்டங்களை நடத்தினர். ஆனால் சாதிய எதிர்ப்பு போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு, தனக்கு கீழ்பட்ட சாதிகளை ஒடுக்கும் ஒடுக்குமுறை அதிகரித்த போது, குறுகிய அரசியலில் ஒடுங்கி சாதிய அரசியலில் சங்கமித்து விடுகின்றது. பார்ப்பானிய சாதி அரசியல் எதைச் செய்ததோ, அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் செய்கின்றனர்.

 

பாராளுமன்ற சாக்கடைக்குரிய கதிரைப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு சிதைந்தபோது, தலித்தின் பெயரில் சிலர் மக்களை ஏமாற்றி வாழ்தல் என்பது அரங்கேறுகின்றது. குறிப்பாக இதைக் காட்டித் தம்மைப் பாதுகாக்க, பார்ப்பானியமயமாதல் அவசியமாகிவிடுகின்றது. இந்த சமூக அமைப்பில் ஆளுமையுள்ள ஒரு சமூக நிறுவனமாக, பார்ப்பானிய கோட்பாடு உள்ளது. இதையே தலித்துகள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் தமதாக்குகின்றனர். தனக்கு கீழ்ப்;பட்ட சாதிகளை ஒடுக்குவதன் மூலம், தான் உயர்ந்த நிலையை அடைதல் என்ற பார்ப்பானிய கோட்பாடே தலித்தியமாகி, அதுவே இன்று கொலுவேறுகின்றது. பார்ப்பானிய ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளை, தமது சொந்த சாதியின் வாழ்க்கை முறையாக ஏற்க வைப்பதன் மூலம் தான், தனது சமூகத்தை குறுகிய தமது சொந்த பிற்போக்கு தளத்தில் தக்கவைக்க முடியும் என்ற பார்ப்பானிய நரித்தந்திரத்தை தலித்துகள் என்று கூறிக் கொள்வோர் தமதாக்கியுள்ளனர். இதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உத்திரபிரதேச மாயவாதி வரை நாம் காணமுடியும்.

 

உலகமயமாதல் அமைப்பில் பார்ப்பனியம், தன்னை அதன் அதிகார பிரிவின் உறுப்பாக்கி வருகின்றது. உலகமயமாதலில் அதிகாரம் தனியார் சொத்துரிமை என்ற அமைப்பு நோக்கி முழுமையாக நகருவதால், அரசு கட்டமைப்புகளில் பார்ப்பான் வகித்த ஆதிக்கம் படிப்படியாக குறைகின்றது. மாற்றம் என்பது அரசு உலகமயமாதலின் எடுபிடிக் கருவியாகின்றது. பார்ப்பான் உலகமயமாதல் தனியார் அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து, நாட்டை ஆளத் தொடங்கியுள்ளான். இந்த நிலையில் அரசு அதிகார மையங்களில் இருந்த இடைநிலைப் பதவிகள் காலியாகின. இதை இடைப்பட்ட சாதிகள் தமக்கு இடையில் நிரப்பும் போட்டியில் தான், தலித் எழுச்சிகள் நடந்தன. அது பூர்த்தியான நிலையில், தலித் அரசியல் முட்டுச் சந்தியில் வந்து தேங்குகின்றது.


இதே போன்று கிராமப்புறங்களில் நிலத்திலும் கூட, புதிய நிலப்பிரபுத்துவம் இடைப்பட்ட சாதிகளின் வடிவில் ஏற்படுகின்றது. அதிகாரத்தை பெற்ற புதிய தனிச்சொத்துரிமை சாதியப் பிரிவுகளின் எழுச்சி, இறுதியாக பார்ப்பானியமயமாகின்றது. இதனால் பார்ப்பானியம் விட்டுச் சென்ற சில பார்ப்பானிய கடமைளை அதே சாதி ஒழுங்கில் பேண, இடைப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் பொறுப்பேற்கின்றனர். இதனால் அவை சாதிய அரசியல் மூலம் ஆதிக்கம் பெறுகின்றனர். சொந்தச் சாதியை முதலில் பார்ப்பானியமயமாக்கி, அடிமட்ட சாதிகளை பார்ப்பானிய உள்ளடகத்தில் ஒடுக்கத் தொடங்குகின்றனர்.

 

குஷ்பு விவகாரத்தில் இந்த பார்ப்பானிய சிந்தாந்தம் பிரதிபலிப்பது என்பது ஆச்சரியமானதல்ல. இந்த தலித் அரசியல் பார்ப்பானியமயமாதல் எப்போதோ நடந்துவிட்டது. இதை மார்க்சியவாதிகள் தொடர்ச்சியான விமர்சனம் மூலம், அம்பலப்படுத்தி வந்துள்னனர். இதை ஆதரித்தவர்கள், அதில் பங்கு வகித்தவர்கள் திடீரென இதைக் கண்டு புலம்புவதும், திடீரென கொப்புவிட்டு பாய்ந்து குஷ்புவின் பின்னால் கும்மியடிப்பதும் பார்ப்பானியத்தின் மற்றொரு பக்கம்தான். இது ஆணாதிக்கம் கூட. இந்தியாவில் இருந்து பாரிஸ் வந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி பாரிஸ் இலக்கியச் சந்திபில் துல்லியமாக பாய்விரிக்கும் தரகு விபச்சாரத்தை இப்படித் தான் அரங்கேற்றினார்.

 

பாரிஸ் இலக்கிய சந்திப்பு, உலகமயமாதலின் ஒழுக்கக்கேட்டுக்கு பாய்விரித்தது.

 

பாரிஸ் இலக்கியச் சந்திப்பு மக்கள் விரோத சந்திப்பு தான் என்பதை, ரஜனியின் உலகமயாதலை ஆதரித்து ஆற்றிய விபச்சார கருத்துரையாடல் மீண்டும் அம்பலமாக்கியது. இதன் போது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்காக, தரகு கும்பலாக சீரழிந்து தனது கடைகோடியில் நின்றே ரஜனி வக்காலத்து வாங்கினார்.


வழக்கறிஞர் ரஜனி வழக்கறிஞர் என்பதாலோ என்னவோ, பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் உருட்டிப் பிரட்டிய ஒரு பொய்யைப் போல், இலக்கியத்தையே அரசியலையே புரட்டிக் காட்டினார். கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் தமது வழக்கை அவரிடம் ஒப்படைத்த திருப்தியில், வாய்பிளந்து எதிர்பின்றி கேட்டுக் கொண்டிருந்தனர். நாம் அதில் கலந்துகொள்ளாத போதும் கூட, இது எமது கற்பனையல்ல. அதுவே அங்கு நிகழ்ந்தது. இதை யாரும் எந்தக்கொம்பனாலும் மறுக்க முடியாது. அரசியல் ரீதியாக சமூகத்தைப் புரிந்து கொள்ள வக்கற்றுப் போன, புலம்பெயர் இலக்கியவாதிகள், இதற்கும் தரம்தாழ்ந்து சோரம் போவது இயல்பானது தான்;. உலகமயமாதலின் விசுவாசிகளாக அவர்கள் மாறியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இது நாம் முன்கூட்டியே இவர்களைப் பற்றி கடந்தகாலத்தில் கூறி வந்ததுதான். புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக எப்படி சிதைந்து சீரழிந்து பலம்பெற்று வருகின்றதோ, அப்படித்தான் பெண்ணியம் தலித்தியம், இலக்கியம் என எங்கும் அரங்கேறுகின்றது.

 

வழக்கறிஞர் என்ற சமூகத் தகுதியுடன், தலித் என்ற கொம்புடன், பெண் என்ற உடல் அடையாளத்துடன் தான், தனது தொழில்முறை உத்தியை இலக்கியச் சந்திப்பில் கையாண்டார். இந்த வழக்கில் ஒரு உண்மையைத் திரித்தபடியே, அரசியல் விபச்சாரத்தை அரற்கேற்றினார். இந்தியாரூடே கருத்துக் கணிப்பைக் கூட திரித்து, அதன் மேல் பொய்யை கூறிய போது அரங்கத்தின் அறிவின்மை எந்த சலசலப்பையும் கூட ஏற்படுத்தவில்லை.


1.இந்த ஆய்வு பணக்கார மேட்டுக்குடி பெண்களிடம் எடுக்கப்பட்டது என்ற உண்மை திரிக்கப்பட்டது. அதில் இருந்து தனது உலகமயமாதல் கருத்துகளை தெளித்தார்.

 

2.மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்ட புள்ளிவிபரத் தரவுகள் மீது துணிச்சலாகவே பாரிஸ் இலக்கிய ஜாம்பவான்களின் அறிவின்மை மீது, ஒரு பொய்யை உமிழ்ந்தார். மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகித பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்களும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். இதில் சென்னையில் 82 சதவீகிதமான மேட்டுக்குடி பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறி இருந்தனர். (புதிய ஜனநாயகம் நவம்பர் இதழைப் பார்க்க ) இதை வழக்கறிஞர் தனது வழக்காடும் பொய்யுடன், திருப்பி மறுபக்கமாக கூறியே தமது முழு ஆய்வுரையையும்: நியாயப்படுத்தினார். இதையே ரி.பி.சி ஆய்வாளர் சிவலிங்கம் 15.12.2005 ரி.பி.சியில், குஷ்புக்கு ஆதரவாக அரசியல் விவாதத்தின் போது புகுத்தினார்.

 

ரஜனி உலகமயமாதல் அமைப்பை ஆதரிப்பது பெண்களின் கடமை, தலித்துகளின் கொள்கையாக இருக்க வேண்டும் என்றார். தலித்துகள் தமிழ் படிக்க கூடாது, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றார். நான் டில்லியில் தமிழிலா வழக்காட முடியும் என்றார். தலித்துகள் உலகமயமாதலை ஆதரிப்பதன் மூலம் தான், சாதியை ஒழிக்க முடியும் என்றார். தமிழ் என்பதும், தேசியம் என்பதும் பாசிசம் என்றார். அது இந்துப் பண்பாடு என்றார். இப்படி உலகமயமாதலுக்காக தரகராக வாலாட்டி குரைத்தார்.

 

மேலும் அவர் உலகமயமாதல் உடல் சார்ந்த பாலியலே பெண்ணியம் என்றார். பெண் விடுதலைக்குரியதே உலகமயமாதல் என்றார். இதன் சாராம்சத்தில் தான் குஷ்புக்கு ஆதரவாக கும்மியடித்து, தலித் பெண்ணியம் பற்றி அனைத்து வக்கிரமும் அரங்கேறியது.

 

தலித் மக்களின் சாதிய துயரங்களையும், பெண்களின் மேலான ஆணாதிக்க கொடூரங்களைச் சொல்லி தனது உலகமயமாதல் அரசியலை அரங்கேற்றினார். உதாரணமாக புலிகள் பேரினவாத சிறிலங்கா அரசின் கொடூரத்தை சொல்லி, தமது பாசிச அரசியலைச் செய்வது போல் உலகமயமாதலுக்காக வரிந்து நின்றார். உலகமயமாதல் செய்யும் சமூக விரோதக் கொடூரங்களை பற்றி எதையும் சொல்லவில்லை. அப்படி எதுவும் இல்லை என்பதே அவர் முன்வைக்கும் கருத்தின் சாரமாகும்.

 

உலகமயமாதலை ஆதரித்த தனது தர்க்க நியாயவாதத்தில் உலகமயமாதல் வந்ததால் தானே 500 ரூபாவுக்கு கைத்தொலைபேசி வந்தது என்கின்றார். 10000 ரூபாவுக்கு கம்ய+ட்டர் வந்தது என்கின்றார். ஆகவே தாராளமயத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்கின்றார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தனியார் மயமாகமல் தொலைபேசி இருந்து இருந்தால், இது சாத்தியமில்லை என்கின்றார். மக்களின் உழைப்பில் உருவான அரசு சொத்துகளை, தனியார் மயமாக்க முனையும் போது அரசுதுறை நட்டத்தில் இயங்குகின்றது, திறமையின்மை, சேவைக்குறைபாடு, அதிகார வர்க்கத்தின் கெடுபிடி என்று பலவாக கூறும் உலகமயமாதல் சதியாளர்களின் வழியில் இவர், சந்தை மலிவை படம்பிடித்துக் காட்டுகின்றார்.

 

ஏழை எளிய மத்தியதர வர்க்கம் இதனால் தான் இதைப் பெறமுடிகின்றது என்றார். எதார்த்தத்தின் மீதான திரிபும்;, முன்னால் இருப்பவர்கள் செம்மறிகள் என்பதால் துணிச்சலுடன் கூடிய வக்கிரம் வெளிப்பட்டது. வழக்காடும் வழக்கறிஞரே மலிவான கம்யூட்டர், மலிவான கைத்தொலைபேசி பற்றி பேசி உலகமயமாதலை ஆதரிக்கும் வக்கிரத்தை நீங்கள் அரங்கேற்றுகின்றீர்கள். வழக்கறிஞரே நீங்கள் ஆதரிக்கும் உலகமயமாதலால் மலிவாக தலித்துக்கு ஒரு நேர உணவைக் கூட வழங்க முடியுமா? இந்த உலகமயமாதலால் சுத்தமான நீரை, தேவையான உணவை, வாழ்வதற்கு ஏற்ற ஒரு குடியிருப்பை வழங்க முடியுமா?. ஒரு நாளுமே முடியாது. இருப்பதையே புடுங்குகின்றது இந்த உலகமயாதல். இதை சுட்டிக்காட்டி தலித்துக்காக, பெண்ணியத்துக்காக போராட வேண்டிய ஒருவர், உலகமயமாதலுக்காக பாய்விரித்து தரகு தொழில் செய்ய நினைத்ததே இலக்கியச் சந்திப்பில் அரங்கேறியது. தலித் வாழ்வுடனும், ஆணாதிக்க பெண்ணுடனும் தொடர்பற்ற தொலைபேசியைப் பற்றியும், கம்யூட்டரைப் பற்றியும் முன்னாள் இருப்பவன் முட்டாள் என்பதால், பாலசிங்கத்தின் மாவீரர் உரையைப் போல் புதிர்விட முடிகின்றது.

 

தலித் அல்லது பெண் கம்யூட்டரை வாங்கி அதை கரைத்தா குடிகின்றது. தொலைபேசியை வாங்கி பார்ப்பனருடன் தலித்துகள் விவாதம் செய்ய பயன்படுத்துவதா? அல்லது இந்திய பெண்களின் சீதனம் போல், அவற்றை வைத்து புலம்புவதா? பயன்பாடு கடந்த எதுவும், பொருள் என்ற அடிப்படையில் அனைத்தும் குப்பைதான். தலித்துக்கு, இந்திய ஆணாதிக்க பெண்ணுக்கு கம்ய+ட்டரும், கைதொலைபேசியும் குப்பை தான். ஆனால் தரகுத் தொழில் பார்க்கும் உங்களுக்கு அப்படி அல்ல.

 

இந்தியத் தலித்;துக்கும் இந்தியப் பெண்ணுக்கும் அவர்கள் வாழும் நிலையில், இவை அவசியமற்றவை. பயன்பாடற்ற அனைத்தும், உலகெங்கும் இது பொருந்தும். இதைவிட தேவைகள் வேறானவை. நீங்கள் கூறிய மேட்டுக்குடி பெண்ணியல்வாதிகளின் நுனிநாக்கு ஆங்கிலம் போல், கம்ய+ட்டரும் தொலைபேசியும் அவர்களுக்கு மட்டும் பயன்படக் கூடியவை.

 

மறுபக்கத்தில மலிவான கம்ய+ட்டர், மலிவான தொலைபேசிக்கு பின்னால் மனிதனின் உருத்தெரியாது அழித்து செல்லும், மற்றொரு மனித வரலாறு உண்டு. எப்படி மலிவாக முன்பைவிட அதிக லாபத்துடன் சாத்தியமாகின்றது. இதை உற்பத்தி செய்யும் உழைப்பின் கூலிக் குறைப்புத்தான் இதற்கான காரணம். கடந்த காலத்தில் தொழிலாளி வர்க்கம் பெற்றவற்றை இழக்கின்ற போது, சந்தையில் உங்களைப் போன்றவர்கள் நுகரும் பொருட்கள் மலிகின்றது. மலிவான வரைமுறையற்ற பாலியல் நுகர்வை இதுவே கோரத் தொடங்குகின்றது.

 

இன்றைய பொருட்களின் மலிவின் பின்னால் சீனத் தொழிலாளி வர்க்கம், தனது வாழ்க்கையை இழந்து இதை உற்பத்தி செய்கின்றது. ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் தனது வேலைகளை இழந்து வீதிக்கு வருவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நவீன தொழில் நுட்பம் சார்ந்த இலத்திரனியல் சார்ந்த உற்பத்தியில், 70 சதவீகிதத்துக்கு அதிகமான உற்பத்தியை சீனத் தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்கின்றது. ஆனால் சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் அடிமைத்தனம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விட மிக மோசமாகி வருகின்றது. இதனால் உங்களுக்கு சந்தையில் அவை மலிவாக கிடைக்கின்றது. பார்ப்பானியம் தலித்தைக் கொண்டு எப்படி சுகபோகமாக வாழ்ந்தனரோ, அப்படித்தான் உங்களைப் போன்ற உலகமயமாதல் அருவடிகளுக்கு இது உதவுகின்றது.

 

இந்த மலிவான கதையின் பின்னால் நுகர்வுக் கலாச்சாரத்தை திணித்து, பணம் அறிவிடும் உலகமயாதல் கத்துவட்டி முறை கிராமப்புற கத்துவட்டியை விட விடக்கொடூரமாக அரங்கேறுகின்றது. 500 ரூபா தொலைபேசியின் பின்னால் இதற்குள் ஒரு கதை அடங்கியுள்ளது.

 

அடுத்து உலகமயமாதல் எப்படி தலித்துக்கு சாதகமானது. உலகில் வறிய ஏழை மக்கள் என்ற பிரிவில் இந்தியாவில் உள்ள 25 கோடிக்கு மேற்பட்ட தலித்துகளும் அடங்குவர். ஆபிரிக்க ஏழைகளின் நிலையில் தலித்துகள் உள்ளனர். உலகமயமாதல் என்பது செல்வத்தைப் பகிர்வதில்லை. மாறாக இருப்பதையும் புடுங்குவதுதான். இது மேட்டுக்குடிகளிடம் மட்டுமின்றி, அடிமட்ட ஏழைகளையும் கூட புடுங்குகின்றது. ஏழை என்பவன் நாட்டில் உள்ளவனிடம் தொழில் செய்து பிழைக்கின்றான். அவனை உலகமயமாதல் அழிக்கும் போது, அவனிடம் தொழில் செய்பவன் கஞ்சிக்கே வழியில்லாது போகின்றான். உலகமயமாதல் கம்யூட்டரைத்தான் உற்பத்தி செய்யும். சந்தையில் வாங்கும் திறனுள்ளவனுக்கே உற்பத்தி செய்யும். வாங்க வழியற்ற ஒருவனுக்கு ஒருநாளுமே உற்பத்தி செய்யாது. ஒரு டொலரைக் கூட ஒருநாள் பெற முடியாதவனுக்கு எதையும் உற்பத்தி செய்வதில்லை. இது சந்தை விதி. இது நுகர்வின் விதி. ஒரு டொலரை பெற முடியாத தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதியையிட்டு இந்த தரகு வழக்கறிஞர் ரஜனிக்கு எந்த சமூக அக்கறையும் கிடையவே கிடையாது.

 

உலகமயமாதல் ஏழையிடம் இருப்பதையும் புடுங்கவே செய்கின்றது. உதாரணமாக 1989-1999 க்கும் இடையில், ஒரு நபருக்கு 1.5 முதல் 1.8 சதவீகிதம் என்ற அளவில் உலகில் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இந்த பத்து வருடத்தில் 80 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்ததை விட குறைந்து வந்துள்ளது. 50 நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்றது. இது யாரைத் தாக்கும். ஏழை எளிய மக்களைத் தான். இதில் தலித் விதிவிலக்கல்ல. பெண்கள் விதிவிலக்கல்ல. வறுமையில் ஏழைகள், தலித்துகள், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுவே உண்மை.

 

ஏழைகள், தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னுமொரு புள்ளிவிபரத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்தியங்கள் 1960இல் இருந்து 1989 க்கும் இடையிலான காலத்தில் தனது பங்கை 70.2 சதவீகிதத்தில் இருந்து 82.7 சதவீகிதமாக அதிகரிக்கும் வண்ணம் பெரும் சூறையாடலை மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தியது. இதே காலப் பகுதியில் 20 சதவீகிதம் தான் மிக வறிய (ஏழைகளைக் கொண்ட) நாடுகள், உலக வருமானத்தை தாம் பெற்ற 2.3 சதவீகிதத்தை இழந்து 1.4 சதவீகிதமாக குறைந்து போனது. மனித அவலமே ஜனநாயகமாகி, சமூகத் தேவையைக் கூட ப+ர்த்திசெய்ய முடியாத எல்லைக்குள் கையேந்தி பிழைக்கவே உலகமயமாதல் மனித இனத்தை வழிகாட்டியது. இப்படி பல புள்ளிவிபரம் உள்ளது. பொய்யை உண்மையாக காட்டி, உண்மையை பொய்யாக கூறி வாழ்க்கையை ஒட்டும் தொழில்முறை ரஜனி, சமூகம் பற்றி வழிகாட்டுவது முரணிலையில் தான்.

 

இதில் இருந்து தான் தேசிய எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. தேசியம் என்பது பாசிசம் என்று கூறியபடி, புலியையும் ராதாஸ் வகையறாக்களையும் காட்டி பினாற்றியே இவற்றை அரங்கேற்றினார். தேசியம் என்பது ஜனநாயகம் என்பதே அதன் சரியான அரசியல் உள்ளடக்கம். இதை திரித்து தேசியத்தை நிலப்பிரபுத்துவ மற்றும் உலகமயமாதல் எல்லைவரை எடுத்துச் சென்று, வக்காலத்து வாங்குவது நிகழ்ந்தது. தேசியத்தை பாசிசக் கூறு என்பவர்கள், உலகமயமாதலை பாசிசக் கூறு அல்ல என்கின்றனர். உண்மையில் இதனை நிறுவ தமிழ் பண்பாடு என்பது, இந்து பண்பாடு என்கின்றார். பார்ப்பானியம் எதைச் சொல்லுகின்றதோ, அதை இவர்கள் கிளிப்பிள்ளை போல் சொல்ல முனைகின்றனர். பெரியார் எதை வேறுபடுத்த போராடினாரோ, அதை ஒன்றாக்கிவிட முனைகின்றார். அதாவது பெரியாரை மறுவாசிப்பின் பெயரில், தமது உலகமயமாதல் நோக்கில் திரித்து புரட்டவே முனைகின்றனர். இந்து பண்பாடு வேறு, தமிழ் பண்பாடு வேறு. இதை மறுத்து உலகமயமாதல் பண்பாட்டை மாற்றாக வைக்கின்றனர்.

 

பெரியாரைச் சொல்லியே தமது உலகமயமாதல் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை அரங்கேற்ற முனைகின்றனர். பெரியார் நிலபிரபுத்துவ ஆணாதிக்க வாதங்களுக்கு பதிலடியாகவே, சமூகத்தை அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் இவற்றை எதிர்மறையில் பயன்படுத்தியவை தான் பாலியல் பற்றிய அவரின் வாதங்கள். அதை அவர் சமூக வாழ்வியல் முறையாக கொள்ளும்படி பெண்களுக்கு கூறவில்லை. ஆணின் ஆணாதிக்க சமூக நடத்தை நெறியை மறுதலித்தே, அதை கிண்டல் செய்தே முன்வைத்தவரே ஒழிய அதை ஆதரித்;தல்ல. அதே ஆணாதிக்கத்தை பெண்ணை கைக்கொள்ளும்படி கோரவில்லை. ஆணின் ஆணாதிக்க வாதத்தை எதிர்நிலையில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாதங்கள் தான். கடவுள்களின் ஆண் பெண் பாலியல் வக்கிரங்களையும், அவர்களின பலதார மண முறைகளையும், ஆண் பெண் கடவுள் வேறுபாடின்றி அதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதன் வரலாற்றின் வேரில் இருந்து எள்ளிநகையாடியவர்.

 

இதை திரித்து உலகமயமாதல் பெண்ணிய வக்கிரத்துக்கு திரித்து காட்டுவதில் முனைப்பு பெறுவதே பொதுவாக நிகழ்கின்றது. பெரியார் உலகமயமாதல் ஆணாதிக்கத்துக்கு பெண் சரிந்து செல்லும் சீரழிவை நியாயப்படுத்தும் எந்த கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. அத்துடன் பெரியார் மார்க்சியவாதியல்ல. சமூக முரண்நிலையுடன் ஒரு ஜனநாயகவாதி என்ற எல்லைக்குள் தான் கருத்துரைத்தவர்.

 

அடுத்த ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்னம் பெண்கள் பாலியல் உறவு கொள்வதில்லையா? அப்படி தன்னிடம் உறவு கொண்ட பெண்கள் வழக்காட வருகின்றனர். இது உலகமயமாதல் பெண் சீரழிவை எப்படி நியாயப்படுத்த, எந்த வகையில் தர்க்க ரீதியாக சரியானது. கணிசமான பெண்களை திருமணத்துக்கு முன் பாலியல் ரீதியாக உறவு கொள்ளும் வகையில், அனைத்தையும் பாலியலாக அல்லவா உலகமயமாதல் புகட்டுகின்றது. வீதியில் செல்லும் பெண்ணை புணரக் கோரும் சினிமா முதல் காட்சி வகைப்பட்ட உளவியலும், எழுத்துவகைப்பட்ட துண்டுதல்கள் என எங்கும் எதிலும் இதுவே உள்ளடகமாக உள்ளது. இப்படி உருவாகிவிட்ட, பெண் திருமணத்தின் முன் பாலியல் உறவு கொள்கின்றாள் என்று அடித்து வைத்து வாதிடுவது அபத்தம். முதலில் இந்த சூழல் ஏன் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது உறவு கொள்ளும் பெண்கள் யாருடன், எந்த நிலையில் உறவு கொள்கின்றனர். இதன் பின்னனி என்ன? ஏன் பின்னால் நீதிமன்றம் வருகின்றாள். ஏன் கருவை அழிக்கச் செல்லுகின்றனர். ஏன் தற்கொலை செய்கின்றனர்? ஏன் வாழ்வை இழந்து நடைப் பிணம் ஆகின்றனர்? இப்படி பல கேள்விகள் உண்டு.

 

பாலியல் ரீதியான அத்துமீறிய நடத்தை நெறிகள் பெண் விடுதலையல்ல. அதாவது திருமணத்தின் முன் உறவு கொள்வது, கன்னித் தன்மை தேவையற்றது என்ற வாதங்கள் எவையும் பெண்விடுதலையல்ல. இது நாகரீகமான கமூக்கமான விபச்சாரத்தை உருவாக்குகின்றது. பல பெண்கள் இதை நம்பி தமது சொந்த வாழ்வை ஆணாதிக்கத்திடம் இழக்கின்றனர்.

 

அடுத்து தரகு பார்க்கும் வாதத்துக்கு ஏற்ப, பாலியலை விரும்பியவாறு யாருடனும் உறவு கொள்வது சரியென்றார். இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள பாலியல் உறவுமுறையையே திரித்துக் காட்டினார். அதன் போது இதை மிகக்; கொச்சையாக கேவலமாக திரித்து வருணித்தார். தாழ்த்தப்பட்ட பெண்கள் தன்னுடன் வாழும் ஆணின் நடத்தைகள், வாழ்வியல் முறைகள் பிடிக்கவில்லை என்றால் சுதந்திரமாக அதைக் கைவிட்டு வாழும் சுதந்திர முறையை திரித்தார். வேறு ஒருவனுடன் படுக்கும் சுதந்திரம் கொண்ட, உடல் பாலியல் வாழ்வை நடைமுறையில் வாழ்க்கையில் கொண்டிருப்பதாகவே பினாற்றினர். சமூகத்தில் உள்ள ஜனநாயகக் கூறை, கொச்சைத்தனமாக தமது சொந்த உலகமயமாதல் நோக்குக்கு ஏற்ப திரித்து, அந்த சொந்த வக்கிரத்தையே பெண்ணிய புரட்சியாக காட்டினார். இப்படி பற்பல.

 

உலகமயமாதல் நோக்கில் மார்க்சியத்தையே சேறடிக்க முனைந்தார். மார்க்சியத்தை கொச்சைப்படுத்த, மார்க்சியத்தை கைவிட்ட முதலாளித்துவமாக சிதைந்த சீரழிந்துள்ளவர்களின் நடத்தை மீது தன்னை வக்கிரப்படுத்தினார். மார்க்சியத்துக்கு சேறு அப்பிய படி வாழ்க உலகமயமாதல் என்றார். கொக்கக்கோலாவை தலித் மக்கள் குடிப்பதன் மூலம் தான், சாதி ஒழியும் என்றார். இப்படி பல.

 

அவர் இதற்கு எல்லாம் ஆதாரமாக கொண்டது, உலகமயமாதலை திருப்பிப் பெறமுடியாது என்ற எடுகோள்தான். இந்த அடிப்படையான அரசியல் வாதமே பார்ப்பனிய அரசியல் தான். சாதியத்தை இந்திய சமூக அமைப்பில் இருந்து திருப்பிப் பெறமுடியாது என்ற பார்ப்பானிய வாதம் எப்படியோ, அப்படித் தான் இந்த உலகமயமாதல் பற்றிய வாதமும்;. இது போல்தான் ஆணாதிக்கமும் திருப்பிபெற முடியாதவையல்ல. இங்கு திரும்பிச் சொல்லுதல் என்பதல்ல, அதைத்தையும் தலைகீழாக மாற்றி அமைத்தல் என்பதே புரட்சி. ஏகாதிபத்திய உலகமயமாதல் ஆதரவு தரகு பினாமிக்கு இது தெரியவில்லை. மக்கள் ஒரு புரட்சியை செய்தால், புரட்சி செய்த மக்கள் தமக்கு தேவையான பொருளாதார அமைப்பை அமைத்தே தீருவர். இது தான் புரட்சி. இது தான் பெண்ணியம். இதைத் திருப்பி பெறமுடியாது என்ற வரட்டு வாதங்களால், எவையும் தீர்மானிக்கப்படுவதல்ல.


பின்குறிப்பு : இப்படி பற்பல நீண்ட தரகுப் புலம்பல்கள். கட்டுரையின் விரிவு அஞ்சி இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். நீங்கள் இதைபற்றி எழுதி விவாதித்தால், மேலும் விவாதத்ததை நாம் நடத்தமுடியும்.

18.12.2005