lankasri.comஇணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மன நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பின் ஹாஸ் டேனன் என்பவர் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.உலகம் முழுதும் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 10 சதவீதம் பேர் இணையதள அடிமைகளாக உள்ளனர் என்று இவர் மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

புகைப்பழக்கத்திற்கு அடிமை, மது பழக்கத்திற்கு அடிமை, காபிக்கு அடிமை போன்று இப்போது இந்த இணையதளத்திற்கு அடிமையாவதும் ஒரு நோய்க்கூறாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் டேனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்டர்நெட் அடிக் ஷன் டிஸ்ஸார்டர் என்று அவர் குறிப்பிடும் இந்த நோயால் பலருக்கு மிதமானது முதல் தீவிர மன உளைச்சல் ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

இந்த நோய் உண்மையிலேயே ஒருவரை பீடித்திருக்கிறதா என்பதை அறிய மற்ற சில அடிமைப் பழக்கம் போலவே இதனையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்கிறார். அதாவது போதைப்பழக்கம், சூதாட்டத்திற்கான விழைவு, அதிகப்படியான காமத்திற்கான விழைவு ஆகியவற்றுடன் இந்த இணையதள அடிமை நோயையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறுகிறார் டாக்டர் டேனன்.

ஒரு சிலர் தொடர்ந்து செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பர். அதாவது எப்போதாவது எதையாவது சுத்தம் செய்து கொண்டே இருப்பது. வீட்டில் தண்ணீர் கொஞ்சம் தீர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நிரப்பி வைப்பது போன்ற அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் (Obsessive Compulsive Disorder) வகையில் இந்த இணையதள மோக நோயையும் மன நோய் நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

அதாவது எந்த ஒன்றையும் ஒரு சடங்கார்த்தமாக செய்வது, சிந்திப்பது என்பது தான் இந்த பீடிப்பு மனநோய்.

ஆனால் இணையதளத்தின் மீதான மோகம் ஏதோ ஒரு விழைவு போல் நம்மை நெருக்குவது அல்ல, மாறாக இந்த மோகம் ஆழமானது, அதாவது ஒரு ஆழமான நாட்டம் இன்டர்நெட் மீது ஏற்படுகிறது. இதனை தவிர்க்க முடியாமல் தவிக்கும் நபர்களும் இருந்து வருகிறார்கள் என்கிறார் டாக்டர் டேனன்.

அதாவது இளைஞர்கள், பெண்கள் மற்றும் 50 வயது ஆன ஆண்கள் ஆகியோர் தங்களது தனிமையைப் போக்க இணையதளத்திற்கு அடிமையாகின்றனர். இதனால் நீண்ட நேரம் தூங்காமல் பிரவுஸ் செய்து கொண்டேயிருப்பது என்ற பழக்கம் ஏற்படுகிறது. தூக்கத்தை இழப்பது மன நோய்க்கு இட்டுச் செல்வதாகும்.

மேலும் தனிமை குறித்த ஒரு விதமான பீதி மனோ நிலை, அதனால் ஏற்படும் ஒரு ஆழமான மன உளைச்சல், சோர்வு என்று நோய்க்கூறுகள் அதிகரித்துக் கொண்டே வரும் என்கிறார் அவர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இணையதளப் பயன்பாடுகள் உள்ள அலுவலகங்களில் இந்த புதிய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்தது என்று டாக்டர் டேனன் பரிந்துரை செய்கிறார்.

டாக்டர் டேனனுடைய இந்த கண்டுபிடிப்புகள் 'ஜர்னல் ஆஃப் சைக்கோ பார்மகாலஜி" என்ற இதழில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1197527391&archive=&start_from=&ucat=2&