கணவன்-மனைவி சண்டை மனதுக்கு மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லத்தல்ல. மனைவி அடித்துவிடுவாளோ என்ற பயத்தினால் சொல்லவில்லை. இது அறிவியல் உண்மை. காதலுக்கு காயத்தை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

 

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கச்சரவு முற்றி சண்டையாகும் போது ரத்தத்தில் புரதம் சுரப்பது தாமதமாகிறதாம். உடம்பில் உள்ள காயங்கள் ஆறுவதற்கு இந்த ரத்தப்புரதம் இன்றியமையாதது என்று அமெரிக்காவின் ஓஹாயோ அரசு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

ஒரு பரிசோசனைக் கூடத்தில் ஒரு கணவன்-மனைவி தம்பதிக்கு வேக்குவம்பம் மூலம் கையில் காயத்தை ஏற்படுத்தி விட்டு, அவர்களுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டனர் விஞ்ஞானிகள்.

 

கணவனும் மனைவியும் வாக்குவாதம் செய்யும் போது எவ்வளவு விரைவாக புண் ஆறுகிறது என்பதை அளவிட்டு, அவர்கள் இயல்பாக அன்புகாட்டும் போது புண் ஆறும் வேகத்துடன் ஒப்பிட்டனர் போர்க்குணம் மிக்க தம்பதியை விட, சாந்தகுணமான தம்பதிக்கு 60 விழுக்காடு வேகமாக புண் ஆறியது. இதற்காக 22 முதல் 77 வயது வரையிலான 42 ஜோடி கணவன்-மனைவிகளிடையே இரண்டு தடவை பரிசோதனை நடத்தப்பட்டது. முதலில் அவர்கள் அமைதியாக இருக்கும் போதும் பின்னர் தகராறு செய்யும் போதும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

 

சண்டை போடும் போது ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, காயம் ஆறுவதற்கு உதவக்கூடிய சைட்டோகின்ஸ் என்னும் புரத மூலகங்களை ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யும் வேகம் குறைகிறது என்று, கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஆகவே இனிமேல் உங்கள் உடல்நலனுக்காக சண்டைச்சரவின்றி காதல் செய்வீர் உலகத்தீரே!

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.