பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல உண்மையும் கூட. ஊர்வன வகையை சேர்ந்த நீளமான உடலும் சிறு தலையையும் கொண்ட பாம்பை பார்த்து விட்டால் போதும். அனைவருக்கும் குலைநடுங்கும். கால்கள் நடுங்க என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்போம். அரக்கபரக்க ஓடி தப்பிப்போம். நம்முடன் சிலர் இருந்தால். சற்று தெம்பு பெற்று அதனை விரட்டுவதற்கு திட்டமிடுவோம். பாம்புகள் கால்கள் இல்லாவிட்டாலும் உடலால் ஊர்ந்து மிக விரைவாக செல்லும் திறன் கொண்டவை. நாகப்பாம்பு அல்லது நல்லப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், பவளப்பாம்பு, கடற்பாம்பு, விரைந்தோடும் ஆப்பிரிக்க கருப்பு மாம்பா வகை பாம்பு, மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, பச்சைப் பாம்பு, கொம்பேறி மூக்கன், வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு, ஆனைக்கொன்றான் அல்லது அனக்கொண்டா என 2,700 பாம்பினங்களில் பல வகைகளும் காணப்படுகின்றன.

 

 

பாம்பின் தோல் செதில்களால் சூழப்பட்டிருக்கிறது, சில நேரங்களில் அவை தங்கள் தோலை உரித்து மீண்டும் புதுப்பித்து கொள்ளும் பண்பு கொண்டவை. பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியதாக இருக்கும். சிலவற்றில் அது இல்லாமல் கூட இருக்கும். எனவே பாம்புகளில் நுரையீரல் ஒன்று தான் வேலை செய்கிறது. 230 வகை பாம்பினங்கள் உள்ள இந்தியாவில் 50 வகைகளே நச்சுடையவையாக கூறப்படுகிறது. இதெல்லாம் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ஏன் செல்லுகிறேன் என்று நீங்கள் சிந்திப்பது எனக்கு புரிகிறது. அண்மை காலங்களில் பாம்பை இயற்கை அமைப்பிற்கு மிகவும் தேவையான முக்கிய விலங்காக பார்க்கக்கூடிய நிலை வளர்ந்து வருகிறது. இயற்கையின் சமநிலையை நிலைநிறுத்த பாம்பு மிக முக்கியமான விலங்காக இருக்கிறதாம். அமெரிக்க தென்கிழக்கு மிசௌரி பகுதியில் உள்ள மிங்கோ பூங்காவின் உயிரியல் நிபுணர்கள் பாம்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு அதன் நடமாட்டங்களையும், இறப்பு விகிதத்தையும் கணக்கிட்டு ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளனர். இது வெறுமனே தங்களுடைய ஆய்வுக்காக மட்டுமல்ல. பாம்புகள் குறிப்பிட்ட அளவில் நிலையாக இருப்பது அப்பூங்காவின் இயற்கை அமைப்பை நிலைநிறுத்த மிகவும் நல்ல பங்காற்றுகிறது என்று ஃபூசிகோவிற்கு அருகிலுள்ள மிங்கோ வனவியல் பூங்காவில் பணியாற்றும் உயிரியல் நிபுணர் ஜாசன் லிவிஸ் தெரிவிக்கிறார்.

 

பாம்புகள் பூச்சிகளை கட்டுபடுத்துவதற்கு இயற்கையாக உருவாக்கப் பட்டுள்ளன என்கிறார்கள். மேலும் தவளைகள், ஆமைகள், மீன்கள் ஆகியவற்றையும் பாம்புகள் உண்ணுகின்றன. எல்லா பாம்புகளும் ஊனுண்ணிகள் தான். அவை சிறிய பூச்சிகள், ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின் முட்டைகளை உணவாக உட்கொள்கின்றன. சில பாம்புகள் தன்னுடைய நச்சுக்கடியின் மூலம் இரையை கொள்கின்றன. மேலும் சில, இரையை சுற்றி வளைத்து நெருக்கி கொல்கின்றன. இன்னும் சில தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன. இவ்வாறு மேலதிக எண்ணிக்கையில் பெருகும் பூச்சிகள், தவளைகளை பாம்புகள் உண்பதால் இயற்கையின் அமைப்பை சமமாக நிலைநிறுத்த உதவுகிறது.

 

பாம்புகள் சிறு சலனம் ஏற்பட்டால் கூட சுதாரித்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. சாதாரணமாக அவை மெதுவாகவும், கவனத்தோடும், சுற்றுப்புறத்தை ஆராய்ந்து செல்லும் பண்புடைவை. அதற்கு முக்கியமாக வழிகாட்டுவது அதன் நாக்கு தான். அவை நாக்கை அடிக்கடி நீட்டிக்கொள்வதை பார்த்திருப்போம். அது இருக்கக்கூடிய சுற்றுப்புறத்தை முழுமையாக அறிந்து கொள்ளதான் அவ்வாறு செய்கிறது. நாக்கிலுள்ள சிறப்பான உணர்வறி உறுப்பு நுகர்தலுக்கு சமமானது என்றாலும் வித்தியாசமானது. மிகவும் தனிச் சிறப்பானது கூட. பாம்பு தனது இரையையும் எதிரியையும் அறிந்து செயல்படுவதோடு, காலநிலை, ஈரப்பதம், அமில அளவு ஆகியவற்றையும் நாக்கு மூலமான நுகர்வறிதல் மூலம் எளிதாக கண்டுபிடித்து விடுகின்றன. அவை வசந்த மற்றும் இலையுதிர் காலங்களில் காலநிலைளை சமாளித்து கொள்ளவதற்காக இடம்பெயரும் வழக்கம் கொண்டிருக்கின்றன. அப்போது விபத்து காரணமாகவும் வேண்டுமென்றும் வாகனங்களில் அடிபட்டு இறந்து போகும் நிலைமையில் உயிரியல் நிபுணர்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இடம் பெயரும்போது இறந்துபோகும் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அது வனப்பூங்காவின் இயற்கை அமைப்புக்கே ஆபத்தாக அமையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

 

பாம்புகளை பற்றிய தற்போதைய ஆய்வின் நோக்கம் அதன் இறப்பு விகிதத்தை குறைப்பதாக இருந்தாலும் அதன்மூலம் வனப்பூங்காவின் இயற்கையான அமைப்பை கட்டிக்காப்பதே அவர்களின் அடிப்படை எண்ணமாகும். பாம்புகளை பாதுகாத்தால் இயற்கையான உயிரின வாழ் சுற்றுச்சூழல் உருவாகும் என்ற நோக்கத்தை இது காட்டுகிறதல்லவா! எனவே பாம்புகளின் இடம் பெயர்தலை தூண்டுகின்ற காரணங்களை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கத்திய நாடுகளில் காணப்படும் காட்டன் மவுத் எனப்படும் ஒருவகை விரியன் பாம்புகளை பயன்படுத்துகின்றனர். அவற்றில் 5 ஆண், 5 பெண் என்று 10 பாம்புகளை பிடித்து அவைகளின் வால் பகுதிகளுக்கு உள்ளே வளைந்து கொடுக்கக்கூடிய வானலை அனுப்பும் கருவியை வைத்து காட்டில் விட்டுள்ளனர். அதன்மூலம் குளிர்காலத்தில் ஓய்வாக தங்கியிருந்து தங்களது குளிர்காலத்தை எவ்வாறு அவை கழிக்கின்றன என்றும், அத்தகைய அடைக்கல இடம்தேடி எவ்வளவு தூரம் கடந்து செல்கின்றன என்றும் ஆராய உள்ளனர். அவற்றிலுள்ள வானலை அனுப்பும் கருவிகள் மூலம் அவை செல்லுகின்ற இடங்களையும் தங்கியிருக்கும் பகுதிகளையும், வாழும் காலநிலையையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

 

ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு, பாம்புகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நனவாக்கயுள்ளனர். நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு அப்பாற்பட்ட நிலையில் இயற்கை அமைந்திருப்பது அதன் மாபெரும் சிறப்பு. உலகில் உள்ள அனைத்தும், அதாவது மனிதர்கள், விலங்குகள், இயற்கை எல்லாம் ஒன்றுக்கொன்று தேவைப்படும் விதமாகவும் ஒன்று மற்றதன் குறைகளை நிறைவு செய்யும் விதமாகவும் தான் அமைந்துள்ளன. நமக்கே தெரியாமல் இந்த நடைமுறைகள் நிகழ்ந்து கொண்டு தான் வருகின்றன. எதாவது ஒரு இடத்தில் ஏற்படும் குறைபாடுகள் கூட முழுமையான இயற்கை அமைப்பையே பாதிப்பது உறுதி. ஒட்டுமொத்த உயிரின சுற்றுச்சூழலை, அளவுக்கு மிகாமலும் குறையாமலும் கவனித்து கொள்வது இன்று நம்முன் உள்ள அறைகூவல் தான். நமது வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்சிகளையும், தவளைகளையும் பிடித்து சாப்பிட தயவுசெய்து பாம்புகளை வளர்க்க வேண்டாம்.

 

http://tamil.cri.cn/1/2008/06/16/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.