காலநிலை மாற்றத்தால் பருவகாலங்கள் மாறியுள்ளதோடு எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட கத்தரினா முதல் மியன்மாரின் நர்கீஸ் வரை பல்லாயிரக்கணக்கான மக்களும் உடைமைகளும் புயல் சின்னங்களின் சீற்றத்துக்குள்ளாகி சீரழியும் நிலை வழமையாகியுள்ளது. மனிதகுலம் சுதாரித்து கொள்ளுவதற்கு நேரம் இல்லாத, எதிர்பாராத வரவுகளாக இவை அமைந்து விடுகின்றன. புயல் வரப்போவதை கண்டறிய பிலிப்பைன்ஸ் புதிய உத்தியை கையாளவுள்ளதாம். அதாவது செல்லிடபேசிக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்ற கருவிகளின் மூலம் மழைபெய்கின்ற அளவை ஆராய்ந்து புயலுக்கான எச்சரிக்கை அமைப்புமுறையை உருவாக்க முனைந்துள்ளனர்.

 

இந்தத் தொழில்நுட்பம் செல்லிடபேசி வானலை அனுப்பிகளுக்கும், செல்லிடபேசிகளுக்கும் கிடைக்கக்கூடிய சமிக்ஞைகளை கண்காணிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதிகமான மழைப்பொழிவின்போது வானலை அனுப்பிகளுக்கும், செல்லிடபேசிகளுக்கும் இடையிலான சமிக்ஞைகள் குறைந்து காணப்படும். எனவே புயலின்போது குறுந்தகவல் அனுப்ப முடியாமல் போகிறது. புயலுக்கு முன்பாக கடைசியாக அனுப்பப்படுகின்ற சமிக்ஞைகள் மழையளவோடு தொடர்புடையவை. எவ்வளவுக்கு அதிகமாக மழை பொழியுமோ அவ்வளவுக்கு குறைவாக குறுந்தகவல் பெறப்படும் என்று எண்ணப்படுகிறது. இத்திட்டம் மணிலாவின் தென் பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவிலான பதாங்காஸ் துறைமுக பகுதியிலான மழைப்பொழிவை தொடக்கத்தில் ஆராயும். பின்பு நாடு முழுவதான புயல் அபாயத்தை அறிவிக்கும் அமைப்புமுறை உருவாக்கப்படும். அவ்வாறு நாடு முழுதும் பரவலாக்கப்பட்டதும் புயல் சீற்றப் பேரழிவை குறைக்கும் பணிக்கு இத்திட்டம் அதிகமாக உதவிபுரியும் என்று நம்பப்படுகிறது.

 

தற்போது ஏற்படும் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களால் இத்திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் 19 புயல்சின்னங்களை சந்தித்து சமாளித்து வரும் பிலிப்பைன்ஸ் இத்துறையில் கவனம் செலுத்துவது சாலப்பொருந்தும். இந்நிலையில் தொலைக் கட்டுப்பாட்டு கருவி மூலம் இயக்கக்கூடிய ஆளில்லா சிறுவிமானங்களை அட்லாண்டிக் புயலின் மையப்பகுதிக்குள் அனுப்பி, அதனை ஆழமாக ஆராய்ந்து, புயலின் போக்கை கண்டுபிடிக்கும் உத்தியை நனவாக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

 

http://tamil.cri.cn/1/2008/07/21/121s72604.htm